இந்த கடைசி வரி எனக்கு பிடித்திருந்தது.

15-வது நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தலின் கடைசி கட்டம் அனலாக நடந்து கொண்டிருந்த போது IEEE தனது 125-வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடியது. Institute of Electrical and Electronics Engineers என்பதன் சுருக் IEEE. தமிழில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் குழுமம் என்று சொல்லலாம்.
1884-ல் துவங்கப்பட்டு 13 மே 2009 உடன் 125 வயதை பூர்த்தி செய்த இந்த மிகப் பழமையான குழுமம் உலகமெங்கும் மின் தொழில்நுட்பத் துறைகளை நெறிப்படுத்துவதிலும், புதிய முறைகளை உருவாக்குவதிலும் ஒப்பில்லாத பணியாற்றுகின்றது. அதன் கேரள பிரிவினரால் பிறந்த நாள் விழா இன்று இன்ஸ்டிட்யூட் ஆஃப் இஞ்சினியர்ஸ், கேரளாவால் கொண்டாடப்பட்டது. அலுவலகத்தில் நோட்டிஸ் போர்டில் நோட்டிஸ் ஒட்டப்பட்டிருக்க, அதை நோட்டிஸ் செய்து இன்று கலந்து கொண்டேன்.
அலுவலகப் பேருந்தில் பி.எம்.ஜி. செல்லும் வரை பிரச்னையில்லை. பிறகு வெள்ளையம்பலம் செல்வதற்குள் ட்ராஃபிக் நெரிசலில் சிக்கிக் கொள்ள, ஊர்ந்து ஊர்ந்து நகர்வதற்குள் பேச்சுகள் முடிந்து விடுமோ என்ற அநாவசிய சந்தேகத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்து, ம்யூசிய கூட்டத்திற்குள் தொலையாமல் கட்டிடத்தை அடையும் போது, பஸ் எங்களை கடந்து சென்றது.
அட்டெண்டன்ஸில் கையெழுத்திட்டு விட்டு, முதலில் சூடாக சாயா மற்றும் இரண்டு மேரிகள் எடுத்துக் கொண்டு கூட்டத்திற்குள் சங்கமிக்க, சங்கத்தார் பேசிக் கொண்டிருந்தனர். நான் சாயா காலி செய்து, பிஸ்கெட்டை அப்படியே திணித்துக் கொள்வோமா இல்லை உடைத்து நாசூக்காய் சாப்பிடுவோமா, உடைத்தால் சத்தம் வருமே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் போது, விளக்குகள் அணைக்கப்பட்டன. டக்கென்று வாய்க்குள் போட்டுக் கொண்டேன்.
125-வது பிறந்த நாள் கொண்டாடும் ஐ.ட்ரிபிள் ஈக்கு வாழ்த்துக்கள் சொல்வதாக டயஸில் ஒருவர் சொன்னார். கூட வந்திருந்தவன் காதைக் கடித்தேன். 'பர்த் டேவா..? அப்ப கேக் எல்லாம் எங்க..?'
ஆச்சர்யம்! நிஜமாகவே ஒரு பெரிய கேக் கொண்டு வந்து சங்கத் தலைவர் வெட்டினார். எஞ்சினியர் கும்பல்னா இப்படி தான் திங்க் பண்ணுவாங்களோ..? 'ஹேப்பி பர்த் டே டு யூ..' பாடாதது தான் பாக்கி.
பிறகு பிசிறு பிசிறாக கொண்டு வந்து காட்டினார்கள். கொஞ்சம் சுரண்டி எடுத்துக் கொண்டோம்.
முதல் செஷன் துவங்கியது. கேரள மாநில மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற பொறியாளர் டா.ஜி.பவித்ரன் பேசத் தொடங்கினார். பி.பி.டி. ஓபன் பண்ணும் போதே, எப்போதும் செய்வது போல் எத்தனை ஸ்லைடுகள் என்பதை பார்த்து வைத்துக் கொண்டேன். அப்போது தான் மெண்டலைத் தயார் செய்து கொள்ள முடியும். குமுதம் ஸ்பெஷல் போல் 16 பக்கங்கள் மட்டுமே! அவர் எடுத்துக் கொண்ட கருத்து எலெக்ட்ரிக்கல் எஞ்சினியரிங்கின் நேற்று இன்று நாளை! ஆதியில் இருந்து டெஸ்லா, ஓமில் ஆரம்பித்து, இன்றைய க்ரிட் வழி பாயும் மின்சாரம், ஹைட்ரோ, காற்றாலை, நியூக்ளியர், நிலக்கரி என்றெல்லாம் நிறைய சொன்னார். முக்கால்வாசி விக்கியில் இருந்து அப்படியே காபி, பேஸ்ட். அட, சைட்டேஷன் கூட ரிமூவவில்லை. அவர் சொன்ன ஒன்று நன்றாக இருந்தது. In electrical we transfer the power,while in electronics we transfer the information.