Friday, February 23, 2018

நீலாம்பல் நெடுமலர்.32.


நீரலைப் பெருக்கு.

நீர் வழிப் போகும் படகு போல், உன் சொல் வழி வழியும் என் வாழ்வு.

தேரெனத் தாவி ஏறிப் பீடத்தில் அமர்ந்து, ஆயிரம் புரவிகளைச் சாட்டையால் தீண்டிப் போகும் பயணத்தில் சாரதி நீ ரதி.

பெய்து கொண்டிருக்கும் மழைச் சாரலில் நனைகுடை நனையாதலை ஆக்கல் போல், சொல் தூறல்களில் நினையாது நினை யாதென்று கேளாய் நீ.

கோலப்பொடியில் புரண்ட சிற்றெறும்பு நடக்கும் வழியில் எழும் கோலத்தை அது அறியாது.

மேகங்களுக்கிடை மறைந்து குளிரும் நிலவைப் போல், விழிகளுக்கிடை சிக்கி இழுபட்டு பின் தொடர்கிறேன் உன்னை.

கோடை வெயிலுக்கஞ்சி மரநிழல் தேடும் கால்கள், கல் பாதைகளிலும் சலிக்காது தொடர்ந்து கண்டறியும் உன் இல்லத்தை.

கடலைக் கடந்து பறந்த ஒரு தொலைதேச வெண் பறவை மிச்சம் விட்டுச் சென்றது, காற்றில் அதன் நிழலை மட்டும்.

வேறல்ல நீ, வேரென்று அறி.

வானறியாதது புவியறியாது; கானறியாதது புள்ளறியும்;

ஒளி தேடிக் கொடி விரிக்கும் பசுமையாய்
மொழி தேடிச் சொல் விரிக்கும் உணர்ச்சியாய்
வழி தேடி விரல் பிரிக்கும் பாதங்களாய்
பழி தேடி உன் விழி தேடுகிறேன்.

வேந்தனெழா அவை போல்
வெந்ததெழா இலை போல்
சாந்தெழா நுதல் போல்
மீந்தெழா விருந்து போல்
மீண்டெழா வாழ்விதில்
நீண்டெழும் விரல் காட்டி, மீட்டாய்?

No comments: