Friday, October 13, 2017

நீலாம்பல் நெடுமலர்.22.




சொன்னாலும் கேட்பதில்லை...

தித்திக்கும் சொல் ஒன்றை நீ விழிகளால் சொல்லிச் சென்ற பின், தூரத்து நிலவும் செம்மை பூண்டது. இன்றில் அன்றில் பறவைகள் இரண்டும் அலகுகளால் அலகுகளைக் கோதிக் கொண்டு திசைகளில் மிதக்கின்றன. பொற்சிறகுகள் விரித்த கன்னி தேவதைகள் மெல்லிய விரல்களால் என் கன்னம் வருடிப் போகின்றன. மழை வரப்போகிறதென கட்டியம் சொல்லி இரு பூமயில்கள் அகவுகின்றன. மேற்குத்திசை வானில் மேகங்கள் குழுமி மண்ணை நனைக்க யோசிக்கின்றன. சாலையோர மரங்களில் சின்னஞ்சிறு மஞ்சள் மலர்கள் தலையாட்டிச் சிரிக்கின்றன.

காற்றின் வெம்மை பனிக்குளிர் ஆகின்றது. தென்றல் இத்தனை நாள் எங்கிருந்தது? எங்கோ ஒளிந்திருந்த குயில் இப்போது எப்படி குரல் வழி எட்டிப் பார்க்கின்றது? இதோ, இந்த மாநகரப் பேருந்தின் காற்று ஒலிப்பான், காதல் ஒலிப்பானானது எம்மாயம்? பல்வர்ணச் சாலை விளக்குகள் மாறிமாறி ஒளிர்தல் ஒளிச்சிரிப்பாகத் தெரிவது எனக்கு மட்டும் தானா?

கூட்டத்தில் தொலைந்து போன இதயத்தைக் கைப்பற்றி மனம்பற்றி இதழ்பற்றி விழிபற்றி மீண்டும் என்னுடன் ஒட்டி வைத்துச் சென்றது ஒரு பசுங்கிளி. காலடியை மொத்தி மொத்தி முத்தமிட்டு ஓடிப் போனது ஒரு வெண்முயல்குட்டி. மூக்குகளால் முட்டிகளை உரசி நகரச் சொன்னது செம்மை அணிந்த பன்றிக்குட்டி. ராட்டினப் பெட்டியில் ரகசியமாய் விட்டு வந்த ஒரு பார்வை காற்றில் மிதந்து மிதந்து மெல்லச் சுழன்று, உன் தோடுடைய செவிகளைத் தொட்டு உள் நுழைந்ததா?

ஆயிரம் பேர் வந்தமர்ந்துண்டு செல்லும் காற்றில் நம்மைத்தேடிய நம் விழிகள், கண்டுகொண்டதும் மென் மின் அதிர்வு தீண்டினாற்போல் மெல்ல விலகுகின்றன. காற்றில் பார்வைப் பாதையின் தடத்தில் இசைக்கார்வைகள் இணைந்து இசைந்து இசைக்கின்றன நூறு வயலின்கள். கண்ணாடி ஜன்னல்களைத் தாண்டி வந்து நம் மேல் மட்டும் வீசுகின்றது குளிர்க்காற்று. பூக்களைச் சுமந்து வந்த புறாவொன்று தலை மேல் கொட்டிவிட்டு மணம் பரப்புதல் போல், ஓர் பார்வை வீணை நரம்பை அதிரச் செய்து இன்னிசை எழுப்புகின்றது.

ஒரு பொன்னொளிர்த் தருணத்தில் மீண்டு மீண்டுமொரு சொல் சொல்லச் சொல்லவில்லையா, உன் இரவுகளின் கனவுகளில் நதிக்கரை அமர்ந்து கதை சொல்லும் அக்கண்ணிலாக்கிழவி? சொல் தின்று பார்வை உடுத்தி கனவுகளை சுவாசித்து வாழும் ஒரு ஜீவனின் கைகளைப் பிடித்து மென்முத்தம் பதித்து ஒளிநிறைந்த உலகுக்கு அழைத்துச் செல்லச் சொல்லவேயில்லையா அக்கிழவித் தோள் மேல் அமர்ந்து தலையாட்டும் மலர்க்கொத்து ஒன்று?

No comments: