சில கவிதைகளையும்
தனித்த இரவில்
பெருமூச்சுகளையும்
கொடுத்தபின்
ஒரு
முத்தமாவது
தரலாம் நீ.
உன் மெளனம்
ஒரு பிடிவாதம்.
உன் தவிர்த்தல்
ஒரு நிழல்வெளி.
உன் பார்வை
ஒரு மறைபொருள்.
உன் மறைபொருட்கள்
கற்பனையின்
கல்லணைகள்.
நழுவி விழுந்து
தெறித்த
கண்ணாடிக் குடுவை
உன் சொற்கள்.
தொடாமல் கால்
படாமல்
நடக்கத் தெரியா
பிள்ளை நான்.
குருதி பூக்கும்
முட்செடிகளை
மெளனத்தால்
மூடி வைக்கிறாய்.
தொட்டுத்தொட்டு
சுவைக்கும்
செந்நா எனது.
நதிக்கரையில்
ஒற்றை மரமென
நின்றிருக்கும் வேளையில்,
அலையடிக்கும்
வெண்புறா போல்
சிலநேரம்
அமர்ந்தபின்
பறந்து விட்டாய்.
வானைக் கிளைகளாலும்
மண்ணை வேர்களாலும்
துழாவுகிறேன்.
நில்
பசிக்கிறேன்
சொல்
ரசிக்கிறேன்
கொல்
ருசிக்கிறேன்.
வழியில்
விழியால் சிரித்தாய்.
மரங்களெலாம் பூத்து
மண்ணெலாம் இனித்து
நீரெலாம் குளிர்ந்து
நீயின்றிப் பிறரிலை.
மலைச் சிகரங்கள்
கூழாங்கற்கள்.
எரிமலைத் தீ
எறும்புக் கடி.
இமயப் பனி
இலைநுனித்
துளி.
உன் பார்வை
பிரபஞ்ச விரிவு.
அலைகள்
கொந்தளிக்கும் ஆற்றில்
விழுந்த சிற்றிலை
போல்
நீந்திச் செல்கின்றன
உன் சொற்கள்.
வானவில் நிறங்களில்
இல்லா ஒரு
நிறம்
உன்
நீ.
இளங்காலைக் குளிர்த்தென்றல்
முதிர்காலைத் தெளிவொளி
முன்மதியப் பனிமழை
பின்மாலைக் கிளிக்கூட்டம்
அந்தியிரவு மலையிணைவு
நள்ளிரவு மெளனத் தூறல்
நாளும் இரவும்
நினைவின் பாரம்.
பொற்றேரில்
பயணிக்கும் இளவரசி
வெண்ணிலவில் வழியும்
அமுதை விரும்பினாள்.
மண்புழு நிமிண்டும்
மனமெனது.
2 comments:
எவ்வளவு ரசனையாக எழுதி உள்ளீர்கள்... (அனுபவித்து உள்ளீர்கள்...!)
ரசித்தேன் தோழர்...
நன்றிகள் தனபாலன்....
Post a Comment