Friday, July 31, 2009

முயல் மருதாணி.(A)பூஞ்சிவப்புக் கழுத்தைத் தடவும் காற்றின் கரங்கள். மேகம் கறுக்கும் நிறம் கழுவும் விழிப் புருவங்கள். நிழல் சுரக்கும் பெருமரத்தின் அடியில் ஊரும் துளி எறும்பு நுணுக்க திறங்கள். கைகள் துழாவும் போதும் நிரம்பாத பொன் பாத்திரங்கள். ஜ்வலிக்கும் சிறு தூறல் சிதறடிக்கும் மின்னல் பாய்ச்சல்கள். ரகம் ரகமாய்ப் பிரியும் மெளனம் தீராத பதறல்கள். மரகத மொட்டுக்கள் மறைந்து மறைந்து தலையாட்டும் மர்ம விலகல்கள். சிக்காத சிறு நடுக்கம் பற்றிக் கொள்ளாத போதும் ஏற்றுக் கொண்டதாய் ஓர் ஒப்புதல்.

நெருப்பாய் ஓடும் நீராவிக் கதிர்கள் நுரை பொங்கிப் பொங்கிப் பாய்ந்து கரைகளில் மோதி மோதிச் சிதறும். அலையாடும் நனைந்த கற்றைகள் புரளும் போது, விசிறியடிக்கும் அணுக்களில் அகலாத குளிர். பளிங்குப் பொழுதுகளில் பரவசம் நிரந்தரமாய்க் காலக் குடுவையில் நிரம்புகையில் தீப்பந்தம் மேலே துடித்து எரியும். சந்தம் கொண்ட பேரிரைச்சல் அத்தனை திசைகளிலும் திமிறிக் கொண்டு வீச, முட்களில் முத்து முத்தாய் வெப்பக் கரைசல் வெளுப்பாய் முனகும்.

மணல் துளிகளைப் பிசையும் நக நுனிகளில், விரல் கணுக்களில் கதகதப்பான எரிச்சலில் தன்னிடத்தைக் கண்டு கொண்டு ஆர்ப்பரிக்கும் சிறு கற்கள். புரண்டெழும் ஒரு போர்வை சொட்டுச் சொட்டாய் வீழும் முத்த மதில்களைக் கடந்து, திறக்காத ஒரு கோட்டை கோபுரங்களைத் தகர்க்கும் நேரம் வானம் மருதாணி பூசிக் கொள்ளும். வெப்பம் மிரளும் பார்வைகளில் வேண்டுமட்டும் சாயம் பூசிக் கொண்ட காதல், மூடியைக் கழட்டி தன் ஆர்வமுகம் காட்டும் போது இதழோரங்களில் நேர்க்கோடுகளாய் ஓடும் பருவம். மளுக்கென்று முறியும் மூங்கில் காடுகளுக்குள் சரக்கொன்றை மலர்கள் சரிந்து ஒரு வெம்மை நனைந்த மகரந்த உச்சங்களை உதறும்.

கீற்று இடைவெளிகளில் கொட்டிக் கிடக்கும் நிலவொளி. பனி நனைக்கும் ஒரு பல்லாக்கில் பவனி வரும் மோகன இசை, மூங்கில் முந்தானையைத் தழுவும். மதுக்குப்பிகளின் முனைகளில் ரசம் நிரம்பி நிரம்பித் தளும்பித் தளும்பிச் சுழன்று கனிந்து சரியும் போது காரமான ஒரு வாசம் காற்றில் பரவும். கிறங்கும் கீழிதழ் ரத்தப் பாய்ச்சலில் சிவந்து, கிளைத்த பரு மெட்டுக்களில் புதிதாய் ஒரு வெப்பத்தை ஏற்றும்.

பேயாட்டம் போட்ட மூங்கில் புதர்கள் பெய்யும் வெப்பம் சுருக்கும் தீயிலைகள் நிழல் போலும், நிழலின் நிஜம் போலும் பூவர்ணத்தில் பொறிகின்ற மின்சார ஆச்சரியங்கள். பிரமிப்பான போதையில் நகங்கள் நடும் கூற்றுக்கள் நடுக்கத்தில் கோணலாய்க் குளம் வெட்டுகையில் செந்துளிகள் காதுகள் விடைத்த முயல்களாய் எட்டிப் பார்க்கும்.

No comments: