Tuesday, December 08, 2009

தமிழ்ப்பதிவர்ச் சங்கமம் - 2009 - ஈரோடு - அழைப்பு.ந்த மாட்டுத் தொழுவத்தில் வைக்கோல்கள் குவிக்கப்பட்டிருந்தன. விளக்கு வெளிச்சம் மிகக் குறைவாக வைக்கப்பட்டிருந்தது. தாங்கள் அங்கே இருப்பதை உலகுக்குக் காட்டிக் கொள்ள விரும்பாத சிலர் அங்கே குழுமியிருந்தனர். அவர்கள் தங்கள் நாட்டு மன்னனின் கொடுங்கோலுக்குப் பயந்து கழுதை மேல் ஏறித் தப்பித்து வந்தவர்கள். இரவிலிருந்து பனி ஒழுகித் தரையெங்கும் நனைந்து கொண்டிருந்தது. மிக இலேசான காற்று மட்டும் சத்தமேயில்லாமல் அந்தத் தொழுவத்தின் ஈசல் இறகு போன்ற கூரைகளைத் தடவிச் சென்றது. மேகங்கள் இருளில் கரைந்த பெருவெளியின் கீழே புள்ளியாய் மினுக்கிய ஒளித்துகள்கள் மிதந்து கொண்டிருந்த மெளன வேளையில் அந்தத் தொழுவத்தில் அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தை விரல்களைச் சுருட்டிக் கொண்டிருந்தது. அங்கிருந்த செம்மறி ஆடுகள் தம் பரவசம் நடுங்கும் கண்களோடு அந்தத் தேவகுமாரனைப் பார்த்துக் கொண்டிருந்தன. அவனுடைய பஞ்சு விரல்களுக்கிடையே இருந்த ரேகைகளில் 'அயலாரிடத்திலும் அன்பு செய்யுங்கள்', 'வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, என்னிடத்தில் வந்து இளைப்பாறுதல் பெறுங்கள்' என்று எழுதியிருந்தன. அந்த உள்ளங்கைகளின் மென்மையில் பின்னொருநாள் ஆணிகள் இரத்தத்தால் முத்தமிடும் போது, அவனது சிவந்த அதரங்கள் 'அவர்கள் அறியாமல் செய்கிறார்கள். அவர்களை மன்னித்து விடும்..!' என்று பரமபிதாவை வேண்டிக் கேட்டுக் கொள்ளப்போகின்றன.

அந்த இரகசியத்தை அறிந்த ஒரே ஒருவனாகிய அந்த பிதா கரைந்து அழுத ஒற்றைச் சூட்டுத் துளி ஒரு விண்மீனாகிச் சில குருமார்களை நெடுந்தொலைவில் இருந்து அந்த மரியாள் மகன் உதித்த, மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்து வந்து, வரும் 20 டிசம்பரோடு கிட்டத்தட்ட இரண்டாயிரத்துப் பத்து வருடங்களுக்கு மேலாகப் போகின்றன.

அந்த ஞாயிற்றின் பிற்பகலும், மாலையும் முத்தமிடும் நேரத்தில் ஒரு 'தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு' நடைபெற இருக்கின்றது. எங்கே..? ஈரோடு மாநகரில், பெருந்துறை ரோட்டில் கலெக்டர் ஆபீஸுக்கு அருகே லோட்டஸ் ஷாப்பிங் சென்டர் இருக்கின்றது. அதற்குப் பின்புறத்தில் பில்டர்ஸ் அசோஷியன் ஆஃப் இந்தியா ஹால் இருக்கின்றது.

அந்த ஹாலின் செயற்கை குளிர்ப் பொழிவில் நனைந்து கொண்டே சூடான விஷயங்களை அலசலாம்; அறையை நிரப்பியிருக்கும் மஞ்சள் வெளிச்சத்தைப் பூசிக் கொண்டு, எழுத்துக்கள் மூலம் மட்டும் கண்ட தமிழர்களோடு பேசலாம்; இரவு உணவைச் சுமந்து கொண்டு இன்னும் கொஞ்சம் நாம் நெருக்கமாகிக் கொள்ளலாம்; அதன் பஞ்சு பதுக்கிய நாற்காலிகளில் அமர்ந்து நம் நெஞ்சுக்குள் இன்னும் நேசம் சேர்த்துக் கொள்ளலாம்.

வாருங்கள். மஞ்சள் மாநகரில் இருந்து எழுதும் பதிவர்கள் கூட்டிணைந்து அழைக்கிறார்கள்; அழைக்கிறோம். இராமானுஜன் பிறந்த மண்ணிற்கு அழைக்கிறோம்; பெரியாரின் பூமிக்கு வரவேற்கிறோம்; காவிரி வளம் பாயும் கவின் நகருக்கு உங்கள் அனைவரையும் எதிர்நோக்குகிறோம்; கொங்கு மண்டலத்தின் செழிப்பைக் காண, மண்ணின் மரியாதையை மனதோடு உணர தமிழ் வலைப்பதிவர்களை வழி பார்க்கிறோம்.

