Thursday, August 27, 2009

கிளி முற்றம்.

ஸ் பாஸ் புதுப்பிக்க டிப்போவிற்குப் போவோம். எப்போதும் நான்கைந்து பஸ்கள் பாகங்கள் உரிக்கப்பட்டு ஸ்கெலடன்கள் தெரியும்படி நிற்கும். உருவி விட்ட பழுப்புச் சீருடையில் கறுப்புத் தெறித்த மெக்கானிக்குகளின் கால்கள் மட்டும் வெளியே நீட்டப்பட்டிருக்கும். தூரப்பேருந்துகள் தட்டுத்தடுமாறி நுழைந்து லிட்டர்களாய்க் குடிக்கும். எண்ணெய் கலந்த நீர் பல வர்ணங்களில் சுழித்தோடும். மாமா போன்ற டயர்கள் அடுக்கியிருக்கும் உள்ளறை ஒன்றில், அடுத்த ஒரு மாத ஆயுள் கொண்ட சீட்டு வாங்கிக் கொண்டு வெளியேறும் போது, ஷிப்ட் மாறும் ட்ரைவர்களைக் கடப்போம். காற்றில் டீஸல் வாசம் விரவியிருக்கும்.

பெய்ண்ட் உதிர்ந்த பல கட்சி போர்டுகளையும், முற்பகல் வெயிலில் சுரத்திழந்து சுருண்ட கொடிகளின் கம்பங்களையும் பின் தள்ளிச்சென்றால் ஓர் எஞ்சினியரிங் கல்லூரியும், ஓர் ஆர்ட்ஸ் கல்லூரியும் வரும். தாண்டி கிட்டத்தட்ட மூன்று கி.மீ தள்ளி தான் அடுத்த பஸ் ஸ்டாப் இருக்கும். இடைப் பிரதேசத்தில் காவலர்கள் போல் புளியமரங்களும், சரளைக் கற்களும், இளநீர்ச் சாக்குகளும், விசுக்கென விரையும் பாடி கட்ட வேண்டிய லாரிகளும், மொத்தமாய் ஒற்றை வெயிலும் மற்றும் நாங்களும் தான் இருப்போம்.

சங்கரின் வீடு கிழக்கில் கொஞ்சம் உள்ளே தள்ளி இருந்தது. ஹைவேயிலிருந்து கிளை பிரிந்து மாரியின் பெட்டிக்கடையை ஒட்டிய மண் பாதையில் நடந்து போனால் முதல் வீடு. கிழக்குப் பார்த்திருக்கும். வாசலில் ஊதா நிறத்தில் 'S' என்று பெரிய எழுத்தில் எழுதிய மாருதி. வீடு ஒரு சாதாரண கிராமத்து நடுத்தர அளவில் இருக்கும். இரண்டு முன்னறைகள். ஒரு சமையலறை. ஒரு ஸ்டோர் ரூம். அதில் நிறைய மூட்டைகள் அடுக்கப்பட்டு எப்போதும் ஒரு வித மக்கிய வாசம் வரும். பின்னால் ஒரு அறை, அவன் படிப்பதற்காக ஒரே ஒரு ஜன்னல் மட்டும் வைக்கப்பட்டு பரண்களோடு இருக்கும். அதில் ஒரு கண்ணாடி முகம் பதித்த மர பீரோ. கிரிக்கெட் விளையாடக் கிளம்பும் போதும், அதில் முகம் பார்த்து மேக்கப் செய்து கொண்டு, இரண்டாவது ஓவரிலேயே கலைந்து விடுவான். அதற்கு நேர் எதிரிலேயே மற்றொரு சின்ன அறை. பின்னங்கதவைத் திறந்தால், ஒரு மகா வெளி.

நெடுஞ்சாலைக்கும் வீட்டுக்கும் இடையில் அந்த வெளி இருந்தது. அதில் ஒரு பகுதி வயலாக்கப்பட்டிருக்கும். சீஸனுக்கேற்றாற்போல் அதில் கரும்பு, மஞ்சள், சோளம் என்று வித்தை காட்டி விளைவிப்பார்கள். மறு பாதியில் நிறைய மரங்கள் இருந்தன. கொய்யா, மா, கொன்றை, ஒல்லியாய் ஓர் அரசு இன்னும் பெயர் தெரியாத மரங்கள். ஆடி மாதத்தில் அங்கே ஊஞ்சல் கட்டி அரை வட்டம் செல்வோம். சில சமயம் மைனாக்கள் வந்து கம்பி வேலி கட்டிய கற்களின் மேல் உட்கார்ந்து கூவிப் பறந்து விடும்.

கொய்யா மரங்கள் இருந்ததால் நிறைய கிளிகள் வரும். பச்சையாய், நுனியில் மட்டும் சிகப்பாய் அழகாய் இருக்கும். சின்னச் சின்னதாய்க் கூறு வோட்டு கைகளில் வைத்து 'கிக்கீ...கிக்கீ..' என்று கத்தினால், தோள் மேல் வந்து அமர்ந்து கொத்தி எடுத்துச் செல்லும் அளவிற்கு அந்தக் கிளிகள் எங்களுக்குப் பழக்கமாயிருந்தன. சில கிளிகள் வீடுக்குள்ளேயும் வரும். அந்த தோட்டத்திற்கே நாங்கள் 'கிளி முற்றம்' என்று தான் பெயர் வைத்திருந்தோம். அரச மரத்தில் ஒரு கரும் பொந்து இருக்கும். 'அதில் தான் வந்தனா எனக்கு தரப் போற லவ் லெட்டரை எல்லாம் வெச்சு மறைக்கப் போறேன்' என்ற சேகர் தான் இந்தப் பெயர் வைத்தான். அவனுக்கு லேசான இலக்கிய விபத்து கொஞ்சம் முன்பாகவே நேர்ந்து விட்டிருந்தது. நாங்கள் எல்லோரும் தியேட்டர்களுக்குப் படையெடுத்துக் கொண்டிருந்த போது, அவன் மட்டும் சர்க்கிள் லைப்ரரிக்குச் சென்று மெம்பரானான். அவன் சொன்ன ஐடியா 'சிவகாமியின் சபதத்திலிருந்து' சுடப்பட்டது என்பது வெகு காலங்களுக்கு அப்புறம் தான் எனக்குத் தெரிய வந்தது. சரி, இந்த வந்தனா யார்..? சொல்கிறேன்.

அவர்கள் மூன்று வீடுகள் தள்ளி இருந்தார்கள். கிட்டத்தட்ட சங்கர் வீடு அளவிற்கே செல்வந்தம். ஒரே ஓர் அண்ணன். புல்லட்டில் வருவான். எங்களை வழியில் கோஷ்டியாகப் பார்த்தால் 'என்னடா வீட்டில் சொல்லட்டுமா..?' என்பான். என்னவோ எங்களின் உத்தமத்தன்மைக்கு வீடுகளில் கேரண்டி செய்திருப்பவன் போல்! 'சொல்லிக்கோ போ..!' என்பான் சங்கர். எங்களுக்கு உதறல் எடுக்கும். கேட்டால், 'அவன் தங்கச்சி என்னை ரூட் விடறாடா..! இவன் என்ன செஞ்சிர முடியும்..!' என்பான்.

அவளும் கொஞ்சம் அப்படித் தான் நடந்து கொண்டதாகத் தெரிந்தது. ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். கொஞ்சம் கொஞ்சம் மதுபாலா ஜாடை இருந்தது. அந்த வெக்கைக்கு ரோஸாய் கன்னம் சிவக்கும். நாங்கள் ஆறு மணி வரைக்கும் விளையாடி விட்டு, காய்ந்து போய், ஸ்ரீராம் நகர் தெருக் குழாயில் திருகித் தண்ணீர் குச்சியைக் குடிக்கும் போது, எதிரில் சைக்கிளில் ஜொலிப்பாய் போவாள். கூட சில துணை தேவதைகளும்! ஹிந்தி படிக்கிறாளாம்.

நாங்கள் கொய்யாக்களையும், நாகநந்திப் பூக்களையும் பறித்து, சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளில் அடைத்துக் கொண்டு அசிங்கமாய் நடக்கும் போது, கரெக்டாக வந்து சேர்ந்தாள். சின்னச் சின்னதாய் பூப்போட்ட பாவாடையும், அலையலையாய்த் திரண்ட பஃப் வைத்த சட்டையும் போட்டிருந்தாள். மஞ்சள் முடிகள் கைகளில் சுருண்டிருந்தது. பெரிய ப்ளாஸ்டிக் வளையல். ஒரு கையில் வாட்ச். டெய்ல் மாதிரி ஏதோ ஒரு சங்கதியில் தலையை முடிந்திருந்தாள். அதில் ஒரே ஒரு ரோஜா, இலையோடு ஈரமாய் இருந்தது. அந்த மாலை நேரத்தில் மஞ்சள் கதிர்கள் முகத்தில் விழுந்து புரண்ட போது, கிட்டத்தட்ட தேவதை போலிருந்தாள். எல்லோரும் அப்படியே ஸ்டன்னாகி நிற்கும் போது, உள்ளேயிருந்து சங்கர் அம்மா வந்து விட்டார்கள்.

"ஆண்ட்டி...! அம்மா இதை உங்ககிட்ட குடுத்திட்டு வரச் சொன்னாங்க.." பின்புறத் திண்ணையில் வைத்திருந்த ஒரு டிபன் பாக்ஸை எடுத்துக் கொடுத்தாள். "ஹரித்வார்ல இருந்து மாமா வந்திருந்தாங்க. ஏதோ ஸ்வீட். உங்களுக்குப் பிடிக்குமேன்னு கொண்டு வந்தேன்.."

"ஸ்வீட்டா வந்து..? நான் சாப்பிட மாட்டேன். அவருக்கும் சுகர் ஆச்சே..!"

'வந்து வந்து... ஸ்வீட் தந்து தந்து..' சேகர் அதற்குள் கவிதை எழுதும் முஸ்தீபில் இறங்கியிருந்தான். அவன் வாரப் பத்திரிக்கைகளைத் தாண்டி, புதுக்கவிதைகளைத் தொடங்கி விட்டதை இது உறுதிப்படுத்தியது.

"உங்க வீட்ல இருக்கற வேற யாராவது சாப்பிடுவாங்கனா குடுங்க ஆண்ட்டி..!" சொல்லி விட்டு எங்கள் எல்லார் மேலும் ஒரு பார்வையை விசிறி விட்டு மின்னலாய் மறைந்தாள்.

"நிறைய இருக்கும் போல இருக்கு. நீங்க எல்லோரும் எடுத்துக்கோங்க..!" குந்தி தேவி போல் அவர் சொல்லி விட்டுப் போய் விட, இங்கே அடிதடி.

நான்கு பேரும் ஆளுக்கொரு பக்கம் பிடித்திழுக்கப் போராட, சங்கர் 'சைலன்ஸ்' சொல்லி விட்டான்.

"நல்லா கேட்டுக்குங்க. வந்து என்ன சொன்னா? எங்க வீட்ல இருக்கற வேற யாருக்காவது...! அப்டின்னா என்ன அர்த்தம்? என்னைத் தான சொல்லியிருக்கா. எல்லோரும் ஒதுங்கிக்கோங்க..."

"அதெப்படி? இப்ப உங்க வீட்ல நாம எல்லாரும் தான் இருக்கோம். அவ எங்கள்ல யாரையாச்சும் சொல்லியிருக்கலாம்ல..?" சேகர் அந்த வாக்கியத்தில் இருந்த இலக்கண சூட்சுமத்தைப் பிடித்து விட்டான். அவன் லைப்ரரியில் லைஃப் டைம் மெம்பரானது வீணாகவில்லை.

நானும், சுரேந்தரும் அமைதியாக நின்றோம். இது போன்ற உரிமைப் போர்களில் வீணாகத் தலையிட்டுப் பின்னர் கிடைக்கப் போகும் பங்கில் விரிசல் விழ விடக் கூடாது என்பதில் நாங்கள் இருவரும் நிறைய அனுபவங்களில் தெரிந்து கொண்டிருந்தோம். பின்னர் ஒரு வழியாகச் சமாதானமாகிப் பிரித்துப் பார்த்து, நிறைய நிறைய இருந்ததால், எல்லோரும் பங்கிட்டுத் தின்றோம். ஒருவனே தின்றால் வயிற்றுக்கு ஒத்துக்காது என்ற உயிரியல் உண்மை அதற்குள் அவர்களுக்குப் புலப்பட்டிருந்தது.

ந்தனா இது போல் குழப்பமாகத் தான் நடந்து கொண்டாள். சுரேந்தருக்கு ஒரு தங்கை. அமுதா. அவள் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, அவளிடம் இவனைப் பற்றி ஏதோ சொன்னாளாம். அது வந்து பேச்சு வாக்கில் சொல்லி விட, அண்ணனை இரண்டு வாரங்களுக்கு கையில் பிடிக்க முடியவில்லை. பின் அவளிடம் போட்டுப் பிராய்ந்து பார்த்ததில், இவள் வந்தனாவிடம் எக்ஸாம் ஹாலில் ரப்பர் கேட்டிருக்க, அவள் உன் அண்ணனிடம் வாங்கி வைத்திருக்க வேண்டியது தானே என்று சொல்லியிருக்கிறாள்.

எக்ஸாம் ரெஃபரன்ஸுக்காக லைப்ரரி பக்கம் போனவளிடம், விகடனை மறைத்து, எம்ப்ளாய்மெண்ட் நியூஸை எடுத்து வைத்து, ஐ.ஏ.எஸ். ஆகப் போவதாகவும், அதற்காக சைனிக் பள்ளியில் சேரப் போவதாகவும் பீலா விட்டிருக்கிறான் இன்னொருவன். அவள் 'நாக்பூரில் ஒரு பெரியப்பா இருக்கிறார்கள். ரெஸிடென்ஷியல் சைனிக் ஸ்கூல் நடத்துகிறார்களாம். போகிறாயா?' என்று கேட்டு விட, சைக்கிளை எடுத்து பறந்து விட்டான்.

என்னிடம் வந்து ஒருமுறை சயின்ஸ் படங்கள் வரையக் கஷ்டமாயிருக்கிறது. வரைந்து தருகிறாயா என்று கேட்டாள். அப்போது என் உயிரியல் படங்கள் பாய்ஸ் ஹை ஸ்கூல் தாண்டி இவர்கள் வட்டாரத்திலும் மங்காப் புகழ் பெற்றிருந்தது. என் அக்கா தான் ராத்திரி எல்லாம் உட்கார்ந்து வரைந்து தருகின்ற ரகசியத்தை நான் வெளியிட்டதேயில்லை. வந்தனா கேட்டதும் உள்ளுக்குள் ஜில்லிப்பாய் இருந்தாலும், அக்காவிடம் கெஞ்சிக் கூத்தாடி வரைந்து தரச் சொல்லி ('இரு இரு அம்மாட்ட சொல்லிடறேன்.!') கொடுக்கும் போது, சுரேந்தர் போட்டுக் கொடுத்து விட்டான்.

எங்களில் சங்கருக்கு மட்டுமே கூடுதலாய்ச் சில தகுதிகள் இருப்பதைக் காலக்கிரமத்தில் புரிந்து கொண்டோம். ஒரே தெரு. ஒரே பொருளாதார நிலை. கொஞ்சம் வனப்பு கலந்த நிறம். நாங்கள் பிறகு ஓசி கொய்யாக்கனிகளுக்கு பங்கம் வருவதைக் கருதி, ஒதுங்கிக் கொண்டோம்.

ஒரு நாள் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்தான்.

"என்னடா..?"

"ஓ.கே. சொல்லிட்டாடா. அதுக்கு அடையாளமா நம்ம கிளி முற்றத்துல அரச மரம் இருக்குல்ல. அங்க வெச்சு ஒரு கிஸ் குடுத்தாடா. எங்க தெரியுமா...?"

"அதான் சொன்னியே..! அரச மரத்துல..!" சேகர் கம்மிய குரலில் சொன்னான்.

"ச்சீ! அது இல்லடா.! இங்க..!" உதட்டைக் காட்டினான். கொஞ்சம் லிப்ஸ்டிக் கலர் தெரிந்தது.

"இங்கயா..? உதட்டுலயா..? எப்டிடா இருந்துச்சு..?"

"டேய்..! அவ என் வைஃபா வரப் போறா..! இப்டி எல்லாம் கேக்காதீங்க..!"

"ஓ...! ஸாரிடா..!"

பிறகு அவள் எங்கள் கூட்டத்தில் ஒன்றானாள். கிளி முற்றத்தில் மேலும் ஒரு கிளி சேர்ந்தது. நாங்களும் விகல்பமில்லாமல் பழகினோம். புல்லட் அண்ணனும் நெருக்கமானான். மதீனா டீ ஸ்டாலில் அவன் சிகரெட் பிடித்ததைக் கூட நான் யாரிடமும் சொல்லவில்லை. அவன் எக் பஜ்ஜி வாங்கிக் கொடுத்தான்.

அவனுடைய கிரிக்கெட் குழுவில் எல்லாரும் தடித் தூண்களாக இருப்பார்கள். நாங்கள் ஆர்.கே.நகர் பிட்சில் விளையாடும் போது, லேட்டாகவே வந்து வேண்டுமென்றே எங்களுக்கு குறுக்காகவே பிட்ச் வைத்து இம்சைப்படுத்துவார்கள். இப்போது புல்லட் அண்ணனின் அன்பு வட்டத்துக்குள் நாங்கள் வந்து விட்டதால், 'முஸ்தபா... முஸ்தபா..' ஆனோம். சுரேந்தருக்கு சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொடுத்து, வளையம் விடும் வரை வளர்ந்தான்.

கிளிமுற்ற அரச மரப் பொந்தில் சிகரெட் துண்டுகள் தேங்கின. உழவுக்கு வருபவர்கள் பார்த்து விட்டு பற்ற வைக்க, க்ரூப் ஸ்டடி இன் கிளி முற்றத்திற்கு கட் விழுந்தது. பிறகு அவன் வீட்டுக்குப் போவதும் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து கொண்டே வந்தது. மூன்றாண்டுகள் தொடர் மழையில்லாததால், உழவு நிறுத்தப்பட்டதாம். கிளி முற்றத்து பழ வருமானம் கை கொடுத்ததாம்.

ஸ்கூல் முடிந்ததும் நான் சென்னைக்குக் கிளம்பி விட, சுரேந்தர் திருப்பூரில் மில்லுக்குச் சென்று விட, சேகர் இலக்கியத்திற்கு கமா போட்டு எம்.எம்.ஸி.யில் ஊசி பிடித்தான். சங்கர் அடுத்த ஸ்டாப் ஆர்ட்ஸ் காலேஜிலேயே பி.காம் சேர்ந்தான். அவளும் அங்கேயே சேர்ந்ததாளாம்.

தேர்ட் இயர் செமஸ்டருக்குப் படித்துக் கொண்டிருந்த போது, சுரேந்தர் ஹாஸ்டலுக்குப் போன் செய்து சொன்னான். "ரெண்டு பேர் வீட்லயும் சம்மதிக்காததால சங்கரும் வந்தனாவும் ஓட்டிப் போகப் பார்த்து, புல்லட் அண்ணன் மூணாவது கிலோமீட்டர் பஸ் ஸ்டாப்புக்கு நடந்து போகும் போது புடிச்சுட்டான். வீட்ல செம அடி. அவளை நாக்பூருக்கு அனுப்பிட்டாங்க..."

யாரோ ஒரு சேலம் சேட்டு வீட்டை வாங்கியிருந்தான். "அவங்க அப்பா எல்லாத்தையும் வித்துட்டு தென்காசி பக்கமா போய்ட்டாங்களாம். இவன் படிப்பை நிறுத்திட்டங்க. அய்யம்பாளையத்துல இருந்த பண்ணையை கூட வித்துட்டாங்க.."

க்கா பையனுக்கு காது குத்துவதற்காக இந்த முறை ஊருக்குப் போயிருந்த போது பஸ்ஸில் இருந்து எட்டிப் பார்த்தேன். வயல் முழுக்க நிரவப்பட்டு, சமவெளிகள் சுத்தம் செய்யப்பட்டிருந்தன. மஞ்சள் பிள்ளையாராய் HD கல் அம்புக்குறியோடு உள்ளே தள்ளி இருந்தது. சர்வேயர்கள் தத்தம் கருவிகளுக்குள் தலை புதைத்திருந்தார்கள். கிளி முற்றத்தில் ஜல்லிகள் கொட்டப்பட்டிருந்தன. பக்கத்து சீட்டில் வெற்றிலை மடித்துக் கொண்டிருந்தவர் சொன்னார். பஸ் ஸ்டாப் வரப் போகிறதாம்.

7 comments:

ஆயில்யன் said...

//அவனுக்கு லேசான இலக்கிய விபத்து கொஞ்சம் முன்பாகவே நேர்ந்து விட்டிருந்தது/

//என்னவோ எங்களின் உத்தமத்தன்மைக்கு வீடுகளில் கேரண்டி செய்திருப்பவன் போல்//

LOL :))

ஆயில்யன் said...

பல வரிகளில் இளமைக்கே உரிய கிண்டல்களோடு அனுபவங்களை வெளிப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் :(

Karthik said...

வாவ், கலக்கல்ஸ்! :))

thamizhparavai said...

அனுபவிச்சு எழுதினீங்களோ இல்லையோ வசந்த்.. அனுபவிச்சுப் படிச்சேன்...
அது என்னமோ தெரியலை .. யார் கொசுவத்தி சுத்தினாலும் மனம் லயிக்கும்.. சுத்துறது நீங்களா இருக்குறதுனால, இன்னும் ஆழமா லை(லயி)க்க முடிந்தது...
விடுங்க ஆயில்ஸ்.. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க...?! சகஜம்...

இரா. வசந்த குமார். said...

அன்பு ஆயில்யன்...

நன்றிகள். அவ்வப்போது கொஞ்சம் ஊர்க்கதைகளையும் எழுத ஆசையாயிருக்கிறது. நிறைய நிகழ்ச்சிகளை எழுதத் தோன்றுகிறது. கற்பனை மேலாகப் பூசப்பட்ட உண்மைச் சம்பவங்களைக் கதையாகச் சொல்ல நிறைய ஸ்கோப் இருப்பதாகப் படுகிறது.

***

அன்பு கார்த்திக்...

நன்றிகள். நீங்க எப்ப அடுத்த கதை எழுதப் போறீங்க..?

***

அன்பு தமிழ்ப்பறவை...

வார்த்தை விளையாட்டில் நிறைய கலக்குகிறீர்கள். இதில் கொஞ்சம் கொசுவர்த்தி, கொஞ்சம் கற்பனை. சொந்த ஊரை எழுதுவதற்கு குதித்தால், வந்து கொண்டே இருக்கின்றது. :)

Chan said...

Padikum pozhudhu appadiyae kan mun virigiradhu kaatchigal..Arumai

இரா. வசந்த குமார். said...

Dear Chan...

Thanks for the comment. :)