இங்கென்றிரு. இன்றென்றிரு. என்றுமிருந்தாற் போல் ஒன்றென்றிரு. இல்லாதொழி. இன்மையழி. ஈரென்றொன்றையழி.
தேவி, முன்நிலவு காய்கின்ற இப்பின்னிரவுப் பொழுதில் படுக்கையில் ஆடைநுனியை விரல்களால் சுழற்றிச் சுழற்றி நீ எதற்காகக் காத்திருக்கிறாய்? கன்றெல்லாம் வீடணைந்தன. புள்ளெல்லாம் கூடணைந்தன. சப்தங்கள் எல்லாம் மீண்டும் மனமடைந்தன. அதிர்வுகள் எல்லாம் அமைதியுற்ற பின், ஊர் துயிலுக்குள் சென்றடைந்து விட்ட பின், என்ன நிகழ எதிர்பார்த்திருக்கிறாய்?
அறைக்குள் இரவை அணையும் ஒற்றைத்துளி விளக்கின் மென்நீலம் பனிக்காற்றின் குளிர் போல் விரவியிருக்கின்றதை உணர்ந்து கொண்டிருக்கிறாயா? சுவர்ப்பல்லிகள் சுற்றிச்சுற்றி வழுவழுப்பாக்கின காலத்தின் தடத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறாயா? அச்சதுரக்குமிழிக்கு வெளியே பிரபஞ்சம் கடுமிரவில் புதைந்துள்ளது. மெல்ல நடையிட்டு அறை கடந்த பின் அடைகின்ற விடுதலையை அறிய ஒரு மனமில்லையா உனக்கு?
குளிரலை வந்து வந்து ஈரம் பதிக்கின்ற நதிக்கரையில் நீ வரும் வழி பார்த்து அமர்ந்திருக்கிறேன். நண்டொன்று புள்ளிக்கால்கள் வைத்து நகர்ந்து நகர்ந்து மணல் அடிநீர் துளித்துளியாகத் துளிர்க்கச் செய்து அகன்று சென்று விட்ட பின்னும், சொட்டுகள் இன்னும் அங்கே தேங்கியிருக்கின்றன. வானெங்கும் கருமைத்திட்டுக்கள் முகிலென அலைகின்றன. மோக நிலவைத்தீண்டிச் செல்லும் இராத்துணி சிணுங்கல் இன்றி தெளிவாய் எரிக்கின்றது. தருக்களெலாம் தருக்கி நின்ற பகலைக் கைவிட்டு நாணி இலை தளர்த்திச் சரிந்திருக்கும் இவ்விரவில் உடுத்திய உடை தளர்த்தி இல்லா இடை தளர்த்தி தளைக்கும் தடை தளர்த்தி பெண்மை மலர்த்த நீ இன்னும் தயங்குவதேன்?
நேற்று மறைந்தது; நாளை இன்னும் இல்லை; இன்று இருக்கிறது. இவ்விரவு இனிக்கிறது. இப்பகலின் வெம்மையை வானிலிருந்து துரத்தி விட்டு, இரவில் தனித்திருப்பவர்க்குத் தள்ளி விட்டது இந்நாள். நேரமும் பொழுதும் கையிடுக்கில் நழுவும் நீர்த்தாரை போல் நீங்கி காணாமலாகின்றன. பாதை மறந்த தேனீ போல் அங்குமிங்கும் அலைபாய்வதேன்?
1 comment:
அருமை
Post a Comment