Saturday, June 20, 2009

IFFK - 2K8 :: மிச்சம் மீதி படங்கள்.

நிறைய தொடர்களாக எழுத தொடங்கி அப்படி அப்படியே அந்தரத்தில் திக்கி நிற்கின்றன. ஒவ்வொன்றாக முடித்து விட வேண்டும் என்று ஒரு முடிவு செய்திருக்கிறேன். முதலில் IFFK - 2K8.

சென்ற வருடம் அந்திம மாதத்தில் அனந்தபுரத்தில் 12 சர்வதேச படங்கள் பார்த்தேன். மூன்று படங்கள் பற்றி மட்டும் விளக்கமாக எழுதி மனிதனின் அடிப்படை குணங்களில் ஒன்றான சோம்பேறித்தனத்தால் தாக்கப்பட்டு, நிறுத்தி விட்டேன். எல்லாப் படங்களைப் பற்றியும் ஒன்றாக சொல்லி இதை விரைவாக க்ளோஸ் செய்ய விழைகிறேன்.

சம்பவங்கள் நிறைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகும் எத்தனை காட்சிகள் நினைவில் இருக்கின்றன என்பதையும், அவற்றை மூளை ஆக்ஸியான்களில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதிலும் அப்படைப்புகளின் நிலைத்தன்மை எத்தகையது என்று பார்த்து விடலாம்.

Music Box :

Titles JA'BEYE MUSIGHI(MUSIC BOX)
Main Director FARZAD MOTAMEN
Year 2008
Length 113 Minutes
Countries Iran

Genre Drama Series

Actors RAMBOD JAVAN, ARSALAN GHASEMI, SHAHROKH FORUTANINA, DARIUSH ASADZADEH, NIKI KARIMI

Directors FARZAD MOTAMEN
Director Of Photography ALI LOGHMANI
Composer SAEED SHAHRAM



மலேகி என்பவன் முழுக்க கறுப்பு உடை அணிந்து ஒரு மலை உச்சியில் எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனது கார் வாக்கி-டாக்கியில் ஒரு போன்கால் வருகின்றது. 'உடனே மெடிக்கல் ஷாப் முன் செல்'. செல்கிறான்.

அலி 12 வயது சிறுவன். அவன் அம்மா அவனது 2 வயதிலேயே இறந்து விட்டிருக்கிறார்கள். அவனது சர்ஜன் தந்தை மற்றும் வயதான தாத்தாவுடன் வசிக்கிறான். என்ன தான் அப்பா அன்பைப் பொழிந்தாலும், அலி மனம் அம்மாவைக் காண ஏங்குகின்றது. அலி அப்பாவின் மருத்துவமனை வாசலிலேயே மெடிக்கல் ஷாப்பில் பள்ளி விட்டதும் வேலை செய்கிறான்.

சூடாக பிஸ்னஸ் நடந்து கொண்டிருக்கும் போது, எதேச்சையாக வாசலைப் பார்க்க, கறுப்பு உடை கொண்ட ஒருவன் நடந்து வருகிறான். அவன் மேல் மற்றொருவன் மோதுகிறான். மலேகி மெல்ல விலகி மெடிக்கல் ஷாப் நோக்கி நடக்க, அந்த மற்றொருவன் 'தொப்'பென கீழே விழுந்து மயங்கி, இறக்கிறான். அலி அதிர்ச்சியாய்ப் பார்க்கிறான்.

மலேகி ஷாப்பில் ஏதோ விசாரித்து விட்டு, வெளியேறி அவன் காரில் ஏறி செல்லும் போது, அலியை அமைதியாகப் பார்த்து விட்டு விரைகிறான். மலேகியை யாரும் பிடிக்கவில்லை; யாரும் கண்டு கொண்டதாகவும் தெரியவில்லை.

அலியின் தெருவோர குடை விற்கும் சிறுவ நண்பன், மருத்துவமனையில் இருந்து சரியாகிச் செல்லும் ஒரு சிறு பெண் ஆகியோரைப் பற்றி மலேகி அலியிடம் விசாரித்து விட்டுச் சென்ற சில நொடிகளில் அலி, அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று பார்க்க அவள் மரணம் அடைகின்றாள். அலிக்கு மெல்ல மெல்ல ஒன்று புரிகின்றது. 'மலேகி மரணத்தின் தூதுவன்.'

அலியின் தாத்தா அமைதியாக மலேகியைப் பார்த்து புரிந்து கொண்டு, 'கிளம்பலாம்' என்கிறார். வாசல் வரை சென்றவர் மீண்டும் அறைக்கு வந்து, அலியின் சிறு வயது குழந்தை படத்திற்கு ஒருமுறை முத்தம் கொடுத்து விட்டு, அவர் படித்து கொண்டிருந்த புத்தகத்தில் செருகி வைத்து, மலேகியுடன் வெளியேறுகிறார். மாலையில் அலியும், அவன் அப்பாவும் வீட்டுக்குத் திரும்பும் போது, தாத்தாவின் உடல் அந்த புத்தகத்தை இறுகப் பிடித்துக் கிடக்கின்றது.

அலி, மலேகியை வேண்டிக் கொண்டபடி, மலேகி அவனை ஒரு வித அரை மரணத்திற்கு உள்ளாக்குகிறான். பின் அவன் ஆத்மாவுடன் நகரைத் தாண்டி, வீடுகளைக் கடந்து, வெறும் மரம், செடி, கொடிகளை பின் தள்ளி, வெட்ட வெளிகளில் ஊடுறுவி, எங்கோ ஒரு செறிவான காட்டுப்பகுதிக்குச் சென்று காரை நிறுத்துகிறான்.

'செல். உள்ளே செல். நான் உள்ளே வரக் கூடாது. சீக்கிரம் வந்து விடு.'

அலி உள்ளே செல்கிறான். புகை புகையாய் மிதக்கின்றது. காட்டு ஒலிகள் மெல்ல கேட்கின்றன.

'அலி..!'

அவன் அம்மாவின் குரல். அந்த திசையை நோக்கி ஓடிச் சென்று பார்க்க அவன் அம்மா நின்று கொண்டு இரு கைகளை நீட்டி அழைக்கின்றாள். அலி அழுது கொண்டே அம்மாவைக் கட்டிப் பிடிக்கிறான். அவர்கள் பேசுகிறார்கள். ரொம்ப நேரம் பேசுகிறார்கள்.

கார் ஹார்ன் ஒலி கேட்கின்றது. அம்மா அவனைப் பிரிந்து, டாடா காட்டிக் கொண்டே திரும்பி நடந்து தொலைகிறாள். அலி அழுது கொண்டே வெளியேறி, காரில் அமர்ந்து கொள்ள மலேகி அதே இறுகிய முகத்தோடு கிளப்புகிறான்.

அலி மருத்துவமனையில் உயிர்த்துக் கொண்டு அப்பாவைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறான்.

'அப்பா... அம்மாவைப் பார்த்தேன்..'

மலேகி, மலை உச்சியில் கைகள் கட்டி நின்று கொண்டிருக்க, வாக்கி டாக்கி அழைக்கின்றது.

திரை இருள்கின்றது.

எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அர்சலான் நடிப்பு பிரமாதம். இசை ஒரு வித பயங்கர, அமானுஷ்யத்தன்மை கொண்டதாகவே படம் முழுக்க ஊடுறுவி வருகின்றது. எந்த க்ளிப்பும் கிடைக்கவில்லை. சென்ற ஆண்டு தான் ரிலீஸ் ஆகியிருப்பதால், நாளாகும் என்று தெரிகின்றது.

அர்சலான் ப்ளாக் இது : ARSALAN GHASEMI

யாராவது படித்து, புரிந்து சொன்னால் நலம்.

காஞ்சிவரம்

Directed by Priyadarshan
Produced by Shailendra Singh
Written by Priyadarshan
Starring Prakash Raj
Shriya Reddy
Shammu
Music by M. G. Sreekumar
Editing by Arun Kumar
Release date(s) September 12, 2008
Running time 112 min
Country India
Language Tamil

இதன் கதையை விக்கியிலேயே படித்துக் கொள்ளலாம். எனக்குப் பிடித்திருந்தது பழைய காலத்தைக் காட்ட எடுத்துக் கொண்ட முயற்சிகள். பழைய பஸ், கொட்டும் மழை, பஸ் ஜன்னல்களில் துணி விரிப்பு, டீக்கடை பாய்லர், தொப்பிச் சின்னம்... தறிகள்.

தறிகளோடு எனக்கு சம்பந்தம் இருக்கின்றது. காஞ்சிபுரத்தில், ஆரணியில் பட்டுப்புடவைகள் நெய்ய கைகளால் தறியோட்டுவார்கள். எங்கள் ஊரில் ஜமக்காளம் நெய்ய கால்களால் தறி ஓட்டப்படும். பாவு வரிசை மாற்ற கால்களால் 'தடக்..தடக்..' என கட்டை போட்டு மாற்ற மாற்ற, ஒவ்வொரு முறையும் இடையில் ஓடும் நூலை ஒரு கட்டையில் சுற்றி ஒரு முனையிலிருந்து மறு முனைக்குப் பாய்ச்சி, சேர்த்து இறுக்கி 'தடக்', மற்றொரு 'தடக்... தடக்...'.

சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். தறி நெய்பவர்களின் வாழ்க்கை முறையை உணர்ந்திருக்கிறேன். கால்கள் ரத்தம் கட்டிக் கொள்ளும். பஞ்சு மூச்செல்லாம் நிறைந்திருக்கும். ஒவ்வொரு முறை பாவு வரிசை மாறும் சத்தம் அவர்களின் இதயத் துடிப்போடு இசைந்திருக்கும்.

இந்தப்படமும், அதன் முடிவும் என்னையும் கண் கலங்கச் செய்தது என்பதற்கு இந்த மற்றுமொரு காரணமும் இருக்கின்றது. தமிழ்ப்படம் என்ற ஸ்பெஷல் நெருக்கமோ என்னவோ தியேட்டர் நிரம்பி, வாசல்களை எல்லாம் அடைத்துக் கொண்டு பார்த்தார்கள். ப்ரியதர்ஷன், எம்.ஜி.ஸ்ரீகுமார் பேர் வந்த போது பெரிய கைதட்டல்கள்.



Nostalgiya po Budushemu (Longing for the future)
Russia



விக்டரும், அனஸ்டாஸியாவும் கல்லூரிக் காதலர்கள். விக்டர் கொஞ்சம் அப்பாவி மாணவன். இருவரும் சேர்ந்து கல்லூரி வளாகத்தில் பேசிக் கொண்டு வரும் போது, முரட்டு சீனியர்கள் தகராறில் இறங்கி அவன் பல்லைப் பேர்க்கிறார்கள். காதலி காப்பாற்றுகிறாள். கல்லூரி கடைசி நாள் பார்ட்டி. அனைவரும் ஜோடி, ஜோடியாக நடனமாடுகிறார்கள். விக்டர் நடனமாடி விட்டு, அழகாக, மிக அழகாக ஒரு பாடல் பாடுகிறான். (என்ன அருமையான பாடல் அது..! வானில் தேடினேன்; பூமியில் தேடினேன்; வானவில்லைக் குடைந்து பார்த்தேன்; பெய்யும் மழையில் நனைந்து பார்த்தேன்; இன்னும் எத்தனை இடங்களில் தேடித் தேடி அலைந்தேன்; நீ இருக்கும் இடம் தேடி வருவேன்..!). அனைவரும் கைதட்ட முத்தமிட்டுக் கொள்கிறார்கள். கொஞ்ச நாட்களில் அவள் வீட்டுக்கு வந்து அவள் அம்மாவிடம் பெண் கேட்பதாகச் சொல்லிப் பிரிகிறான் விக்டர். அவன் தாயைச் சமாதானம் செய்து, அவள் சம்மதம் பெற்று, மகிழ்ச்சியுடன் அனஸ்டாஸியா வீட்டுக்குச் சென்று பார்த்தால்... வீடு காலியாக இருக்கின்றது. பக்கத்து வீட்டு பெண் ஒரு கடிதம் கொடுக்கிறாள். 'விடைபெறுகிறேன். என்னைத் தேடாதே..' என்று அனஸ்டாஸியா எழுதியிருக்கிறாள். அதிர்ச்சியுடன் அழுது கொண்டே போகிறான் விக்டர்.

