Tuesday, September 15, 2009

மொக்ஸ் - 15.Sep.2K9ன்று முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரையின் நூற்றாண்டு நிறைவு நாள். அவரைப் பற்றி எனக்கு எந்த அளவுக்குத் தெரியும்? நிறைய அல்ல. ஓர் இரவு கதையை ஓர் இரவிலேயே எழுதினார். 'தென்னகத்தின் பெர்னார்ட்ஷா' என்று கல்கி பாராட்டியிருக்கிறார். பொடி போட்டே சீக்கிரம் மறைந்தார். குள்ளமானவர். துணைப்பாட நூலில் 'செவ்வாழை' என்ற கதை ஞாபகம் வருகின்றது. காங்கிரஸ் சர்க்காரில் கேரளாவுக்குப் போய்க் கொண்டிருந்த அரிசியை நிறுத்தி, முதலில் தமிழருக்கே என்று கிழங்கு சாப்பிட்ட ஏழைகளுக்கு அரிசிச் சாப்பாட்டைக் கொண்டு வந்தவர். ராபின்சன் பூங்காவில் தி.மு.க. தொடங்கியவர். சிவாஜியோடு 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யத்தில்' நடித்திருக்கிறார். மெட்ராஸ் ஸ்டேட்டைத் தமிழ்நாடு ஆக்கினார். No sentence start with because, because. because is an adjective. அண்ணாதுரை அவர்களின் மற்ற சமுகப் பணிகளைத் தவிர, இலக்கிய ரீதியாகச் செய்ததை முழுதும் படித்துப் பார்க்க ஆசைப்படுகிறேன். முக்கியமாக 'கம்பரசம்'.

ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களிலேயே இறந்து போகாமல் இன்னும் சில வருடங்கள் இருந்திருந்தால் (குறிப்பாக '72 வரை), தமிழக அரசியல் எப்படி மாறியிருக்கலாம் என்று சிந்தித்துப் பார்க்கலாம்.சென்ற வெள்ளி மாலை சென்னை எக்ஸ்ப்ரஸில் செல்லும் போது ஒரு விபரீத ஆசை எழுந்தது. ஒரு பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு முன் அட்டை முதல் பின் அட்டை வரை ஓர் எழுத்து கூட விடாமல் - கவனிக்க, ஓர் எழுத்து கூட விடாமல் - தொடர்ந்து படித்து முடிக்க வேண்டும். முடித்தவுடன் மனநிலை எப்படி இருக்கின்றது என்று பார்க்க வேண்டும் என்ற விசித்திர ஆராய்ச்சியில் இறங்கினேன். இந்த படு பயங்கரமான சோதனையில் அபாய அளவை அதிகரித்துக் கொள்வதற்கென்றே எடுத்துக் கொண்ட பத்திரிக்கை, காலச்சுவடு, செப்டம்பர் 2009 எடிஷன்.

இதழ் எண் 117லிருந்து, கடைசி அட்டையில் விளம்பர ரெஜிஸ்ட்ரேஷன் எண் வரை கண்களை இடுக்கிக் கொண்டு படித்து முடித்ததில், இன்று வரை நினைவிருப்பவை, பெருமாள் முருகனின் கல்வி பற்றிய கட்டுரை, நோபல் பெற்ற பாட்டிக் கவிஞரின் கவிதை எழுதத் தெரியாத அக்கா பற்றிய கவிதை, ஸ்ரீராம் சிட்ஸ் விளம்பரம், வன்னிப் பதிவுக்கான எதிர் வினைகளில் இருந்த தர்க்கங்கள், நல்லி சில்க்ஸ் பட்டு மங்கையின் கால்வாசிப் புன்னகை. கொஞ்சமே சம்பவங்கள் நடந்த இந்த இடைப்பட்ட நான்கு நாட்களில் இந்த சங்கதிகள் மட்டுமே சடுதியில் நினைவிலிருந்து மீட்டப்பட்டிருப்பதை சைக்காலஜிஸ்டுகள் யாராவது சுரண்டிப் பார்க்கலாம்.

கரம் அமுதாவின் 'வெண்பா எழுதலாம் வாங்க' வலைப்பதிவு மெருகேற்றப்பட்டு இப்போது இன்னும் கொஞ்சம் மரபு அனுபவசாலிகள் கைகளும் கோர்க்கப்பட்டு இன்னும் சீரியஸாக வெண்பாக்கள் திருத்தப்படுகின்றன. புதிதாக அகவற்பா எனப்படும் ஆசிரியப்பா கற்றுத் தரத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்க் கவி வடிவங்களில் ஆசிரியப்பாவே மிக எளிமையானதாகத் தெரிகின்றது. வெண்பா போன்ற கடின விதிகள் இல்லாமல், கொஞ்சம் தமிழ் vocabulary தெரிந்தால் போதும், எழுதிக் கொண்டே போகலாம்.

இன்று கற்றுக் கொண்டு முயன்ற ஓர் ஆசிரியப்பா. இது நேரிசை என்ற வகையைச் சேர்ந்தது.

பாரதி கவனமாய்ப் பாஞ்சாலி சபதத்தில்
சாரதி உடைநல்கும் செய்யுளைச் செதுக்குகையில்,
செல்லம்மாள் சமையலறை இருட்டுள்
மெல்லமாய்ச் சொன்னார், "மதியத்திற் கரிசியில்லை..!"

தமிழ்த்தாய்க்கு ஓர் அகவற்பா எழுதுங்கள் என்று கேட்டதற்கிணங்கி எழுதியதில்,

தமிழென் மொழியெனத் தயங்கா துரைத்தேன்.
"அமிழ்தா?" கேட்டார் அயலார் ஒருவர்.
"இல்லை..!" என்றேன். இம்மியும் யோசியாது,
தொல்லை என்றெனைத் தூற்றினர் எந்தமிழர்.
அளவின்றிப் பருகிட அமுதும் நஞ்சாகும்.
புலவோர் பலர்தம் பூதவுடல் நீக்கினும்
நிலம்மேல் நிலையாக நீள்புகழ் பெற்ற
வள்ளுவனாய்க் கம்பனுமாய்ப் பாரதியாய் இளங்கோவாய்த்
தெள்ளுதமிழ்ப் பாவிசைத்துத் தேன் துளிகள் தான்கலந்து
அள்ளியள்ளிச் சுவைத்தாலும் அடங்காத ஆர்வமாய்,வான்
கள்ளினும் மேலாகத் தமிழைச்
சொல்லுவேன் அமிழ்தினுக்கும் அமிழ்தினுக்கும் அமிழ்தெனவே!

மேலே கண்ட பாவைப் பார்த்தாலே உங்களுக்குப் புரிந்திருக்கும். வள்ளு, தெள்ளு, அள்ளி, கள்ளி, சொல்ல்... என்று எவ்வளவு வரை போக முடியுமோ சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் தொடர்ச்சியான அர்த்தம் இருக்க வேண்டும். கவி அழகும் இருந்தால் மகிழ்ச்சியே..!

ரையாடல் குழுவினர் நடத்திய சிறுகதைப் பயிற்சிப் பட்டறைக்கு அதிக தூரத்தில் இருந்து வந்து, குறைவான நேரம் மட்டுமே கலந்து கொண்டவன் நான் ஒருவனாகத் தான் இருக்க வேண்டும். ஞாயிறு காலை 10.20க்குப் போய் 14.50க்கு ஜூட். பாஸ்கர் சக்தியின் கேள்வி பதில் பகுதியில் பாதியில் சென்று சேர்ந்து கொண்டேன். யுவன் சந்திரசேகரின் உரை மற்றும் கேள்வி பதில்களை மட்டுமே முழுதாகக் கேட்க முடிந்தது. மனிதர் வெகு நகைச்சுவையாகப் பேசித் தள்ளினார். நானும் கச்சேரிக்குப் போனேன் என்பதற்காக ஒரே ஒரு கேள்வி கேட்டு விட்டு அமர்ந்து விட்டேன்.

கே : எழுத்தின் பிற வடிவங்களான கவிதை, பொதுக்கட்டுரை, பயணக் கட்டுரை, நாவல், பாடல்கள் ஆகியவற்றை முயற்சி செய்து பார்ப்பது, ஒரு சிறுகதை ஆசிரியனுக்கு எந்த வகையில் மெருகேற உதவும்?

யுவன் : (நிறைய தன் அன்பவங்களைச் சொல்லி விட்டு, முத்தாய்ப்பாக) நானும் கவிதைகளிலிருந்து சிறுகதைக்கு நகர்ந்ததின் பலன் சுருக்கமாகச் சொல்லும் வல்லமை பெற்றது தான்.

தோளில் துண்டு போட்டு கிராமத்து நெசவாளி போன்று தோற்றமளித்த ஒரு முதியவரை யாரோ ஒரு பதிவரின் தந்தை போல என்று நினைத்திருந்தேன். பொழுது போகாமல் கூட்டி வரப்பட்டிருக்கிறார் என்று எண்ணினேன். நேற்று பிற பதிவர்களின் புகைப்படப் பதிவுகளில் பார்க்க்ம் போது தான் அவர் சா.தேவதாஸ் என்றும், அவரே 'உலகச் சிறுகதைகள்' பற்றியும் பேசினார் என்று தெரிந்ததும் நடுங்கிப் போய் விட்டேன். 'உருவு கண்டு எள்ளாமை வேண்டும்' என்பதை எப்போது தான் கற்றுக் கொள்ளப் போகிறேனோ..? இதன் மூலமாக அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அவருடையதும், பா.ராகவன் அவர்களுடைய உரைகளையும் எனக்குப் பதிலாக கேட்டுத் தெரிந்து கொள்ள வானவில் வீதி கார்த்திக்கை அனுப்பி வைத்து விட்டு, 15:15 ரெயிலைப் பிடித்து, பைத்தியக்காரன் கொடுத்த புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து, கைக்காசைப் போட்டு பைத்தியக்காரனும், சுந்தரும் நடத்தும் இந்தப் பட்டறையினால் என்ன எதிர்பார்க்கலாம் என்ற் யோசித்தேன்.

ஒரு ஞாயிறு பட்டறையினால் சிறுகதை எழுதுபவராக மாறி விட முடியுமா என்றால் இயலாது தான். ஆனால் இது ஒரு நல்ல துவக்கமாக இருக்க முடியும். ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது, ஜெயமோகனின் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், கோ.கேசவனின் தமிழ்ச் சிறுகதையில் உருவம் மற்றும் கதை கதையாம் காரணமாம் என்ற சூரியசந்திரனின் புத்தகங்கள் சிறுகதைக்குத் தேவையான மூலப் பொருட்களைப் பற்றியும், எப்படி, எங்கிருந்து அவற்றைத் தேர்வு செய்யலாம் பற்றியும் ஓர் அடிப்படைப் பாடத்தை நடத்துகின்றன.

நல்ல அவதானிப்புத் திறமும், பற்பல எழுத்தாளர்களின் கதைகளைத் தொடர்ந்து படிப்பதன் மூலம் நாம் நம் திறமையைக் கூர் தீட்டிக் கொண்டு ஒரு நல்ல சிறுகதையாவது எழுதுவதையே உரையாடல் குழுவும் எதிர்பார்க்கும் என்று கருதுகிறேன். வெறும் நானூறு ரூபாய்களுக்கு நான்கு பெரிய மனிதர்களின் பேச்சுக்களையும், நான்கு அரிய புத்தகங்களையும், சில ஃபோட்டோக்களையும், சில பதிவர் அறிமுகங்களையும், ஏ.ஸி. ஹாலையும், தயிர் சாதம், சிக்கன், ஃபிஷ், அப்பளம், ஐஸ்க்ரீம், ஜாமூன்களையும் ஏற்படுத்திக் கொடுத்ததற்காக நானும் கண்டிப்பாக முயல்கிறேன், பைத்தியக்காரன் மற்றும் சுந்தர்ஜி..!

சென்ட்ரலில் வானவில் வீதி கார்த்திக்கைச் சந்திக்க வேண்டும் என்று நான் காத்திருக்க, அவர் தாம்பரத்திலிருந்து கோடம்பாக்கம் வரை மட்டுமே டிக்கெட் எடுத்து இறங்கி, பின் அங்கே பூங்காவிற்கு மற்றொரு டிக்கெட் எடுத்து, ஞாயிறு ஆதலால் காத்திருப்பு அதிகமாகி, எலெக்ட்ரிக் ட்ரெய்ன் பிடித்து, பூங்காவில் குதித்து, சப்வேயில் நுழைந்து, ஏறி ஐந்தாம் ப்ளாட்பாரத்தில் என்னைக் கண்டுபிடித்து Khaled Hosseini-ன் A Thousand Splendid Suns கொடுத்தார். நான் வாத்தியாரின் 'கற்பனைக்கும் அப்பால்' என்ற அறிவியல் கட்டுரைத் தொகுப்பைக் கொடுத்து டாட்டா காட்டும் போது சென்னை - திருவனந்தபுரம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் நகரத் தொடங்கி விட்டது. எனக்குத் தமிழ்த் திரைப்பட க்ளைமாக்ஸ்கள் மேல் நம்பிக்கை பிறந்தது.

5 comments:

தமிழ்ப்பறவை said...

நல்ல மொக்ஸ்...
அண்ணாவின் உரை கேட்டேன்.இந்தக் குரலின் வசீகரத்தாலேயே இன்றுவரை இதுபோன்ற பேச்சுக்களுக்கு இன்னும் மேடை இருக்கிறது.அண்ணாவின் குரலில் இருந்த நேர்மையைத் தவிர...
காலச்சுவடின் ஒவ்வொரு வரியிலும் சுவடு பதித்தது... ஏன் இந்தக் கொலைவெறி...??
தமிழ்த்தாய்க்கான அகவற்பா அருமைப்பா...
//உருவு கண்டு எள்ளாமை வேண்டும்' என்பதை எப்போது தான் கற்றுக் கொள்ளப் போகிறேனோ..? இதன் மூலமாக அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.//
அதையும் நேர்மையாக வெளிப்படுத்தியது சிறப்பு...நான் எப்போதோ இப்பழக்கத்தினை வெகுவாகக் குறைத்துவிட்டேன்...
முழுவதும் கேட்டிருந்தால் ஒரு சிறந்த பதிவு கிடைத்திருக்கும்... :-(

வால்பையன் said...

நல்ல தொகுப்பு!

தேவதாஸ் அவர்களை முதலில் நான் கூட அப்படித்தான் நினைத்தேன்!
நானும் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்!

Karthik said...

செம பதிவு. :)

//எனக்குத் தமிழ்த் திரைப்பட க்ளைமாக்ஸ்கள் மேல் நம்பிக்கை பிறந்தது.

கலக்கல். ;))

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை, வால்ஜி, கார்த்திக்...

நன்றிகள்.

நாடோடி இலக்கியன் said...

தேவதாஸ் அய்யாவை நானும் கூட அப்படித்தான் நினைத்தேன்.
பிறகு அவரின் வாசிப்பனுபவமும், ஒவ்வொரு கேள்விக்கும் சிறிது கூட யோசிக்காமல் அவர் பதிலளித்த விதத்திலும் யாரோ ஒரு கிராமத்து ஆள் என்று நினைத்திருந்த என் கண் முன்னே இமயமாய் விஸ்வரூபமெடுத்தார்.

யாரோ என நினைத்ததற்கு அங்கேயே மன்னிப்பு கேட்க நினைத்தேன். எதிர்காலத்தில் அவரோடு நிறைய பேச வேண்டுமென்கிற பேராவலோடு திரும்பினேன்.