Saturday, April 17, 2010

17.Apr.2010 - காலை - 06 Hrs.



கா! இளம்பரிதி அடிவானில் ஜொலிக்குது! போதா அதன் ஒளிச்சிதறல்கள் மேகங்களை நனைக்குது; ஏதோ ஒரு புகைபோக்கி கரும்புகையை உமிழுது; மாதோ வளர் தூதோ என நீலம் சுமக்கும் வானம் பரந்து வரிந்த வனத்தின் கீழ் வருகுதடி வருடுதடி தென்றல்!

ஏதோ ஒரு பறவை எதையோ பாடுகிறது. காக்கைக் குடும்பத்தார் எதையோ கவ்விப் பறக்கின்றார். தென்னை இளஞ்சோலையில் மரங்கள் அசையா நிற்கின்றன. சிவந்த தன் பொன் அதரங்களால் நாரைகள் தேடுகின்றன.

காற்றில் இது என்ன சுகந்தம்? அதிகாலையின் ஒரு பூபாள வாசம்? மெல்லத் தன் குளிராடை விலக்கி மர்மப் பிரதேசங்களைத் தீண்டும் ஆரஞ்சுக் கதிர்க்கரங்களைக் கண்டு வெட்கி இந்த இளங்காலை பூத்ததோ?

செம்மணிப் பூந்தூறல்கள் ஆகாயத்திலே! செழும் பொழில் வயல்களிலே! ஒரே போல் வளர்ந்திருக்கும் பயிர்ச் சகோதரிகளுக்கு அப்படியென்ன பேரானந்தம்..? ஈரப் பூக்களை இறக்கிக் கொண்டே இருக்கின்றனவே?

ஆகா! என்ன இது! எந்த மரத்தின் எந்த இருண்ட கிளையின் மீதமர்ந்து ஒரு குயில் சரத்தின் ஒற்றை ராகம் என்னை மோதுகின்றதே! சிட்டுக்குருவிகள் செல்லாமல் என்ன சொல்கின்றன? அவர்றின் சின்னத் தொண்டைகளில் யாரது சிந்தசைஸர் அமைத்தது?

’காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று அரிசி தூவிய எம் கவிராஜனே! இதோ, உன் பெயர் சொல்லி என் வீட்டு உணவைத் தட்டில் திட்டில் வைத்தேன்.

பாய்ந்தன காகங்கள்! மோந்தன எம் சாதத்தை! அதன் கண்கள் சொல்லும் ஆகாயப் பசியை நான் கண்டதில்லையே இதுவரை!

எங்கிருந்து வந்தன இத்தனை பஞ்சு முடிச்சுகள்? சுருள் சுருளாய்... மிதக்கின்ற இந்தச் சொர்க்கத் துண்டுகளை ஏவியது யார்? விளிம்புகளில் மஞ்சள் கலந்த ஆரஞ்சை அள்ளி அள்ளிப் பூசிக் கொண்ட விரல்களை அவை எங்கிருந்து பெற்றுக் கொண்டன?

எருமைகள் எவற்றை உண்கின்றன? அதோ, அந்தப் பெரிய எருமைத் தாத்தாவின் கொம்பின் மேல் அமர்ந்து அந்தச் சின்னக் குருவி என்ன ரகசியம் சொல்கின்றது? அது அவற்றுக்கு ஏற்புடை அல்லனவா? ஏன் கயிறு கட்டிய மணி ஒலிக்கக் கழுத்தை இப்படி ஆட்டுகின்றன?

ஆ..! அந்தச் சின்னக் கன்றுக் குட்டியின் குட்டி வாலில் வெண் முடிகளை வளர்த்தது யார்?

யாரங்கே, ‘ட்ரூட்...ட்ரூட்...’ என்று சொல்லுவது? பேரண்டத்தின் எந்தத் திசையில் நிற்கின்றாள் அந்தக் குரல்காரி? அவள் கொண்டையில் ஊதாச்சிறகு இருக்குமா? அவள் அலகு எத்தனை கூர்? அவள் வாலில் எவ்வளவு இறகுகள் இருக்கும்?

அதோ ஒரு வேப்பமரம்! ஏன் ஐயா, இங்கே இத்தனை பேர் உன் இனத்தார் இருக்கையிலே அதென்ன நீர் அருகினிலே ஒரு பனைமரத்துடன் இத்தனை நெருக்கமாய் நிற்கின்றீர்? மஞ்சள் பழங்களை உதிர்க்கும் வேம்போடு நீ ரொம்ப வைத்துக் கொள்ளாதே பனையே! உன் நுங்கெல்லாம் கசப்பாகும்; ஆனால் நல் மருந்தாகும்.

அந்த ‘ட்ரூட்...ட்ரூட்...’ பறவை ஏதேனும் அந்தப்புரத்து ராஜகுமாரியா? ஒற்றையாய் ஒலித்துக் கொண்டிருக்கிறாளே..!!!

பம்ப்செட் போட்டு நீரிறைக்கும் பெரிய கிணற்றைச் சுற்றி யாரது வேலிக்காத்தானை விதைத்தது? என் பார்வை கேணிக்குள் பதியாமல் தடுக்கவா? முகக்கண்ணை யாரும் தடுக்கலாம்? என் மனக்கண்ணை நீர் என் செய்வீர்?

இதோ... பகலின் பேரரசன் கிளம்பி விட்டான். அவன் பொன் தேரில் புறப்படும் கிழக்கில் பிரகாசம் தான் எத்தனை! இரவில் பனிப் போர்வைக்குள் மூடி அவன் சேர்த்து வைத்த ஒளிப்பேழையை திறந்து விட்டிருக்கின்றான்.

ஆகா..! அதில் தான் எத்தனை ரத்தினங்கள்! எத்தனை வைரத் துணுக்குகள்! அவைதான் எப்படித் துள்ளித் துள்ளித் துளித்துளியாய் ஓடிப் பின் பிரவாகமாய்க் கிழக்கை நிறைக்கின்றன..! ஏ..! ஈரக் கர்ப்பிணி மேகங்களே! எங்கே செல்கின்றீர்கள்? ஓ..! குளிர் தேடி நகர்கிறீர்களா..? சரிதான். எங்கள் வெயில் சுரக்கும் வேங்கை வந்து விட்டானே! உங்கள் வெட்கத்தில் சிவந்த முனைகளை சுருட்டிக் கொண்டு வழி விடுங்கள்.

ஒருபக்கம் சரியும் ஓட்டு வீட்டிலிருந்து ‘கருத்த மானுடம்’ ஒன்று வரப்போரம் நடக்கின்றது. எந்தத் தெருவின் நாய் ஒன்று குரல் எழுப்புகின்றது..? அதோ அந்தத் தெருவில் கேட்பது, இதன் எதிரொலியா இல்லை, எதிராளியா..?

தூரத்துச் சாலையை அவ்வப்போது நினைவுறுத்தும் ஹாரன் சப்தங்களும், சிவப்பு மாருதிகளும் கடக்காவிடில் அங்கென்ன தார்நதியா? என்றன்றோ கேட்டிருப்பேன்...!

காகங்களே! மின் கம்பிகளின் மேல் எத்தனை ஒய்யாரமாய் நிற்கின்றீர்..! எத்தனை லாவகமாய் நடக்கின்றீர்..! எப்படி கம்பின்றி உங்கலால் சமன் செய்ய முடிகின்றது?

இதோ, வீட்டுத் தோட்டச் சின்னச் செடிகள் மேல் வெயில் பூச்சுகள் படியத் தொடங்கி விட்டன. இரவில் சுமந்த ஈரத் துளிகளை அவன் உறிஞ்சி விட்டு, தங்க முலாமை அல்லவா அந்த மகராஜன் ஈடாய்த் தருகின்றான்.

எத்தனை ஏகாந்தம்..! எத்தனை பறவைகள்..! அவற்றின் எத்தனை குரல்கள்..!

இதோ, இந்தச் சின்னச் சிற்றெறும்புகளைக் காண்கிறேன். வரிசை தவறாது எங்கே அத்தனை அவசரமாய்ப் போகின்றன..? அவற்றின் இராணுவ ஒழுங்குக் குழுமத்திலும் ஒரு புத்தன் இருப்பானா? ஒரு பாரதி பிறந்திருப்பானா..? ஓர் எறும்பு கவிதை எழுதினால் அது என்னவாய் இருக்கும்? ஒரு லட்டை, ஓர் எறும்பு உலகை நிறைந்த மஞ்சள் சொர்க்கம் என்று நினைத்தால், ஏ சூரியனே..உன் சூட்டுக் கரங்களால் இவற்றைத் அன்பால் கூட தடவி விடாதே! ஏதென்று அறியும் முன்னே, இந்தத் துளிப் பிராணிகளின் துயர் வாழ்வு தீர்ந்து போகும்.

ஓ..இரு பச்சைக் கிளிகள்! எங்கே பறந்து செல்கின்றீர்? வாருங்கள் என்னிடம்..! இதுவரை யாரும் கொய்யாக் கவிகளை உங்களுக்குக் கூறாக்கிக் கூராக்கித் தருகிறேன்.

தூரத்து மேற்கு மலைத்தொடர்களைச் சொகுசாய்க் கட்டிப் பிடித்துப் படர்ந்திருந்த இரவில் மட்டுமே வரும் கள்ளப் பனிக் காதலர்கள் சுருட்டியடித்துக் கொண்டு ஓடி மறைகின்றார்கள். இதோ வெப்ப வேந்தன் வந்து கொண்டிருக்கிறான்...!

தங்க மகன் அவன் வான் அதிர நடந்து வரும் போது, ரோஜா வனம் போல் இந்த வானமே, பூமியே, உங்களது பொருளிலா உறக்கத்திலிருந்து எழுந்து கொள்ளுங்கள்.

மஞ்சள் முகட்டு நேரங்களே! உங்கள் வள்ளல் பெரும்பசு வந்து விட்டான். கிழக்கு தேசத்தையே தன் கைப்பிடிக்குள் இழுத்து வைத்து, பரந்த நீல மண்டலமே ஜொலிக்க வந்து கொண்டிருக்கிறான். நானும் என் குறிப்புகளை நிறுத்தி விட்டு, இதோ செல்கிறேன், என் இன்றையக் கடமைகளுக்கு..!

ஆனாலும்... அந்த ‘ட்ரூச்சு...ட்ரூச்சு...’ தனிமை இளவரசிக்கு யாரையேனும் அனுப்பி வையும் ஆகாயம் ஆளவந்தாரே..! அவளின் சோகக் குரலைக் கேட்கக் கேட்க, என் கண்கள் துயரம் சொரிகின்றனவே, என் செய்வேன்...!!!

***

17.ஏப்ரல்.2010 காலை ஆறு மணிக்கு எழுதியது.

4 comments:

thamizhparavai said...

:-) :-(

Karthik said...

:) :)

sekar said...

raasa,

are you from Anna university BE?

I am looking for Vasanth whom I knew from anna univ hostels ?

Sekar K

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை, கார்த்திக்...

நன்றிகள்.