Wednesday, July 01, 2009

இன்னுமொரு இருநூறு - உரையாடல் போட்டி பற்றி!

ரியாக ஒன்றரை மாதங்களுக்கு முன் துவங்கி, பல வகைகளில், பல பதிவுகளில் விளம்பரப்படுத்தப்பட்டு, ஏறத்தாழ ஜூஜூ லோகோ திரட்டிகளின் 'இந்த வார ...' போட்டோக்களுக்கு இணையாக காட்சியளிக்க, கிட்டத்தட்ட தொடர்பதிவுகளுக்கு சிக்கிய சீமான்களை இழுத்துப் போட்டு சங்கிலியில் கோர்க்கும் வழிகளுடன், கிடைத்தவர்களெல்லாம் எழுதிக் குவித்த இருநூறுக்கும் மேற்பட்ட பதிவுகளில் முதலில் அடிபட்டது சிறுகதை.

பல ஆரம்ப ஆர்வங்கள் தெரிகின்றன.

நல்ல வாசிப்பனுபவம் இதுவரையில் கிடைத்திராத பலரும் சிறுகதை முயற்சியில் இறங்கியதில், பல படைப்புகள் தினம் எழுதும் பொதுவான பதிவுகள் போன்றே இருப்பதில் எனக்கு வருத்தமில்லை. காரணம், இது ஒரு துவக்கம் மட்டுமே! இப்படித்தான் எதுவும் துவங்கும். மெல்ல மெல்ல எழுதி எழுதிப் பழக, சூட்சுமங்களும், நுட்பங்களும் புரியப் புரிய நல்ல கதைகள் இவர்களிடமிருந்து வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆனால், அதற்கு தொடர்ந்து எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது.

'சிறுகதைகளை விமர்சிப்பது எப்படி?' என்று இணையத்தில் தேடிப் பார்த்தால், மிக விளக்கமாகச் சொல்லித் தருகிறார்கள். ஆனால் அப்படி விமர்சனம் செய்ய ஆரம்பித்தால், 219 கதைகளுக்கும் இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகி விடும் என்பதால், அந்தளவிற்கு நேரமும் இப்போது இல்லாததால், சுருக்கமாக ஒரு பொதுவாக எழுத விரும்புகிறேன்.

இத்தனை படைப்புகள் வந்ததற்கு வெட்டிப்பயல் சொன்ன காரணத்தை விட எனக்குத் தோன்றுகின்றன வேறு சில!

2006-ல் தேன்கூடு போட்டிகள் நடத்தப்பட்ட போதை விட, இப்போது பதிவர்கள் எண்ணிக்கை மிகக் கணிசமாக அதிகமாகி இருப்பது ஒரு காரணம். அப்போட்டிகளில் மீண்டும் மீண்டும் எழுதியவர்களே எழுதினார்கள்; எழுதினோம். புதியவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

சென்ற வருடம் 'சிறில் அலெக்ஸ்' சிறுகதைப் போட்டி நடத்திய சமயத்தில், ஒப்பீட்டளவில் இன்னும் கொஞ்சம் பதிவர்கள் அதிகமாயிருந்தாலும், அங்கே ஒரு பெரிய தடைக்கல்லாய் இருந்தது ஒரு நிபந்தனை. 'கதைகள் அறிவியல் பின்புலத்தில் இருக்க வேண்டும்'. நிறைய பேரை ஜகா வாங்க வைத்தது.

உரையாடல் போட்டியில் அத்தகைய நிபந்தனைகள் இல்லை. இதற்கே இத்தனை படைப்புகள் வந்திருக்கின்றன என்றால், 'தளத்திற்கு ஒரு கதை' என்ற முக்கிய இடர்ப்பாடு இல்லாமல் இருந்திருந்தால், இன்னுமொரு இருநூறு நிச்சயமாக வந்திருக்கும் என்றே தோன்றுகின்றது. ஆனால் அவற்றில் எத்தனை சிறுகதைகளாக இருந்திருக்கும் என்பது ?-யே!

பதிவர்கள் அதிகமாகி, தமது இருப்பை அவசரமாகப் பதிவு செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் எழுதியிருக்கிறார்கள் என்று தெரிகின்றது. பரவாயில்லை, மெருகேற்றிக் கொள்ளலாம்.

ரவி சொன்னது போல் போட்டி என்றதும், எல்லோரும் காவியம் படைக்கும் ஆசையில் சோகமும், விரக்தியும், மரணமும் சொல்ல முயலும் போது, ஒரு நகைச்சுவையோ, சரித்திரக் கதையோ, பேய்க் கதையோ வரவில்லை என்பது யோசிக்க வைக்கின்றது. ஒரு சம்பவத்தைச் சொல்வதா, ஒரு வாழ்க்கையையே சொல்வதா என்ற கேள்விகள் நிறைய பேருக்கு வந்திருக்கின்றன. பலர் கடைசி வரித் திருப்பத்தை முதலிலேயே வைத்துக் கொண்டு கதை கட்டியிருக்கிறார்கள் போல் உணர்கிறேன்.

மொத்தக் கதைகளில் பெரும்பாலும் தன்மை நிலையில் (First Person) எழுதப்பட்டிருப்பதன் மனக் காரணங்களைச் சிந்தித்துப் பார்க்க ஆசை.

கிட்டத்தட்ட பதினோரு கதைகளுக்கு, ஒன்றைத் தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நடுவர் குழுவிற்கு என் வாழ்த்துக்கள் மற்றும் வருத்தங்கள்.

-- தொடரும்.

மேற்கூறிய அத்தனையும் போட்டியில் பங்கெடுத்தவன் (2) என்ற முறையில் எனக்கும் பொருந்தும்.

5 comments:

radha said...

வசந்த்,
நீங்கள் என்னை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உங்களைத் தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுள் நானும் ஒருவன்.. உங்களின் நண்பனின் நண்பன். நானும் இந்தப் போட்டிக்காக அவசர அவசரமாக ஒரு கதையை அனுப்பி வைத்தேன்.
நேரம் கிடைத்தால் படித்து, குறைகளை சுட்டிக் காட்டவும்.

நன்றி..
ராதா

சென்ஷி said...

நல்ல தெளிவாக காரணங்களை அலசியுள்ளீர்கள். தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெறுவதென்பதும் சாதாரணமான காரியமாக எனக்குத் தெரியவில்லை. தொடர்ந்த உங்கள் கதைகளை வாசித்தவன் என்ற வகையில் உங்களது எழுத்துப் பரிமாணம் எனக்குப் பிடித்திருந்தது.

வெற்றி தோல்வியென்ற பேச்சுக்கிடமின்றி அனைவரையும் உரையாடலில் இடம்பெறச் செய்த வகையில் பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றேன்.

//
மொத்தக் கதைகளில் பெரும்பாலும் தன்மை நிலையில் (First Person) எழுதப்பட்டிருப்பதன் மனக் காரணங்களைச் சிந்தித்துப் பார்க்க ஆசை.//

இதற்கு எனது காரணமாக அவர்களது வாசிப்பனுவத்தைத்தான் கூற முடிகிறது. அல்லது மாற்று எழுத்துக்கான தேடலில் கதையென்பதின் அர்த்தம் அப்படியும் இருக்கக்கூடும் :)

ஆயில்யன் said...

//எல்லோரும் காவியம் படைக்கும் ஆசையில் சோகமும், விரக்தியும், மரணமும் சொல்ல முயலும் போது, ஒரு நகைச்சுவையோ, சரித்திரக் கதையோ, பேய்க் கதையோ வரவில்லை என்பது யோசிக்க வைக்கின்றது. ஒரு சம்பவத்தைச் சொல்வதா, ஒரு வாழ்க்கையையே சொல்வதா என்ற கேள்விகள் நிறைய பேருக்கு வந்திருக்கின்றன. பலர் கடைசி வரித் திருப்பத்தை முதலிலேயே வைத்துக் கொண்டு கதை கட்டியிருக்கிறார்கள் போல் உணர்கிறேன்.//


எக்ஸாட்டிலி கரீக்ட் :)

சோகம் அல்லது அனுதாபம் தேடும் வகையிலான கதைகள் மெஜாரிட்டி பெற்றிருக்கின்றன!

தமிழ்ப்பறவை said...

//
மொத்தக் கதைகளில் பெரும்பாலும் தன்மை நிலையில் (First Person) எழுதப்பட்டிருப்பதன் மனக் காரணங்களைச் சிந்தித்துப் பார்க்க ஆசை.//
அது பற்றிய பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
//'தளத்திற்கு ஒரு கதை' என்ற முக்கிய இடர்ப்பாடு இல்லாமல் இருந்திருந்தால், இன்னுமொரு இருநூறு நிச்சயமாக வந்திருக்கும் என்றே தோன்றுகின்றது//
அந்த இருநூறில் இருபது தங்கள் பங்களிப்பாக இருந்திருக்கும் என நிச்சயம் சொல்வேன்.

இரா. வசந்த குமார். said...

அன்பு ராதா...

உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்.

***

அன்பு சென்ஷி...

நன்றிகள். 'பிடித்திருந்தது' என்றால் இப்போது இல்லையா..? :)

//மாற்று எழுத்துக்கான தேடலில் கதையென்பதின் அர்த்தம் அப்படியும் இருக்கக்கூடும்

ம்ஹூம். சத்தியமா புரியல.

***

அன்பு ஆயில்யன்...

நன்றிகள். இதற்கு என்ன காரணமாக இருக்கக் கூடும் என்று யோசிப்போம்.

***

அன்பு தமிழ்ப்பறவை...

:) நன்றிகள்.