Monday, July 20, 2009

மொக்ஸ் - 20.Jul.2K9

வீனக் கவிஞர் அனுஜன்யா, தனக்குப் பிடித்த சுவாரஸ்யமான பதிவர்கள் அறுவரில் ஒருவராக இந்தப் பதிவையும் தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. இது போன்ற சந்தோஷங்கள் அவ்வப்போது கிடைத்துக் கொண்டிருப்பது, தொடர்ந்து இயங்குவதற்கான எரிபொருளை ஊற்றுகின்றது. அனுஜன்யாவிற்கு நன்றிகள். இன்று தான் பாராட்டைக் கண்டதால், அடுத்த பதிவில் எனக்கு சுவாரஸ்யமான பதிவர்களை எழுதுகிறேன்.

நன்றி அனுஜன்யா சார்.

சென்ற வார இறுதியில் ஊருக்கு ஒரே ஒரு வேலைக்காக மட்டும் போயிருந்தேன். ஒரு நெருங்கிய நண்பரின் பாட்டி, தன் படைப்பாளியிடம் சென்று சேர்ந்து விட்டார். அவனைக் காணச் சென்றேன்.

ஒரு மரணம் ஏற்படுத்தும் வெற்றிடம் என்பது எதனாலும் நிரப்பப்பட முடியாதது. அது நாம் வரைந்து வைத்திருக்கும் ஒரு வரைபடத்திலிருந்து, ஒரு பங்கை உருவிச் சென்று விடுகின்றது. அந்த வெட்டப்பட்ட பகுதி, மனவெளியில் என்றுமே காலியாகவே இருக்கும். இராக்காலக் குளிர்க் கனவுகளில் அவர்கள் பிம்பங்களாக நடக்கையில், அதிர்ந்து விழிக்கும் போது 'எது கனவு? இதுவா? அதுவா?' என்ற குழப்பம் மிகப் பிரகாசமாய் அடியில் தேங்குகின்றது. நேற்று வரை நம்மோடு உடலும், குரலுமாய் உரையாடிய ஜீவன் இன்று வெறும் நினைவுகளாய் உறைந்து, நம் வாழ்நாளெங்கும் விலகாத துயரத்தைத் தந்து விட்டு மறைவது, வாழ்க்கை பற்றி அதுவரை நாம் கொண்டிருக்கும் சமன்பாடுகளை அசைத்துப் போடுகின்றது. 'One's presence is felt in its absence' என்பதை அத்தனை அழுத்தமாகப் பதித்து விட்டுச் செல்லும் ஒரு துக்கம்.

அவரது வீட்டிற்கு அதிகபட்சம் இருபது முறைகளுக்கு குறைவாகத் தான் சென்றிருப்பேன். எனக்கே பாட்டி இல்லாத, அவரது வரவேற்புச் சத்தங்கள் இல்லாத தன்மை வெகுவாக உனரப்பட்டதெனில், நண்பரை என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியவில்லை. மெளனம் சூழ்ந்த அந்த வீடு என்னை மூச்சுத் திணறச் செய்தது.

கொல்லைப்புறத்தில் ஒரு வேப்பமரம் நின்று கொண்டிருந்தது. அதன் அடியில் ஒரு நாடாக் கட்டில். சகடைச் சுற்றிய ஒரு கிணறு. மாலை வேகமாக மங்கிக் கொண்டு வந்தது. இருவரும் பேசத் துவங்கி விட்டோம். ஆனாலும் அந்த துக்கத்தைத் தொடுவதற்கு எங்களுக்கு பயமான தயக்கம் இருந்தது. அதைப் பற்றிப் பேசாமல் தாண்டிச் சென்று விடும் அவசரத்தில் ஏதேதோ பேசினோம். ஈரோடு நூல் அழகம், படித்த புத்தகங்கள், செய்த பயணம் என்றெல்லாம் போய்க் கொண்டிருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக இருள் தின்ற வானம் கிழக்கிலிருந்து கடுகித் துரத்திக் கொண்டு வந்த போது, எங்களைச் சுற்றி கொசுக்கள் திரண்டன. வேம்பு காற்றின்றி மெளனித்து நின்றது. தப்பிக்க, வீட்டு முன்னறைக்குச் சென்றோம்.

