செம்மண்ணைச் சேறாக்கி வண்டல்மண் சீராக்கி
தம்முடலில் தார்ப்பாய்ச்சித் தானுழைக்கும் - பெம்மானே,
உம்முடனே கூடவரும் உம்முயிரே போலான
வெம்புனலை ஊற்றெடுக்கும் வெள்ளெருது - அம்மானே,
ஏரோட்டி எத்தனையோ ஏற்றத்தில் நீராட்டி
வேரோட்ட வேர்வையில் வெந்தவும் - போராட்ட
வாழ்விதிலே கண்டதென்ன கொண்டதென்ன உண்டதென்ன
தாழ்நிலையில் நின்றதென்ன வென்றதென்ன சென்றதென்ன
குப்பைகள் கோனாகும் உப்புத்தாள் ஊராளும்
இப்பொழுதில் இட்டதெல்லாம் தொட்டதெல்லாம் காய
நிழலுண்டா நீரமரத் துன்பம்போய் இன்ப
விழவுண்டா வீணம்போய் வீரர்போல் உள்ளத்
தழலுண்டா தன்னையே தானறியா வாழும்
விழலான நெஞ்சுள் விழலாகா தாசொல்
உழவின்றி உய்யா துலகு.
ஆற்றிலே நீரிலை வானிலே காரிலை
சேற்றிலே பூவிலை ஈரமிலை - காற்றில்
கழலிணை வைத்து மழைதேவி வாராய்
உழவின்றி உய்யா துலகு.
பழமுறை நீக்கு; புதுமுறை நோக்கு;
கழனியைக் காத்துக் கதிரை முழுதெடு;
புண்ணாக்கு சேர்த்துப் புதுப்பால் மணநுகர்;
மண்ணாக்கும் பொன்னின் மதிப்பை உயர்த்து;
வெளிவாங்கல் குன்றிட உள்விளைச்சல் ஏற்று;
கழிச்சலை மீள்பயன்செய்;
வீணை சலிசெய்;
விழவன்று கூறு கதிரவனே நன்றி;
உழவின்றி உய்யா துலகு.
காஞ்சுபோச்சு எச்சயெல்லாம் தீஞ்சுபோச்சு பச்சயெல்லாம்
ஓஞ்சுபோயி மிச்சமுள்ள ஒத்தசொட்டும் - மூஞ்சுபோயி
வாடுதையா வந்தசெடி நோகுதையா வெச்சமனம்
மூடுபனி முந்துதையா - தேடும்
மழராசா வாரோணும் மத்தவனும் சொல்ற
உழவின்றி உய்யா துலகு.
பிழையாகச் செய்க; பிசிறின்றி நெய்க;
மழையாகப் பெய்க; மயங்கித் - தழைந்து
முழவொலி முற்ற முயங்கிப் புணரும்
உழவின்றி உய்யா துலகு.
No comments:
Post a Comment