நீ அருகில் வருகையில்...
தண்மலர்கள் மட்டும் பூத்திருக்கும் மெல்லிரவில் ஒரு காலடி ஓசை கேட்டு விழித்தேன். சிலம்பணிந்தல்ல, கழல் சூடியதல்ல, கொலுசு கொண்டதல்ல, ஆயினும் தும்பி தேனருந்தும் கேளா சப்தம் அது. நிழல்களில் பதுங்கிச் செல்லும் பூனை போன்றது. சரிவில் ஒழுகிச் செல்லும் நீர்த்தாரை போன்றது. சருகில் உண்டு படுத்திருக்கும் நீளரவின் உடலுக்குள் ஆடு புரளும் ஒலி போன்றது. ஆயினும் கனவில் கேட்ட மென்னடை போன்ற நிரம்பிய கலத்தில் சொட்டிய இறுதித் துளி போன்று ஒலிக்க, வான் அசையா அவ்விரவில் அக்காலடிகள் ஏதோ ஒரு திசையிலிருந்து எங்கோ ஒரு திசைக்குச் சென்று கொண்டிருந்தன.
பாதையெங்கும் பாறைகள். உருண்டும் திரண்டும் சரிந்தும் சேர்ந்தும் விலகியும் ஒன்றியும் இடுக்குகளைச் சாரைகளுக்குக் கொடுத்து விட்டு கோடைகளையும் மழைகளையும் கண்டு கண்டு சலித்துச் சலித்து காலத்தின் நதிக்கரையில் தேங்கிக் கிடந்தன பலகோடி பாறைகள். நேரமது வழிந்த கோப்பை நுரைக்குமிழிகள் போன்ற ஒவ்வொரு சரளைக்கல்லும் மிதித்துச் சென்ற பல்லாயிரம் பாதச் சுவடுகளை ஒன்றன் மேல் ஒன்று அழுத்தி மண்ணில் புதைந்து போயிருந்த அப்பாதையில் அக்காலடிகள் சென்று கொண்டிருந்தன.
செல்திசை அறியாது கொள்பாரம் விலக்காது வான்மீன்கள் ஒரே நோக்கு கொண்டு நோக்கிய அவ்விரவில் இக்காலடிகள் எங்கு தான் சென்று சேரும்? வழியில் ஒரு வனமுண்டு; வனத்தின் நடுவே ஒரு குளமுண்டு; குளமெங்கும் குவலயத்தில் காணவியலா பொன்பூக்கள் பூத்திருக்கும் இப்போது. அங்கே தான் சென்றடையுமா இக்காலடி? ஒவ்வொரு பூவின் மகரந்தக் குவியத்தில் சென்றிறங்கி அடைய ஓர் உலகம் உண்டு. எவ்வுலகைத் தேரும் இக்காலடி? பூச்சிகள் மட்டுமே உலவும் பொன்னங்காடியா? பூக்கள் மட்டும் நிறைந்திருக்கும் மலர்சாடியா? வெண்முத்துக்கள் மட்டும் குவிந்திருக்கும் மஞ்ஞாடிபுரமா? காலடி சென்று கொண்டேயிருந்தது.
வனம் தாண்டி ஈற்றெல்லைப் புள்ளியான ஒற்றைத்துளசிச் செடிக்கு அப்பால் பெரும்பாலை அல்லவா விரிந்துள்ளது? மணல் மடிப்புகளால் வளைவுகள் நிரம்பிய என்றும் மென்புயல் அடித்துக் கொண்டிருக்கும் அந்நிலத்தில் எதை அடைய இயலும்? முட்செடிகளும், மாயநீர்த்திரைகளும், தனிமைச் சுனையும், பெருங்கழுகுகளும், நச்சூறி நாநுனியில் இருள் தேக்கித் துப்பக் காத்திருக்கும் கொல்லிகளும் நிரம்பிய அப்பழுப்பு நிலத்தில் ஏன் அக்காலடி செல்கிறது? எங்கு எதைச் சென்றடைய அது நிறைகுளிர்க் கடும் போர்வைகளைக் கிழித்துக் கிழித்துச் செல்கிறது?
நீராலான கோட்டையொன்று பாலையின் அந்நுனி தாண்டி ததும்பிக் கொண்டிருக்கின்றது. நுரைகளாலான தூண்களும் அலைகளாலான தரைப்பரப்பும் கொண்ட அங்கு உள்ளறைக்குள் இரு இளவரசிகள் சேர்ந்தும் தனித்தும் காத்திருக்கிறார்கள். வெண்ணிலவின் பிம்பம் போன்றொருத்தி. அலையும் கலையும் கணத்திற்கோர் உரு காட்டும் முகில் போலொருத்தி. நிலவுப்பெண் வெண்மை கொண்டிருப்பினும் விரவிய இருள் அணிந்தவள். முகில் நங்கை ஊடுறுவும் நிலவின் ஒளி பூசியவள். குளிர்ந்த சாளரத்தின் மேல் சாய்ந்து தூரத்து வெளியைப் பார்த்து அவர்கள் காத்துக் கொண்டிருப்பது, இக்காலடிக்குத் தானா? அதை அறிந்து தான் இக்காலடி இன்னும் கொஞ்சம் விரைவு கொள்கிறதா? அக்காலடியைக் கண்டதும் அது சொல்லும் ஒற்றைச் சொல்லைக் கேட்டதும் அவர்கள் என் செய்வர்?
நீர்த் தேசத்தின் அவ்விரு இளவரசியர் ஈரக் கோட்டையை நீங்கி, வெம்பாலையைத் தாண்டி, பல்லாயிரம் உலகங்களைப் பதுக்கி வைத்திருக்கும் ஒரு குளத்துப் பூக்களைக் கடந்து, பாதைப் பாறைகளை மிதித்து, இவ்விரவின் ஓசைகள் அடங்கியபின் ஒற்றைக் காலடி ஓசையை மட்டும் கேட்டுப் படுத்திருக்கும் இம்மனத்தை வந்தடைவரா?
No comments:
Post a Comment