Thursday, August 20, 2009

கோடானு கோடி!

லது பக்கம் வழிவிட்ட டிம்பரில், படுத்திருந்த மரங்களின் மேல் செங்கொடிக் கிழிசல்கள் மினுங்கின. தாபாக்களின் வாசல்களில் ஜிகினாக்கள் அணிந்த லாரிகளின் இண்டிகேட்டர்கள் சிணுங்கின. ஜூவல்லர்ஸ் மங்கை மஞ்சளாய்ச் சிரித்தாள். கோல்டை லாலேட்டன் சிபாரிசித்தார். சட்டென கடந்த அபார்ட்மெண்ட்டில் ஒரே ஒரு வீட்டில் வெளிச்சம் எரிந்தது. பெட்ரோல் பங்குகள் சொர்க்கமாய் ஒளிர்ந்தன. மெல்லமாய் நிலா மட்டும் அவ்வப்போது மேகக் கொத்திலிருந்து எட்டிப் பார்த்து உடனே மறைந்தது. பக்கத்திலேயே மழை பெய்து கொண்டிருப்பதை வாசம் சொல்லியது. திருச்சூரைத் தொட்டுத் தொடாமல், பைபாஸ் ஜங்ஷனில் வளைத்து, என்.ஹெச்.சிலேயே ஓட்டினான் சேது. காதுகளை அடைத்து துண்டால் இறுக்கியிருந்தான். ஸ்டியரிங் மேல் பீடிச் சாம்பல் விழுந்து கொண்டிருந்தது.

சாய்ந்திருந்த ரிவ்யூ மிரர் பக்கத்தில் பிள்ளையார், ஏசு, மெக்கா சுற்றிலும் கும்பலாய் ஒளித்துகள்கள் ஓடிக் கொண்டேயிருந்தன. காய்ந்த மல்லிகை முழம் சுருண்டிருந்தது. முல்லா பனியன், லுங்கியோடு 'S' ஆக கைகளை கால்களுக்குள் செருகிப் படுத்திருந்தான். தார்ப்பாய் காற்றில் படபடத்துக் கொண்டேயிருந்தது. பனிரெண்டரை மணி காற்று இருளாய்க் குளிராய் லாரிக்குள் செருகி வெளியேறியது.

1100 துள்ளியது. லேசாக இடது காதில் ஒதுக்கி விட்டு, ரெண்டாவது கியருக்கு குறைத்து விட்டுப் பேசினான்.

"ஐயா..!"

"நான் தான்..! எங்க இருக்க..?"

"திருச்சூர் தாண்டி பத்து நிமிஷம் ஆச்சுங்க.."

"எந்த ரூட்ல கொண்டு வர்ற..?"

"வழக்கமா வர்றது தாங்க..! வாளையார் வழி..!"

"வேணாம்..! இன்னிக்கு செக்கிங் ஜாஸ்தியா இருக்கு. உஷாரா இருக்கச் சொல்லி போன் வந்திச்சு. முன்னாடியே சொல்றதுக்குள்ள அமீர் மாட்டிக்கிட்டான். நீயும் மாட்டிக்க வேணாம். ரூட் மூணுல வா..!"

"ஐயா..! அந்த வழில பொய்க்கரட்டுப் பள்ளம் பாலம் இன்னும் சரி பண்ணலைங்க. நம்ம லோடு தாங்குமாங்கறது டவுட்டு தாங்க..!"

"இந்த நேரத்துக்கு எதுத்தாப்ல ஒண்ணும் வராது. அங்க மட்டும் மெதுவா ஓட்டி வந்திடு. தாண்டிரலாம். பார்டர்ல அங்க மட்டும் தான் இன்னிக்கு செக்கிங் இருக்காதுன்னு தகவல் வந்திருக்கு. சரக்க உள்ள கொண்டு வர அது தான் இப்ப சரியான வழி..! வந்திடு..!"

போனை வைத்து விட்டு, பீடியை எறிந்து விட்டு, துப்பினான். ஹெட் லைட்டை இன்னும் கொஞ்சம் டிம் செய்தான்.

முல்லாவைத் தட்டினான்.

"டேய்...! டேய்...!"

வாரிச் சுருட்டி எழுந்த முல்லா லுங்கியைச் சரி செய்து விட்டுக் கொஞ்ச நேரம் சுற்றுமுற்றும் பார்த்தான்.

"என்னண்ணே...?"

"முளிச்சுக்கோ..! தூங்கிடாத..! ரூட் மாத்தப் போறேன். பாணர்பாளையம் வழியா. ரோடு க்ளியர் பண்ணிச் சொல்லிட்டே வா. இன்னும் அரை மணி நேரத்துல சிட்டி செக் பாய்ண்ட் வந்திடும். பாலக்காடு தாண்டி லெப்ட் கட் பண்ணி ஊருக்குள்ள போகணும்..!"

கண்களைத் தேய்த்துக் கொண்டே தலையாட்டினான் முல்லா.

முருகன் சவுண்ட் அண்டு லைட் சர்வீஸ் என்று அந்தக் கருவியில் எழுதியிருந்தது. இட்லித் தட்டு போல வட்ட வட்டமாய்க் குழிகள் இருந்தன. அவற்றை அடைத்து பச்சை, சிகப்பு, மஞ்சள், வெள்ளை, ரோஸ் ஜிகினாக் கண்ணாடித் தாள்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றை வேகமாகச் சுற்றிட, ஒளி பாய்ந்து, மேடையில் வர்ணங்களாய் மாறி மாறி விழுந்தன.

கன்னியப்பன் சீதையின் சீலையைப் பிடித்து இழுத்து அகங்காரமாய்ச் சிரித்தான். தேன்மொழி ராவணனின் கைகளிலிருந்து சீலையைக் காப்பாற்றப் போராடினாள். மண்தரையில் உட்கார்ந்திருந்தவர்கள் கொட்டாவி விட்டார்கள். பனி மொத்தமாய் விழுந்தது. துண்டால் தலையை முக்காடிட்டிருந்த பெருசுகள் ஆல மரத்தடியிலேயே ஒண்டியிருந்தார்கள். அம்மாக்கள் மடியிலேயே சிறுவர்கள் தூங்கி விட்டிருந்தனர். பக்கத்துக் கோயிலின் தூண்களில் பெண்கள் ஒட்டியிருந்தனர்.

"ஆ..! விடு என்னை..!! காவி அணிந்த துறவி என அன்னம் இட வந்தேன். பாவி நீ, என் கன்னம் தொட வந்தாய்..!" என்று ராகமாய்ப் பாடினாள் சீதேன்மொழி.

"சீதா..! வாவா..! என்னோடு லங்கைக்கே..! வந்தால் நீ என் அரசி..!! உன்னோடு உரசி...!" கன்னியராவணன் அபசுரமாய்க் கத்தினான்.

இழுபிடிப் போராட்டம் ஒருவழியாக ஓய்ந்து, அவளை முதுகில் தூக்கிக் கொண்டு சீனிலிருந்து விலகினார்கள். அடுத்ததாக மேடை பின்படுதா மாற்றப்பட்டு, ஒரு பஸ் ஸ்டாப் வருகின்றது. ஒரு பெண் தோளில் கயிறு கட்டி, இரு பானைகளை முன் தொங்க வைத்து வருகிறாள். ஒருவன் டீக்காய் பேண்ட் ஷர்ட் போட்டு, அவளிடம் பானைகளைச் சுட்டிக் காட்டி,

"இதுல என்ன இருக்கு...?" மைக் முன்னாடி வந்து சத்தமாய்க் கேட்டான்.

"ம்..! பாலு..! ஏன், உனக்கு வேணுமா...?" அவளும் மைக் தலையில் கத்தினாள். அங்கங்கே இருந்த இளவட்டங்கள் விசிலடித்தன. அரைத்தூக்க கிழவர்கள் சட்டென தெளிந்து, உன்னிப்பாகப் பார்த்தார்கள்.

கன்னியப்பன் கண்ணாடி முன் அலங்காரத்தைச் சரி பார்த்துக் கொண்டான். மீசை கூர்மையாக இருக்கின்றது. க்ரீடம் ஒடிகிறது. ரப்பர் பேண்டால் இழுத்துக் கட்ட வேண்டும். நெஞ்சு முடிகளை அந்த வளையங்கள் இறுக்குகின்றன. கொஞ்சம் லூசாக்க வேண்டும். இறுக்கிய தடங்களை மீனாச்சியிடம் சொல்லி எண்ணெய் தேய்க்கச் சொல்ல வேண்டும். எழுந்து, ஓலைகளைக் கொஞ்சம் விலக்கி வெளியே பார்த்தான்.

மீனாச்சி இல்லை.

விரல்களால் இன்னும் துளையை அகலமாக்கி, உற்றுப் பார்த்தான். அங்கங்கே கொத்துக் கொத்தாய் உட்கார்ந்திருந்தவர்களிடம் பார்த்தான்; கோயில் மண்டபத்தில் பார்த்தான்; அரசமேடையில், சுடுகாட்டுப் பாதையில், ஓடைக் கரையில்... மீனாச்சி இல்லை. அவன் கண்கள் சூடேறின.

