Saturday, December 12, 2009

ஆயிரமாயிரம் துளிகள்...!!!

ல்லிகை முத்துக்கள் வெண்ணிற விளக்குச் சுடர்களின் தலைகீழாய் நின்றன. ஒன்றன் பின் ஒன்றாய்ப் பனிச் சுழிகள் மெல்ல நகர்ந்து கொடிகளின் மென்மையான பசிய உடல்களை நனைத்து தீர்ந்தன. துல்லியப் பனிச் சரகம் ஒன்று மதுக் குப்பி மணம் போல விரவிக் கொண்டிருந்தது. உள்ளார்ந்த மடிப்புகளோடு வளைந்து சரிந்த மலை முகடுகளின் நிழல் ஒதுங்கிய ரகசிய ப்ரதேசங்களில் கனவுகள் தாழிடப்பட்டிருந்தன. மிதக்கும் ஈரக் கொத்துக் கொண்டல்கள் தம் நுரை தேகங்களில் குளிர் பதுக்கிச் சிலிர்த்தன. இன்னும் நீலம் கரைந்திராத பிரபஞ்ச வானம் ஒன்றின் தனித்த நிலவு, அதன் மேனிக்குள் பொதிந்து வைத்திருந்த பால் நுரைகளைத் ததும்பத் ததும்ப பொழிந்து கொண்டிருந்தது.

வனத்தின் மேற்கேயிருந்த மூலைகளில் இருந்து பெயர் தெரியாத நுணுக்க ஓசைகள் கிளம்பி வந்தன. புகையும் ஒரு குளிரின் மரகத ஆடைகள் தம் ஜரிகைகளில் எழுதிக் கொள்ள தூரத்துச் சிகரங்களின் விளிம்புகளில் கோடிட்டிருந்த மஞ்சள் ரசத்தைத் வழித்து எடுத்துக் கொண்டன. ஓடும் மழை மேல் வானிலிருந்து ஒரு நதி செங்குத்தாய்ப் பாய்ந்து கொண்டிருக்கையில், ஆயிரமாயிரம் நீர்ச்சிலந்திகள் எங்கெங்கும் ஜனித்து உடனே கரைந்தன.

கொத்துக் கொத்தாய்த் தலைக்கு மேல் திரண்டு விட்டிருந்த முகில்கள் தமக்குள் முத்தமிட்டுக் கொள்கையில் நனைந்த பூமியின் ஒரு மேலாடை செம்பழுப்பாய்க் கரைந்து ஓடியது. திசைகளில் சொல்ல முடியாத நேரங்களில் இடிகளின் ஆவர்த்தனங்களில் காட்டின் பூக்கள் நடுங்கின. மரங்களின் இடுக்குகளில் கனிந்த இருள் பச்சை நிறத்தோடு நனைந்தது. மாலை நேரத்தின் மந்தகாச மரணம் மெல்ல மெல்ல மலர்ந்து கொண்டிருக்க, கருமை தடவிய இரவின் பிறப்பு மழை சொல்லும் வார்த்தைகளோடு இரைச்சலாய் நிகழ்ந்தது.

தாரை தாரையாய் ஊற்றும் நேர்க் கோடுகளில் சலசலக்கின்றது இம்மாமழை. பெய்யும் போதும், பெரு மரங்களின் பட்டைகளைப் பறித்துக் கொண்டு பாய்கின்றது. சின்னஞ்சிறு செடிகளைச் சுற்றி வட்டம் போட்டுக் கரைத்து ஓடுகின்றது. மண் மேடுகளின் மேனி தழுவி, அணைத்து, தன்னோடு உள்ளிழுத்து, பாறைகளின் மேல் 'ஹோ'வென மோதி, கோடானு கோடி நுரைகளாய்த் தெறிக்கின்ற போது, அத்தனைத் துளிகளிலும் ஆயிரம் மழைப் பிம்பங்கள் பதிகின்றன.



***

இவன்..!

மழை ரகளை.

ஒரு மழை நாளின் இரவில்.

மழை பொழிந்த வானமும், மனதில் கிளர்ந்த கானமும்..!

மழை பெய்தலினால்...!

தூறல் போடும் மேகங்கள்.

பனி விழும் மலர்வனம்...

2 comments:

thamizhparavai said...

அட்டகாசம் வசந்த்...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள்..!

***

அன்பு தீபா...

நன்றிகள். ஆமா, நீங்க யாரு..? :)