வைரத் திரிகளாய் வானில் பொறிந்து கொண்டிருந்தன விண்மீன்கள். பெரும் கருந்திரை கவிழ்த்த பூமியின் முகத்தை மறைத்த இரவெனும் இராஜ்யத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்த மஹா பெளர்ணமி ராவில் மெல்ல நடந்து கொண்டிருந்தேன்.
பாதைகள் அற்ற ஒரு மலைப்பரப்பு அது. அங்கே நீல நிறத்திடை மிதந்து கொண்டிருந்த பேரழகிப் பதுமையாய் வெண்ணிலா. அந்த மந்திர மாயமோகினியின் மயக்கும் பாலமுதுப் பொழிவிலே குளிரக் குளிர நனைந்து கொண்டிருந்தேன். அவள் மகராணியா..? இல்லை பொலிவின் மணம் வீசும் இளவரசியா..?
மோகனமே மெல்லென உருவெடுத்து வந்து முகம் காட்டும் மாசறு நல்லெழிலா..? மனம் வருடும் சுந்தர மதுர கானத்தைத் திரட்டி, கட்டி செய்து வைத்த பிரம்மாண்ட வெண்முத்தா..?
மென் மஸ்லின் துணி முகமறைப்புகளென சாம்பல் மேகங்களை அள்ளி அள்ளி அவள் போர்த்திக் கொள்ளக் காரணம் அவள் அகத்தில் மறைந்திருக்கும் வெட்கமா..? தென்றல் காற்றைக் கைக் கொண்ட அவள் அவ்வப்போது திரை விலக்கிச் சிரிக்கின்றாள். அந்த முழு வெண்மையின் பரவச ஒளித் தழுவலில் சொட்ட சொட்ட நனைந்து கொண்டிருந்தேன்.
பச்சை வர்ணங்களின் மேலெல்லாம் இருள் கலந்த மரக்காட்டின் மத்தியிலே தளும்பிக் கொண்டிருந்தது ஒரு குளிர்க்குளம். அதன் கரைகளில் வந்து மோதிக் கொண்டிருந்த அலைகளின் நுரைகள் திரண்டிருந்த வெண் சாற்றை அணிந்து கொண்டிருந்தன. ஆஹா..! அந்த நீர்ப்பூம்யின் மேல் ஒற்றைக்கால் நர்த்தனம் ஆடும் அல்லி மலர்களின் அழகைத் தான் எப்படிச் சொல்வது...?
மழை பெய்து கொண்டிருக்கும் ஒரு மாலை நேரத்தில் ஜன்னலோரத்தில் இள நங்கை அமர்ந்திருப்பாள். அவள் கண்கள் யாரையோ தேடித் தேடிக் களைத்திருக்கும். சற்று பொழுதில் அவளது கள்ளமற்ற மனம் கவர்ந்த கள்வன் வருவான். அவனது உருவம் கண்டதும் நங்கையின் விழிகள் எத்தனை பரபரப்படையும்...! அவனைக் காணவும் வேண்டும்; அவனைக் காண்பதை ஊரார் காணாதிருக்கவும் வேண்டும்; அவன் அறிவானோ, அறியானோ.. அந்த உள்ளத் தவிப்பையும், இருதயத் துடிப்பையும் அந்த பெண்ணை அன்றி யார் தான் முழுதாக அறிய முடியும்..?
அல்லி மலர்களின் நிலையும் அவளை ஒத்திருந்தது. ஜன்னல் கம்பிகளைப் போல், அசைந்து கொண்டிருந்த தென்னை இளங் கீற்றுகள் நீண்டு கிளைத்திருந்தன. அவற்றின் இடைவெளிகளில் அந்த அழகுச் சந்திரனின் வெண்ணிறத் திருவுருவத்தின் ஒளி வருகிறது. அதன் சில்லிப்பு பட்ட உடனே அல்லி மலர்கள் மெல்ல மெல்ல தம் மொட்டவிழ்த்து, இதழ் திறக்கின்றன. மதுரமான மகரந்த சுகந்தம் காற்றின் மேலெல்லாம் கலந்து, கரைந்து எனக்குள் கிளர்வூற்றுகின்றன; அவற்றின் காதல் நாடகத்தை மேலும் கண்டு வெண்ணிற அல்லிகளின் மேல் வெட்கச் சாயம் பூச விரும்பாமல் நடந்தேன்.
வெகு தூரத்திலே மலைத் தொடர்கள் தென்பட்டன. அவற்றின் விளிம்புகள் தான் எத்தனை வளைவு..? மேகம் மோதி மோதி மோகம் அலையலையாய்ப் பரவி, தன் ஆயுள் ஊற்றைத் திறந்து பெய்யும் மழையால் நனைத்துக் கொண்டிருந்தன. எங்கோ பெய்யும் அதன் வாசம் இங்கே அடித்தது.
சலசலவென ஈரம் கவிந்த குளிர் அணுக்களை நிரப்பிக் கொண்டு குதூகலமாய்க் கும்மாளமிட்டு, ஓடி வந்து என்னுள் நிரம்பி, என்னை நிரப்பி, என்னைக் கடந்து சென்று கொண்டேயிருந்தது காற்று. எத்தனை குஷி அதற்கு..? கேட்க யாருமற்ற சிறு பிள்ளை போல், கவனிக்க என்னைத் தவிர வேறொருவரும் இல்லாத இந்த மழை இரவில் இதன் கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்..?
ஒரு நேரம் அமைதியாய் வந்தது; உடனே அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்த மரங்களின் இடையில் எல்லாம் புகுந்து கிச்சுகிச்சு மூட்டியது; இலைகளை எல்லாம் சலசலக்கப் பண்ணியது; பனி விழுந்து நனைந்து, கவிழ்ந்து கொண்டிருந்த மஞ்சள் பூக்களுக்கு எல்லாம் முகம் துவட்டி விட்டது; துளை விழுந்திருந்த மூங்கில் உடல்களின் உட்புகுந்து இரவின் மெளன ராகத்தைக் கட்டி எழுப்பியது; மகாராஜா வரு முன் வரும் கட்டியக்காரன் போல், மழையரசன் வருகின்றான்; மழையரசன் வருகின்றான்' என்று முழங்கிக் கொண்டே என்னைத் தாண்டி சென்றது இளங் காற்று.
1 comment:
முடிந்ததா இல்லையா எனத்தெரியவில்லையே.. நல்ல வர்ணனைகள்...ஒரு நாவலிலோ அல்லது கதையிலோ இடம் பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
ரசிகனய்யா நீர்...!
Post a Comment