கண்ணன் பாட்டிலும் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். சென்ற மார்கழி மாத ஆரம்பத்தில் மாதம் முழுதும் முப்பது வெண்பாக்கள் கண்ணன் மேல் எழுத விரும்பித் துவங்கினேன். கொஞ்சம் தான் எழுத முடிந்தது. ;(
அவற்றை இங்கேயும் கொண்டு வருவதில் மகிழ்கிறேன்.
***
திருமார்கழிப் பிறப்பை ஒட்டி மடலில் சொன்னது போல், முடிந்த அளவுக்குத் தினம் ஒரு வெண்பாப் பூக் கொய்து, மாலையாக்கி ஆண்டாளின் அழகன் தோள் சாற்றும் அதிகப்படியான ஆசையில் எழுத உட்கார்ந்து விட்டேன். வெண்பா இலக்கணத்தைப் பெருமளவுக்குப் பின் தொடர முயல்கிறேன். தவறிருந்தால், ஒரே ஒரு குட்டு குட்டி, திருத்த உதவுங்கள். கவிதை மாதிரி இருக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல இயலவில்லை.
***
விநாயகர் துதி.
பாடியதில் பைந்தமிழ்! நாடியதில் நற்கல்வி!
கூடியதில் கற்றோர்க் குழாமெனினும் - தேடினேன்
தும்பிக்கை யானைத் துதித்தகைவி டானெனும்
நம்பிக்கை யேந்துகிறேன் நான்.
கலைமகள் துதி.
புன்னகை செய்கிறாள் பூநிறமே நாணிட
வெண்ணிறத் தாமரையில் வேதவல்லி! - அன்னையின்
பாதவிரல் கொண்ட பிரம்மனின் மெட்டியொலி
வேதப் பிரகடனம் கேள்.
கண்ணிலா மாந்தரவர் காட்சியைச் சொல்வதன்ன
கண்ணனைப் பாடும் பணியினை - எண்ணிடாது
களம்புகுந் தேன்யான்! கலைவாணி நீயென்
உளம்புகு வாய்நீயே காப்பு.
குரு வணக்கம்.
மண்ணில் உறங்கும் மழைத்துளி தொட்டபின்
கண்ணைத் திறப்பதால் காணும் - என்னை
உருவாக் கியரறிஞர் அவ்வளவின் நெஞ்சில்
குருவாக் கியமே விதை.
1.கண்ணன் கோகுலம் வருதல்.
கரியதிரை ஒன்று கிழிந்தது போலும்
சரிந்த முகில்கள் இடித்து - வரிந்து
பெருமழை ஆற்றைப் பொழிந்து வழியில்
பருத்த பழுப்புநதி பொங்கக் - கருத்த
இரவின் தடத்தில் இரத்தின பிள்ளை,
விரவின ஈரப் பொழுதில் - பரவின
நந்தர் விரல்களைப் பற்றித் தடவிடத்
தந்தை எனுமோர்த் தகைமையில் - வந்து
நனைக்கும் துளித்துளி நன்முத்துச் சாரல்
அணைக்கத் தடுத்திட, ஆழிப் - பிணைக்கும்
அரவணை ஆதிசேடன் ஆதரவாய்ப் பின்னில்
வரவர கோகுலம் வந்தான் - மரகத
வண்ணனாம் மதுசூதனன் வானிறம் சூடிய
கண்ணனாம் கருமை சுமந்து!
***
Image Courtesy :: http://www.hiddenmeanings.com/krishnaescapes.jpg
2 comments:
kaNNanmEl veNbA karuththAgap pAdinAl puNNiyam uNdAm pugal!
-Arima Ilangkannan
பின்னூட்டம் பெற...
Post a Comment