ஓர் ஓய்வு நாளின் மதியம் மூன்றரையிலிருந்து ஏழு மணிக்குள் நாம் பார்க்க விரும்பும் பதிவர்களையும், நோக்க விரும்பும் நண்பர்களையும் நேரில் பார்க்கலாம்.

எங்கே ::

பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா ஹால் (ஏ/சி),
லோட்டஸ் ஷாப்பிங் சென்டர் பின்புறம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,
பெருந்துறை சாலை,ஈரோடு - 11.

என்று ::

20.டிசம்பர்.கி.பி.2009.

எப்போது ::

மதியம் 15:30 முதல் குறைந்தது 19:00 வரை.

எப்படி வருவது ::

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோவில் வரலாம். நடந்து வர விரும்புபவர்கள், பேருந்து நிலையத்திலிருந்து மேற்குத் திசையில் நடந்து வந்தால், அபிராமி, தேவி அபிராமி தியேட்டர் காம்ப்ளக்ஸ் வரும். அந்த தியேட்டர்களைப் பார்த்து நிற்கும் போது, உங்கள் இடது கைப்புறமாக ஒரு சாலை இருக்கும். அதனை ஒட்டியே நடந்து வந்தால், ஒரு பத்து நிமிடங்களுக்குள்ளாக தங்க முலாம் பூசிய எம்.ஜி.ஆர். நடு ரோட்டில் நிற்பார், ஒரு திசையைப் பார்த்து விரல் நீட்டி! நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும், அவர் காட்டும் வழியில் ஒரு சாலை வரும். அதில் தான் நடந்து வர வேண்டும். வந்தால், பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக இரண்டு 'S' வளைவுகளைக் கடந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும். அங்கிருந்து பார்த்தால், லோட்டஸ் சென்டர் தெரியும். பிறகு நீங்களே வந்து விடுவீர்கள்.அல்லது பெருந்துறை/நசியனூர் செல்லும் பேருந்துகளில் டிக்கெட் எடுத்தும் 'கலெக்டரேட்' நிறுத்தத்தில் இறங்கிச் சுற்றுமுற்றும் பார்த்தால் கண்டு கொள்ளலாம்.

நீங்கள் ரெயில் ஏறி வருவதாக இருந்தால், ஸ்டேஷனில் மறக்காமல் இறங்கி விட வேண்டும். தூங்கி விடாமல் இருப்பது பர்ஸுக்கு நலம் பயக்கும். ஸ்டேஷனுக்கு வெளியே வந்தால், 'பாட்ஷா'க்கள் அன்போடு அழைப்பார்கள். விரும்பினால் ஏறிக் கொண்டு ஸ்தலத்திற்கே கெத்தாக வந்து இறங்கலாம். வீட்டில் சரியாக கணக்கு காட்ட வேண்டியவராக இருந்தால், ஜங்ஷனுக்கு வெளியே பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் வந்து கொண்டே இருக்கும். அதில் ஏறி நிலையத்தை அடைந்து, பின் முன் சொன்ன வழிகளைப் பின்பற்றி வந்து சேரலாம்.

நீங்கள் விமானத்தில் பறந்து வருவராயின், ஈரோட்டில் இன்னும் விமான வெளி இல்லாததாலும், பெருந்துறையில் ஜென்மங்களாய் அதற்கான பணிகள் நடந்து வருவதாலும், வேறு வழியில்லாமல் கொங்கு மாநகர்க் கோவையில் தான் இறங்கியாக வேண்டும். பீளமேட்டில் தான் நிலையம் உள்ளது. அது நகர் மையத்தில் இருந்து ஓர் இருபது கி.மீக்கள் இருக்கும். ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்தால், தேசிய நெடுஞ்சாலை 47 ஒரு தார்ப் பட்டாடை போல் ஜொலிக்கும். அங்கே பேருந்து நிறுத்தத்தில் ஈரோடு பேருந்து ஒன்றைக் கேட்ச் செய்யலாம். மற்றவர்களை விட, நீங்கள் கொஞ்சம் எளிதாக வரலாம். ஆம், ஈரோட்டுக்குள் நுழையும் கோவைப் பேருந்து, 'கலெக்டரேட்'டைக் கடந்து தான் நிலையம் சென்றாக வேண்டும். எனவே நீங்கள் நம்பிக்கையாய் நடத்துனரிடமும், இன்னும் உஷாராய்ப் பக்கத்துப் பயணியிடமும் சொல்லி வைத்து, 'ஜூம் டி.வி. தி நெக்ஸ்ட் மீடியாவில்' வரும் ஜோதிகாவின் அழகை நூற்று இருபத்தேழு முறைகள் பார்த்து முடிப்பதற்குள், தலத்தை வந்து சேரலாம்.இன்னமும் உங்களுக்கு குழப்பம் தான் என்றால், கீழ்க்காணும் மண்ணின் மைந்தர்களை அலைபேசியிலோ, பேட்டரி தீர்ந்தால் ஒரு ரூபாய் காயினிலோ அழைத்தால், காலோடு Call-ஆக வந்து கூட்டிப் போவார்கள் என்பது திண்ணம்.

வால்பையன் 99945-00540
ஈரோடு கதிர் 98427-86026
ஆரூரன் 98947-17185
பாலாசி 90037-05598
ராஜாஜெய்சிங் 95785-88925

இந்தப் பதிவர்ச் சங்கமத்தில் சில குறிக்கோள்கள் வைத்திருப்பதாகத் தெரிகின்றது.

* பதிவர்களுக்கிடையேயான அறிமுகம்
* நட்பை மேம்படுத்துதல்
* பதிர்வர்கள் வாசிப்பாளர்கள் பரஸ்பரம் சந்திக்கும் வாய்ப்பு
* பதிவுலகம் பற்றிய சந்தேகங்களுக்குத் தீர்வு
* எழுதுவது பற்றிய தயக்கத்தைத் தகர்த்தல்
* சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த பகிர்வு

மேற்கண்ட வரிகள் உங்களுக்கு கொஞ்சம் 'கேராக' இருந்தால், உங்களைத் 'தக்க முறையில்' கவனிப்பது என வால்பையன் உறுதியளித்துள்ளதாக காற்றுவாக்கில் செய்தி கிடைக்கின்றது. எனவே கலக்கம் வேண்டாம்; கலக்க மட்டும் வேண்டும்.

அந்த மனுஷ்யகுமாரன் வழங்கிய திராட்சை ரசத்தின் மகிமை அன்று நம்மை நனைக்கட்டும். ஆமென். :)

***

கதிர் பதிவு

வால்பையன் பதிவு

ஆரூரன் பதிவு

14 comments:

வால்பையன் said...

தல பயங்கர பில்டப்பா இருக்கே!

ஏசு பிறந்தது டிசம்பர் 25 இல்லையா?
20 தானா?

இரா. வசந்த குமார். said...

அன்பு வால்ஜி...

அதான் 'கிட்டத்தட்ட'ன்னு போட்டிருக்கோம்ல.. :)

thamizhparavai said...

பதிவர் சந்திப்பு கட்சி மாநாடு மாதிரி ஆயிடும் போலிருக்கே...
லோகோவெல்லாம் பலமா இருக்கு...
வாழ்த்துக்கள்...
கலந்து கொள்ள முடியாத சோகத்தில் பறவை...

vasu balaji said...

அசத்தல் அழைப்பு.

cheena (சீனா) said...

அன்பின் வசந்த குமார்

பதிவர் சந்திப்பு வெற்றி கரமாக நடைபெற நல்வாழ்த்துகள் - அழைப்பினிற்கு நன்றி

ILA (a) இளா said...

பதிவர் சந்திப்பு வெற்றி கரமாக நடைபெற நல்வாழ்த்துகள்

ஈரோடு கதிர் said...

வசந்த நானும் வந்திடுறேன்....

ஈரோடு கதிர் said...

அட... நம்மதான் நடத்துறோமா...

கலக்கல் வசந்த்...

வழி சொன்ன விதம்... சிரித்துக்கொண்டேயிருக்கிறேன்...

ரயில் நிலைத்திலிருந்து 1 நெம்பர் பஸ் பிடித்தால் நேராக தங்கநிற MGR சிலைக்கு வந்திடலாம்...

க.பாலாசி said...

நன்றி தலைவரே....

Unknown said...

கலக்கல் அழைப்பு.

Karthik said...

:) முடிந்தால் நிச்சயம் வரேன்..

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

கட்சி மாநாடு அளவுக்கு இல்லாட்டியும், பிரியாணியும், சரக்கும், சை டிஷ்ஷும் உண்டு..!!

***

அன்பு வானம்பாடிகள் சார்...

நன்றிகள்.

***

அன்பு சீனா சார்...

நன்றிகள்.

***

அன்பு இளா..

இது நம்ம ஊரு நோம்பி இல்லையா..! அதான் கொஞ்சம் நல்லாவே எழுதிட்டேன் போல..!! நன்றிகள்.

***

அன்பு கதிர்...

நலமாக நடைபெற வாழ்த்துக்கள்.

***

அன்பு க.பாலாசி...

நன்றிகள்.

***

அன்பு நாடோடி இலக்கியன்...

நன்றிகள்.

***

அன்பு கார்த்திக்...

முடிஞ்சளவுக்கு கலந்துக்கப் பாருங்க...!!

பரிசல்காரன் said...

வசந்த்

நேத்து சொல்லணும்னு நெனைச்சேன். சங்கமம் அழைப்பு பதிவுகள்ல நான் ரொம்ப ரசிச்சது உங்க பதிவைத்தான்!

இரா. வசந்த குமார். said...

அன்பு பரிசல்காரன்...

நன்றிகள்.