மேடையின் மேக்கப் வாசலில் ராஜப்பா நின்றிருந்தான். அவனைத் தோள் தட்டி,

"ராசு..! கொஞ்சம் வீடு வரிக்கும் போய்ட்டு வந்திடட்டுமா..?"

"டேய்..! அடுத்த ஸீன் உனக்கு தான். சூர்ப்பனகைகிட்ட சீதாவ காட்டணும்.."

"இல்ல..! வயிறு ஒரு மாதிரி இருக்கு..! போய்ட்டு சுருக்க வந்திடறேன்..! நீ இந்த காமெடி சீனை இன்னும் கொஞ்ச நேரம் இழுத்தடிச்சிட்டிரு..! இல்லாட்டி ராமனும் லச்சுமணனும் பொலம்பற சீன் அடுத்து வருதுல்ல..? அத இங்கே இளுத்து வுட்டுரு. தோ, வந்திடறேன்..!"

டவுனிலிருந்து வந்திருந்த 'ஸ்ரீ அங்காளம்மன் நாடக ட்ரூப்'பின் தளதள பெண் இன்னும் பச்சை பச்சையாய் மைக்கில் பொழிந்து கொண்டிருக்க, அவர்கள் குடித்துக் காலியாக கிடந்த இளநீர்கள் ஒரு மூலையில் குழுமியிருந்தன. வெட்டி வெட்டி, ஏறிய வழுவழுப்பு காய்ந்திருந்த அரிவாள் ஓரமாய்க் கிடந்தது. எடுத்து, இடுப்பில் செருகிக் கொண்டு, மேல் அங்கியில் மறைத்துக் கொண்டான். வெளியே வந்து, கொட்டாயின் பின் நின்றிருந்த சைக்கிளில் ஏறி அழுத்தினான். க்ரீடம் காற்றில் நடுங்கியது.

சாலையோரப் புளியன்கள் மேல் தகர போர்டுகளில் அபார்ட்மெண்ட் விளம்பரங்கள் மடங்கியிருந்தன. ஏர் பஸ்கள் ஜிவ் ஜிவ்வென்று கடந்து பறந்தன. இரண்டு சுற்றுலா பேருந்துகள் எதிர்த்திசையில் ஓடின. ஜிப்ஸி ஒன்று தடத்திலிருந்து விலகி, உள் விளக்குப் போட்டு ஓய்வெடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக மேடேறுவதை உணர்ந்து கியரை இரண்டிலேயே வைத்து ஓட்டினான் சேது. பாலக்காடு இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடும்.

ருப்பண்ணசாமி கோயிலில் மண் விளக்குகள் மிகக் கொஞ்சமாய்த் துளிர்த்து உயிர் பிடித்துக் கொண்டிருந்தன. அது தெருவின் ஆரம்ப எல்லையில் இருந்தது. கடைசியில் பூங்காவனத்தின் வீடு இருந்தது. அடுத்து, காடு ஆரம்பித்து விடும். கரும்பு போட்டிருந்தார்கள். ஒற்றையடிப் பாதைகள் வரப்புகளாய்ப் போகும். பிடித்து, சென்றால் அரை கி.மீ.யில் என்.ஹெச் சிக்கி விடும்.

தெரு கொஞ்சம் மேடான இடத்தில் அமைந்திருந்தது. கோயிலின் பக்கத்திலேயே பச்சைப் பூஞ்சை படர்ந்த படிக்கட்டுகள் பொய்க்கரட்டுப் பள்ளத்திற்கு கொண்டு சேர்க்கும். எப்போதும் அதில் வரும் தண்ணீர் பழுப்பாய்த் தான் இருக்கும். மலைநிலங்களில், அடிவாரங்களில் சடசடவென மழை பெய்தால், பள்ளத்தில் சலசலத்து, வாளையாற்று நீரோட்டத்தில் சென்று சங்கமித்து விடும். மற்ற நாட்களின் ஈரப்பிசுபிசுப்பில் கால் வைக்கப் பிதுங்கும்.

