Wednesday, November 23, 2016

நீலாம்பல் நெடுமலர்.2.


முற்றத்து மென்மணலில் கட்டிய சிற்றிலைச்
சுற்றத்துத் தோழியர் சூழ்ந்திருக்க - முற்றாய்க்
குறுங்கை அளைந்து குலைத்துப் பறந்த
சிறுவனைக் கண்டாயோ நீ.

"ஏனடி யாரிவன்? கூறடி யார்மகன்?
நானடி தேடினேன் தேய்ந்திட" - "வீணடி,
நீலனோ பாலனோ நீள்தடி ஆயனோ
காலனோ கண்ணனோ பேர்".

கதிரெழும் போதில் நதியலை மீதில்
குதித்துக் களித்து வெளுப்பின் - அதிரூப
மைந்தன் உடையோடு செல்ல இடையினைப்
பைந்தார் மலரால் மறை.

சத்தமின்றிச் சாய்த்தபின் முத்தமிட்டு மீட்டெடுத்தான்
எத்தனவன் எந்தலைவன் எண்ணத்தைப் - பித்தாக்கித்
தித்திக்கும் நாவாலே திக்கெட்டும் தீப்பரவ
வித்தைகள் செய்தான் அவன்.

வெண்கழுத்தில் கண்புதைத்து மென்குரலில் என்னுடலைத்
தண்ணிலவோ தாமரையோ தானொளிரும் - பொன்மணியோ
மின்னொளியோ மீன்விழியோ மீட்பில்லை என்றவனைப்
பெண்ணென்று சூழ்ந்தேன் இனித்து.

கண்ணுண்டான் கள்ளூறும் கன்னியிதழ்க் கொண்டபின்
பெண்ணுண்டான் பொன்முலையில் சொல்புதைத்து - என்னுண்டான்
ஏதுண்டான் என்றறியேன் மண்ணுண்ட வாயாலே
மீதுண்பான் நாளும் இனி.

"நாணிலையோ?" என்றதற்கு "நங்கையிட மன்றென"
"ஏனிலையோ?" என்றதற்கு "ஏடிநீ - நானிலையோ?
தன்னுடலைத் தானறியத் தேவையன்று நாணமே
உன்னுடலில் உள்ளாதல் நான்".


2 comments:

Yarlpavanan said...

அருமையான வரிகள்

இரா. வசந்த குமார். said...

நன்றிகள் ஜீவா சார்...