Friday, April 17, 2009

ஆகாயக் கொன்றை.3.

மீனவன் விரித்த துளைகள் நிறைந்த வலை போல் பச்சையாய்ப் புல்வெளி விரிந்து பரந்திருந்தது. அடுக்கடுக்கான மேடுகள் மேல் முளைத்திருந்தன பெயர் தெரியாத புற்கள். தூரத்தில் ஒரு பொங்கல் வாழ்த்தின் சில்-அவுட்டில் மலைகள் படிந்திருந்தன. V வடிவப் பறவைச் சரம் நீல வானத்தின் புடவையின் ஜரிகை போல் மிதந்து கொண்டிருந்தன. மெல்லிய காற்று மேனியைத் தொட முயன்று வெகுவாகத் தோற்றன. காயத்ரி அவ்வளவு அழுத்தமாக நடந்து வந்தாள்.

ஒவ்வொரு மலராக பேர் விசாரித்தாள். எங்கிருந்து வந்தீர்கள் என்று கேட்டாள். மொழி தெரியாத மெளனப் பூக்கள் தலையாட்டித் தம்மை தெரிவித்துக் கொண்டன. மஞ்சள் நிற, ஆரஞ்சு நிற, வெண்மை நிற... இன்னும் ஏதேதோ வர்ணங்களில் கொத்துக் கொத்தாய்ப் பூத்திருந்த தாவரக் குட்டிகள் வீசுகின்ற தென்றலின் தழுவலுக்கு ஏற்றாற் போல் சிரித்துப் பூரித்தன. பச்சையாய்ப் பூக்கள் பூத்திருந்த பல கற்றைப் புதரில் இருந்து இயற்கை வெயில் தொட்டு வைத்த பொட்டுக்கள் போல், புள்ளிகள் இட்டிருந்த இளம் மான் ஒன்று அவளை நோக்கி ஓடி...

'கிடுகிடு'வென இடிகள் கிளைத்த சத்தம் கேட்டு வாரிச் சுருட்டி எழுந்து உட்கார்ந்தாள். நீல நிற சீரோ வாட்ஸ் கூம்பு பல்பு நடுங்கிக் கொண்டிருந்தது. இராஜ நாகம் முத்தமிட்ட உடல் போல் அறை நீலம் பாரித்திருந்தது. மூன்று கரங்களால் லேசான முனகலோடு தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த மின் காற்றாடி சுழன்று கொண்டிருந்தது. போர்த்தியிருந்த போர்வையை உதறிவிட்டு ஜன்னல் கன்னங்களைத் திறந்து வெளியே, தொலைவில் பார்த்தாள்.

காற்றில் எங்கும் குளிர்வாசம் உயிர்த்திருந்தது. மலைமுகடுகளின் மேலே சரசரவென்று இறங்கிக் கொண்டிருந்தன மழைத் தாரைகள். அவ்வப்போது கண் சிமிட்டும் மின்னல் ஒளிக் கீறல்கள் பெய்யும் மழைக்கு ஓர் வர்ணம் பூசின. கொஞ்சம் நேரம் கழித்து ஒலித்த இடித் துணுக்குகள் மழை வரும் போது தரும் மெல்லிசைப் பின்னணிக்குத் 'திடும்' என அதிர்வு கொடுத்தன. மரங்களின் இலைகளில் எல்லாம் வாராது வந்த விருந்தினர் போல் கொஞ்சம் தங்க முதல் துளி நினைத்து முடிப்பதற்குள், இரண்டாம் துளி குதித்து இறங்கி முதல் துளியை எட்டி உதைத்தது. மூன்றாம் துளி அதனைப் பின் தொடர்ந்தது. தரை நோக்கிப் பாய்ந்த முதல் துளி சாட்டென்று நிறம் மாறி, மண்ணோடு கலந்தது. அகப்பட்ட திசைகளில் எல்லாம் தன்னை நீட்டிக் கொண்டு படர்ந்திருந்த கொடிகளின் மேல் வரிசையாகத் துளிகள் நகர்ந்து கொண்டே சென்று முனையில் மோதி, ஒற்றைப் பெரும் துளியாகி 'நச்'சென்று கீழே விழுந்தன.

தேங்கி இருக்கும் சின்னஞ்சிறு குழிகளில் செம்மண் நீர் நிரம்பி சரிவுகளைப் பார்த்துப் பாய்ந்தன. வழியில் கண்ட கற்கள், பொடி இலைகள், சருகுகள், கரையும் மண் புற்றுகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு சேற்று நீர் சென்று கொண்டிருந்தது. நிலவெரியாத நள்ளிரவில் மேகக் கூட்டங்கள் மறைக்கும் பெருவானிலிருந்து கரைந்து கொண்டிருந்த காற்றை ஈரப்படுத்திக் கொண்டு, யாரும் கவனிக்காத இரவு மழை பெய்து கொண்டே இருந்தது.

காயத்ரி கொஞ்சம் எட்டி தோட்டத்தைப் பார்த்தாள். தலை சாய்த்துத் தூங்கிக் கொண்டிருந்த குண்டு பல்பு ஒன்று, பூ வடிவ ப்ளாஸ்டிக் குடைக்குள் பத்திரமாய் மறைந்திருந்த தைரியத்தில் டங்ஸ்டன் கம்பியில் எலெக்ட்ரான்கள் பாய்ச்சி ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த ஒளிக் கோடுகளை வெட்டிக் கொண்டு, அதன் எல்லையைக் கலைத்துப் போட்ட மழையால், அவளால் தோட்டத்தின் நிலையைக் காண முடியவில்லை.

ஜன்னலின் ஒரு முகத்தை மூடி விட்டு, மறு முகம் வழி குளிர் ஊடுறுவ வழி செய்து, மின் காற்றாடி ஐந்தில் ஓடுகின்றதா என்று பார்த்தாள். ரெகுலேட்டர் ஐந்தை அம்பில் காட்டியது. திருப்தியுடன், படுக்கையில் படுத்து, போர்வையால் முழுக்கப் போர்த்திக் கொண்டு, தூங்கிப் போனாள்.

திடீரென்று மழை பெய்தது. எங்கிருந்து வந்ததோ; இத்தனை நாள் எங்கிருந்ததோ; வந்து கொண்டே இருந்தது. ஓடி வந்த மானைத் தாவணித் தோகைக்குள் பொத்திக் கொண்டாள். புல்வெளியின் நடுவில் ஒரு மரம் முளைத்திருந்தது. காயத்ரியும், மானும் அதன் அடிக்குச் சென்று நின்றனர். அதற்குள் மான் நன்றாக நனைந்து விட்டிருந்தது. நடுங்கியது. ஆதுரமாய் அவள் கைகளை முட்டியது. குனிந்து அமர்ந்த அவள் ஆதுரமாய் மானின் நாணம் தவழும் முகத்தை இரு கைகளாலும் ஏந்தி முத்தமிட நெருங்க...

சட்டென மான் முகம் சரவணன் ஆனது. மான் மாறி சரவணன் ஆனான். திடுக்கிட்ட காயத்ரி, சடாரென விலகினாள். திரும்பி நின்று வெட்கம் தாளாமல் தாவணி முனை பற்றிக் கடித்தாள். சரவணன் நெருங்கி அவளது தோள்களைத் தொட்டான்.

"காயத்ரி... வெட்கமா..?"

"இருக்காதா..?"

"மானாய் இருந்தால் மட்டும் தான் முத்தமிடுவாயா..? நானாய் இருந்தால்..?"

"சரவணா..! நீ ஏன் மானாய் வேஷம் போட்டாய்..?"

"உன்னைப் பார்க்கத் தான். மனிதனாய் வந்தால் உன் வீட்டிற்குள் வந்திருக்க முடியுமா..?"

அவள் நிமிர்ந்து பார்க்கும் போது, புல்வெளியும், தொலை மலைகளும், செங்குத்து மரமும் கலைந்து, அவள் வீட்டிற்குள் நின்றாள். அருகில் சரவணன். கொஞ்சம் தள்ளி, அப்பா அமர்ந்து பஞ்சாங்கம் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் அருகில், இரண்டு பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். ஜாதகம் பார்த்துக் கொண்டிருக்கிறார். சரவணன் சட்டென குனிந்து அவள் கழுத்தில் ஒரு முத்தமிட்டான். அவள் திரும்பிப் பார்ப்பதற்குள், அவன் மறைந்து, மான் நின்றது. அவளைப் பார்த்துக் கண் சிமிட்டி, துள்ளி ஓடி மறைந்தது. திடீரென மானின் கழுத்தில் ஒரு சின்ன மணி கிணுகிணுத்தது.

திடுக்கென போர்வையை விலக்கி எழுந்து பார்க்கும் போது, மழை நின்று, செவ்வரி ஓடிய கீழ்த்திசையில் இருந்து, பால்காரர் செலுத்தும் மணியோசை கேட்டது.

வீட்டின் பின்புறம் வளர்த்திருந்த வாழை சற்று சாய்ந்திருந்தது. கிணற்றின் முகத்தின் மேல் ஏதோ ஓர் வீட்டில் இருந்து வாரி எடுத்து வரப்பட்டிருந்த கூரை ஒன்று முக்காடிட்டிருந்தது. துவைக்கும் கல்லின் அருகில் வைக்கப்பட்டிருந்த குளியல் பக்கெட்டில் மஞ்சளாய்க் கொஞ்சம் மழை நீர் தேங்கி இருந்தது. சதுரமாய்க் கட்டம் கட்டி எல்லைக்குள் செழிப்பாய் வளர்ந்திருந்த தக்காளிச் செடிகள், கீரைகள், அவரைக் கொடி எல்லாம் நனைந்திருந்தன. அவற்றின் ஒற்றைக் கால்கள் எல்லாம் சேற்றுக் கலவைக்குள் நிழல் பதிய ஊன்றி இருந்தன.

கிணற்றின் மோட்டாரில் ஏதோ ரிப்பேர் என்று அருள் அப்பாவிடம் சொல்லி, அவர் ஆள் அனுப்புவதாகச் சொல்லி இருந்தார். ஈஸ்வர ஐயர் குளத்தில் சென்று குளித்து விட்டு வருவதாகச் சொல்லி அகன்றிருந்தார்.

அருள் அப்பா அனுப்புவதாகச் சொல்லியிருந்த 'ஆள்' வருவதற்காக காயத்ரி காத்திருந்தாள். ஊரிலேயே மோட்டர் ரிப்பேர், சைக்கிள் சரிசெய்தல், எலெக்ட்ரிக்கல் பிரச்னைகள் தீர்த்தல் போன்றவற்றில் அனுபவப் புலமை பெற்றிருந்தவன் ஒருவனே! அவனது சைக்கிள் கிணிகிணிக்காக தோட்டத்திலேயே உலவிக் கொண்டிருந்தாள்.

கிணிகிணி....!!!

தோட்டத்துக் கதவின் அந்தப்பக்கத்தில் இருந்து சத்தம் கேட்டது. காயத்ரி அவசரமாக ஆடைகளை சரிசெய்து கொண்டாள். சந்தேகம் வந்து முகத்தை அள்ளி பக்கெட் நீரில் கழுவினாள். தாவணியால் துடைத்துக் கொண்டு, கிணற்றின் திட்டில் ஒட்டியிருந்த சின்னச் சிகப்பு பொட்டை ஒட்டி ஒற்றிக் கொண்டாள். தலைமுடிகளை ஒரு புறமாய் ஒதுக்கிக் கொண்டாள்.

கிணிகிணி..!!!

தாழ்ப்பாளை விலக்கி, கதவைத் திறந்து பார்த்தாள்.

சரவணன் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு...

"செல்லக் கிளி..! மாமா வீட்ல இல்லையா..?"

"ஹை..! கேக்கறதை பாரு. எதுக்கு வந்திருக்கயோ, அதை மட்டும் பாரு..! செல்லக் கிளியாமே!! "

"எதுக்கு வந்திருக்கனோ, அத மட்டும் பார்த்தா போதுமா..?" சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு, பூட்டினான். அவன் கண்களில் விஷமம் பூத்தது. அவன் உதடுகளிலும்!

"டேய்..! உதைக்கணும்டா உன்ன..!"

கதவை லேசாக சாத்தி விட்டு, அவன் உள்ளே புகுந்து விட்டான். அவள் கிணற்றின் அந்த முனையில் ஒண்டிக் கொண்டு நின்றாள். இவன் இந்த முனையில்! ஆமாம், வட்டக் கிணற்றுப் பெருவாய்க்கு முனைகள் என்று எவற்றைச் சொல்வது..?

"என்ன பிரச்னை..?"

"தெரியல! நேத்து மழை பேஞ்சு மோட்டார்ல ஏதோ காயில்ல தண்ணி உள்ள புகுந்திருக்கும் போல இருக்கு. நேத்து நல்ல மழையா..?"

"ஆமா! நல்ல மழை. நேத்து டவுனுக்கு போயிருந்தேனா, திரும்பி ஊருக்கு வரவே முடியல. நைட் புருஷோத்தமன் வீட்டுலயே தங்கிட்டு இப்ப தான் வர்றேன். வந்தவுடனே சொன்னாங்க. உங்க வீட்ல மோட்டார் பிரச்னைனு. அதான் வந்திட்டேன். ஆமா, நீ இது தான காலெஜுல படிக்கறே, உனக்கு தெரியாதா..?"

"இல்ல. இது பத்தி நாங்க படிக்கல. நேத்து நைட் நல்லா தூங்கினியா..?"

"எங்க தூங்கறது..? இப்ப எல்லாம் என்னால சரியா தூங்கவே முடியறதில்ல. நீ..?"

"ம்..! நல்லா தூங்கினேன். கனவு கூட வந்திச்சு. அதுல.." சட்டென வெட்கினாள்.

"கனவா...? சொல்லு சொல்லு. என்ன கனவு கண்ட..? நான் வந்தேனா..?" அதற்குள் மோட்டாரைப் பிரித்து வைத்திருந்தான்.

"வந்த.. வந்த..! ஆனா நீ என்ன செஞ்சேனு சொல்ல மாட்டேம்பா..!"

"அட..! அப்படி என்ன செஞ்சிருப்பேன். சொல்லுடி என் கிளி.."

"ம்ஹூம்..! மாட்டவே மாட்டேன். இரு உனக்கு காபி கொண்டு வரேன். நீ காபி குடுப்பியா, டீ குடிப்பியா..?"

"சினிமா டயலாக் மாதிரி இருக்கு. இருந்தாலும் சொல்றேன். நீ தொட்டு குடுத்தா, (சுற்றியும் பார்த்து) அதோ அந்த சேத்து தண்ணியையும் மடக் மடக்குனு குடிச்சிடுவேன்."

"சரவணா..! நான்னா உனக்கு அவ்ளோ இஷ்டமா..?"

"ம்..! காயூ! உன் பேரைச் சொல்லும் போதே ஒரு சுகமா ஒடம்புல என்னவோ ஓடுது. அதுக்கு பேர் தான் காதலா..?"

"எனக்கும் தெரியல. ஆனா இப்ப எல்லாம் நான் எதைப் பார்த்தாலும் அதுல நீ தெரியற. எனக்கு வெட்கமாவும் இருக்கு. உனக்கு சொல்லணும் போலவும் இருக்கு. இந்த தவிப்புக்குப் பேரும் காதல் தானா..?"

"இந்தக் குழப்பம் தீரணும்னா ஒரே ஒரு வழி தான் இருக்கு..!"

"என்ன..?"

"இங்க கொஞ்சம் கிட்ட வாயேன். சொல்றேன்."

"என்ன சொல்லு..?" கொஞ்சம் சுற்றி வந்து அவன் அருகில் நின்றாள்.

சரவணன் சட்டென எழுந்து, க்ரீஸும் கருப்பும் பூசியிருந்த கைகளால் அவளது மிருதுவான கன்னத்தை பிடித்து, தேய்த்து விட்டு, தன் கைகளுக்கு முத்தமிட்டான்.

திடுக்கென பின்பக்கம் நகர்ந்த காயத்ரியின் முகம் வெட்கம் பூத்தது. எது அதிக நிறம் என்பதில் கன்ன வெட்கச் சிகப்பிற்கும், அவன் கை பூசிய கருப்பு மைக்கும் பெரும் போட்டி நிலவியது.

"போடா பொறுக்கி..! நீ ரொம்ப மோசம்..! இரு உன்னை எப்படி பழி வாங்கறேன்னு பாரு..! காஃபியோட வர்றேன்."

மெல்லச் சிரித்துக் கொண்டே, சமையலறைக்குள் சென்று பாலைக் கொதிக்க அடுப்பில் வைத்தாள். சின்னதாக சுவற்றில் ஆணிக் கொக்கியில் கொண்டை கொடுத்து தொங்கிக் கொண்டிருந்த கையகலக் கண்ணாடியில் கன்னம் பார்த்தாள்.

"பொறுக்கி.." சின்னதாகச் சொல்லிப் பார்த்தாள்.

மெல்ல இடது கன்னத்தைக் கண்ணாடியில் ஒற்றி எடுத்தாள். கொஞ்சம் போல் அந்த அச்சுக்கள் கண்ணாடியில் ஒட்டின. அழுத்தமாக அந்த கண்ணாடி அச்சுகளுக்கு ஒரு முத்தமிட்டாள்.

பால் பொங்கத் தயாராக அவசரமாக விரைந்தது.

கெரஸின் அடுப்பின் உயிர்க்குமிழியைத் திருகிக் கொன்றாள். காபி பொடி இல்லை. அப்பா வரும் சத்தம் கேட்டது. முகத்தைத் தேய்த்துக் கழுவிக் கொண்டாள். கொஞ்சம் சர்க்கரையைக் கலந்து இரண்டு தம்ளர்களில் நிரப்பினாள். தோட்டம் போய் நோட்டம் விட்டாள்.

அப்பா சரவணனிடம் பேசிக் கொண்டிருந்தார்.

"பண்ணிரலாங்க சார். இன்னும் கொஞ்ச நேரம் தான். மழைத் தண்ணீர் பட்டதில, சூடான காயில் ஒண்ணு புகைஞ்சு போயிருக்கு. ஸ்பேர் வெச்சிருக்கேன். நீங்க போய் சாப்பிட்டுட்டு வர்றதுக்குள்ள ஃபிக்ஸ் பண்ணிடறேன். நீங்க இந்த தண்ணிலயே கை கழுவிக்கலாம்.."

"சரிப்பா. சீக்கிரம் பண்ணு..! காயூம்மா, தம்பிக்கு காபி கொண்டு வந்து குடும்மா!"

என் அப்பாவி அப்பாவே..! காபி கொடுக்கச் சொல்லும் இந்த தம்பி, கொஞ்ச நேரம் முன் உன் அருமை மகள் கன்னங்களில் முத்தம் கொடுக்கப் பார்த்தான். என்ன நடிப்பு!

"பால் தாம்பா இருக்கு. அத ரெடி பண்ணிண்டேன்.." கொண்டு வந்து கொடுத்தாள்.

மோட்டார் முடித்து விட்டு, பால் டம்ளரை சொட்டு சொட்டாக காலி செய்து வைத்து விட்டு கண்ணடித்து வெளியேறினான் சரவணன். அந்த டம்ளரில் அவன் கை விரல்களின் தடங்கள் அழுக்காய் ஒட்டியிருந்தன.

1 comment:

thamizhparavai said...

பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க வசந்த்...
கனவு,மழை, மழையூடே கனவு, புல்வெளி, மான், காதலன், சில்மிஷம்...ஒரே ரொமாண்டிக்தான்...
தங்கள் போன பதிவின் தலைப்புதான், இப்பதிவிற்கு என்னுடைய கமெண்ட்...மதி..