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண் கல்லூரியள் போல் இருந்தாள். பொட்டு இல்லை. கேரளக் கூந்தல் விரிப்பு. மென் கறுப்பு புடவை சுற்றியிருந்தாள். மேட்சாய் ரவிக்கை. பார்டரில் மஞ்சள் கண்ணாடிப் பொட்டுகள். சின்ன நெக்லஸ். கண்ணாடி போட்டிருந்தாள். மெதுவாகப் பேச வேண்டுமே என்று கட்டுப்படுத்திக் கொண்டு பேசுவது போல் பேசினாள். சில இடங்களில் தடுமாறினாலும் அதுவும் அழகாகவே இருந்தது.
அடுத்ததாக திருவனந்தபுரம் CDACன் செயல் இயக்குநரான ராஜன்.T.ஜோசஃப் க்ளாஸ் எடுத்தார். இவர் பேசியது எலெக்ட்ரானிக்ஸின் நேற்று, இன்று, நாளை. நிறைய விஞ்ஞானிகள், அவர்களது கண்டுபிடிப்புகள், ட்ரான்சிஸ்டரில் இருந்து ஐ.ஸி. வரை வந்து மைக்ரோப்ராசஸர் தாண்டி மூர்ஸ் விதி என்று நிறைய பேசினார். ஸ்லைடுகளில் விஞ்ஞானிகளைப் பற்றி கூறும் போது வெறும் அவர்கள் கண்டுபிடித்த/உருவாக்கியதைப் பற்றி மட்டும் பேசாமல், அவர்களது சொந்த வாழ்க்கையையும் எழுதி இருந்தார். சுவாரஸ்யமாக இருந்தது. உதா : கிரகாம்பெல்லின் அம்மா, மனைவி இருவருக்கும் காது கேட்காது. இவர் பாதி கிணறு தாண்டியிருக்கும் போதே, ஹாலின் பின் பகுதியில் பாத்திரங்கள் இழுத்துச் செல்லும் சத்தங்கள், அடுக்கப்படும் ஒலிகள், கரண்டிகள் கலகலக்கும் 'டிலீங்...டிலீங்', ஸ்பூன்கள் கொட்டப்படும் 'கலங்..கலங்' எல்லாம் கேட்டு பாதி தூக்கத்தில் மிதந்து கொண்டிருந்தவர்களை எல்லாம் எழுப்பி விட்டு சுறுசுறுப்பாக்கியது.
முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, InAPP ப்ரெஸிடெண்ட்டான சதீஷ் பாபு கம்ப்யூட்டிங்கின் நே.இ.நா.,வை அவசர அவசரமாகத் தள்ள வேண்டியாயிற்று. ஆனாலும் நன்றாகவே இருந்தது. கி.மு.1500-ல் ஆர்யபட்டா காலத்தில் துவங்கி டைம்லைனில், போன வருஷம் கூகுள் ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேஷன் சவால் வைத்தது வரை இழுத்து வந்தார். பின் இன்று கம்ப்யூட்டிங் நிலைமை என்ன என்பதைப் பற்றியும், எதிர்காலத்தில் ரோபோ, நானோ, பயோடெக்கில் வரப்போகின்ற ஆச்சரியங்களைப் பற்றி சொன்னார்.
நன்றியுரை சொல்லப்பட்ட பின் எல்லோரும் வரிசை கட்டி நின்றோம்; தின்றோம்.
ஐந்தாறு சிக்கன் பீஸ்கள், நான்கு அப்பளங்கள், ரெண்டு முறை குஸ்கா, நான்கே நான்கு சப்பாத்திகள் மட்டும் தான் சாப்பிட்டேன். சூடாக ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு, ரெண்டே ரெண்டு தடவை பழங்களில் போட்ட கட்டி ஐஸ் க்ரீம்கள் எடுத்துக் கொண்டதில், பற்களுக்கு எதுவும் டேமேஜ் இருக்காதே..?
சில செல் பளிச்கள் :






(இதற்குத் தானே ஆசைப்பட்டாய் வ.குமாரா..?)


***
மேலும் தெரிந்து கொள்ள :
http://en.wikipedia.org/wiki/IEEE
http://www.ieee.org/portal/site
http://www.ieee125.org/
http://ewh.ieee.org/r10/kerala/
1 comment:
இது பின்னூட்டமாக பிரசுரிக்க இல்லை
அறிவியல் புனைக்கதைப் போட்டி
முடிவுகளில் தங்கள் பெயர் இருக்கும் என்று நினைத்தேன்.
(அமரர் சுஜாதா நினைவு)
எழுத நேரம் கிடைக்கவில்லையா?
Post a Comment