Tuesday, March 17, 2009

ஆகாயக் கொன்றை. 2.

ஆகாயக் கொன்றை. 1.


வெள்ளிக் காமாட்சி விளக்கின் திரியைக் கொஞ்சம் இழுத்து விட்டாள் காயத்ரி. 'துறுதுறு'வென்று துள்ளி அசைந்தாடிக் கொண்டிருந்த சுடர், குறைந்தது. படங்கள் அனைத்திலும் மாலையில் பூத்திருந்த புதுமலர்கள் மாலைகளாகி இருந்தன. மல்லிகை மாலைகளில் செம்பருத்திப்பூ செருகியிருந்தாள். ஊதுவர்த்தி ஸ்டாண்டில் இரண்டும், சமையலறை நிலையில் ஒன்றையும், வாசலின் நிலையில் ஒன்றையும் செருகி முடித்து, முக்கோண மாடங்களைப் பார்த்தாள். மண் விளக்குகள் சிமிட்டிக் கொண்டிருந்த ப்ரதேசம் சுற்றிலும் மஞ்சள் ஒளி மினுக்கியது.

"சார் இருக்காராம்மா..?"

நிமிர்ந்து பார்த்தாள். ஒரு வயதானவரும், ஓர் அம்மாவும் நின்றிருந்தார்கள். அவர் அவரது மனைவியாக இருக்க வேண்டும். கைகளில் பச்சை நிற பைண்டிங் போட்ட நோட். அனேகமாக ஜாதகங்கள்.

"வாங்க. உள்ள வாங்க. இங்கே உட்காருங்க. ட்யூஷன் விடற நேரம் தான். இப்ப வந்திடுவார்..."

வாசலின் இருபுறமும் தேங்கியிருந்த சைக்கிள்களைத் தாண்டி உள் வந்தனர். இருபுறமும் அழுத்த ரோஸ் பூக்கும் தொட்டிச் செடிகள் ஈரமாய் இருந்தன.

மூன்று நாற்காலிகளும், ஒரு பெஞ்சும் போடப்பட்டிருந்தன. அவர்கள் அமர்ந்து ஆசுவாசித்தனர். மாடிப்படிக்கட்டுகளில் பல செருப்புகள் கலந்திருந்தன. 'சைன் டீட்டா ஸ்கொயர் ப்ளஸ்' கேட்ட போது,

"இந்தாங்க... ஜலம் எடுத்துக்கோங்க..! இப்ப வந்திடுவார்..!" செம்பு நீரைக் கொடுத்தாள். இருவரும் கொஞ்சமாய் நனைத்துக் கொண்டு, அவளிடம் திருப்பித் தரும் போது அந்த அம்மா கேட்டார்.

"நீ என்னம்மா பண்றே..? படிக்கிறயா..?"

"ஆமாம்மா..! பி.எஸ்.ஸி. ஸெகண்ட் இயர். மீனாட்சில தான் பண்றேன். நீங்க உங்க பொண்ணு கல்யாணத்துக்கு ஜாதகம் வந்திருக்கீங்களா..?"

"அட.. ஆமாம்..! எப்படிம்மா கண்டுபிடிச்ச..?"

"பொண்ணு பெத்தவங்களுக்கும், பையன் பெத்தவங்களுக்கும் கவலைகளோட கலவைல வித்தியாசம் முகத்திலேயே தெரியுமே! இப்ப எல்லாம் எங்கப்பா முகத்திலயும் இதே ரேகைகளைப் பார்க்கிறேனே..! கவலைப்படாதீங்கம்மா..! எங்கப்பாங்கறதுக்காக சொல்லல. ராசியான கை. அவர் பார்த்துக் கொடுத்து சேர்ந்தவங்க எல்லாம் ரொம்ப நல்லா இருக்காங்க..! உங்க பொண்ணுக்கும் மங்களகரமா வாழ்க்கை அமையும்...!" அவர்கள் முகத்தில் ஒரு சாந்த மகிழ்ச்சி பரவியது.

சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மாடிப்படிக்கட்டுகள் வழியாக, 'படபட'வென பட்டாம்பூச்சிகளாக மாணவிகள் கலகலத்து இறங்கிச் சென்றனர். சிலர் உள்ளே எட்டிப் பார்த்து, 'அக்கா.. வரேங்க்கா..' சொலிப் பறந்தனர்.

கொஞ்ச நேரத்தில் மாடி விளக்குகள் அணைக்கப்பட்டன. ஈஸ்வர ஐயர் இறங்கி வந்தார். மாடிக்கதவைப் பூட்டி, வாசற்கதவைத் தாளிட்டு உள்ளே வந்தார். இருவரும் எழுந்து நின்றனர்.

"வாங்க.. வணக்கம்..! உட்காருங்க. ஏம்மா... குடிக்க ஜலம் குடுத்தியா..?"

"அதெல்லாம் ஆச்சுங்க..! பொண்ணு ஜாதகமும், ஒத்து வர்ற மாதிரி இருக்கற சில வரன்கள் ஜாதகங்களும் கொண்டு வந்திருக்கோம். நீங்க தான் பார்த்துச் சொல்லணும்.." உட்கார்ந்தார்கள்.

"அப்பா..! உங்களுக்கும் ஜலம் வெச்சிருக்கேன். ஏதாவது வேணும்னா Callங்க.." சிரித்தபடி சொல்லி காயத்ரி உள்ளே சென்றாள்.

இரண்டாம் அறை அவளுக்கானது. நுழைந்து சுவிட்ச்சைத் தட்டினாள். மூன்று முறை உடல் சிமிட்டி ட்யூப்லைட் உயிர்த்தது. டேபிள் மேல் அப்சர்வேஷன் நோட்டுகளும், தலையணை புத்தகங்களும், சில பேனாக்களும், பென்சில்களுமாய்க் கலைந்திருந்தன. நாற்காலியை இழுத்து, டேபிளோடு ஒட்டிப் போட்டு, எதிர் ஜன்னலைத் திறந்து அமர்ந்து, மடித்து வைத்திருந்த புத்தகத்தின் பக்கம் விரித்து, பார்வை பதித்தாள்.

வெளியே வேக வேகமாய்க் கருக்கிட்டுக் கொண்டு வந்தது. திடீரென வந்து எட்டிப் பார்த்து, கொட்டித் தீர்த்த ஒரு மாலை மழைக்குப் பின் வானம் கண் திறக்கவில்லை. வீட்டின் பின்புறம் தோட்டத்தில் சில்வண்டுகளின் 'கிர்ர்ர்...'ரீங்காரம் ஆரம்பித்து விட்டிருந்தது. நான்கு வீடுகள் தள்ளியிருந்த டீக்கடையின் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் 'பாடும் போது நான் தென்றல் காற்று' பரப்பியது. சலசலவென்று மலை ஈரக் காற்று யாருக்கோ பதில் சொல்வது போல் பேசிக் கொன்டே வந்தது. ஒரு சுவர் தாண்டி சத்தமாய்ப் படிக்கும் அருள் குரல் கேட்டது. '...வாரல் என்பது போல் மறித்துக் கைகாட்ட...'

ஏதோ தோன்ற ட்யூப்லைட்டைப் பார்த்தாள். வழுக்காமல் நடந்து கொண்டிருந்த ஒரு கறுப்புப் பொட்டுப் பூச்சியை, எங்கிருந்தோ மெது மெதுவாய் நகர்ந்து வந்த மரப்பல்லி ஒன்று, சட்டென்று நா நீட்டி உறிஞ்சித் தின்றது. அவள் பார்த்துக் கொண்டேயிருந்தாள். மரப்பல்லி அவளை ஒரு வில்லப் பார்வை பார்த்தது. கொஞ்ச நேரம் அசையாமல் அசங்காமல் அவளையே பார்த்தது. அவள் ஏதாவது எதிர்வினை செய்கிறாளா என்று கணக்கிட்டது. அவளும் எதுவும் செய்யாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென எழுந்து 'உஸ்..' என்று தலையைக் கொஞ்சம் முன் நீட்டி கையை ஓங்கினாள். அதைக் கண்டு பயந்தோ என்னவோ, அல்லது அவள் கைகளின் கண்ணாடி வளையல் சிரிப்பாலோ சற்று அதிர்ச்சியுற்ற பல்லி, ஒரு வெறுப்புப் பார்வையை அவள் மேல் தூக்கிப் போட்டு ஓடோடியே போய் மறைந்தது.

"சரவணா... அந்த மாங்கா பறிச்சுக் கொடுடா..!"

"போடி...!"

"டேய்..டேய்..! ப்ளீஸ்டா..!"

"பறிச்சுக் குடுத்தா என்ன தருவ..?"

"ம்...! இங்க பாத்தியா ரப்பர்..! ஊர்ல இருந்து மாமா கொடுத்தாங்க..! இன்னும் பேப்பர் கூட பிரிக்கலை...! உனக்குத் தர்றேன்டா..!"

"சத்தியமா..?"

"சத்தியமா..!"

"படிப்பு மேல சத்தியமா..?"

"படிப்பு மேல சத்தியமா..!"

"என்ன ஏமாத்தாத..!"

"ஏமாத்த மாட்டேன். நீ முதல்ல மாங்கா பறிச்சுக் கொடு..!"

...

"ஆ...!"

"ஏன்டா கத்தற..?"

"இங்க ஒரு பல்லி இருக்கு..! என்னயே பாத்துட்டு இருக்கு..! பயமா இருக்கு...!"

"பல்லி ஒண்ணும் பண்ணாதுடா.."

"போடி...! நீயே பறிச்சுக்கோ, போ...!"

"டேய்...! ஓடாதடா..! நானும் வர்றேன்...!"


"காய்யூம்மா...! கொஞ்சம் இங்க வா..!"

...

"காயத்ரி...!"

படக்கென்று சுய நினைவுக்கு வந்தாள். வெட்கப் புன்னகையை தாவணியால் வழித்து கீழே சிந்தி விட்டு, எழுந்து முன்புறம் சென்று,

"என்னப்பா..!"

"ஒண்ணும் இல்ல..! ஸ்டோர் ரூம்ல ரெண்டாவது அடுக்குல பழைய பஞ்சாங்கம் எல்லாம் இருக்கு! கொஞ்சம் எடுத்திட்டு வாம்மா..!"

"சரிப்பா..!"

நாதாங்கியை இழுத்துப் போட்டுத் திறக்க, எப்போதோ வருவதால் ஸ்டோர் ரூம், மத்தியானத் தூக்கக் கலங்கலாய் இருந்தது. தூசு தும்பல்களைத் தட்ட, அவை ஜிவ்வென்று நீள் உறக்கத்திலிருந்து விழித்துக் குதித்து மேலே பறந்து, 'யார் என்னை எழுப்பியது?' என்று பார்த்து விட்டு, மீண்டும் ஏதோ ஒரு புள்ளியில் சென்று சுகமாய் அமர்ந்து கொண்டன. தேடிப் பஞ்சாங்கங்களை எடுக்கும் போது, கீழே பார்த்தாள். ரோஸ் ப்ளாஸ்டிக் சட்டத்திற்குள்ளே சிக்கிக் கொண்ட கறுப்பு ஸ்லேட், அதன் கீழ் ப்ரவுன் அட்டை போட்ட ஒரு குயர் கணக்கு நோட். அட்டையில் பூ போட்ட லேபிள் ஒட்டி இருக்க, 'E.காயத்ரி, VI - B ' என்று எழுதி முனைகளில் கிழிந்திருந்தது. சட்டென்று ஏதேதோ நிகழ்வுகள் பயாஸ்கோப் டேப் வரிசைகளாய்ச் சரசரவென்று ஓடின. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தன் அறையில் கொண்டு வந்து வைத்தாள். பஞ்சாங்கங்களை அப்பாவிடம் கொடுத்து விட்டுத் திரும்பினாள்.

ஸ்லேட்டை எடுத்துப் பார்த்தாள்.பளிச்சென்ற அழுக்கோடு இருந்தது. காற்றில் ஆடிக் கொண்டிருந்த ஒற்றை ஆணித் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த, துணி போர்டின் கீழே கசங்கலாய் விழுந்திருந்த துணியை எடுத்துத் துடைத்தாள். சாக் பீஸை எடுத்து, ஒரு பக்கமாய் எழுதினாள்.

சரவணன்
சரவணன்

"உஷ்..! எல்லாரும் வாய் மேல கை வைங்க..! ஜெயா மிஸ் குச்சியால் டேபிளைத் தட்டினாள். சரியாகத் தவறைப் புரிந்து கொள்ளாமல், எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்து, இடது கையை வயிற்றின் குறுக்கே கட்டி, வலது கை ஆட்காட்டி விரலால் உதடுகளை அழுத்திக் கொண்டனர்.

"பத்து நிமிஷம் நான் கணக்கெல்லாம் சரி பார்க்கற வரைக்கும் இப்படியே இருந்தா, திருத்தி முடிச்சவுடனே நாம ஒரு விளையாட்டு விளையாடலாம்.."

"எஸ் டீச்சர்..!" உற்சாகமாய்க் குரல் கொடுத்து, கிசுகிசுக்கத் தொடங்க..."உஷ்....!"

"ஒவ்வொருத்தரா வரிசையா வந்து அவங்கவங்க ஸ்லெட்டைக் காட்டி கணக்கை கரெக்டா போட்டிருக்கீங்களானு காட்டுங்க..! பர்ஸ்ட் அம்பிகா வா....! பன்னெண்டு ப்ளஸ் இருபத்து மூணு எவ்வளவு..?"

வரிசையாக வந்து காட்டி விட்டு, சிலர் காது திருகு வாங்கி, சிலர் குட்டு வாங்கி, சிலர் good வாங்கி...!

"ஒ.கே..! இப்ப ஒரு விளையாட்டு விளையாடலாமா..?"

"எஸ் டீச்சர்..!"

"எல்லாரும் அவங்கவங்க ஸ்லேட்டை எடுத்து, க்ளாஸ்ல அவங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க பேர எழுதுங்க. யாருக்கும் காட்டக் கூடாது..! நான் கேக்கும் போது சொல்லணும்..!"

வகுப்பு முழுவதும் ஒரு சலசலப்பு எழுந்தது. ஒவ்வொருவரும் எழுதினர்.

"எல்லாரும் எழுதியாச்சா...? எங்க ரம்யா நீ சொல்லு...!"

"அமுதா டீச்சர்..!"

"ஏன் அமுதாவைப் பிடிக்கும்..?"

"ஒரு நாள் எனக்கு கோணப் புளியங்கா குடுத்தா டீச்சர்..!"

"குட்..! இப்படி தன் எல்லார்க்கும் கொடுத்து சாப்பிடணும்..! சரி. ரஞ்சனி நீ யார் பேரை எழுதி இருக்க..?"

"காயத்ரி டீச்சர்..!"

"ஏன்..?"

"அவ கொண்டு வர்ற டிபன் எனக்குத் தருவா டீச்சர். ரொம்ப நல்லா இருக்கும். மத்யானம் ஸ்கூல்ல போடற சாப்பாட்ட விட நல்லா இருக்கும்..!"

"குட்..! அப்படி தான் இருக்கணும்! வடிவேல், நீ யார் பேரை எழுதியிருக்க..?"

"விக்டர் டீச்சர்..!"

"ஏன்..?"

"நீங்க கேட்ட பன்னெண்டு ப்ளஸ் இருபத்து மூணு இஸீக்கல்டு முப்பத்தஞ்சுனு அவன் தான் காட்டினான் டீச்சர்..!"

"உட்காரு..! காயத்ரி நீ யார் பேரை எழுதியிருக்க..?"

"சரவணன் டீச்சர்..!"

"என்ன..?" வகுப்பறை லேசாகச் சிரித்தது.

"சரவணா..! நீ என்ன எழுதியிருக்க..?"

"காயத்ரி டீச்சர்..!"

"ஏன் உனக்கு அவளையும் உனக்கு அவனையும் பிடிச்சிருக்கு...?'

"தெரியல டீச்சர்..!" இருவரும் கோரஸாய்ச் சொன்னார்கள்.


'இன்னமும் தெரியலயேடா..!' பெயரை முத்தமிட்டாள். செவ்வரி ஓடிய உதடுகள் மேலெல்லாம் சரவணன் ஒட்டிக் கொண்டான்.

ஸ்லேட்டை டேபிள் மேல் வைத்தாள். 'E.காயத்ரி, VI - B'யை காயத்ரி பி.எஸ்.ஸி. எடுத்தாள். கொஞ்சம் தட்டிவிட தூசு பறந்தது. பக்கங்களைப் பிரிக்க அழுத்தமான கையெழுத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், பின்னம், தசம் பின்னம் என எண்கள் அடிபட்டு, மதிப்பு கெட்டு கடன் வாங்கி, கூடி, பெருத்து, கழிந்து நிறைந்திருந்தன. இரண்டு பக்கங்களுக்கு ஒரு முறை சிவப்பு இங்கில் டிக் செய்து, Good, V.Good என்று சாய்வாகக் கிறுக்கியிருந்தது.

ஒரு பக்கத்திலிருந்து சரேலென ஒரு காகிதம் நழுவியது. ஆரஞ்சு மிட்டாயின் கலர் கவர்க் காகிதம் அது. ஜன்னல் வழி நுழைந்த காற்று அதனைக் கவ்விக் கொண்டு ஓடப் பார்க்க, சட்டென பிடித்தாள். முகர்ந்து பார்க்க இனிப்பின் மிச்ச வாசம் இன்னும் இருப்பதாக இவளுக்குத் தோன்றியது.

"எதுக்கு மிட்டாய்..?"

"இன்னிக்கு எனக்கு பிறந்த நாள்..!"

"ஓ..!"

"அதுக்கு தான் மிட்டாய்!"

"எல்லார்க்கும் குடுத்தியா..?"

"ம்..! எல்லார்க்கும் அஞ்சு பைசா மிட்டாய். உனக்கு மட்டும் தான் நாலணா மிட்டாய்..!"

"உனக்கு..?"

"எனக்கு வேணாம். நீயே சாப்பிடு..!!"

"வேணாம். அப்புறம் எனக்கு வயிறு வலிக்கும். இரு கடிச்சுத் தர்றேன்..!"

கர்ரக்...கர்..கர்ரக்...! "அய்ய.. எச்சி பட்டிடுச்சே.."

"பரவால்ல குடு..!"

"இரு, பேப்பர்ல சுத்தித் தர்றேன். அப்புறமா களுவிச் சாப்பிடு..! இனிப்பா இருக்கு..!"

"சரவணாஆஆ...! நீ வெள்ளாட வர்றயா இல்லியா...?"

"வந்துட்டேன்டா..! டாட்டா....!"


ந்தவர்கள் திருப்தியாய் எழுந்தார்கள்.

"ரொம்ப சந்தோஷங்க..! நீங்க சொன்ன வரனையே பக்கறோம். வேணும்னு சொல்லல. உள்ள வரும் போதே, உங்க பொண்ணு நல்லதா அமையும்னு சொல்லுச்சு. திருமகள் வாக்கு மாதிரி நாங்க மனசுல நெனச்சுக்கிட்டு வந்த வரனே தோதுபடும்னு நீங்களும் சொல்லிட்டீங்க! மனசுக்குத் திருப்தியா இருக்கு. கேக்கறேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க. பொண்ணு மஹாலட்சுமி மாதிரி சர்வ லட்சணமா இருக்கு. கல்யணத்துக்குப் பாக்கறீங்களா..?"

"பாக்கணும். பொண்ணு படிச்சு முடிக்கட்டும்னு இருக்கேன்..!"

"நம்ம ஊர்ப் பக்கமும் உங்க சனம் நெறய இருக்காங்க. படிப்புக்குப் படிப்பா, அழகுக்கு அழகா, அந்தஸ்துக்கு அந்தஸ்தா அய்யிரு பசங்க, நம்ம ஊருப் பசங்க தான், மெட்ராஸ்லயும், பம்பாய்லயும், லண்டன்லயும் இருக்காங்க..!"

"அதுக்கென்னங்க..! நம்ம கைல என்ன இருக்கு..! எல்லாம் அந்தப் பரமேஸ்வரன் முடிச்சுப் போடறது டானே! அவ தலையெழுத்துக்கு ஏத்தாப்ல நடக்கும்..!"

