Friday, February 13, 2009

சென்னையின் கதை.

நாட்டுக் கோட்டை செட்டியார்களுக்கும், யூதர்களுக்கும் இன்னா லிங்..?

மூர் மார்க்கெட்.... - மூர் யார்..?

சிந்தாதிரிப் பேட்டை - இன்னா பேருப்பா இது..?

வண்ணாரப் பேட்டைன்னா இன்னா தொவைக்கற ஏரியாவா..?

வால் டேக்ஸ் ரோடு....?

Persewacca.... எந்த பேட்ட தெர்யுதா..?


சென்னைக்கு முதல் வருகை நன்றாக நினைவிருக்கிறது.

உறவினர் குடும்பத்துடன், மதுரையில் பாண்டியனில் ஏறி, பயண இரவு முழுதும் தூங்காமல் வந்ததும், நுங்கம்பாக்கம் ரெயில்வே க்வார்ட்டர்ஸில் தங்கியதும், ஏர்போர்ட் சென்று முதல் சென்ட்ரலைஸ்ட் கட்டிடத்திற்குள் குளிர்ந்ததும், தி.நகர் சரவண பவனில் 25 ரூ.க்கு முழு தட்டைத் துடைத்ததும், ஆட்டோவின் சீட்டுக்குப் பின் இருக்கும் இடுக்கில் ஒடுங்கிக் கொண்டு பின்னாடியே வந்த அப்போதைய பிரபல ஒல்லி பஜாஜ் Sunnyயைப் படித்துப் படித்துச் சிரித்ததும், ஒரு கல்யாண மண்டபத்தில் ரோஸ் மில்க் குடித்ததும், இரவில் தாலி கட்டிய வாழைமர சேட்டு கல்யாணத்தில் மூன்று முறை ரசகுல்லாவையே மொக்கியதையும் மறக்க முடியாது.

அடுத்தது +2வில். இன்பச் சுற்றுலா.

மெரினாவில் அவசரமாக பாத்ரூம் வர, ஒதுங்க இடமின்றி, கடலுக்கு இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்தோம். அடையாரில் கொஞ்ச நேரம் நிற்கையில் சாக்கடை மேலேயே குடிநீர் டெப் திறந்திருந்ததைப் பார்த்தோம். பாட்டில் நீர் பைசா அதிகம் என்று, கோகோ கோலா வாங்கி, அதை அடுத்தவர் குடித்து விடக் கூடாதென்று, விழித்துக் கொண்டே வந்து மகாபலிபுரம் போகும் சாலையில் இரவில் விரைகையில், கார் மிரண்டு திரும்பி நின்று கொண்டிருக்கையில் தனியாக கழன்று விழுந்திருந்த தலை ஒன்றைப் பார்த்தோம். எழும்பூர் ம்யூஸியத்தில் மகா திமிங்கில எலும்புக்கூடு பார்த்து பயந்தோம்.

பின் மற்றுமொரு முறை கொட்டித் தீர்த்த மாமழையில் சாக்கடை புரண்டோடிய பாரிமுனையில் கால் பதித்து நடந்து சென்றேன் அப்பாவுடன்!

சின்னச் சின்ன சம்பவங்களை மறைக்க கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சென்னையிலேயே வாசம்.

சொந்தக் கதையைச் சொல்வதை விட, இந்த நகரத்தின் கதையைச் சொன்னாலாவது நல்லது என்ற நினைப்பால், இத்துடன் நிறுத்தி விட்டு மேலே செல்கிறேன்.

கி.பி. 1921-ல் எழுதப்பட்ட ஒரு சிறு நூல். எழுதியவர் Glyn Barlow. ஐம்பது பக்கங்கள் தான் வந்திருக்கிறது. 1639-ல் பூந்தமல்லி நாயக்கரிடம் இருந்து திரு. ப்ரான்சிஸ் டேவால் வாங்கப்பட்ட 'மதராஸ்' என்ற ஒரு குக்கிராமத்தின் கதையைச் சொல்கிறது இந்நூல். முழுக்கதையையும் அல்ல. சில சம்பவங்கள். சில சண்டைகள். சில கட்டிடங்கள். சில சர்ச்சுகள். அத்துடன் சென்னையின் பல பெயர்க்காரணங்களை விளக்கிச் சொல்கிறது.

அசோகமித்திரன் அவர்களின் சென்னை பற்றிய நூலையோ, நரசய்யா அவர்களின் 'மதராஸ்பட்டின'த்தையோ படிக்காததால் இந்நூல் எனக்குப் பிடித்திருக்கிறது.

மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள் இதில் இருக்கின்றன. எழுத்து நடை பிரமாதம். சலிப்பு ஏற்படுத்தவேயில்லை. இன்று அலுவலகத்தில் யதேச்சையாகத் துழாவும் போது பார்க்கக் கிடைத்து, வீட்டிற்கு வந்து ஒரே மூச்சாகப் படித்து, இப்போது உங்களுக்குச் சொல்கிறேன்.

ஒரே ஒரு மொழிபெயர்ப்பைச் சொல்கிறேன்.

சாந்தோமின் வரலாறு தெரியுமா உங்களுக்கு...? கீழே படியுங்கள்.

பழைய மெரினா ::



சுனாமி மெரினா ::



சாந்தோம் கம்பெனியரால் 1749-ல் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கதை வெகு சுவாரஸ்யமானது.

இந்நாட்களில் சாந்தோம் மற்றும் மைலாப்பூர் இரண்டு பெயர்களும் ஒரே பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால அந்நாட்களில் இப்பெயர்கள் இரண்டும் இரண்டு வித்தியாசமான இடங்களைக் குறிப்பிடும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே இலங்கி வரும் ஊராகக் கருதப்படும் மைலாப்பூர், மிகப் பழமையான இந்திய ஊர். சாந்தோம் பதினேழாம் நூற்றாண்டு போர்த்துக்கீசிய அமைவிடம். செயிண்ட் தாமஸ் தி அபோஸ்டல் மயிலையில் தான் புதைக்கப்பட்டதாக ஒரு நம்பிக்கை இருந்தது. போர்த்க்துக்கீசியர்கள் முதலில் இந்தியா வந்த போது, அவர்களுள் சிலர் மயிலைக்கு அவரது மிச்சங்களைப் பார்க்க வந்தனர்.

அவர்கள் சில பாழடைந்த கிறித்துவ ஆலயங்களையும், செய்ண்ட் தாமஸ் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் இடத்தையும் கண்டனர்.

விரைவில் அந்த இடத்தில் ஒரு வழிபாட்டிடம் எழுப்பப்பட்டது. அதனைச் சுற்றிலும் ஒரு போர்த்துக்கீசிய நகரம் வளர்ந்தது. காலப்போக்கில் அந்த நகரம் ஒரு வணிபப் பகுதியாக மாற, கோட்டை மதிலால் சூழப்பட்டு, இந்திய நகரமான மயிலாப்பூருக்கு இணையாக மாறியது.

பதினாறாம் நூற்றாண்டில் இந்தியா வந்த ஒரு இத்தாலிய வணிகர், சாந்தோமைப் பற்றி 'நிலத்தின் மேல் தான் கண்டவற்றுள் அழகிய நகரம்' போல் இருந்ததாகவும், மயிலாப்பூர் களிமண் சுவரால் சூழப்பட்ட ஒரு இந்திய நகரமாகவும் குறிப்பிடுகிறார்.

ஆகாவே மயிலாப்பூர் சாந்தோமின் கறுப்புப் பகுதியாக இருந்தது. ஆனால் பின்னாட்களில் இரண்டும் ஒன்றிணைந்தன.

ப்ரிட்டிஷார் செய்ண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வந்த போதே, போர்த்துக்கீசியரின் பலம் குன்றத் தொடங்கி இருந்தது; மற்றும் அவர்களது செல்வாக்கு வளர வளர, போர்த்துக்கீசியரின் ஆதிக்கம் சாந்தோமில் மேலும் குறையக் காரணமாக இருந்தது.; அதன் இயல்பான பின் நிகழ்வாக மயிலாப்பூரை உள்ளடக்கிய சாந்தோம் அவர்களது ஆக்ரமிப்பிற்கு ஆளாகியது.

சாந்தோமின் முதல் வெற்றியாளர் மண்ணின் அரசரான கோல்கொண்டாவின் இஸ்லாமிய மன்னர்.அடுத்து ப்ரெஞ்சுக்காரர்கள் அதனை கோல்கொண்டாவிலிருந்து எடுத்துக் கொண்டார்கள்; இரண்டு வருடங்களுக்குப் பின் கோல்கொண்டா, டச்சுக்காரர்களின் துணையுடன் ப்ரெஞ்சுக்காரர்களிடம் இருந்து மீண்டும் தன்வசப்படுத்தினர். டச்சுக்காரர்கள் தங்களது உதவிக்கு கிடைத்த பரிசோடு திருப்திப்பட்டுக் கொண்டதால், சாந்தோமை கோல்கொண்டாவின் ஆதிக்கத்திற்கே விட்டு விட்டார்கள். ப்ரிட்டிஷாரின் சுய அறிவுரையின் பேரில் கோல்கொண்டா அங்கிருந்த கோட்டைகளை அழித்தது. பின் அந்நகரத்தை விற்பனை செய்வதாக அறிவித்தது. கிழக்கிந்தியக் கம்பெனியார் அதனை வாங்கத் தயாராயினர்; போர்த்துக்கீசியரும். ஆனால் ஒரு பணக்கார முஸ்லீம் கோல்கொண்டாவின் முஸ்லீம் அதிகாரிகளுக்காக சாந்தோமை குறைந்த கால குத்தகைக்கு எடுத்தார். அடுத்து 'பூந்தமல்லி இந்து கவர்னருக்கு' லீஸுக்கு விடப்பட்டது. பிறகு ஒரு பெரும் விலைக்கு மீண்டும் போர்த்துக்கீசியரின் கைகளுக்கே சென்றது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் முகலாயப் பேரரசரான ஒளரங்கசீப் கோல்கொண்டா ராஜ்யத்தைக் கைப்பற்றியதால், போர்த்துக்கீசியர் சாந்தோமை விட்டு வெளியேறா விட்டாலும், அப்பகுதி முகலாய சாம்ராஜ்யத்தின் ஓர் அங்கமாக மாறி, முகலாய ஆட்சியின் கீழ் வந்தது. ஒளரங்கசீப்பின் மறைவிற்குப் பின் பேரரசு உடைய, ஆற்காட்டு நவாப் தம்மை சுதந்திரமாக அறிவித்துக் கொண்டு, சாந்தோமை தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார்.

கி.பி.1749-ல் ப்ரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றியிருந்த மதராஸை மீண்டும் ப்ரிட்டிஷாரிடமே கொடுத்து விட வேண்டும் என்று இங்கிலாந்து மற்றும் ப்ரான்சுக்கிடையே, பாரீஸில் உடன்படிக்கை கையெழுத்தானது. அதனால் மனம் நொந்து போன புதுச்சேரியின் துய்ப்ளேக்ஸ் மதராஸை இழந்ததற்கு ஈடாக சாந்தோமை கைப்பற்றிக் கொள்ள திட்டங்கள் தீட்டினார். செய்ண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த ப்ரிட்டிஷாருக்கு இந்த விவரங்கள் தெரிந்து போய், ப்ரெஞ்சுக்காரர்கள் போன்ற தீவிர எதிரியை இவ்வளவு அருகில் பக்கத்து ஊர்க்காரனாக வைத்திருக்கத் துளியும் விரும்பாமல், துய்ப்ளேக்ஸை முந்திக் கொண்டு ஆற்காட்டு நவாப்புடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். அதாவது, 'மயிலாப்பூர் மற்றும் சாந்தோமை' நவாப் கம்பெனியாருக்குக் கொடுத்து விட வேண்டியது. கம்பெனி அதற்கு இணையாக நவாப்பிற்கு பணமும், ஆட்களும் அவர் கேட்கும் போதெல்லாம் கொடுத்து உதவும். இப்படியாக சாந்தோம் ப்ரிட்டிஷாரின் ஆளுகைக்குள் வந்தது. இடையில் சில காலம் Count Lally தலைமையில் ப்ரெஞ்சுக்காரர் வசமும், மைசூரின் ஹைதர் அலியிடமும் சென்றாலும், ப்ரிட்டிஷாரிடமே அது தொடர்ந்து இருந்து வந்தது.

டுத்த முறை பட்டினப்பாக்கத்தில் இருந்து, சாந்தோம் சர்ச் குறுகிய வளைவில் நுழைந்து பீச் ரோட்டுக்குப் போகும் போது, நினைத்துப் பாருங்கள்.

ரு சுய தம்பட்டம் :

அ. சென்னையைப் பற்றிய வாழ்த்துக் கவிதை ::

ஆகஸ்ட் 22 - சென்னை மாநகரின் 369-வது (3 + 6 = 9!) பிறந்த நாள். ஆகவே கொண்டாட ஒரு கவிதை...!

ஐஸு ஹவுஸு ட்ராக்காண்ட நிக்குற ஃபிகரு கில்மா வய்ஸு!
பாக்க சொல்ல பளக சொல்ல அது பாடி ரொம்ப நைஸு!

டாவடிக்குற பொண்ணுக்கெல்லாம் டைசன் மாரி அப்பன்! அது
பாவம் போல பாக்க சொல்ல பத்திக்குறானே குப்பன்!

தள்ளினு வர பொண்ணிருந்தா ஜில்லுங்குது பீச்சு வெயிலு!
அள்ளினு போ ஆத்து தண்ணினு அசத்துது அந்த குயிலு!

ஈ.ஸி.ஆரு தோப்புக்குள்ள ஒதுங்கும் ஜோடி வேஸ்டு!
ஏ.ஸி. போட்ட தேட்டருக்குள்ள இருக்குது நம்ம டேஸ்டு!

ஸ்பென்ஸரு, சிட்டி சென்டருக்குள்ள லுங்கி கட்டினு போனா,
பாக்கறதில்ல, பாயா ஊத்தற ஆயா போலி ருக்கற மீனா!

