Monday, June 08, 2009

மொக்ஸ் - 09.JUN.2K9ண்பர் பதிவர் தமிழ்ப்பறவை, எனது கதை ஒன்றுக்குத் படங்கள் அனுப்புவதாக உறுதியளித்து முதல் சேப்டருக்கு அனுப்பி இருந்தார். அது இங்கு உள்ளது. அந்த சேப்டரிலும் இணைத்து விட்டேன். தொடர்ச்சியாக படங்கள் வரைந்து தருவதாக கூறி, அதற்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளார். அந்தக் கதையை முழுதும் எழுதி முடிக்க வேண்டுமாம்.

கஷ்டம் தான் என்று சொல்லியிருக்கிறேன்.

டந்த சில தடவைகளாக கவனிக்கிறேன்.

தென்னக ரெயில்வேயின் கேரளா செல்லும் அத்தனை ரயில்களின் அத்தனை ஜெனரல் கம்பார்ட்மெண்ட்களிலும் பீகாரிகள், ஒடிஸாக்கள்; பெங்காலிகள் அப்பிக் கொண்டு வந்து, வழிகளில் கொத்துக் கொத்தாக உதிர்கிறார்கள். தங்களது பான் தடங்களையும், பல வர்ண லுங்கிகளையும், இடைவெளியிட்ட கறை படிந்த பற்களையும் கூட உயிர் வாழ்ந்தாக வேண்டிய சர்வைவல்தனத்தையும் சுமந்து வருகிறார்கள்.

நிலம் அதிரப் பிளக்கும் மல்டி அபார்ட்மெண்ட், மால் கட்டிடங்களின் ஸ்கெலடன்களை உருவாக்குவதில் இவர்கள் தான் சீப்பாக கிடைக்கிறார்கள். என்கிறார்கள். முன்பு தமிழர்கள் கிடைத்துக் கொண்டிருந்தார்கள்; இப்போது அவர்கள் டீக்கடைகளிலும், ஹோட்டல்களில் பெஞ்ச் துடைப்பதிலும், ஒதுங்கிக் கொள்ள வறுமை துரத்தும் கடின உழைப்பாளிகளாக வடவர்கள் கிடைப்பதாக ஒருவர் சொன்னார்.

கல் உடைக்கிறார்கள்; சிமெண்ட் கலக்கிறார்கள்; டயர் காலணி கட்டி தாரில் நடக்கிறார்கள்; ரோட்டிலேயே அவ்வப்போது துப்புகிறார்கள்; மீசை இல்லாத முகங்கள், சட்டென கேரளர்கள் மத்தியில் அன்னியப்படுத்தி விட, ஒரு குரூப்பாகவே அலைகிறார்கள்; வெளிறிய ஜீன்ஸ் மேல் சட்டை இழுத்து விட்டு இறுக்கமாக துண்டு கட்டுகிறார்கள்; பறட்டையான எண்ணெய் காணாத மென் பழுப்பு முடி வறவறக்க அலைகிறார்கள்; கையேந்தித் தள்ளுவண்டிகளிலேயே முடித்துக் கொள்கிறார்கள்;

கலைந்து தூங்கிக் கொண்டே ஒவ்வொரு பெட்டியிலும் அடைத்துக் கொண்டு வரும் இவர்களை விந்தியத்தின் கீழ் முனைக்குத் துரத்தியது யார்கள்..?

நேற்று இரவு பயணிக்கும் போது, காய்ந்த மார்பை நிரடிக் கொண்டு, தேடிக் களைத்து அழுத கைக்குழந்தையை, முதுகில் அடித்து, மார்பெலும்புக் கூட்டிற்குள் திணித்துப் புடவையில் மூடிக் கொண்ட பெண்ணுக்கு இந்தப் புண்ணிய தேசத்தை ஆண்டவர்கள் செய்தது என்ன? செய்வது என்ன...?

