Thursday, March 31, 2016

தற்கொலைக் குருவி.


ரு சிட்டுக்குருவி தன்னைத் தானே இழப்பதற்கு முன் என்ன சிந்திக்கும்? தன் துளி அலகால் நெடும் பனையைக் கொத்திக் கொத்தி அலகுடைந்து சுழன்று வீழும் போது, மண்ணில் அது தின்ற நெளியும் புழுக்களை நினையுமா? சிறு தலையை, எதில் கொண்டு போய் மோதிச் சிதறடிக்கும்? பனித்தூவல்களாலான செம்பழுப்புச் சிறகுகளை எந்த நெருப்பின் பசியில் எரித்தடக்கும்? தனித்திருக்கையில் திரும்பித் திரும்பி நீவிக்கொண்ட முதுகை எக்கூர்முனை கிழித்துப் பின் பிளக்கும் என்பதை என்றேனும் ஒரு கனவில் கண்டிருக்குமா? சிறு குருவியின் சுற்றம் மென்புழுதி வயலில் அதற்கென ஒரு குறுநிலம் கணடு வைத்திருப்பரா?

'எடுத்ததொரு கோலம்; கொண்டதொரு வாழ்வு; தின்றதொரு தீ' என்று பாடிக் கலைந்த பின் அந்த வெறும் வெளியில் விளையும் மாயக்கனிகளில் ஒன்றென அக்குருவி மீண்டும் உயிர்த்து, தன் பொய்க்கூட்டைக் களைந்த திசையிலிருந்து விடுபட்டுத் திரும்புமா தன் மெய்யிடம்?

தோழியரும் தோழர்களும் உதிரத்தின் வெம்மைத்துளி வழி உறவில் தொடர்ந்தவரும் தீண்டாத் திக்கில் நிழல் சிறகுகளை உதறிக் கொண்டு, மணிக்கண்களை மின்னிக் கொண்டு பறந்து சென்று மறையுமா இச்சிறுகுருவி?

No comments: