Wednesday, October 22, 2008

மழை பெய்தலினால்...!

பெய்கின்ற
பெரு மழைக்குப்
பயந்து,
இறுக்கச் சாத்திய
ஜன்னலின்
இடுக்கு வழி
நுழைந்து,
ஒற்றை அறைக்குள்
சுற்றிச் சுற்றி
அலைந்து,
'சொத்'தென
அடிக்கப்பட்டு
இறந்தது
தடி புத்தகத்தால்
ஒரு பூச்சி!

***

மழை நின்ற
நிமிடங்களுக்குப் பின்
அடியில் நின்ற
அனைவரையும்
நனைத்து,
மரம் பெய்தது.

***

எண்ணெய் வழியும்
சாலை,
குரல் கொடுக்கும்
தகரக்கூரை,
நிறைத்துப் பாயும்
சாக்கடை,
தூசு நீங்கும்
கறுப்புக் குடை,
ஆவி பறக்கும்
மயானம்...
இல்லாத ஒன்றை
எடுத்துக் காட்டுகிறது,
திடுமென பொழியும்
மாமழை!

***

ஒரு கையில்
மழை பிடித்தேன்.
மறு கையில்
காகிதக் கப்பல்.
பார்த்தால்,
மழைக்கு
உள்ளும் கப்பல்.
வெளியும் கப்பல்.

***

வானம் அழுகிறது
என்கிறார்கள்.
தேவாசுரப் போர்
என்கிறார்கள்.
வருண பகவான்
வருகிறார்
என்கிறார்கள்.
பகல் மழையில்
நரிக்கு கல்யாணம்
என்கிறார்கள்.
மேகம் மோதும்
மின்சாரம்
என்கிறார்கள்.
அம்மோனியா தூவினால்
அமோகப் பலன்
என்கிறார்கள்.

பாயும் குதிரை,
கோமாளி,
அரக்க முகம்,
பூந்திப் பொட்டலம்,
யானை,
ரோஜாப் பூ,
தேர்,
அப்பா முகம்...

என்னென்னவோ
வடிவங்கள் காட்டினாலும்,
பூக்குடையைப் பிடித்து
வீதியில் நடக்கும்
அந்தச் சிறுமியை
நனைக்காது
எல்லா மேகமும்
ஒரே
மழையாய்ப்
பெய்கின்றன.

***

மற்றும் சில ::

ஒரு மழை நாளின் இரவில்.

இவன்..!

தூறல் போடும் மேகங்கள்.

4 comments:

வெண்பூ said...

சான்ஸே இல்ல வசந்த்... அருமை.. இன்னிக்கு என்ன கவிதை நாளா? ஏற்கனவே வடகரை வேலன், அனுஜன்யா கவிதைகளை படிச்சிட்டு வந்தா நீங்களும் கவிதை போட்டிருக்கீங்க. அதிலும் "மரம் பெய்தது" சரியான வார்த்தை விளையாடல்.. ரசித்தேன்..

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

முதல் மற்றும் நான்காம் கவிதைகளில் சில உட்கூறுகள் உள்ளன.

யாராவது சொல்கிறார்களா, பார்ப்போம்!! ;-)

தமிழ்ப்பறவை said...

நண்பர் வசந்த்துக்கு....
1)நன்றாக இருக்கிறது. உட்கூறுதான் தெரியவில்லை. இருந்தும்
முயற்சிக்கிறேன்.பூச்சி மழை விரும்பாமல் உள்ளே வந்தது,உயிரை விட்டது.அதுபோல் அந்த அறையிலிருப்பவனும்(வசந்த் இல்லை,பறவையாக இருக்கலாம்).மழையை ரசிக்காமல்,ஜன்னலைச் சாத்தி புத்தகத்துள் உலகைத் தேடுகிறான்.வந்த பூச்சியையும் கொல்கிறான்.இயற்கையை ரசிக்காத வாழ்வு வாழ்வில்லை என்கிறீர்களா...?!
இவ்விடத்தில் எங்கோ படித்த கவிதை,
'மழையைப் பற்றி கவிதை எழுதுவதை விட,மழையில் நனைந்து ரசிக்கலாம்'(வரிகள் நினைவிலில்லை)

2)இயல்பின் கவித்துவ வரிகள்...'மரம் பெய்தது' அடடா....

3)இப்படிப் பலவற்றை(ஒன்றை மட்டுமல்ல)யும் மழை காட்டுகிறது...

4)கவிதை விளங்க வில்லை. புரிந்த வரையில் சொல்கிறேன். இக்கவிதையில் கவிஞன் மழையை ரசித்து ,மழையாகி விடுகிறான்,மழலையாகி விடுகிறான்.
கையிலிருக்கும் கப்பலுக்குள் இருந்து அவன் பார்வையில்,"மழைக்கு உள்ளும் கப்பல்,மழைக்கு வெளியும் கப்பல்"

5)குழந்தையின் பார்வையில் சோகக்கவிதை.
என்னை ரொம்ப சோதிச்சிட்டீங்க வசந்த்....'கவிதைன்னா அனுபவிக்கணும்,ஆராயக்கூடாது'

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

உங்கள் பார்வையும் வித்தியாசமாகத் தான் இருக்கின்றது.

அவ்வளவு தான். உங்களையும் வெண்பூவையும் தவிர வேறு யாரும் நமது பக்கத்தை எட்டிப் பார்ப்பதில்லை என்பதால், எனக்குத் தோன்றும் உட்கூறுகளைக் கூறி விடுகிறேன்.

1. பட்டாம் பூச்சி போல் துள்ளித் துள்ளி அங்கே இங்கே பறந்து விளையாடும் குழந்தை மனதை, பெற்றோரின் வற்புறுத்தலால், வகுப்பறை என்ற ஒற்றை அறைக்குள் அடைத்து வைத்து, தடித் தடியான புத்தகங்களால் அடித்துக் காணாமல் போக்குகிறோம்.

எதற்கு எது உவமை என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்.

4. ஒரு கையில் பிடித்த மழையில் மறு கையில் பிடித்த கப்பலின் பிம்பம் விழுகின்றது. அந்தப் பிம்பம் மழையின் உள்ளேயா..? மழைக்கு மேலேயா..? மழைக்கு மேல் என்பது மழையின் வெளியேவா?(outside)

இல்லை, மழைக்கு வெளி(outside) என்பது நாம் இருக்கும் வெளியா (space)..? இல்லை நமக்கும் அது வெளியேவா (outside)..? உண்மையில் கப்பல் எங்கு தான் இருக்கின்றது..? வெளியிலா(space) இல்லை நம் அனைவருக்கும் வெளியிலா (outside)...?

ரொம்ப கிர்ரடிச்சிருச்சா...?

கவிதைன்னா அப்படித் தான்..!! ;-)

மரம் பெய்தது - எழுதும் போது எனக்கே பிடித்திருந்தது.

5. இது என்னவோ மாதிரி எழுதத் துவங்கி, எதுவாகவோ மாறி, அதுவே எப்படியோ முடிந்து விட்டது.