
நாளை மறுநாள் மகாபலிச் சக்ரவர்த்தி கேரள மண்ணிற்கு விஜயம் தருகிறார். தீபாவளிக்கு கூட லீவு தராமல், இங்கே உச்சக் கொண்டாட்டம் திருவோணத் திருநாளிற்கே..!
டெக்னோபார்க்கில் எல்லோரும் இன்று மாலையில் இருந்தே பண்டிகை மூடுக்கு வந்து விட்டார்கள். அவசர அவசரமாக ரிலீஸ் செய்ய வேண்டிய மாட்யூல்களை அனுப்பி விட்டு, எல்லோருக்கும் 'ஓணம் ஆஷம்ஸுகள்' ஃபார்வேர்ட் செய்து விட்டு, ஒரு ரிலீஃப் மூடில் ஸ்வைப் கார்ட் தேய்த்து வெளியேறுகிறார்கள். பர்வீன், ஏ1, பிஸ்மி ட்ராவல்ஸ் புக்கிங் ஆஃபீஸ்கள் முன் பயண பேக்கில் அடைத்த அழுக்குத் துணிகளும் ஃபாண்டா பாட்டிலுமாக ஜீன்ஸ் பெதும்பைகள் காத்திருக்கிறார்கள். கழக்குட்டத்தில் 'குடும்பஸ்த்ரீ' என்ற மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் ஊறுகாய்கள், குளியல் பொடி, மஞ்சள் தூள், அரப்புப் பொடிகள் ஆகியவற்றை நேற்று ஒரே நாளிலேயே விற்றுத் தீர்த்து விட்டு, இன்று சிட்டிக்குள் பட்டறை போட்டிருக்கிறார்கள். திடீரென ஜனித்த கூரைகளில், ட்யூப் லைட்களின் அடியே பறங்கிக்காயும், வாழைச் சீப்புகளும் பரப்புகிறார்கள். ஹோட்டல்கள் மூன்று நாட்களுக்கு மூட்டை கட்டி விடலாமா என்று யோசிக்கிறார்கள். அட்வான்ஸாக சம்பளம் போட்டு விட்டதால், ஏ.டி.எம்.கள் ஏழு மணிக்குளேயே காலியாகி, லேட்டர்களுக்கு 'ஸாரி' சொல்லி விட்டன. செல்போன் ஷாப்புகள், ரெடிமேட்ஸ் அண்ட் கட்பீஸ் கடைகள், -1 தள கல்ஃப் கிஃப்ட் ஷாப்புகள் எல்லாவற்றிலும் கூட்டம் அப்புகிறது.
சிக்கன் கார்னரிலும், லோக்கல் கையேந்தி பவனிலும் ஜனம் அதகளம் செய்கிறது. கன்ஸ்ட்ரக்ஷனுக்காக கூட்டி வரப்பட்ட வட இந்தியர்கள், வெளுத்த முடியை நீவிக் கொண்டு, கடக்கும் மஞ்சள் மங்கைகளை ஓரக்கண்ணால் விசாரிக்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் 'ப்ரமரம்' ரெண்டாவது வாரமாக ஒடுகின்றது. அதிசயமாக! மகாதேவர் கோயிலின் குட்டிக் குட்டி விளக்குகள் சிமிட்டிக் கொள்கின்றன. அன்னபூர்ணாவில் தமிழ் மென்னியர்கள் எக் தோசையும், புளிச் சாதமும், சாயாவும் கலந்தடிக்கிறார்கள். ஹாஸ்பிடல் வெட்டுச் சந்தில் இருக்கும் பகவதி கோயிலில் விநாயகரை ஸ்பீக்கரில் அழைக்கிறார்கள்.
திருவிழாவின் உற்சாக மனநிலை ஒரு ஜூரம் போல் மாநிலமெங்கும் பரவுவதை தலைநகரத்திலிருந்து உணர முடிகின்றது. ப்ரெளஸிங் மையத்திலிருந்து இதை டைப் அடிக்கும் நானும் நாளை இரவு கிளம்புகிறேன்.
ஐந்து நாட்கள் விடுமுறை. டெக்னோபார்க்கும், ஒட்டிய ஓட்டல்களும், சிங்கிளர்கள் மேன்ஷன்களும், தனி வீடுகளும், லேடீஸ் ஹாஸ்டல்களும், மறைத்த இணையப் பெட்டிகளும் நாளையிலிருந்து semi - deserted ஆக இருக்கும்.
எல்லோருக்கும் திருவோண வாழ்த்துக்கள்..!!!
படம் நன்றி :: http://farm4.static.flickr.com/3051/2864731990_36df86009f_m.jpg
***
ரெஷஸன் நேரமாக இருப்பதால், சென்ற முறை போல் இல்லாமல் எளிமையாகவே ஓணம் கொண்டாடினோம். நாள் முழுதும் வேட்டி சட்டையில் குளுகுளுப்பாகவே இருந்தது. அலுவலக நங்கைகளும் கேரளப் பாரம்பரிய சேலையில் வந்தார்கள். வித்தியாசமாக இருந்தது. :)
மதியம் மட்டும் அல் - ஸாஜ் ஆடிட்டோரியத்தில் உணவு ஓணசதயம் (ஓண உணவிற்குப் பெயர்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்று விட்டு, தின்று விட்டு, ஒன்றரை மணிக்கு மேல் கோடிங்குகளுக்குத் திரும்பினோம்.
6 comments:
உங்களுக்கும் ஓணம் வாழ்த்துக்கள்...
//திருவிழாவின் உற்சாக மனநிலை ஒரு ஜூரம் போல் மாநிலமெங்கும் பரவுவதை தலைநகரத்திலிருந்து உணர முடிகின்றது.//
இங்கேயும் கூட :)
ஹாப்பி ஓணம் ! - 5 நாள் லீவு
என் ஜாய் :))
Malayala thirunaal vaazhthukkal (tamil thirunaal pola) :-)
கலையுட நிலையமே
கதகளி தேசமே
ஏலமும் தேயிலை கிராம்பும் விளையுற நாடானு..
மஞ்சனிஞ்ச மாமலைகள்...
மகிழ்ச்சியான ஓனம் நல்வாழ்த்துக்கள்
அன்புள்ள அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள். நன்னிகள். :)
Post a Comment