Wednesday, December 23, 2009
உருகி ஊற்றட்டும்.
அந்தச் சிவந்த ரோஜாக்கள், பறக்கின்ற தேவதைகளாகி, அழகின் வருகையை அறிவிக்கட்டும். கூரிய அம்பெனப் பரந்து நிரப்பும் கதிர்க் கூச்சல்கள், தாயைப் போல் இந்த பூமியைத் தழுவட்டும். பொழிகின்ற பனித்துளிகள், எப்போதுமான பச்சையைக் காலையின் இலைகளிலிருந்து கழுவட்டும். யுக, யுகங்களாய் நிமிர்ந்து நிற்கின்ற மாமலைகள் சத்தியத்தின் பழமையைச் சொல்லட்டும். நுரை ததும்ப ஓடும் பெருநதிகள், இயற்கையின் என்றும் நில்லா இயக்கத்தை விளம்பட்டும்.
அந்தரத்தில் மிதக்கின்ற கருங்கொண்டல்கள் நம் எல்லோருக்குமான தாகத்தைச் சுமக்கட்டும். கோடானு கோடி வைரப் பூச்சிகளால் நிறைந்திருக்கும் இரவு ஆகாயமே, பாதரசக் துளிகளைச் சொட்டிச் சொட்டி ஊசிக் குளிரால் துளைக்கட்டும். வெள்ளித் தகடுகளாய்ச் சரியும் வெயில் பாளங்கள் , முத்தெனத் துளிர்க்கும் மெல்லிய முடிகள் வருடும் சிறு செடிகளைக் குடிக்கட்டும். ரகசியமாய் நனைகின்ற கடுமழைக் காலங்களில் கவிந்த இருள் காடுகளின் பேரமைதியைச் சில்வண்டுகளின் ரீங்காரங்கள் சுவைக்கட்டும்.
பெருத்த மெளனம் பூசிய பிரபஞ்சத்தின் மற்றொரு மூலையில் ஓர் இராக்காலக் குயில் சோகத்தைச் செருகிய ஒற்றைக் குரலில் கூவும் போது, மதுரமான ஒரு மாலையின் பொன் கீதம் என்னில் படர்ந்து பருகும் போதும், உருகி ஊற்றட்டும் என் உடல்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//அந்தரத்தில் மிதக்கின்ற கருங்கொண்டல்கள் நம் எல்லோருக்குமான தாகத்தைச் சுமக்கட்டும். கோடானு கோடி வைரப் பூச்சிகளால் நிறைந்திருக்கும் இரவு ஆகாயமே, பாதரசக் துளிகளைச் சொட்டிச் சொட்டி ஊசிக் குளிரால் துளைக்கட்டும். வெள்ளித் தகடுகளாய்ச் சரியும் வெயில் பாளங்கள் , முத்தெனத் துளிர்க்கும் மெல்லிய முடிகள் வருடும் சிறு செடிகளைக் குடிக்கட்டும். ரகசியமாய் நனைகின்ற கடுமழைக் காலங்களில் கவிந்த இருள் காடுகளின் பேரமைதியைச் சில்வண்டுகளின் ரீங்காரங்கள் சுவைக்கட்டும்.//
மீண்டும் மீண்டும் ரசித்து படித்து படித்து ரசிக்கின்றேன்!
அருமை பாஸ் :)
எண்ண ஓட்டத்தை எழுத்தாக்கியதில் தெரிகிறது உங்கள் வலிமை.
நல்ல எழுத்து நடை....வாழ்த்துக்கள்
ரசித்தேன்...
அன்பு ஆயில்யன்...
ரசித்துப் படியுங்கள். அதற்காகத் தானே எழுதுவது..! நன்றிகள்.
***
அன்பு ஆரூரன்...
நன்றிகள்.
***
அன்பு தமிழ்ப்பறவை...
நன்றித்தேன். :)
Post a Comment