பல வருடங்கள் கழிகின்றன.

இப்போது விக்டர் ருஷ்யாவின் ஒரு உலோகத் தொழிற்சாலையைத் துவக்கி ஒரு பிஸ்னஸ்மேனாக உயர்ந்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து ஒரு ஒப்பந்த விஷயமாக ஒருவர் வருகிறார். அவருடன் லூட்டி அடிக்கும் விக்டரின் நண்பர். காமெடியாக சில நிகழ்ச்சிகள் போகின்றன. விக்டர் எதிலும் அவ்வளவாக ஈடுபாடு காட்டாமல் ஒரு மேம்போக்காக நடந்து கொள்கிறார். இங்கே ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், நிறுவன பயணமாக விக்டர், அவர் நண்பர், அமெரிக்கர் மூவரும் நியூயார்க் செல்கிறார்கள். அமெரிக்க கம்பெனியில் விக்டருக்கு ஒத்தாசைக்காக ருஷ்ய மொழியும் தெரிந்த ஒரு பெண்ணை நியமிக்கிறார்கள். அவள் விக்டரைப் பார்க்க அவரது அறைக்கு வருகிறாள். விக்டர் நிமிர்ந்து பார்க்கிறார். அவள்... அனஸ்டாஸியா.

விக்டர் சுத்தமான அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். அவள் அனஸ்டாஸியா போலவே இருக்கிறாள். மேல் விவரம் விசாரிக்கும் போது, அவள் பெற்றோர் ருஷ்யர்கள் என்றும், இங்கே செட்டிலாகி விட்டதாகவும் சொல்கிறாள். அவள் அம்மா அனஸ்டாஸியா தான் என்பதை உணர்ந்து கொண்ட விக்டர் இப்பெண் மேல் ஒரு வித பாசத்துக்கு உள்ளாகிறார். வேலை முடிந்தவுடன், அவள் விக்டரை அழைத்துக் கொண்டு சுற்றிக் காட்டுகிறாள். விக்டர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் நண்பருக்கு, விக்டரின் இந்த திடீர் சந்தோஷக் காரணம் புரியவில்லை.

இந்தப் பெண் அவள் குடும்பத்தில் விக்டரைப் பற்றிச் சொல்கிறாள். அனஸ்டாஸியாவுக்குப் புரிந்து விடுகின்றது, வந்திருப்பது யார் என்று. அவள் கண்ணாடி முன் நின்று நினைத்துப் பார்க்கிறாள்.

கல்லூரி முடிந்தவுடன், ஒரு வலிக்கு அவள் உள்ளாக, மருத்துவர் சோதித்து ஏதோ நோய் என்கிறார். செலவு செய்ய முடியாமல் திகைக்கும் போது, ஒரு பாதிரியார் வந்து தான் செலவு செய்வதாகச் சொல்லி, அவளை அமெரிக்காவிற்கு கூட்டி வந்து, அவளைக் காப்பாற்றி விட்டு, அவளையே மணந்து கொள்கிறார். இந்த நிபந்தனையைப் புரிந்து கொண்ட அனஸ்டாஸியா, விக்டருக்கு ஒரு கடிதம் எழுதி விட்டு பிரிகிறாள்.

இப்போது, விக்டர் ஒரு சப்வேயில் இந்தப்பெண்ணின் கைப்பையைப் பறித்துச் சென்ற ஒரு கும்பலை தன் கராத்தே காட்டி வீழ்த்துகிறார். இவள் ஆச்சரியமடைகிறாள். 'எப்படி கற்றீர்கள்..?' 'கல்லூரியில் என் காதலி முன் என்னை சிலர் அடித்துப் போட்டர்கள். பிறகு இதைக் கற்று கொண்டேன்.'. இந்தப் பெண் விக்டர் மேல் ஈர்ப்படைகிறாள்.

அனஸ்டாஸியா தன் குடும்பத்திடம் வருவது தன் முன்னாள் காதலன் என்று சொல்லி விடுகிறாள். ருஷ்யாவிற்குச் செல்லும் முன் விக்டரை தன் வீட்டுக்கு விருந்துக்கு வற்புறுத்தி அழைத்து வருகிறாள். விருந்தில் ஒருவரையொருவர் கண்டு கொள்கிறார்கள்.

அனஸ்டாஸியா அவள் கணவனோடு கை கோர்த்து நெருக்கமாக அமர்ந்து கொள்ள, அவள் மகள் அவளது பாய் நண்பனுடன் நடனமாட, விக்டர் தனியாக அமர்ந்து கொள்கிறார்.

'விக்டர் நன்றாக கிடார் வாசித்துக் கொண்டே பாடுவார்..' அனஸ்டாஸியா.

அவள் மகள் வற்புறுத்த... விக்டர் பாடத் தொடங்குகிறார்.

'வானில் தேடினேன்; பூமியில் தேடினேன்; வானவில்லைக் குடைந்து பார்த்தேன்; பெய்யும் மழையில் நனைந்து பார்த்தேன்; இன்னும் எத்தனை இடங்களில் தேடித் தேடி அலைந்தேன்; நீ இருக்கும் இடம் தேடி வருவேன்..!'

பாடல் ஒலித்துக் கொண்டே இருக்க, திரை இருண்டு, எழுத்துக்கள் மேலேறுகின்றன.

செம மெலோடியான பாடல். யுட்யூபிலும் கிடைக்கவில்லை. தேடிக் கொண்டே இருக்கிரேன். படம் இப்படி ஒரு சோகமான முடிவோடு முடியும் போது, தியேட்டரில் அத்தனை கைதட்டல்கள். எல்லோர் நெஞ்சிலும் இப்படி ஒரு முதல் பூ பூத்திருக்கின்றது. படத்தில் இருவரும் எவ்வளவு அழகு. வயதான விக்டரும் அழகாகவே இருக்கிறார். ஆனால், வயதான அனஸ்டாஸியா.... பார்க்கச் சகிக்கவில்லை. அனஸ்டாஸியா நடிகைக்கே கொஞ்சம் மேக்கப் போட்டிருக்கலாம் என்று தோன்றியது. மற்றபடி அமெரிக்க விருந்தாளியும், விக்டர் நண்பரும் அடிக்கும் காமெடிகள் பின்னால் வரப்போகும் சோகத்திற்குத் தயார்படுத்தும் முரண்கள்.



பிடித்திருந்தது. இள அனஸ்டாஸியாவும் பிடித்திருந்தாள்.

http://www.imdb.com/title/tt1289619/

3 comments:

thamizhparavai said...

முதல் பட கதை எனக்கு வெளங்கலை...உங்க நினைவுல இருந்து வந்ததுனால இப்படியா அல்லது கதையே இதுதானா...?
காஞ்சிவரம் பார்க்கணும்...

thamizhparavai said...

for mail follow up

Venkatesh Kumaravel said...

நான் காஞ்சிபுரத்துக்காரன். படம் பார்த்து கண்களில் நீர் கசிந்துவிட்டது. கட்டுப்படுத்த முடியவில்லை.