Thursday, July 02, 2009

கதைகள் வந்த கதைகள்.



ரையாடல் போட்டிக்கு எழுதிய இரண்டு சிறுகதைகள் எங்கிருந்து உதித்தன என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

மனையியல்.

சென்ற ஆண்டு மத்திய மாதங்களில் ஏதோ ஒன்றில் அனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு அனந்தபுரி எக்ஸ்ப்ரஸில் சென்று கொண்டிருந்தேன். அது எழும்பூர் வரை செல்லும். நான் மதுரையில் இறங்கிக் கொண்டு, பின் பேருந்துப் பயணம் செய்வேன்.

அந்த பயணத்தில், நெல்லை தாண்டி, வள்ளியூர் அருகில் என்று நினைக்கிறேன். ஒரு குட்டி ஸ்டேஷனில் கதைப் பெரியவர் ஏறினார். அவர் எங்கள் கம்பார்ட்மெண்ட்டில் விற்கும் போது தான், அவரைக் கவனிக்க முடிந்தது. கதையில் சொல்லிய அதே வர்ணனை தான்.

இட்லி பாக்கெட்டும் நான் வாங்கியது தான்.

அப்போது எழுந்த கேள்வி தான் 'இவருக்கு ஏன் இந்த வயதில் இந்த நிலைமை?'

அந்த கேள்வி இத்தனை மாதங்களாக எங்கோ ஒரு மன மூலையில் உறுத்திக் கொண்டே இருந்திருக்கின்றது. எப்படியாவது இறக்கி வைக்க வேண்டிய தவிப்பு இருந்து கொண்டே வந்தது.

கதைக்கும் அந்த சூழலுக்கும் இருந்த ஒரே தொடர்பு, இந்த கேள்வி தான்.

'இவருக்கு ஏன் இந்த வயதில் இந்த நிலைமை?'

மற்றபடி அந்தக் கேள்வியைச் சுற்றி வரைந்த கதை வட்டம் முழுக்க முழுக்க தற்செயலானது. அதுவே படைப்பின் அந்தரங்க ரகசியம் எனலாம்.

கதை சொன்னாலும் லேசாக ஒரு மனித அருமையைச் சொல்ல வேண்டும் என்ற ஆசை அந்தக் கதையில் எட்டிப் பார்க்கின்றது. கிழவர் மனதிலிருந்து இறங்கிப் போய் இப்போது கதையில் உறைந்து போய் விட்டார்.


ஓர் உரையாடல்.

சிறுகதை எழுதத் துவங்கிய ஆரம்ப நாட்களில் வெறும் உரையாடலாகவே சில எழுதினேன். அது எனக்குப் பிடித்திருந்தது. காரணம் வர்ணிக்க வேண்டிய அவசியமில்லை; பாரா பாராவாக எழுதிக் கொண்டு கதை சொல்லும் உத்தி சவாலானது அல்ல என்பது என் அபி.

உரையாடல்கள் மூலமாகவே யார் பேசுகிறார்கள், என்ன சூழல் போன்றவற்றைப் படிப்பவர் மனதிலேயே அவரே உருவகித்துக் கொள்ள வைப்பது தான் உண்மையான சவால் என்று எனக்குப் பட்டது; படுகின்றது.

வெகு நாட்களுக்குப் பின் அந்த வகையில் எழுதிய ஒரு கதை இது.

கதை எழுதிய நாளுக்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமை ஊருக்குச் சென்றிருந்தேன். பாலாஜி காலையில் ஏழு மணிக்கு அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடக் கூப்பிட்டான்.

அந்த ஞாயிறு அதிகாலையில் முகம் மட்டும் கழுவிக் கொண்டு போகையில், வழியில் அந்தக் காட்சி கண்பட்டது.

ஞாயிறின் பிஸியான கறிக்கடை. கறிக்கடைக்காரர் வெட்டிக் கொண்டிருக்கிறார். அவர் முன்னால், பத்திரமான தொலைவில் ஒரு நாய் வெட்டுவதையே பார்த்துக் கொண்டிருக்கின்றது. கொஞ்சம் தள்ளி ஓர் ஆடு கயிற்றால் ஒரு மரக் குச்சியில் கட்டப்பட்டு, தன் முறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றது.

நடக்கும் போது, கடக்கும் போது, சடாரென இந்த மூன்று பேரும் மனதில் பதிந்து போனார்கள். அந்த காட்சி அப்படியே பதிவாகி விட்டது.

பிறகு நான் பாட்டுக்கு போய், உடல் களைத்து விழும் வரை விளையாடி, வீட்டுக்குத் திரும்பி, குளித்து, உண்டு, ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாடிப்படியில் உட்கார்ந்த போது, அந்தக் காட்சி விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.

உடனே ஒரு பரபரப்பு; இதை எழுத வேண்டும். எழுதியேயாக வேண்டும். அந்த குறுகுறுப்பு வந்து விட்டால், படைப்பாளியால் சும்மா இருக்க முடியாது. கர்ப்ப வலி போல. வெளியே தள்ளியாக வேண்டும். இல்லாவிட்டால் சும்மா உட்கார முடியாது.