"என்னங்க இப்படி சொல்றீங்க..! பொண்ணு கிளி மாதிரி இருக்கு..! நான்.. நீ..ன்னு வந்து கொத்திட்டுப் போயிட மாட்டாங்க. பொண்ணு நல்ல குணத்துக்கும், உங்க நல்ல மனசுக்கும் எல்லாம் நல்லபடியா நடக்குங்க. அப்ப நாங்க வர்றோங்க..!"

"வாங்க..!"

அவர்கள் இறங்கிப் புறப்பட்டுச் சென்றனர். வாசல் கதவைப் பூட்டி விட்டு, வீட்டுக் கதவையும் தாழிட்டு, உள்ளே வந்தவர், காயத்ரியின் அறை கதவைத் தட்டினார். ஏதும் பதில் வரவில்லை. உள்ளே நுழைந்தவர்,

"என்னம்மா...! அது வாய் மேல அழுக்கா...!" கேட்க,

காலப் பாலாடையின் எத்தனையோ இனிப்பான ஏடுகளைப் புரட்டிச் சுவைத்து, மனமெனும் மந்திரக் குப்பியின் பல அடுக்குகளின் சுக நினைவுகளில் நடந்து, நனைந்து, களித்து, திளைத்துப் பறந்து கொண்டிருந்த காயத்ரி, சரேலென நிகழ்காலத்திற்குள் குதித்தாள்.

"அது வந்துப்பா...!"

"ஸ்டோர் ரூம் அழுக்கா இருக்கும்..! துடைச்சிட்டு வாம்மா..! சாப்பிடலாம்..!"

அவர் வெளியேற, அவசர அவசரமாக உதடுகளைத் துடைத்தவள், கணக்கு நோட்டின் கீழே மறைந்திருந்த ஸ்லேட்டை எடுத்து ஒருமுறை 'சரவணனை' பார்த்து விட்டு, கைகளால் அழித்தாள். வைக்கும் போது ஓரமாகச் செருகியிருந்த மிட்டாய்க் காகிதம் படபடக்க...

"காயத்ரீஈஈ......!!"

"வந்துட்டேம்பாஆஆ...!!!!"


- தொடரும்.

3 comments:

அனுஜன்யா said...

ம்ம், இந்த பதிவில் வர்ணணைகள் குறைந்து, உரையாடல். பார்ப்போம், எப்படி நகருதுன்னு! நடை படு சரளம். மாலை மழைக்குப் பின் தோட்டத்தில் சில்வண்டுகளின் ரீங்காரம். சித்திரம் கண்முன் வருகிறது :)

அனுஜன்யா

இரா. வசந்த குமார். said...

அன்பு அனுஜன்யா...

நன்றிகள். 'நடை படு சரளம்'னு சொன்னா பாராட்டறீங்களா, இல்லை கவிழ்க்கறீங்களான்னே புரியல. கதை பீக்ல ஆரம்பிச்சு நார்மலா போக ஆரம்பிச்சிருக்குன்னு சொல்றீங்கனு நினைக்கறேன்..!!!

தமிழ்ப்பறவை said...

அன்பு வசந்துக்கு,
முதல் பகுதியை விட இப்பகுதி விரைவாகப் போகிறது.(’நடை படு சரளம்’)
‘சித்திரம் கண்முன் வருகிறது’ சொல்ல வேண்டியவற்றை அனுஜன்யா சொல்லி விட்டார்.
//'E.காயத்ரி, VI - B'யை காயத்ரி பி.எஸ்.ஸி. எடுத்தாள்//
//நீங்க கேட்ட பன்னெண்டு ப்ளஸ் இருபத்து மூணு இஸீக்கல்டு முப்பத்தஞ்சுனு அவன் தான் காட்டினான் டீச்சர்..!"
//
//ஏதாவது வேணும்னா Callங்க.." //
இது போன்ற இடங்களில் வசந்த் எட்டிப் பார்க்கிறார்.அடுத்த பகுதியை எதிர்பார்த்து ஆவலுடன்...