ஒற்றைத் திரியில் மெல்லிய சுடர் தத்தளித்துக் கொண்டிருந்தது. லாந்தர் விளக்கின் பாதாள வாய்க்குள்ளிருந்து மஞ்சள் தீ நடுங்கியது. அருகில் மடித்து வைக்கப்பட்டிருந்த அந்தப் பச்சைப் புடவை எங்கள் முகமூடிகளைத் திறந்து விட்டது. மெல்ல, மெல்ல இறப்பின் கணங்கள், அந்த உறவு ஏற்படுத்திய சலனங்கள்.... அதன் இல்லாமையால் துயரத்தின் முட்கரங்கள் பிசையும் கண்கள் ஊறிக் கொண்டேயிருந்தன.

ஒரு சோகத்திலிருந்து கொஞ்சமாவது விடுபட, அதை விட அதிக வலி கொண்டவரை எண்ணிப் பார்த்தல் ஒரு கொடூர முறை. இதுவரை யாரிடமும் சொல்லியிராத சில கதைகளை நடுங்கும் குரலில் சொன்னேன்.

நான்கு மணிநேரங்களுக்கும் மேலாக பேசிக் கொண்டிருந்து விட்டு, விலகும் போது, Ezra Poundன் ஒரு கவிதையைச் சொல்லி அர்த்தத்தை நினைத்தோம்.

And the days are not full enough
And the nights are not full enough
And life slips by like a field mouse
Not shaking the grass .

நீங்களும் யோசித்துப் பாருங்கள்.

சில வெண்பாக்கள், வெண்பா எழுதலாம் வாங்க பதிவில் எழுதியதிலிருந்து!

'காண வருமாங் கனி' என்ற ஈற்றடிக்காக (கடைசி வரி) ::

மதுவிறைக்கும் தேகம்நீ! மாலைவான மஞ்சள்
அதுயெரிக்கும் மேகம்நீ! ஆழ - வதுவையில்நீ
நாணங் களையும் முதலிராவைக் கண்கொண்டு
காண வருமாங் கனி!

முதலிரவில் யாரும் தீண்டாமல் டேபிள் மேல் ஊதுபத்தி சாம்பல்களோடு இருக்கும் பழங்களைச் சொல்கிறாராம்! வதுவை - புணர்தல்.

'சொல்லே மிகவும் சுடும்!' என்ற ஈற்றடிக்காக ::

தீதேநான் செய்தது! திட்டிவிட்டுப் போ!நீயென்
மீதேபி ழைசொன்னால் ஏற்கிறேன். - ஏதேனும்
சொல்லாமல் நீவுதிர்த்துச் செல்லும் மவுனமெனும்
சொல்லே மிகவும் சுடும்.

'வானம்' என்ற கருத்தை வைத்து எழுதச் சொன்ன போது ::

தீராத நீலச்சூள்! தீயாத சோதிக்கல்!
தூராத மேகப்பால்! தூரத்தின் - வாராத
விண்மீன்கள்! பூப்பொறி மின்னும் புதுவர்ணம்
கண்நிறையக் காட்டிடும் வான்!

தற்போது ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கின்றது. அதற்காக எழுதியது ::

இங்கிதம் இன்றி இயற்கை அழைத்திட
லுங்கியை தூக்கிச் சுவற்றிலே - அங்கிங்கே
கோடுபோட்டு ஒண்ணுக் கடித்திட்டால், வல்லரசு
நாடு மணக்குமா சொல்.

வார இறுதிப் பயணத்திற்காக சுந்தரிடமிருந்து மூன்று புத்தகங்களை எடுத்துக் கொண்டு படித்தேன்.

அ. மதி - கார்ட்டூன்கள்.

கிழக்குப் பதிப்பகத்தின் நூலான இதில் மதியின் கார்ட்டூன்கள் பக்கத்திற்கொன்றாகப் பதிப்பித்துள்ளனர். உண்மையில் எல்லா நகைக்குற்றோவியங்களும் சிரிக்க வைக்கவில்லை. சில பெரும் சிரிப்பை ஏற்படுத்தின.

இது போன்ற தொகுப்பு நூல்களில் ஏற்படுகின்ற சிக்கல், படைப்பாளியின் பொதுவான டெம்ப்ளேட் புலப்பட்டு விடுவது தான். பிறகு அது திகட்டும் அளவிற்கு நம்மைக் கொண்டு சேர்த்து விடுகின்றது. இதனால் தொடர்ந்து வரும் படைப்புகளை ரசிக்க முடியாமல் சலிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. உதாரணமாக அரசியல்வாதி பற்றிய நகைக்குற்றோவியங்களில் பெரும்பாலும் அவரது மனைவியைக் கொண்டு வந்து விடுகிறார், மதி. இது எளிதில் நமக்கு போரடித்து விடுகின்றது.

தப்பிக்க என்ன வழி? மிக மிக வேறுபட்ட, பலதர தளங்களில் தம் படைப்பைக் கொன்டு வருதல் தான். மதன் இதற்கு நல்ல உதாரணம். சிரிப்புத்திருடன் சிங்கார வேலு, ரெட்டை வால் ரெங்குடு, புரோக்கர் புண்ணியகோடி போன்ற பல பாத்திரங்களை விகடனில் உருட்டி விட்டிருக்கிறார். மதனுக்கு கிடைத்த வாய்ப்புகள் தினப்பத்திரிக்கையில் மதிக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். தொகுப்பு அமைப்பவர்கள் இதனையும் கருத்தில் வைத்துக் கொள்வது நலம்.

நகைக் குற்றோவியங்கள் வரைய மூன்று திறமைகள் தேவைப்படுகின்றன என்கிறார். ஓவியம் வரையும் திறன், சமூக நிலைமைகளையும், நிகழ்வுகளையும் கூர்மையாக கவனித்தல் மற்றும் நகைச்சுவை ரசனை. முதல் இரண்டையும் எப்படியாவது படித்து தேர்ந்து விடலாம் என்றும், மூன்றாவது உங்களுக்கு இயல்பிலேயே இருக்க வேண்டும் என்கிறார்.

அதுதானே கடினம்.

ஆ. ஸ்ரீமான் சுதர்சனம் - தேவன்.

தேவனின் இனிமையான ஒரு குடும்ப நாவல் இது. ஆபீஸ் அரசியல்கள், குடும்பத்தில் உறவினர்களால் வரும் தொல்லைகள், என்ற இரண்டு வகை பிரச்னைகளால் தடுமாறும் சுதர்சனம் அலுவலகத்தில் நான்கு முறை கையாடுகிறான். அவனது அழகான கோமளா மனைவியுடன் அவன் சமாளிப்பது மிக எளிமையான நகைச்சுவைகளாக சொல்லப்பட்டிருக்கின்றது. முக்கியமாக ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தேவன் கொடுத்திருக்கும் தலைப்புகள் இன்னும் அழகு.

இ. அம்பலம் கட்டுரைத் தொகுப்புகள்.

வாத்தியாரின் அம்பலம் இணையத் தளத்தில் வெளிவந்த விதவிதமான கட்டுரைகளின் தொகுப்பு நூலில் அவரது கேள்விபதில்கள், பொதுக் கட்டுரைகள், மேலும் பலரது நேர்காணல்கள், சிறுகதைகள், கவிதைகள் என்று பல விதமாய் இருக்கின்றன. இன்னும் படிக்க வேண்டியிருக்கின்றது. படித்து விட்டுச் சொல்கிறேன்.

12 comments:

அகரம் அமுதா said...

தங்கள் வலையை அனுஜன்யா அவர்கள் தேர்ந்தெடுத்தமைக்கென் வாழ்த்துக்கள் நண்பரே.

யோசிப்பவர் said...

//வதுவை - புணர்தல்//

வதுவை - திருமணம்/மணமகள்.
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.11:1:4470.tamillex

இரா. வசந்த குமார். said...

அன்பு அகரம் அமுதா...

நன்றிகள்.

***

அன்பு யோசிப்பவர்...

நீங்கள் குறிப்பிட்ட கண்ணியின் பக்கத்திலேயே ஐந்தாவது அர்த்தம் காணுங்களேன்!

PPattian said...

மரணம் குறித்த உங்கள் எழுத்தின் கவித்துவத்தை நீக்கினாலும், உண்மை அப்படியே எஞ்சி நிற்கிறது. இதற்கு "மொக்ஸ்" என்று பெயரா? :)

//நகைக் குற்றோவியங்கள்// முதல் முறை இந்த வார்த்தை கேள்விப்படுகிறேன். பகிர்வுக்கு நன்றி

அப்புறம் என் சார்பாக அனுஜன்யாவுக்கும் நன்றி

மெனக்கெட்டு said...

//
கொல்லைப்புறத்தில் ஒரு வேப்பமரம் நின்று கொண்டிருந்தது. அதன் அடியில் ஒரு நாடாக் கட்டில்.
//

அதோடு தலைக்கு அடியில் ஒரு கனமான சாண்டில்யன் புத்தகம், சுகமான காற்று, பூண்டு, ஓமம் போட்ட காராச்சேவு, நீர் மோர், சுகமான தூக்கம். இருந்தால் சுகம், பரம சுகம்!

Karthik said...

மொக்ஸ்? க்ரேட் ஒன்! :)

இரா. வசந்த குமார். said...

அன்பு புபட்டியன் சார்...

நன்றிகள். இந்த செய்தியை எந்த தலைப்பின் கீழ்க் கொண்டு வருவது என்று தெரியவில்லை. எனவே 'மொக்ஸ்' தொகுப்பில் சேர்த்து விட்டேன்.

***

அன்பு மெனக்கெட்டு...

அப்படித் தான் இருந்தோம் ஒரு காலத்தில்! அவை கடந்து போன பயணத்தின் பிம்பங்களாக நெஞ்சில் நிலைத்து விட்டன.

***

அன்பு Karthik...

Thanks buddie..!!!

ஹரன்பிரசன்னா said...

//மதுவிறைக்கும் தேகம்நீ! மாலைவான மஞ்சள்
அதுயெரிக்கும் மேகம்நீ! ஆழ - வதுவையில்நீ
நாணங் களையும் முதலிராவைக் கண்கொண்டு
காண வருமாங் கனி!//

மாலைவான, வதுவையில்நீ - தளைதட்டுகிறது. முதலிராவை - இந்த பிரயோகம் தவறு. முதலிரவு அல்லது முதல்ராவில்! சரி, வெண்பா எழுதி நேரவிரயம் செய்யாமல் கவிதை எழுதுங்கள். :-)

இரா. வசந்த குமார். said...

அன்பு ஹரன்பிரசன்னா...

நன்றிகள்.

இதில் என்ன தளை தட்டுகின்றது என்று எனக்குப் புரியவில்லை. தேகம்நீ - நேர் நிரை நேர். மாலைவான - மா லைவான - நேர் நிரை நேர். எங்கே தளை தட்டுகின்றது?

வதுவௌயில்நீ - வது வையில் நீ - நிரை நிரை நேர் - எங்கே தளை தட்டுகின்றது.

இரா என்றால் இரவு என்றும் அர்த்தம் இருக்கின்றது தானே?

கவிதைகள் 'நீ..நான்..காதல்' மற்றும் 'களிப்பேருவகை' செக்ஷன்களில் நிறைய இருக்கின்றன. :)

ஹரன்பிரசன்னா said...

மா/லை/வா/ன - நான்கு சீர்கள்.

வதுவையில்நீ - வது/வை/யில்/நீ - நான்கு சீர்கள்.

எதற்கும் வெண்பா எக்ஸ்பெர்ட்டுகளிடம் கேட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

இரா. வசந்த குமார். said...

அன்பு ஹரன்பிரசன்னா...

மிக்க நன்றிகள். வெண்பா கற்றுக் கொடுக்கும் அகரம் அமுதா அவர்களிடம் விசாரித்ததில், சீர் பிரித்தது தவறில்லை. ஆனால் ஓசை கெடுகின்றது என்று தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.

http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2009/03/38.html

மீண்டும் நன்றிகள்.

மெனக்கெட்டு said...

வெண்பாவிற்கான இலக்கணம் பற்றிய மேல் விபரம் இந்த சுட்டியில் பார்க்கலாம்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE