Monday, September 18, 2017

நீலாம்பல் நெடுமலர்.20

காற்றில்
குளிர் கனத்திருக்கும்
உன் மாநகரில்
செம்பொளி
பொழிந்து
மௌனித்திருக்கும்
உன் வீதியில்
பனிசூடிய மலர்கள்சூழ்
உன் வீட்டில்
உன் மூச்சுக்காற்று
வட்டமிடும்
உன் அறையில்
வெண்ணுரை மெத்தை
இட்ட
உன் படுக்கை மேல்
கடல் நீலத்தில்
பூக்கள் வரைந்த
உன் போர்வைக்குள்
கதகதப்பாய்
உறங்குகிறாய்.

மேகங்கள்
விரைந்து நகரும்
இருள் விடிகாலை
வான் கீழ்
தனித்திருக்கிறேன்.
***

உன் வீடு
உன் இருப்பால்
உன் இன்மையால்
உன் சொற்களால்
உன் மௌனங்களால்
உன் சிரிப்புகளால்
உன் கண்ணீரால்
நிரம்பியுள்ளது.

நான்
உன்னால்
நிரப்பப்பட்டுள்ளேன்.
***

இம்மொழியிலா
நீ
வெளிப்பட்டாய்?

இச்சொற்களிலா
உனைப்
பேசினாய்?

உன்
இதழ்வழி
கசியும்
பேறுற்ற
மதுர பாவனைகள்
இவ்வார்த்தைகள் தாமா?

கனி மேலமர்ந்த
பழஈ போல்
நானும்
சுவைத்தினிக்கிறேன்.
***

No comments: