Thursday, March 19, 2009

ஃப்ளாப்பி என்றொரு கனவு!



+2 முடிந்து நுழைவுத்தேர்வும் எழுதி விட்டு, இதோ ரிசல்ட் இப்ப வரும், நாளைக்கு வந்திடும் என்று சொல்லிச் சொல்லியே ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என்று மாதங்கள் ஓடி, ஆற்றுக் குளியல், கிரிக்கெட், ஊர் சுற்றல் என்றெல்லாம் சேர்ந்து சுற்றிய ஜமா மெல்ல மெல்ல கழண்டு அடுத்த வகுப்புகளுக்கு நகர்ந்து, மற்ற பிரிவினரும் ஆர்ட்ஸ் கல்லூரிகளில் செட்டிலாகி விட, என்ன செய்வதென்றே தெரியாமல், பொழுது போவதற்கு ஏதாவது கற்றுக் கொள்ளலாம் என்று 'பாலாஜி கம்ப்யூட்டர் சென்டரில்' சேர்ந்த போது, பார்த்த கம்ப்யூட்டரில் முதலில் விளையாடிய கேம் 'டேவ்'.

டாஸ் ப்ராம்ப்ட்டில் 'எடிட்' சென்று, எப்படி கட், காப்பி, பேஸ்ட் செய்வது என்ற பால பாடத்தைச் சொல்லிக் கொடுத்து விட்டு ஹையர் க்ளாஸ்களுக்கு விசுவல் பேசிக் கற்பிக்க நகர்ந்து விட்டார் சென்டரின் உரிமையாளரும், ஆபரேட் செய்யத் தெரிந்த ஒரே ஒருவருமான பாலாஜி. பார்க்க 'ரோஜா' அ.சு. மாதிரியே இருப்பார். கம்ப்யூட்டர் ஆசாமிகள் எல்லாம் அப்படித் தான் இருப்பார்கள் என்று நினைத்தேன். சிறுத்தை ஒன்று பாய்வதற்குத் தயாராக ஒரு கல் மேல் நிற்கும் போஸிலான டெஸ்க்டாப் பிக்சர் இருந்தது.

வாங்கிய நோட்டில் முதலில் எழுதிப் பார்க்கும் பெயர் போல, ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி பெயரை முதலில் டைப் செய்தேன். டெலிட்டுக்கும், பேக் ஸ்பேசுக்கும் வித்தியாசம் தெரியாமல், மாறிய எழுத்தைத் திருத்த முயல்கையில், நியூமராலஜிஸ்ட்கள் கையில் சிக்கியது போல் பெயர் குதறப்பட்டது.

எப்படியோ அல்ட் கீகளைக் கற்றுக் கொஞ்சம் கொஞ்சம் தேறுவதற்குள், பக்கத்து டெர்மினலில் ஒருவன் 'டேவ்' விளையாடிக் கொண்டிருந்தான். That was enough. வெளியேற வழி தெரியாமல், ஆல்ட்களை அழுத்தி, அவனது நோட்ஸை எடுத்துப் பார்த்து, எக்ஸிட்க்கு கஷ்டப்பட்டு கண்ட்ரோலைக் கொண்டு வந்து, எண்டர் அடித்து, கெஞ்சிக் கேட்டு, மாஸ்டருக்குத் தெரியாமல் இருக்க சத்தியம் செய்து, நானும் டேவ்க்குள் நுழைந்தேன்.

'ஜிவ்...ஜிவ்..' என்ற சத்தங்களோடு, நெருப்புகளையும், பூச்சிகளையும் கொன்று, ராக்கெட்டை எடுத்துக் கொண்டு சக்தி தீர்வதற்குள் அடுத்த லெவல் கதவுக்குள் நுழைய முற்படுகையில், மாஸ்டர் வரும் அரவம் கேட்க, நல்லவன் நண்பன், ரீசெட் பட்டனை அழுத்தி விட்டு அப்பாவி போல் அமர்ந்து விட்டான். அப்போது தான் டி.வி. பெட்டியைத் தவிர, பக்கத்தில் நின்று கொண்டிருந்த பீரோவையும் கவனித்தேன்.

மாஸ்டர் எப்போதும் சில ப்ளாப்பிகளோடு வருவார். அதில் எம்ப்ட்டி ஒன்றைக் கொடுத்து, எதையோ காப்பி செய்யச் சொல்ல, எனக்கு அதனுடைய காது பிடித்திருந்தது. அதைப் பிடித்து இழுத்து இழுத்து விளையாடலாம். சமர்த்தாக அதனுடைய இடத்தில் சென்று அமர்ந்து கொள்ளும். பூட்டிய பூட்டு, பிளந்த பூட்டு என்ற இரு சிம்பல்களில் ப்ளாப்பியின் வெகு பத்திரமான துளை இருந்தது. என்ன ஒரு சேஃப்ட்டி..!