கோயம்பேட்டுக்கு போனதால கொறயுது கார்னர் மவுஸு!
கோலி தண்டு காலந் தொட்டு கொறயல எங்க ரவுஸு!

ட்ரிப்ளிகேன் மெட்ரோ ட்ரூப்பு, ஐலண்ட் குப்பம் கானா க்ரூப்பு மோதிக்கிட்டா வாடா!
க்ரிப்பில்லாம பாட சொல்லோ காது கிளிஞ்சு போனா, எறியலான்டா சோடா!

மோதிப் புட்ச்ச கறுத்த மீன வறுத்து விக்கப் பாத்தா,
பாதி வெலைக்கு கேக்க றான்டா, சொல்லு 'போடாங் ***'!

ரிச்சா, ஆட்டோ, டாக்ஸி, ட்ரெயினு எத்து வேணா உண்டு!
ரிச்சா போக ஆசப்பட்டா இருக்கு ஏர்போர்ட் ரெண்டு!

கானா, டிஸ்கோ, பாப்பு, ராப்பு, சல்ஸா, ஜிம்மு, தாச்சி,
போனா ஃபிட்டாகும், அல்லாம் துட்டாகும், பர்ஸு பணமா காச்சி!

கூவமிருக்கு கோட்டயிருக்கு தில்லிருந்தா போலாம் மன்சா!
பாவம் செய்ய பயமில்லனா எப்பயும் வாளலாம் குன்ஸா!

சப்பாத்தி எட்த்து சால்னா தொட்டு நாஷ்டா துன்னா போதும்!
அப்பால பாக்கலாம், டயர்டானேன், ஹாயா தூங்கப் போணும்!

Advanced Birthday Wishes, Chennai...!!!


ஆ. எழுதிய கதையில் இருந்து சில வரிகள் ::

....

இருவருக்கும் கிடைக்கின்ற லீவுகளில் மெரினா பீச், சமாதிகள், செத்த ம்யூஸியம், உயிருள்ள ம்யூஸியம், மயிலை கோயில், பறக்கும் ரயில், அஷ்டலட்சுமி கோயில், எலியட்ஸ் பீச், கிண்டி ரேஸ் கோர்ஸ் (7-ம் நம்பர் இன்னிக்கு கெலிச்சிடுச்சு சார்!), மின்சார ரயில் (கள்ளழகர் வைகையில் எறங்கும் போது, இருக்கற கூட்டம் மாதிரி இல்ல இருக்கு!), 21G, 12B, கோயம்பேடு, மால்கள், சென்ட்ரல், மவுண்ட் ரோடு ஹிக்கின் பாதம்ஸ், பர்மா பஜார் (சார்! சி.டி., டி.வி.டி., எல்லாம் போதுமா சார்? நம்ம கையுல நல்ல குட்டிங்க இருக்குது! சுத்தம். எந்த நோயும் இருக்காது! எல்லாம் டீஸ்ண்டான கேள்ஸ்! அவருக்கு 100 ரூபா தான். வர்றியா சார்?), ஹை கோர்ட், மண்ணடி லாரி ஆபீஸ்கள், ஹார்பர், தி.நகர் எறும்பு மனிதர்கள், கடைகள், புரசை துணிக் கடை.. இல்லை. துணிக் கடல்கள், திருவல்லிக்கேணி பாதசாரி புத்தக கடைகள், லஸ் கார்னர் ஆழ்வார் புத்தக விரிப்பு, சாந்தோம் சர்ச், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் (அப்பாடா! இது ஒண்ணு தான் எங்க ஊர்ல இருக்கற மாதிரி இருக்கு!), L.I.C., The One and Only கூவம்.....

தருமமிகு சென்னையின் பெருமைகளைக் கிராமத்து Migrantக்கு காட்டவேண்டியது, தலைமுறை சென்னைவாசியின் தார்மீகக் கடமை என்றே உறுதியாக நம்பினேன்.

....


ழைய மதராஸின் சில படங்கள் ::

பழம் சென்னை - 1

பழம் சென்னை - 2

***

புத்தகம் : The Story of Madras.

புத்தக வகை : வரலாறு.

ஆசிரியர் : Glyn Barlow.

கிடைக்குமிடம் : இணையம்.

பதிப்பகம் : http://www.manybooks.net/

விலை : இலவசமுங்கோ....!!!!

2 comments:

வெண்பூ said...

நல்ல அறிமுகம் வசந்த்.. புத்தகம் இறக்கியாச்சு.. இனிமேத்தான் படிக்கணும்.. ஆல்பம் அருமை.. அறிமுகத்திற்கு நன்றி..

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

படித்து விட்டு புத்தகம் பற்றி எழுதுங்கள். சென்னைவாசியான உங்களிடம் இருந்து உள்ளார்ந்த கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.