எப்படி எழுதலாம் என்று யோசிக்கும் போது சில கருத்துக்கள் தோன்றின.

நாய் கறி வெட்டுபவரையே பார்க்கின்றது; ஆடும் கறி வெட்டுபவரையே பார்க்கின்றது. இரண்டுமே அவரது கருணையையே எதிர்பார்க்கின்றன. ஆனால் இரண்டின் கோரிக்கைகளும் Mutually Exclusive.

அதாவது நாய்க்கு கருணை காட்ட வேண்டுமெனில், அந்த ஆட்டை வெட்டியாக வேண்டும். அப்போது தான் சிந்தும் சிதறல்களை அந்த நாய் கவ்விக் கொண்டு பசியாறும். ஆட்டுக்கு கருணை காட்ட வேண்டுமெனில், அதை வெட்டக் கூடாது. அப்போது நாயைப் பட்டினி போட்டாக வேண்டும். கறி வெட்டுபவர் என்ன செய்ய வேண்டும்? அவர் அவர் தொழிலைப் பார்க்கிறார்.

இந்த நிலைமையில் ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்ட சூழலில் சிக்கிக் கொண்ட ஆடும், நாயும் பேசினால் என்ன பேசும் என்ற கேள்விக்குப் பதிலே, இந்த உரையாடல்.

அந்த உரையாடலில் கொஞ்சம் தத்துவம் கலந்தது முற்றிலும் தற்செயல். 'ரொம்ப வலிக்குமா?' என்ற முதல் வரி தான் நான் யோசித்தது. அதைத் தொடர்ந்து வந்து விழுந்த அத்தனை வரிகளும், நடையும் முழுக்க முழுக்க அந்த நேரத்து மன வரிகள்.

ப்போது இந்த விளக்கங்கள் எதற்காகவாம்?

கதைகள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. கொஞ்சம் கவனித்தால் போதும். சுவாரஸ்யமான கதைகள் சொல்லலாம் என்பதைச் சொல்வதற்கே!

படம் நன்றி :: http://www.suzannesutton.com/_borders/boy_desk_thinking.jpg

8 comments:

Karthik said...

உண்மையில் இன்ட்ரெஸ்டிங்கா இருந்துச்சு.

எனக்கும் அந்த குறுகுறுப்பு வந்து எழுதிய பதிவுகள் ஓரளவுக்கு நன்றாக இருந்தன. எழுத வேண்டும் என்று எழுதினால், அவ்வளவு .... :)

இரண்டாவது கதை இன்னும் படிக்கவில்லை. ஜஸ்ட் லைக் தட் படிக்க விருப்பமில்லை என்பதால் மறுபடி ஃப்ரீயாக வருகிறேன். :)

இரா. வசந்த குமார். said...

அன்பு கார்த்திக்...

நன்றிகள்.

thamizhparavai said...

2வது கதை தோன்றிய கதை உண்மையிலேயே அருமை...
நான் பார்த்திருந்தால் ‘கடலோரக்கவிதைகள்’ சத்யராஜ் போல,”பட்டை கிராம்பெல்லாம் போட்டு பிரியாணிதான்” என்று கூவியிருப்பேன்.
இப்படில்லாம் யோசிக்கமாட்டேன்.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

:)

வெட்டிப்பயல் said...

இரண்டுமே படிக்க சுவாரஸ்யமா இருந்தது வசந்த்.

முதல் கதை என்னோட கெஸ் அது தான். எப்படியும் இப்படி இட்லி விற்பவரைப் பார்த்து மனதில் உருவான கதையாக இருக்குமென்று. ஆனால் எனக்கு அந்த கற்பனை மிகவும் பிடித்திருந்தது...

இரண்டாவது கதை முழுக்க வசனங்களால் நகர்த்தி சென்றது சுவாரஸியம்.

இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க சொன்னால் நான் முதல் கதையையே தேர்ந்தெடுப்பேன் :)

இரா. வசந்த குமார். said...

அன்பு வெட்டிஜி...

உங்கள் முதல் கெஸ்ஸுக்கு பாராட்டுகள்; ஆச்சரியங்கள். இரண்டாவது கதை பாராட்டுக்கு நன்றிகள்.

//இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க சொன்னால் நான் முதல் கதையையே தேர்ந்தெடுப்பேன் :)
//
மெத்த மகிழ்ச்சி...!

MADCOVI said...

kadhaigalin andharangam velipattu vittadhum...edho solla mudiyatha oru unarvu..hmm..avvalavuthanda endru...ragasiyangal ragasiyangalave irundhalthan suvarasiyam..correcta..?

இரா. வசந்த குமார். said...

மாமா, இது ஜஸ்ட் கதைகள் நம்மைச் சுற்றிலும் இருக்கின்றன. கொஞ்சம் கவனித்தால் அழகாக எழுதலாம் என்று சொல்வதற்கு மட்டுமே இந்த கதைகளின் உருவாக்கத்தைச் சொன்னேன். யாராவது ஒருவராவது இதன்படி நடந்தால் மகிழ்ச்சி தானே..!!!

நீங்கள் சொல்வதும் சரிதான். சில விஷயங்கள் ரகசியமாக இருப்பது தான் நல்லது.