Friday, April 10, 2009

அப்பாவிற்கு முத்தம் கொடுத்ததே இல்லை.



ப்பா சின்ன வயதில் குண்டம்மா பள்ளியில் படித்த போது எப்போதும் ஃபர்ஸ்ட் ரேங்க் தான் வாங்குவார். எட்டாவது படிக்கும் போது, அவரது அப்பா இறந்து விட, பள்ளிப் படிப்புக்கு விழுந்தது ஒரு பெரிய முற்றுப்புள்ளி. அதற்குப் பின் அப்பா அவரது அக்கா வீட்டுக்காரர் கடையிலேயே வேலைக்குச் சேர்ந்தார். ஜமக்காளம் எடுத்து வைப்பவராகவும், தபால் நிலையத்திற்கு கொண்டு சென்று போஸ்டல் அனுப்புபவராகவும், பார்சல் கட்டுபவராகவும் இருந்தார்.

அப்பா நன்றாக கவிதை எழுதுவார். தாத்தா இறந்த போது இருந்த குடும்ப நிலைமையைப் பற்றி அழகாக ஒரு எண்பது பக்க நோட் முழுக்க எழுதி இருந்தார். அது எப்படியோ தொலைந்து போய் விட்டது.

அப்பா ஒருமுறை ஆற்றுக்கு குளிக்க எங்களை கூட்டிப் போனார். நதிப்பெருக்கில் நான் அடித்துச் செல்லப்பட்ட போது, யாரோ ஒருவர் முடி பற்றி இழுத்து காப்பாற்றினார். அதிலிருந்து ஆற்றுப்பக்கம் அம்மா எங்களை அனுமதித்ததேயில்லை. இரண்டு பக்கம் ஆறுகள் பாய்ந்தும், ஆற்று நீச்சல் தெரியாதவானாகவே வளர்ந்தேன்.

அப்பாவுடைய சைக்கிள் அவரைப் போலவே அருமையாக இருக்கும். ஓட்டுவதற்கு மென்மையாகவும், ஒரு வித ஃப்ளெக்ஸ்ப்ளிட்டியுடனும் இருக்கும். பத்தாவது லீவில் தான் ஓட்டக் கற்றுக் கொண்டேன். அதற்குப் பின் மழை தீபாவளிக் காலம் ஒன்றில் குமாரபாளையத்தில் இருந்து வந்த போது, பழைய பாலத்தில் பவானிக்குத் திரும்பும் போது, சறுக்கிட்டு அரை மீட்டர் தள்ளி விழுந்தேன். சைக்கிளை ஒரு தேய் தேய்த்திருந்தேன். அப்பா மன்னித்து விட்டார்.

பின்னால் என்னையும், முன்னால் தம்பியையும் உட்கார வைத்து செய்ண்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு கூடிப் போவார். ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கும் போதெல்லாம் கையெழுத்து போடும் போது மகிழ்ந்து மகிழ்ந்து, பின் அதுவே இயல்பாக சைன் பண்ணுவார்.

பவானி, காமாட்சியம்மன் கோயில் தெருவில் 'சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன் நற்பணி மன்றம்' துவங்கி அதில் செயலாளராக இருந்தார். அப்பா கொஞ்சம் பார்க்க சிவாஜி போலவே இருப்பதாக எனக்குத் தோன்றும். அவரைப் போலவே அலை அலையாக தலை சீவுவார். திருச்சியில் ஒருமுறை ரசிகர் மன்ற மாநாடு நடந்த போது, சிவாஜிக்கு மாலை போடும் போது எடுத்த போட்டோவில் அப்பாவின் சந்தோஷப் பரவச மகிழ்ச்சி அழகாகப் பதிவாகி இருக்கின்றது. பக்கத்தில் சின்ன அண்ணாமலை நின்று கொண்டிருந்தார்.ஒருமுறை வீட்டுக்கு நடந்து வரும் போது, 'ரஜினி' பற்றி ஏதோ குறை சொல்லிக் கொண்டே வர (அவன் ஒரு கிறுக்கன், etc..) எனக்கு கோபம் வந்து சொன்னேன். 'நான் ரஜினி ரசிகன் தான். ஆனால் ரசிகர் மன்றம் எல்லாம் வைக்கவில்லை' என்று. அப்பா கப்சிப்.

காமாட்சியம்மன் கோயில் சின்னதாக இருந்த போது நாங்கள் மூன்று பேரும் சொம்புகளில் தண்ணீர் கொண்டு செல்வோம். எங்கள் வீட்டுக் கிணற்றில் இருந்தே நாங்களே சேந்தி எடுத்து, சொம்புகளில் ஊற்றி, கோயிலுக்கு கொண்டு செல்வோம். அய்யர் பிள்ளையார் சிலைக்கும், முருகன், அம்மன் சிலைக்கும் ஊற்றி விட்டுத் தருவார்.

சில சமயம் குளிக்கும் போது அப்பா என்னைக் கூப்பிடுவார். நான் தான் அப்பாவுக்கு முதுகு தேய்த்து விடுவேன். தோளில் இருந்து முதுகு முழுவதும் கைகளை கரடி போல் வைத்துக் கொண்டு நகங்களால் நன்றாக அழுத்தி தேய்ப்பேன். 'அழுக்கு போயிடுச்சா?' என்று அவ்வப்போது கேட்பார்.

அப்போது வீட்டில் ஒரே ஒரு கயிற்றுக் கட்டில் தான் இருந்தது. அதைக் கவிழ்த்துப் போட்டு, செவ்வகக் கட்டிலின் நீள இரண்டு கால்களிலும் கயிறு கட்டி, இருபக்கமும் ஜமக்காளங்கள் இறுக்க வைத்து, ஒரு பக்கம் அம்மாவும், மறு பக்கம் அப்பாவும் உட்கார்ந்து எழுத்து தைப்பார்கள். நான் நடுவில் கட்டிலுக்குள் அமர்ந்து கொண்டு, பாடங்களை ஒப்பிப்பேன். மிஸ்டேக் விட்டால் தோசைக்கரண்டி தான்... மத்து தான். கை விரல்கள் ஒடிந்து விடும். அம்மா தான் அடிப்பார். அப்பா அந்தளவு அடிக்க மாட்டார்.

ஒருமுறை ஐம்பது ரூபாய்க்கு சில்லறை மாற்றி விட்டு வர சொல்ல, அதை கிறுக்குத் தனமாய் டீ-ஷர்ட்டின் இரு பட்டன்களுக்கு இடையில் செருகி விட்டு மேரி ஸ்டோர்ஸுக்கு ஓடினேன். அங்கு சென்று பார்த்தால், ரூபாயைக் காணோம். திக்கென்று ஆகி வேர்த்து விட்டது. வழியெல்லாம் தேடிப் பார்த்து விட்டு வந்து சொல்ல, செம திட்டு. அப்போது அப்பாவுக்கு வாரச் சம்பளம் இருநூறு ரூபாய்.

சனிக்கிழமை இரவு அப்பா சம்பளம் வாங்கி வருவார். சி.எஸ்.ஐ. பள்ளிக்கு அருகில் இருக்கும் பேக்கரியில் ஜாம்பன் வாங்கி வருவார். ஒரு வட்ட பன்னை நான்காக கீறி, உள்ளே ஒரு பக்கம் வெண்ணையும், மறுபக்கம் ஜாமும் வைத்து தருவார்கள். வீட்டில் சரியாக ஜெய் ஹனுமான் ஆரம்பிக்கும் போது வந்து விடுவார். அனுமார் ஜாம்பன்னோடு எங்களுக்குள் கலந்து போனார். தம்பி அப்பாவுக்கும், நான் அம்மாவுக்கும் பங்கு தர வேண்டும். அம்மா வழக்கம் போல், 'எனக்குத் தந்தது தானே. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்று தம்பியை சமாளித்து விட்டு, அவர் பங்கையும் எனக்கே தந்து விடுவார். அப்பா பங்கிலும் ஒரு பாதி எனக்கு வந்து விடும். அப்போது நினைத்துக் கொள்வேன், 'அப்பா பங்கை வாங்கி சாப்பிடுவதில் ஒன்றும் தவறில்லை. பிற்காலத்தில் அப்பாவுக்கு நான் தானே முதலில் சம்பாதித்து சாப்பாடு போடுவேன்' என்று!

டி.வி.யில் எம்.ஜி.ஆர் படம் போட்டால் படம் முடியும் வரை பொறுமை காக்கும் அப்பாவிடம் இருந்து, முடிந்தவுடன் சிவாஜி ரசிகன் வெளியே வந்து சொல்லுவார். 'ஆமா.. இவரு அசோகன்ட்ட இருந்து சரோஜா தேவியைக் காப்பாத்திட்டு, அப்புறம் இவரும் கெடுக்கத் தான் போறாரு'. அம்மா அதட்டுவார். அப்பாவின் அந்த ஓபன் விமர்சனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ரொம்ப வருஷங்களாய் வீட்டில் ஒரே ஒரு சைக்கிள் தான் இருந்தது. எஸ்.எஸ்.எல்.சி.யில் ஸ்கூல் ஃபர்ஸ்ட்டுக்காக ஒரு குட்டி சைக்கிள் 1500ரூ-ல் வாங்கினார். என்னை ஓட்டவே விடவில்லை. கோயில் தெருவில் அவரே முதல் சில ரவுண்டுகள் ஓட்டினார். அப்பாவின் அந்த என்றும் மாறாமல் இருந்த குழந்தைத்தனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அப்பாவின் சுற்றுலா என்பதுஒன்றே ஒன்று தான். வருடம் தவறாமல் ஒவ்வொரு முறையும் குற்றாலம் டூர் போய் வருவார். அதற்கென்று ஒரு ஜமா இருந்தது. ஏதோ ஒரு.... சங்கம் என்று பெயர். ஒரு வாரம் சென்று வருவார்கள். வரும் போது நெல்லை அல்வாவும், ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவும் வாங்கி வருவார்கள். காலையில் விழித்துப் பார்க்கும் போது, லேட் நைட் அப்பா வந்திருந்தார் என்றால், சமையற்கட்டில் அல்வாவும், பால்கோவாவும் இருக்கும் என்பது உறுதி. ஒரு வாரத்திற்கு பள்ளியில் இருந்து வந்தவுடனே ரெண்டு ஸ்பூன் உள்ளே இறங்கும்.

குற்றாலம் குழுவில் அப்பா ஒருவர் தான் தண்ணியடிக்காமலும், புகை பிடிக்காமலும் இருப்பார். எப்படியோ அப்பாவிற்கு இந்தப் பழக்கங்கள் வரவே இல்லை. எனக்கு அந்த ஆச்சரியம் விலகவேயில்லை. இன்றும் புத்தாணு பார்ட்டிகளுக்கு செல்லும் போதோ, ஆபீஸ் டூர் போகும் போதோ, என்னால் வெறும் கோக்கையும், வறுத்த பட்டாணி, கடலைகளையும், சிப்ஸையும் மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற பழுப்புத் திராவகங்களையும், வெளுப்பு குச்சிகளையும் ஒரு பொருட்டாக மதிக்கத் தோன்றாமல் இருப்பது அப்பாவிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும். இன்று எனது முகமும், தமிழும் கூட அப்பா தந்தது தான்.

கவுன்சிலிங் முடிந்து வீட்டுக்கு வந்த போது, எல்லோரும் சி.எஸ். விட்டு விட்டு ஈ.சி.ஈ. எடுத்திருக்கிறாயே என்று அங்கலாய்த்த போது, அப்பா மட்டும் தான், 'உனக்கு பிடித்த ஈ.சி.ஈ.யே கிடைத்து விட்டது தானே?' என்று கேட்டார்.

+2 முடித்து கவுன்சிலிங்குக்காக காத்திருந்த காலங்களில் தான் அப்பாவுடன் நான் இன்னும் நெருக்கமானேன். ஒரு நாள் மதியம் அப்பா கடையில் இருந்து லஞ்சுக்காக வந்து, சாப்பிட்டு விட்டு, 'எத்தனை மனிதர்கள்' பார்த்துக் கொண்டிருந்தார். ஐஸ் போகும் சைக்கிள் சத்தம் கேட்டது. 'அப்பா ஐஸ் வாங்கலாமா..?' என்று கேட்டேன். 'சரி.. எடுத்துக் கொள்' என்றார். 'அட, ஆச்சர்யமாக இருக்கிறதே..' என்றேன். அப்பா ஒரு கவிழ்ந்த பார்வை பார்த்தார். அந்தப் பார்வை இன்னும் என் மனதை அவ்வப்போது அறுக்கின்றது.

இன்று அப்பா இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று அவ்வப்போது நினைத்துப் பார்ப்பேன். என் கவிதைகளையும், கதைகளையும் அப்பா படித்தால் என்ன சொல்லுவார்? என் 'களிப்பேறுவகை' படித்தால், 'பையனுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான்' என்று நினைப்பாரா..? அப்பாவை வேலைக்கெல்லாம் இனி போக வேண்டாம் என்று சொல்லி விட்டு, 'அப்பா... உங்களுக்கு பிடித்த புக்கெல்லாம் சொல்லுங்கப்பா. வாங்கித் தர்றேன். நிறைய கவிதை எழுதுங்கப்பா... நல்லா ரெஸ்ட் எடுங்க' என்று சொல்லியிருப்பேனா? அப்பாவிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளக் கூடிய விஷயங்களைப் பேசியிருப்பேனா? எம்.ஜி.ஆர் ரேப் செய்வதைப் பற்றியெல்லாம் எட்டாவது படிக்கும் பையனிடம் பேசியவரிடம் ஒரு நல்ல நண்பனாக இப்போது இருப்பேன் என்று நினைக்கிறேன்.

கேரளா பெண்கள் பற்றி, படித்த புத்தகங்கள் பற்றி, பார்த்த சினிமாக்கள் பற்றி, வாக்கிங் பற்றி, ஹாக்கிங் பற்றி, கம்ப்யூட்டர் பற்றி, டி.எஸ்.பி. பற்றி... அப்பாவை ஒரு குழந்தை போல் பார்த்துக் கொண்டிருப்பேன்.

சேலத்தில் பிடித்த கடைசி பஸ்ஸில் பின்னிரவு பதினொன்றரை மணிக்கு பவானியில் வந்து இறங்கி, கரண்ட்டும் செத்துப் போயிருந்த அந்த நடுநிசியில், சுடுகாட்டுக் குழியில் புதைக்கப்படக் காத்திருந்த அப்பாவின் கால்களைப் பிடித்து கதறி, பின்னால் திரும்பிப் பார்க்காமல் என்னை நடக்க வைத்து, தோள்களில் சாய்த்துக் கொண்டு வந்த கார்த்தியிடம், 'இனி எனக்கு ஜாம்பன் யார் கார்த்தி வாங்கித் தருவாங்க..?' என்று கேட்டு, இன்றோடு சரியாக ஒன்பது வருடங்கள் ஆகின்றன.

16 comments:

வினோத் கெளதம் said...

Sir,

Unmayil Appavukum maganukum undana idaiveli kalantha uravu konjam sikkalanathu visitiramanathu.

Kadsiyil kangal kalangina.

Kandippaga ungal appa ippoluthu santhoshamaaga engu iruntho ungalai paarthu kondu thaan irupaar.

ILA (a) இளா said...

கடைசி பாரா படிச்ச பின்னாடி என்ன சொல்றதுன்னே தெரியலங்க. நம்மூருங்களா நீங்க?

Anonymous said...

அப்பாக்கள் பலவிதம். உங்க அப்பாவைப் பத்திப் படிச்சால் உங்களுக்கு நல்ல தோழனாக் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. நமக்கும் 2 மகன்கள் இருக்கிறார்கள் அவர்கள் நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் என்ற உணர்ச்சிதான் அவரை சிகரெட் மதுவிலிருந்து தள்ளி வைத்திருக்கும்

எந்த ஒரு காரணத்துக்காக அவர் அதையெல்லாம் ஒதுக்கினாரோ அது நிறைவேறிவிட்டது போலிருக்கு,

போட்டோவில் 3 பாப்பா இருக்கே. ஒண்ணு நீங்க. இன்னொன்னு கார்த்தி.. மூணாவது யாரு? தங்கச்சிப்பாப்பாவா?

அன்புடன்
சீமாச்சு

அமர பாரதி said...

தந்தை உங்களை ரொம்ப பாதித்திருக்கிறார் போல?. அருமையான பதிவு.

ச.பிரேம்குமார் said...

மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது வசந்த். உங்கள் அப்பாவின் நினைவுகள் எங்களையும் நெகிழ்ச்சியுள்ளாக்கியது

வீரசுந்தர் said...

//இன்று எனது முகமும், தமிழும் கூட அப்பா தந்தது தான்.
//

உங்களுக்கு அப்படியே உங்க அப்பா உருவம்!! தமிழும் அப்படியேதான் இருக்கும்னு நினைக்கிறேன்!!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

இரா. வசந்த குமார். said...

அன்பு vinoth gowtham...

நன்றிகள். one's presence is felt in their absence என்பதை அனுபவித்துக் கொண்டிருப்பது மிச்ச ஆயுளுக்கும் வலி தரும்.

***

அன்பு ILA...

நன்றிகள்ங்க. நாம நம்மூரு தாங்க. பவானி தாங்க. நீங்களும் நம்மூரு தான் நெனைக்கறேங்க. சரி தானுங்களே..!

***

அன்பு சீமாச்சு...

அப்பா திருமணத்திற்கு முன்பிருந்தே தான் புகை, குடி பழக்கங்கள் இல்லாமல் இருந்தார். அந்தப் பருவத்தில் அது ஓர் ஆச்சரியம்!

ஒரு பையன் நான். மற்றொரு பையன் தம்பி. அவன் பெயர் கார்த்தி அல்ல. :) கார்த்தி தூரத்து கஸின் அண்ணா. மற்றொரு பாப்பா மாமா பெண்.

***

அன்பு அமரபாரதி...

நன்றிகள். அப்பாவால் பாதிக்கப்படாதவர்கள் (+ஆகவோ, -ஆகவோ) யாராவது இருக்க முடியுமா..?

***

அன்பு பிரேம்குமார்...

நன்றிகள்.

***

அன்பு வீரசுந்தர்...

நன்றிகள். ஊரில் பார்ப்பவர்கள் கூட, 'ராசா பையனா..? அப்படியே ராசா மாதிரியே இருக்கானே' என்று தான் கேட்பார்கள்.

***

அன்பு உலவி.காம்...

நன்றிகள். இணைத்து விடுகிறேன்.

மெனக்கெட்டு said...

//
இன்றும் புத்தாணு பார்ட்டிகளுக்கு செல்லும் போதோ, ஆபீஸ் டூர் போகும் போதோ, என்னால் வெறும் கோக்கையும், வறுத்த பட்டாணி, கடலைகளையும், சிப்ஸையும் மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற பழுப்புத் திராவகங்களையும், வெளுப்பு குச்சிகளையும் ஒரு பொருட்டாக மதிக்கத் தோன்றாமல் இருப்பது அப்பாவிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும். இன்று எனது முகமும், தமிழும் கூட அப்பா தந்தது தான்.
//
அப்பாவிடம் இருந்து பிள்ளைகள் கற்றுக்கொள்வது நிறைய...!

இப்பதிவைப் படிக்கும் அப்பாக்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

sundar said...

நல்ல பதிவு...

தோழமையோடு வளர்த்த தந்தை...
தவிர்க்க முடியாத பிரிவு...

anujanya said...

அப்பாவின் நினைவுகள் அனைவருக்கும் பொதுவான ஒன்று என்றாலும் ஒவ்வொருவருக்கும் சொல்ல ஒரு தனிக் கதை இருக்கும். உங்களுடையதும் அவ்வாறே. நம்ம வாத்தியார் எழுதியதும் நினைவுக்கு வந்தது. பரிசல்காரன் கூட தன் தந்தையைப் பற்றி நிறைய நாட்கள் முன் எழுதியிருந்தார்.

ஒரு மிக நல்ல மகனைத் தான் பெற்று, வளர்த்து, ஆளாக்கியிருக்கிறார்.

Needless to say you are one of my fav.bloggers.

அனுஜன்யா

இரா. வசந்த குமார். said...

அன்பு மெனக்கெட்டு...

நன்றிகள். அப்பாக்கள் ஆன பின் எல்லோரும் ஓரளவாவது திருந்துவது பிள்ளைகளுக்காகத் தான் என்று நினைக்கிறேன்.

***

அன்பு சுந்தர்...

நன்றிகள்.

***

அன்பு அனுஜன்யா...

வாத்தியாருடையது தான் படித்திருக்கிறேன். பரிசல்காரன் அவர்களது படித்ததில்லை. கண்டிப்பாகப் பார்க்கிறேன். மீண்டும் நன்றிகள் -> இது special. :)

MADCOVI said...

idhai vida arpudhama appavukku anjali seluththa mudiyadhu super..my eyes were changed into liquid...

இரா. வசந்த குமார். said...

thanks madcovi mama...

Chan said...

Nanba, indha oru padivu podhum un thandaikku nee tharaamal vitta ayiram ayiram muthangalukku samam. Ungal thandai ungaludane irundhu kondu dhan irukiraar...maganai patriya perumayudan...

Ungal valaipathivugal miga arumai...

இரா. வசந்த குமார். said...

Dear Chan...

Thanks for your kind comment...!