Thursday, January 21, 2010

ஒரு குரலும் மற்றொரு மழைத்துளியும்!

லகப்புகழ் பெற்ற ஓவியத்தில் இருந்து ஒரு குரல் பிரிந்து, திசைகள் பற்றிய பிரக்ஞையின்றித் திரிந்தது. ஒரு செயற்கைக்கோளின் மேல் இடித்துக் கொண்ட சின்ன மேகத்தின் விளிம்பில் இருந்து வழுக்கி விழுந்த மழைத்துளி ஒன்றோடு அதற்குச் சிநேகம் உண்டானது.

ஒரு பியானோவின் இடுப்பில் நெருக்கமாய்த் திணிக்கப்பட்டிருந்த வெளுத்த மற்றும் கருத்த கட்டைகளின் இடைவெளிகளில் அவை இரண்டும் துரத்திப் பிடித்து விளையாடிய போது, செழித்து வந்த சிம்பொனியை ரகம் பிரிக்க முடியாமல், ராகக் குறிப்புக் காகிதம் குழம்பியது.

வெப்பம் வெளியேற்றும் குளிர்ப்பெட்டியின் முன் நின்று தற்கொலை செய்து கொள்ளத் தயாரான துளியைக் குரல் கவ்விச் சென்று, அதற்குச் செந்திரவம் வாங்கிக் கொடுத்தது.

வரப்பு ஒன்றில் ஊர்ந்து கொண்டிருந்த மண்புழு, பாய்ந்து வந்த வெள்ளத்திற்கு அஞ்சி, மடங்கி மடங்கி நகர்ந்து செல்வதைக் கண்டு உறைந்த குரலைக் குருவிக் கூடுகளில் உறங்கிய துளி கிளப்பிக் கொண்டு வரப் பெரும்பாடு பட்டது.

மின்சாரம் அற்றுப் போன ஒரு முன்னிரவில், தொலைக்காட்சி முக்காட்டின் மேல் நின்று கழிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் அருகில் தலை எரிந்த சில தீக்குச்சிகளைக் கண்டு, குரல் பேச்சற்றுப் போன போது, மழைத்துளி, சுருண்ட பூக்களால் கோர்க்கப்பட்டிருந்த மாலை தொங்கிய ஒரு புகைப்படத்தின் கண்ணாடியில் தன் பிம்பத்தைக் கண்டு பிரமித்துக் கொண்டது.

வானம் நோக்கித் திறந்திருந்த குழாய்களிலிருந்து சுருள் சுருளாய் மனிதர்கள், கழுத்துப் பட்டைகளோடு வரிசையாக நகர்ந்து கொண்டிருப்பதை, மழைத்துளி சொல்லிய போது, சாக்கடையின் நுரைகளில் முகம கிழிந்திருந்த ஒரு புகைப்படம் மிதந்து வந்ததைப் பார்த்தது குரல்.

ஊமையள் ஒருத்தி, தன் முதுகில் ஊர்ந்த காட்டெருமையைத் தள்ளி விட்டுத் தான் எழுதும் சிறுகதையைத் தொடர்ந்தாள். அவளது திரண்ட மார்புகளின் வெண்மை, குரலை மயக்கம் கொள்ளச் செய்த போது, துண்டான எருமையின் கொம்பு மேல் சொகுசாய்த் துளி உட்கார்ந்து கொண்டு, சொட்டிய ரத்தங்களை எண்ணியது.

உதடுகளைக் கடித்துக் கொண்டு, தன் அழுகையை அடக்கும் சிறுமியின் விரல்களை அடிக்கும் ஆசிரியையின் வலது கையை ஒரு கொசு கடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மகிழ்ந்த மழைத்துளியைக் குரல் உறிந்து விட, ஓவியத்தில் இருந்த மர்மப் புன்னகைப் பெண் ஒரு முறை தும்மியதை, வரலாற்று ஆய்வாளர்கள் குறித்துக் கொள்ளத் தவறினர்.

2 comments:

வால்பையன் said...

நல்ல முயற்சி!

ஆரம்பத்துல இப்படி தான் இருக்கும், போக போக நல்லாருக்கும்!

வானத்துல மிதக்குற மாதிரி, இல்ல பறக்குற மாதிரி, எதோ ஒரு மாதிரின்னு வச்சுகோங்களேன்!

Karthik said...

very nice post.. colorful template.. :)