மாஸ்டர் கொடுத்த நோட்ஸ்களை எல்லாம் கசடறக் கற்று, ஒரு மாத முடிவில் டேவ் நிலைகளோடு, டாஸ் நிலைகளையும் கற்று, வைத்த எக்ஸாமில் 80% மதிப்பெண்கள் எடுத்தேன். கொஞ்சம் கெட்டியான அட்டையில், 'This is to certify Mr./Ms./Mrs R.Vasantha Kumar passed The Basic Compluter Application Course conducted in Sri Balaji Computer Center, Bhavani. என்று இருந்தது. அதில் பாலாஜி என்று கிறுக்கலாக கையெழுத்து போட்டிருந்தார். வாங்கி விட்டுச் செல்லும் போது, 'நல்ல மார்க் வாங்கியிருக்க. அடுத்த லெவலுக்கும் வா. இன்னும் நிறைய கத்துக்கலாம். ஆயிரம் ரூபா தான் பீஸ்' என்று அனுப்பி வைத்தார். 'அடுத்த லெவல் வீட்ல கேட்டிருக்கேன் சார். சொல்றேன்னு சொல்லி இருக்காங்க' என்று சொல்லிச் சொல்லியே, மேரியோ, ரோட்ரேஷ் எல்லாம் விளையாடிப் பார்த்து விட்டு, ரிசல்ட் வந்தவுடன், சென்னைக்கு வந்து விட்டேன்.

கல்லூரிக் கம்ப்யூட்டர் கதைகளைத் தனியாக எழுத உத்தேசம் என்பதால் அவை பிறகு!

முதல் இரண்டு ஆண்டுகளில் ப்ளாப்பி என்ற அந்த ஏறத்தாழச் சதுர வஸ்து தான் பிரபல்யம். டாக்குமெண்ட்கள் ப்ரிண்ட் எடுக்க, படங்கள் காப்பி செய்ய, ரகசியமாக வைத்திருக்க ப்ரொடெக்ஷன் பூட்டு மூடித் திறந்து, கீறல் விழாமலிருக்க காதை இழுக்காமல்... எத்தனை பத்திரமாக வைத்திருந்தாலும் வேண்டிக் கொண்டு வந்தது போல், நான்கு முறைக்குப் பின் பல்லைக் காட்டி, 'ஃபார்மட் செய்யவா..?' என்று விண்டோஸ் கேட்கும்.

கொஞ்ச நாட்களில் வைரஸ் பரவுதாம் என்று காலரா பரவுவது போல் பீதி பரப்பப்பட, லேப் கம்ப்யூட்டர்களில் ப்ளாப்பி தடை செய்யப்பட, ப்ரவ்ஸிங் சென்டர்களில் இருந்து படங்கள் கடத்தி வரப்பட்டு, ஹாஸ்டலில் எல்லோரும் பார்த்து இன்புறும் வகையில் ஒரே ஒருவன் வைத்திருக்கும் கம்ப்யூட்டரில் ஏற்றப்படும். சில ரூம்களில் புத்தகங்கள் திறந்ததை விட, சி.பி.யூ. பேனட்கள் திறக்கப்பட்டது அதிகம்; ஓ.எஸ். ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டது மிக அதிகம்.

சீனியர்களின் அறைகளில் கம்ப்யூட்டர்கள் இருக்கும். அறைக்குள் இருக்கும் குப்பைகளை விட, சி.பி.யூக்குள் அத்தனை குப்பைகள் இருக்கும். அவற்றை விடவும், ஹார்ட் டிஸ்க்குக்குள் அத்தனை குப்பை 'மேட்டர்'கள் இருக்கும்.ரூம் ஃபேனை விட, கம்ப்யூட்டர் ஃபேன் நன்றாகவே ஓடி, நல்ல காற்று வரும்.

இரண்டு வருடங்களாக அந்த 1.44 MB க்குள் உலகமே இருந்தது.

சடசடவென கொஞ்ச நாட்களில் டெக்னாலஜி மாறி, சுகமாய்த் தூங்கும் பாற்கடல் நாராயணன் கை சக்கரத்தாழ்வார் போல், ஆளாளுக்கு கையில் சிடி.க்கள் சுற்றிக் கொண்டு வர, ப்ளாப்பி மோனோபாலி ராஜாங்கம் ஓய ஆரம்பித்தது. பிக்சர்களில் இருந்து மூவி(ங்) படங்கள் என அறிவும் அடுத்த நிலைக்கு முன்னேறியது. சில சிடி.க்களில் கீறல் விழுந்து விழுந்து கேங் ரேப்பப்பட்ட பெண் போல் காட்சி தரும். சாகாவர வீடியோக்கள், படங்கள், ரெண்டு நிமிடம் மட்டுமே ஓடும் ஹாலிவுட் காட்சிகள் பொறுப்பாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கைமாறிக் கொண்டே இருக்கும்.

பின் சில நாட்களில் சி.டிக்களை வைத்துக் கொண்டு எத்தனை முறை தான் ஒரு ஹாஸ்டல் ப்ளாக்கில் இருந்து மற்றொன்றுக்கு நடந்து கொண்டே இருப்பது என்று ஹார்ட் டிஸ்க் டு ஹார்ட் டிஸ்க் என்று மொத்த சொத்தே பரிமாறப்பட்டது.

மழையில் நனைந்த கோழிக் குஞ்சுகள் போல் ப்ளாப்பிகள் நடுங்கிக் கொண்டே போய், கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்கி இன்று பயன்பாடுகளில் இருந்து கிட்டத்தட்ட காணாமல் போயிருக்கின்றன.

இப்போது யூ.எஸ்.பி, ப்ளூடூத், வை.ஃபை என்று பல இணைப்பு முறைகள் வந்து விட்டாலும், இன்றைக்கும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள்களில், 'சேமி', 'இப்படி சேமி' என்ற கட்டளை ஐகான்களாக பதிக்கப்பட்டு, 'மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவாக' (நன்றி : மதன்) மாறி ப்ளாப்பிகள் அமரத்துவம் பெற்று உறைந்து விட்டிருக்கின்றன.

எனக்கென்னவோ அதன் பெயரிலேயே பிரச்னை இருக்குமோ என்று தோன்றுகிறது. பின்னே, 'ப்ளாப்'பி என்று இருக்கிறதே! அதான் ஊற்றிக் கொண்டு விட்டது என்று நினைத்துக் கொள்வேன். நியூமராலஜிஸ்ட்களிடம் பெயர் சூட்டும் பொறுப்பைக் கொடுத்திருக்க வேண்டும்.

PS: இந்தப் பதிவுக்காக விக்கியில் ப்ளாப்பி பற்றி படித்துப் பார்த்தால், கடைசியாக அதிலும் Metaphor மேட்டர் எழுதப்பட்டிருக்கின்றது. ஒண்ணை சொந்தமா யோசிக்க விட மாட்டாங்க போலிருக்கு. அதுக்குள்ள எழுதிடறாங்க..!!

8 comments:

ஆயில்யன் said...

// கம்ப்யூட்டர் ஆசாமிகள் எல்லாம் அப்படித் தான் இருப்பார்கள் என்று நினைத்தேன்.//

:))

அந்த டைம்ல அப்படி ஒரு கேரக்டர் பார்த்துட்டு கம்ப்யூட்டர் - அமெரிக்கா அப்படின்னாலே இந்த ஞாபகம் தான் :)

ஆயில்யன் said...

//கல்லூரிக் கம்ப்யூட்டர் கதைகளைத் தனியாக எழுத உத்தேசம் என்பதால் அவை பிறகு!
//

ரைட்டு :)

ஆயில்யன் said...

பிளாப்பி யூஸ் பண்றதுலயும் ஒரு திக் திக் டென்ஷன் இருக்கும் அதுவும் ரொம்ப கஷ்டப்பட்டு அடிச்சு அதை சேவ் பண்ணி ரொம்ப தூரத்தில இருக்கிற கடைக்கு எடுத்துட்டு போய் கொடுத்து பிரிண்ட் எடுக்க சொன்னா அவன் கேப்பான் டிஸ்க் பார்மட் கேக்குது கொடுக்கவா?ன்னு :(

இரா. வசந்த குமார். said...

அன்பு ஆயில்யன்...

நன்றிகள். கல்லூரிக் கம்ப்யூட்டர் கதைகள் கண்டிப்பாக காலக்கிரமத்தில் கதைக்கப்படும்.

ப்ளாப்பி படுத்திய பாடு என்று தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். கடைசி நேரங்களில் அவ்வளவு படுத்தியிருக்கின்றது. எனினும் இப்போது அப்ஸலீட் ஆனதால் மரியாதை கொடுப்போம்!!

மெனக்கெட்டு said...

//சடசடவென கொஞ்ச நாட்களில் டெக்னாலஜி மாறி, சுகமாய்த் தூங்கும் பாற்கடல் நாராயணன் கை சக்கரத்தாழ்வார் போல், ஆளாளுக்கு கையில் சிடி.க்கள் சுற்றிக் கொண்டு வர, ப்ளாப்பி மோனோபாலி ராஜாங்கம் ஓய ஆரம்பித்தது. பிக்சர்களில் இருந்து மூவி(ங்) படங்கள் என அறிவும் அடுத்த நிலைக்கு முன்னேறியது. சில சிடி.க்களில் கீறல் விழுந்து விழுந்து கேங் ரேப்பப்பட்ட பெண் போல் காட்சி தரும். சாகாவர வீடியோக்கள், படங்கள், ரெண்டு நிமிடம் மட்டுமே ஓடும் ஹாலிவுட் காட்சிகள் பொறுப்பாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கைமாறிக் கொண்டே இருக்கும்.//

இந்த நடையைப் பார்த்தவுடன் திடீரென்று சுஜாதா ஞாபகம் வந்துவிட்டது

இரா. வசந்த குமார். said...

அன்பு மெனக்கெட்டு...

:)

வினோத் கெளதம் said...

சார்,

எப்படி எழுதுறிங்க இவ்வளவு அழகா அருமையா...

இரா. வசந்த குமார். said...

அன்பு vinoth gowtham...

மிக்க நன்றிகள்...!!! என்ன சொல்றது...? ம்ம்ம்... அப்படியே வர்றது தான்..!!!! :)