கோயிலிலிருந்து சரியும் பாதை கரட்டின் மேல் பாலத்தில் வந்து சேரும். சுதந்திரத்திற்கு முன் கட்டியது என்று பறை சாற்றும் ஒரு இங்கிலீஷ் கல்வெட்டு, காலத்தால் கொறிக்கப்பட்டு மூல, பெளத்ர போஸ்டர்களால் பாதி மறைபட்டிருக்கும். இழுத்துக் கொண்டிருக்கும் ஒரு கிழவனைப் போல் காற்றில் முனகும் பாலத்தின் அகலம் ஒரு பதினாறு வயது பெண் இடை போல் குறுகலாய் இருக்கும். போன குறுவைப்பட்டத்து மழையில் மண் பாலம் கரைந்தழிந்து விட, மாட்டு வண்டிகள் கூட துரைமார்கள் பாலத்தின் வழிதான் பயணிக்கின்றன. எச்சில் ஒழுக, மாடுகள் சாவகாசமாய் நடக்கையில், கடக்கையில், காத்திருக்கும் நான்கு சக்கர வாகனர்கள் ஹாரனை அழுத்தியே கதறுவார்கள். எதிர் முனையில் ஒரு முள் காடு இருக்கும். இடது புறமாய்த் திரும்ப, 'சரஸ்வதி' தியேட்டர் வரும். கடந்தால், பச்சைமாரியம்மன் கோயிலும், ஒட்டிய திடலும், அரச மரத்தடியும் வருகின்றன. திடலில் தான் பண்டிகைக் காலங்களில் நாடகங்கள் நடக்கும். 'தேடி வந்த இளவரசி' அல்லது 'மகத நாட்டு வியாபாரி' போன்ற செட்கள் தேவைப்படும் சரித்திர நாடகங்கள் அல்லது 'காதல் என்ன கத்திரிக்காயா?' என்ற சமூகக் கருத்து நாடகங்கள் மட்டுமே திரும்பத் திரும்ப நடத்தப்படும். அறுவடை சுமுகமாக நடந்து, கோ-ஆப்ரேட்டிவ் பேங்கிலும், சொசைட்டியிலும் தவணை கட்டி விட்ட பின்பும், எல்லோர் கையிலும் காசு புரண்டால், டவுனில் இருந்து ட்ரூப்பைக் கூட்டி வந்து வேஷம் பார்ப்பார்கள். அப்போது 'தாலியா? வேலியா?' 'சீதையின் கற்பு' போன்ற புதிய நாடகங்கள் அரங்கேறும். ராஜப்பா ஊரின் கலை இன்சார்ஜ். சீதையைக் கடத்திச் சென்றவுடன், மீனாச்சியைத் தேடி கிளம்பிய கன்னியப்பன், பாலத்தைக் கடந்து தெருவிற்குள் நுழைந்தான். பூங்காவனத்திற்கு முந்திய வீடு அவனுடையது. மீனாச்சி அவன் மனைவி.

ல்மண்டபம் தாண்டி சீரான வேகத்தில் லாரி ஓடத் தொடங்கியது. முல்லா முகம் கழுவி விட்டு பளிச்சென்றானான். அவனுக்கு இது புதிதாக இருந்தது. வழக்கமாக ஹைவேயிலேயே, பைபாஸிலேயே தான் போவார்கள். முதன் முறையாக ஊருக்குள் செல்ல வேண்டும். அவனுக்கு கொஞ்சம் பயம் வந்தது. ஒரு வாரத்திற்கு முன் சர்வீஸுக்கு விட்டிருந்த போது, சொல்லியிருந்தார்கள்.

"யாருப்பா..? நீ தான் க்ளீனர் பையனா..? ட்ரைவர் வரலையா..? எந்த கம்பெனி வண்டி இது..? கே.எஸ்.பி.யா..? நல்லா கேட்டுக்கோ. இஞ்சினுக்கு பக்கத்துல நாலஞ்சு பார்ட்ஸ் ரொம்ப ரஸ்டாகி இருக்கு. எப்ப வேணா களண்டு வுளலாம். இப்பத்திக்கு டைட் பண்ணி வெச்சிருக்கேன். மாத்திக்கறது நல்லது.."

சேதுவுடம் சொல்லி லாரி ஆபிஸில் மேனேஜரைப் பார்த்த போது,

"சார்..! எஞ்சின்ல ஏதோ சிக்கலாம்..."

"எந்த வண்டி சொல்ற சேது..?"

"வெங்கடேஸ்வரரு. ரியாஸ்ல க்ளீன் பண்ணும் போது முல்லாகிட்ட சொல்லியிருக்காங்க.."

"ரிப்பேர் பார்த்துரு. அடுத்த வாரம் கொச்சின் போக வேண்டியிருக்கும். பெரிய சரக்கு எடுத்திட்டு வரணும்..." சொல்லி ரெண்டாயிரம் கொடுத்தார்.

வெளியே வந்து, ஸ்ரீதுர்கா ஹோட்டலில் சாப்பிடும் போது, ரெண்டாவது பஜ்ஜியில்,

"எப்பண்ணே ரிப்பேருக்கு வுடப் போறோம்..?"

"த பாரு முல்லா. ரிப்பேரெல்லாம் கெடயாது..!"

"சரி பண்ணனும்னு சொன்னாங்களே..!"

"அவனுங்க கெடக்கறாங்க. இப்டி எதுனா துரு புடிச்சிருக்கு, தூசு அடச்சிருக்குன்னு சொல்லி காசு புடுங்குவானுங்க. அதெல்லாம் சமாளிச்சுக்கலாம். மேனேஜர்கிட்ட சொல்லாத. ரிப்பேர் பாத்தாச்சுனு சொல்லிரலாம். உனக்கு நூறு ரூபா. பயப்படாத, இதெல்லாம் சின்ன பிரச்னை. மெட்ராஸ்ல இருந்தப்ப, ப்ரேக்கே இல்லாம நாக்பூர் வரைக்கும் போய் பேல் எடுத்துட்டு வந்திருக்கேன்..!"

அர்த்த ராத்திரி தாண்டி ரெண்டு மணி நெருங்கிக் கொண்டிருந்தது. ஊதற்காற்று விசிறியடித்தது. அதெப்படி ப்ரேக்கே பிடிக்காமல் அவ்வளவு தூரம் போக முடியும் என்று யோசித்தான் முல்லா. வைப்பரைத் தேய்க்க விட்டான் சேது. தெறித்தாற் போல் விழுந்திருந்த கொஞ்சம் துளிகள் படர்ந்தன. தலைக்கு மேல் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரேடியோ கரகரத்துக் கொண்டே இருந்தது. முல்லாவுக்கு இனிமேல் தூக்கம் கிடையாது என்பது தெரிந்து போனது. தூங்க முயன்றாலும் சேது விட மாட்டான். சேது விட்டாலும் இந்த ரேடியோ விடாது. அதற்காகவே இப்போது அதைப் போட்டு விட்டிருக்கிறான். எப்படி தூங்காமல் இருப்பது..?

"லாரில்ல சரக்கு என்னண்ணே இருக்கு...?"

"தம்பி. இதெல்லாம் நீ கேட்கக் கூடாது. எனக்கும் தெரியாது. கொச்சின்ல இருந்து கொண்டு வர்றது மட்டும் தான் நம்ம வேலை. உக்கடம் தாண்டி குடோன்ல சேத்துரணும்..! அவ்வளவு தான்..!

"மதிப்பு எவ்ளோண்ணே இருக்கும்?"

"பல கோடி..!"

இதற்கு மேல் அவன் எதுவும் சொல்ல மாட்டான். முரட்டுக்கயிறுக்குள் இறுக்கமாய்க் கட்ட்ப்பட்டிருந்த மூட்டைகளுக்குள் என்ன இருக்கும்..? யோசித்துப் பார்த்தால், இன்னும் தூக்கம் வந்தது. கண் சொக்கும் போது, லாரிக்கடியில் எங்கோ லேசான இருமல் கேட்டது போல் இருந்தது.

"கெனா கண்டிருப்ப..!" என்றான் சேது.

த்தனை விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு ஜாக்கிரதைத் தன்மை இருந்தது. வீட்டுக்குள் யாரும் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது அதன் இலக்கு போல்...! ஆனாலும் அவன் வீட்டை அவனுக்குத் தெரியாதா..? படலையின் வேலியை மெ..ல்..ல.... விலக்கி, புழக்கடை வாசலில் நுழைந்து, சமையலறை ஜன்னலைத் திறந்து பார்த்தான்.

பட்டாசாலை தெரிந்தது. மூலையில் ஒரு லாந்தர் விளக்கு இருந்தது; எரிந்தது. பக்கத்தில் ஒரு புடவை கசங்கி சுருண்டிருந்தது. பூக்கள் போட்ட இளஞ்சிவப்பு புடவை. மேட்சாக ஒரு ரவிக்கை கலைந்து கிடந்தது. அதன் பொய்யான மேட்டில் விளக்கொளி நரம்பாய் ஊடுறுவியது. கட்டிலின் ஒரு காலில் ஒரு வெண் உள்ளாடை தொங்கிக் கொண்டிருந்தது. துணிக்கயிற்றில் ஒரு லுங்கி வீசப்பட்டிருந்தது. சத்தியமாய், அது அவனுடையது இல்லை.

ஏதோ ஒரு தெருவில் ஏதோ ஒரு நாய் ஏதோ ஒன்றுக்காக ஊளையிட்டது. திடலிலிருந்து அள்ளிக் கொண்டு வந்த ராமனின் புலம்பலைக் காற்று கன்னியப்பனிடம் சேர்த்தது.

"ஏனடா தம்பி..? ஈதென்ன நீ செய்தது...? அய்யோ சீதா..! உன்னை இழக்கவா இங்கு வந்தேன்..! சீதாஆஆஆ...!"

அடுத்த காட்சி வசனங்களை அனிச்சையாய் அவன் உதடுகள் உச்சரித்தன.

'தங்காய் சூர்ப்பனகை..! பார் இந்த சீதையை..!'

மீனாச்சி புரண்டு படுத்தாள். அவள் வெள்ளை முழங்கால்கள் தெரிந்தன.

'அயோத்தி ராமனின் மனைவி..! உன்னை மூக்கறுத்தானே, அவன் பொண்டாட்டி..! இன்று என் கையில்..! இவள் கற்புக்கரசி! ஹா..! ஹா..! ஹா..!'

அவள் மார்புகளை ஒரு வலுவான கை மறைத்து இயங்கியது. அதில் கொசகொசவென முடிகள் சுற்றியிருந்தன.

'இவள் எத்தனை அழகு..! இவளை நானே மணந்து கொள்ளப் போகிறேன்..! இவள் முகத்தைப் பார்..! அந்தக் கூந்தல்...'

கட்டிலிலிருந்து இறங்கித் தரையில் பரவியிருந்தது. மல்லிகைப் பூக்கள் குழப்பமாய்க் கலந்திருந்தன. அவள் விரல்கள் கட்டிலை இறுக்கிப் பிடித்திருந்தன.

'இவள் முகத்தைப் பார்...! தேன் தேடும் வண்டுகள் கண்டால் குழம்பி விடும் தாமரைக் கண்கள்..!'

கிறங்கியிருந்தன. ஒரு மயக்கத்தின் மதுரசம் முகம் முழுதும் கிளைத்து எழுகின்ற பரவசத்தில் அவள் உதடுகளை ஒருவன் தின்று கொண்டிருந்தான்.

'இப்போது அந்த ராமன் என்ன செய்வான்..? என் அருமைத் தங்கையை அழ வைத்த இவன் கொழுந்தன் ஏது செய்குவான்..? ஹா..! ஹா..! ஹா..!'

கன்னியப்பன் முடிவு செய்தான். இடுப்பில் செருகியிருந்த அரிவாள் வேர்வையில் நனைந்திருந்தது. ரொம்ப நாளாகச் சந்தேகப்பட்டிருந்தது இன்று உண்மையாக.. கண்ணெதிரிலேயே..! ராத்திரி முழுதும் நாடகம் நடக்கும் என்று தெரிந்து கொண்டு, நான் அங்கே இருக்க வேண்டிய கட்டாயத்தைப் பயன்படுத்தி, என்னோடு வந்து பாதி நாடகம் பார்த்து விட்டு, சத்தமில்லாமல் கிளம்பி... முதலில் இவனை! பிறகு அவளை...!!

படலையை மூடி விட்டு, நடந்தே வந்து கருப்பண்ணசாமி கோயிலின் திட்டில் மறைந்து கொண்டான்.

என்ன தவறு செய்தேன்..? அழகான மனைவிக்கு ஆசைப்பட்டது தவறா..? முத்தான ரெண்டு மகள்கள் இருக்க...! ச்சீ...! அரிவாளை எடுத்து ஒரு வீசு வீசினான். காற்று கிழிந்தது. காத்திருக்கத் தொடங்கினான்.

ரை மணி நேரம் கழிந்தது. நாடகம் ராவணன் இல்லாமலேயே நடக்கத் தொடங்கியது. இவனைத் தேடி வந்த குமரப்பன் கன்னியப்பனைக் கடந்து, வீட்டைப் பார்த்து, உடனே திரும்பி போய் 'காணோம்' என்று சொல்லி, ராவணனாகத் தொடங்கினான். கருப்பண்ணசாமி கோயில் விளக்குகள் இறந்து பட்டு, கருமை கனமாய் அப்பியிருந்தது. ஒரே ஒரு தெரு விளக்கு மட்டும் மங்கலாய் எரிந்தது. மிக லேசாய் காற்று வீசியது. கொஞ்சம் புழுக்கமாகவே இருந்தது. இந்த ராவண வேஷத்தைக் கழட்டி விடலாமா என்று யோசித்தான். வீட்டுக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு அமைதியானான்.

எங்கோ ஒரு தெரு நாய் வேகமாய் குரைத்து ஓடியது. ஏதோ ஒரு வாகனம் ஊருக்குள் நுழைவது போல் இரைச்சல் கேட்டது. லாரி.

அவன் களைப்பாய் நடந்து வந்தான். அதில் ஒரு துள்ளல் இருந்தது. கன்னியப்பன் அரிவாளை எடுத்துக் கொண்டான். கருப்பண்ணசாமி கோயிலிலிருந்து ஏழு வீடுகள் முன்னே வந்து கொண்டிருந்தான். சேது இடையில் புகுகின்ற முள் செடிகளை விலக்கி விலக்கி ஓட்டி வந்தான். அவன் ஐந்தாவது வீட்டுக்கு வந்து விட்டான். முல்லா ரோட்டின் முன் இருக்கும் குழிகளை எட்டிப் பார்த்தான். நான்கு வீடுகள். கன்னியப்பன் இடுப்பை இறுக்கினான். மூன்று வீடுகள். சேது பாலத்தை அடைவதற்குள் கியர் மாற்றி, க்ளெச்சை விடுவித்து, ஆக்ஸிலரேட்டரை அழுத்தினான். லாரி இன்னும் கொஞ்சம் சீறியது. இரண்டு வீடுகள். முல்லா கருப்பண்ணசாமி கோயிலைக் கண்டான். முதல் வீடு. கன்னியப்பன் பூனையாய் முன் கால்களால் நடந்தான். லாரி வேகமாய்ப் பாய்ந்தது. முன்னே வந்து விட்டான் அவன்.

"பரதேசி நாயேஏஏஏ....!" கத்திக் கொண்டே அரிவாளை ஓங்கிக் கொண்டே அவனை நோக்கி கன்னியப்பன் ஓடி வர, எதிர்பாராத அதிர்ச்சியால் விதிர்த்துப் போன அவன், சடுதியில் நோக்கம் புரிந்து, சுற்றுப்புறம் மறந்து, ரோட்டின் குறுக்கே பாய, சேது அதிர்ந்து ப்ரேக்குகளை அழுத்த, குழிகள் கொண்ட சாலையில் எகிறி எகிறி, இறுக்கம் கலைந்திருந்த எஞ்சினின் பாகங்கள் மறுத்து விட, முல்லா பார்த்துக் கொண்டிருக்கும் போதே....ச்ச்ச்ச்சட்...!!

அவன் உயரமாய்ப் பறந்தான். சுற்றினான். கீழே விழுந்த போது, சில சிவப்புத் துளிகள் வைப்பர் மேல் தெறித்தன. தடுமாறிய லாரி கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதியது. முல்லா "அய்யோ...!" என்று கத்தினான். கன்னியப்பன் பிரமிப்படைந்து, "கருப்பண்ணசாமி உன்ன தண்டிச்சுட்டாருடா.." என்று கத்திக் கொண்டே பாலத்தை நோக்கி ஓட, லாரி பெருத்த வேகத்தோடு சுற்றுச் சுவர்களை இடித்துத் தள்ளி, மேலிருந்து அப்படியே செங்குத்தாய் இறங்கியது.

"கண்டேன் சீதையை..! ராமா கலங்காதே..! லச்சுமணா அழாதே..! சுக்ரீவா சமாதானம் கொள்..! அங்கதா அமைதியாயிரு...!" ஸ்பீக்கரில் வடிந்து கொண்டிருந்த அனுமனை மீறி, நாடகத் திடல் முழுதும் அத்தனை பெரிய சத்தம் கேட்டது.

***

காலப்பயணியாய் வலையுலகில் எழுதத் தொடங்கி இன்றோடு (21.August.2009 ) மூன்றாண்டுகள் ஆகி விட்டதை முன்னிட்டு, இதை birthday special சிறுகதையாகக் கொள்ளலாம். :)

12 comments:

புலிகேசி said...

ponga romba perusa irukku

Chan said...

என்ன இது தொடரும் போட்டு நிறுத்திடீங்க.. அர்வமா இருக்கு அடுத்து என்ன நு.... நீங்க எழுதற விதம் அப்படியா நாங்களும் பயணிப்பது போல இருக்கு...மிக அருமை...

PPattian said...

அட்டகாசம்.. மாஸ்டர்பீஸ்..

அந்த இராமாயண வசனங்கள் எல்லாம் அருமை.. ஏதாவது நாடகத்தில் கேட்டதா.. சொந்த சரக்கா?

ஆமா, மீனாச்சிக்கு தண்டனை இல்லையா?