முதல் தளத்தில் என் எதிரில் அமர்ந்து கொண்டு, என்னை விட, இரண்டு அடி முன்பாகவே பயணம் செய்தவர் ஒரு கேரளர். அவரிடம் 'கொறச்சு கொறச்சு' மலையாளத்தில் 'சம்ஸாரித்த' போது, என்னை அவரினம் என்று நினைத்துக் கொண்டார். பின் உண்மை தெரிந்து, 'எனக்கும் தமிழ் கொறச்சு அறியான். தமிழ் மாத்ரம் அல்லா, கொறச்சு இங்க்லீசு, கொறச்சு ஹிந்தி, கொறச்சு அரபி அறியான்' என்றார். வியப்பாக இருந்தது. பின் பேச்சு எங்கெங்கோ திரும்பி, இந்த வட இந்தியர்கள் 'பெங்காலிலிருந்து வரவில்லை; கல்காத்தாவில் இருந்து' என்றார். 'எந்தா வல்லிய difference?' என்று கேட்டேன். அவர், 'கல்காத்தா பெங்காலில் இருந்து கிட்டத்திலா, தூரத்திலா?' என்று கேட்டார்.

அத்தனை கொறச்ச மொழிகளிலிருந்தும் அப்படி என்ன தான் அறிந்து கொண்டிருப்பார் என்று சந்தேகம் வந்தது.

ஞாயிற்றுக்கிழமை மொட்டை மாடிப் படிக்கட்டில் அமர்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்த போது, ஒரு நியூஸ் சேனலில், ஏற்காடு பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். 'ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்ப்டுகின்றது...'. ஒரு அழகான வாக்கியம் எப்படி முட்டாள்தனமாக இருக்க முடியும் என்பதற்கு உதாரணம் இது எனலாம். யார் ஏற்காட்டை 'ஏ.ஊ.' என்று அழைக்கிறார்கள்? ஏற்காடு என்ன உயிரினமா? உயர்திணையா? யாராவது அழைத்தால் அது பதில் சொல்லுமா..? அது ஓர் ஊர் அல்லவா? பின் எப்படி அதை 'அழைக்க முடியும்..?'. சொல்லப்படுகின்றது. குறிப்பிடப்படுகின்றது. என்பன தானே சரியாக இருக்க முடியும். இது போன்ற அர்த்தம் கெட்டவற்றைக் கேட்கும் போது ஏற்படும் எரிச்சல் கொஞ்சம் அல்ல.

ற்றுமொரு எளிமையாகச் செய்ய முடிகின்ற தவறு, Invention, Discovery இடையேயான உபயோகங்கள். Invention என்றால் புதிதாக உருவாக்குவது; Discovery என்றால் ஏற்கனவே இருந்த ஒன்று, இதுவரை யாராலும் வெளியுலகிற்குச் சொல்லப்படாமல், வெளியுலகு அறியாத ஒன்றைக் (கண்டு - பிடிப்பது).

டெலிவிஷனை உருவாக்கியவர் ஜான் பெயர்ட்.
அமலாவைக் கண்டுபிடித்தவர் டி.ஆர்.

Telephone was invented by Bell.
America was discovered by Columbus.

இதனை எளிமையாக நினைவு கொள்ள நான் ஒரு கொக்கி வைத்திருக்கிறேன்.

டிஸ்கவரி சேனலில் பெரும்பாலும் என்ன காட்டுகிறார்கள்? யானைகள் தும்முவதையும், மான்கள் கிழிக்கப்படுவதையும், கொம்புகள் முறிக்கப்படுவதையும், மூட்டைப்பூச்சிகள் முதுகில் அமர்ந்து முனகுவதையும் தானே பார்க்கிறோம். அவை ஏற்கனவே இருப்பவை தானே? எனவே ஏற்கனவே இருப்பது என்றால் டிஸ்கவரி. புத்தம் புதிய மேட்டர் என்றால் இன்வென்ஷன்.

சிம்பிள். இல்லையா? சின்ன வயதில் அம்மா தான் வித்தியாசத்தைச் சொல்லிக் கொடுத்தார்கள்.

3 comments:

தமிழ்ப்பறவை said...

டிஸ்கவரி, இன்வென்ஷன் மேட்டர் சூப்பர் வசந்த்...
ரொம்ப சீரியஸா இருக்கு பதிவு...நல்ல வேளை ரிலாக்ஸூக்காக போட்ட படம் நல்லா கவர்ச்சியா,சம்மர் ஸ்பெஷல் மாதிரி இருக்கு...(ஹி..ஹி.. சுய தம்பட்டம்)....

Karthik said...

சூப்பர்ப்பா இருக்கு இந்த பதிவு. :)

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை,Karthik...

நன்றிகள்.