Wednesday, April 01, 2009

சில பதிவுகள்.

. சாரு நிவேதிதாவின் வலைமனையில், மலாவியில் இருந்து ஆனந்த் என்பவர் எழுதி இருக்கிறார். அழகான நடை. நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டே வந்து, கடைசி பத்தியில் அவரது சொந்த அனுபவத்தையும் பளிச்சென்று சொல்லி விடுகிறார். ஜில்லென்றது. கவிதைகள் இரண்டும் எழுதி வைத்துக் காட்டுகிறார். நன்றாகவெ இருந்தன.

சாரு புனை பெயர் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். நான் சிபாரிசு செய்வது, 'மலாவி மன்னன்' (அ) 'மலாவி மைந்தன்'.

கண்ணி.

ஆ. எஸ்.ராமகிருஷ்ணனின் வலைமனையில் இன்று படித்த 'ரயிலோடும் தூரம்' பதிவைப் படித்த போது சிலிர்த்துப் போனேன்.

இரவு ரயிலில் கூட அத்தனை பேருடன் பயணிக்கும் போது, குறிப்பாக ரிசர்வேஷன் பெட்டியில் நாம் தனிமையாகவே பயணிப்போம். கூட நமக்குத் துணையாக வருவது ஒற்றையாய்க் காயும் நிலாவே! இருள் தின்னும் பெட்டிக்குள் ஜன்னல் கம்பிகளோடு கன்ன்ம் ஒட்டி, ஏதோ ஒரு வளைவில் அந்தரத்தில் தொங்கும் நிலா சட்டென்று பின் தங்கி விடுவதை ஏக்கத்தோடு பார்த்திருக்கிறேன்.

கதவைத் திறந்து வைத்துக் கொண்டு, கைகளால் இரு பக்கக் கம்பிகளைப் பிடித்து, முழு உடலையும் வெளியே எறிந்து மோதும் பேய்க் காற்றில் மிதப்பதை எத்தனை முறை செய்திருக்கிறேன்!

சேலத்தில் இருந்து முதன் முறையாக பெங்களூர் ரயில் பயணத்தில் நடு இரவில் சென்ற போது, பெளர்ணமி இரவு அது! அப்படியே பனிப்புகையின் உள்ளெல்லாம் பாவு நூலாக வெண்ணொளி அமுதத் துளிகள் கரைந்து நிறைந்திருந்தன.

கவிஞனுக்கு மழையும், ரயிலும், நிலவும், காற்றும் வாரி இறைக்க இறைக்க வற்றாத ஜீவ சுரப்பிகள். அவனது அடி மனதில் ஊறிக் கிடக்கும் வரிகளை அவையே திரட்டி மேலெழுப்புகின்றன.

நன்கு மழை பெய்து கொண்டிருக்கும் ஓர் இரவுப் பெளர்ணமி நேரத்தில் வேகமாக கிராமத்தில் காடுகளுக்குள் செல்லும் ரயிலின் இருள் கவ்விய பெட்டியொன்றின் பக்கவாட்டுப் படுக்கையில் சாய்ந்து படுத்து, அந்த தடதடப்பு ரிதத்தில் மெளனமாக இயற்கையோடு கரைவது என்பது எத்தனை சுகமானது....!!!!

PS: தினமும் பார்க்கும் ஓவியத் தளத்தில் இன்று பார்த்த போது டேவிட் காக்ஸ்ஸின் படம் பட்டது..! என்ன ஓர் ஆச்சர்ய ஒற்றுமை!

படத்தின் பெயர் : இரவு ரயில்.இ. தி.க.சிவசங்கரன் அவர்கள் பற்றிய ஜெயமோகன் பதிவு அவர் எழுதியது தானா என்ற சந்தேகம் படிக்கத் துவங்கிய போதிலிருந்து இருந்தது. அவ்வளவு நகைச்சுவையாக எழுதி இருக்கிறார். வழக்கமாக அவர் 'நகைச்சுவை' என்று லேபிள் குத்தும் பதிவுகளில் சொல்லி விட்டாரே என்பதற்காக ' நகைச்சு வை'க்க முயலலாம். இப்பதிவில் இயல்பான நடைப் புன்னகை இருக்கின்றது.

4 comments:

Karthik said...

படிச்சு பார்க்கிறேன். :)

Vetrimagal said...

ரயிலோடும் தூரம்
படித்த பிறகு 'அட', நானும் எப்போதும் இப்படி தானே' என்று தோன்றியது. எல்லோரும் தூங்கும் போது நான் மாத்திரம் விழித்து, வெளியே பார்த்து, மகிழ்வது குறித்து, நான் கொஞ்சம் வெட்கி இருக்கிறேன். பிரயாணம் முடிந்த மறு நாள் தூங்கி விழுந்து, வீட்டில் திட்டு கிடைப்பு!

அடுத்த பயணம், இன்னும் தைரியமாக, விழித்து அனுபவிப்பேன்.

அதற்கு நன்றி , உங்களுக்கு!

Enathu Payanam said...

புரட்டிப் போட்டப் படைப்புகள் - பதிவில் நீங்கள் எழுதி நீண்ட நாட்கள் ஆகிறது போல...ஏன் தொடரவில்லை? நன்றாகத் தானே எழுதுகிறீர்கள்.

இரா. வசந்த குமார். said...

அன்பு கார்த்திக்...

படிச்சுப் பார்த்திட்டு சொல்லுங்க..!

***

அன்பி வெற்றிமகள்...

இரயில் அனுபவங்களை நீங்களும் எழுதுங்களேன். படிப்போம்.

***

அன்பு எனது பயணம்...

படிக்கின்ற நூற்களைப் பற்றிய எழுத்துக்களை 'காலப்பயணி'யிலேயே இறக்கி விடுவதால், 'பு.போ.பு'வில் எழுதவில்லை. அங்கே யாரும் தற்சமயம் எழுதுவதில்லை என்று தெரிகின்றது. உங்களது நூல் அறிமுகங்களையும் படித்தேன். நல்லது. தொடர்க.