அப்புறம் மூன்றாண்டுக்கு வாழ்த்துகள்.. அடுத்த கட்டங்கள் (புத்தகம், பத்திரிகைகள்..) எப்போது

Chan said...

Meenakshi cannot go scotfree...

thamizhparavai said...

அன்பு வசந்த்...
விறுவிறுப்பான கதை...
நேற்றிரவு பாதியில் நீங்கள் விட்டிருந்தபோது படித்ததே ஆர்வத்தைக்கூட்டியது...
வெகு நாட்களுக்குப் பிறகு கதைக்கள வர்ணனைகள் அருமையாக இருக்கிறது..(எனக்குப் பயிற்சி கொடுப்பதாகவும் இருக்கிறது)
//அந்த இராமாயண வசனங்கள் எல்லாம் அருமை.. ஏதாவது நாடகத்தில் கேட்டதா.. சொந்த சரக்கா? //
சொந்த சரக்கென்றே நினைக்கிறேன்...
//ஆமா, மீனாச்சிக்கு தண்டனை இல்லையா? //
ஒரு விபத்து, ஒரு பலி..அதன் பின்புலம்தான் கதை...மீனாச்சிக்குத் தண்டனை கன்னியப்பன் கொடுத்தானா என்பது இங்கு தேவையில்லை.. அதே நேரம் அவன் அவளை மன்னிக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது..
//"கண்டேன் சீதையை..! ராமா கலங்காதே..! லச்சுமணா அழாதே..! சுக்ரீவா சமாதானம் கொள்..! அங்கதா அமைதியாயிரு...!"//
மேற்கண்ட வசனங்களை வசந்த் தேவையில்லாமல் போட்டிருக்க மாட்டார் என எண்ணுகிறேன்.
ஸ்பெஷல் கதைதான்..
கதையைப் பற்றிப் பேசிவிட்டு வாழ்த்துச் சொல்ல மறந்துவிட்டேன்..
வாழ்த்துக்கள் வசந்த் சிகரம் தொட...

இரா. வசந்த குமார். said...
This comment has been removed by the author.
இரா. வசந்த குமார். said...

அன்பு புபட்டியன்...

மன்னிக்கவும். உங்கள் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல மறந்து விட்டேன்.

'மாமா எங்க' என்ற கதை அழகியசிங்கர் நடத்தும் 'நவீன விருட்சம்' காலாண்டுப் பத்திரிக்கையின் இவ்வருட ஆகஸ்ட் இதழில் அனுஜன்யா மற்றும் யோசிப்பவரின் கதைகளுக்கிடையே பிரசுரமாகி இருக்கிறது.

அதற்கு முன்பாகவே சித்தன் அவர்கள் நடத்தும் 'யுகமாயினி' ஜூன் மாத இதழில், 'முதல் அறிவியல் புனைகதை' பிரசுரமாகி விட்டது.

இரு கதைகளுமே இந்தப் பதிவிலேயே இருக்கின்றன. :)

நன்றிகள்.

இரா. வசந்த குமார். said...

அன்பு சகாராதென்றல்...

நன்றிகள்.

nandhu said...

நல்லாயிருக்குங்க.நீங்க கதை சொல்லற விதம்

இரா. வசந்த குமார். said...

அன்பு நந்து...

நீங்க பாராட்டறீங்களா இல்ல ஓட்டறீங்களான்னே புரியலைங்க..!! ;)

Karthik said...

நீளத்தை பார்த்ததும் ஓடிவிட்டேன் போலிருக்கிறது. நன்றிகள், ஒரு நல்ல கதையை படிக்காமல் விட்டிருப்பேன். :((

எனக்கு செகண்ட் ஹாஃப் முக்கியமா கிளைமாக்ஸ் பார்ட் ரொம்ப பிடிச்சிருந்தது. :))

எல்லோரும் சொன்னதுபோல ராமாயண வசனங்களை இடையில் கொடுத்தது உண்மையில் அருமை. :))

இரா. வசந்த குமார். said...

அன்பு கார்த்திக்...

குறைத்து எழுத முயன்றாலும் சில கதைகள் நம்மை மீறியும் வந்து விடுகின்றன. எடிட் பண்ணினாலும் நிறைய மிஞ்சி விடுகின்றது. கதையை ரசித்ததற்கு நன்றிகள். க்ளைமாக்ஸ் எனக்கும் பிடித்திருக்கின்றது.

ராமாயண வசனங்கள்...கதயாசிரியனை மீறி கவிஞன் எட்டிப் பார்த்து விடுகிறான்..!!! :)