Thursday, April 05, 2018

நீலாம்பல் நெடுமலர்.34.

பொற்சுடரொளிர் சிறகு.

ரும்பட்டு போர்த்திய நள்ளிரவில் குத்தி வைத்த கூர்நுனிகள் வெண்ணொளி சிமிட்டிக் கொண்டு பனித்துளிகளை இறக்கிக் கொண்டிருக்கின்றன. காற்றில் குளிர் பரவுகின்றது. சாம்பல் மேகங்கள் எங்கோ விரைகின்றன. தார்ச்சாலைகள் செம்மஞ்சள் நீரால் கழுவப்படுகின்றன. வால்களுக்குள் நாசி புதைத்து தெருநாய்கள் உறங்குகின்றன. நாற்சுவர்களுக்குள் சிறுபூச்சிகள் சுற்றியலைய துணைக்கு சில நினைவுகளுடன் என் விழிகள் சேரா ஈரிமைகளுக்கிடையே விழித்துள்ளன.

முன்னொரு நாள் பின்மாலையில் ஒரு சாலையோரம் மழை நின்று தேங்கியிருந்த சிறு நீர்த்தேக்கத்தில் கண்ட முகம் ஒன்று. செங்குங்குமம் சிறு தீற்றலோடு நீறு பூத்த நுதல். கொஞ்சமே கொஞ்சமே கூர் மழுங்கிய மூக்கினடியில் நடந்து வந்த வேர்வைப்படலம். அடிவான் சிவப்பில் ஈரிதழ்த்தாமரை. வரைந்து முடித்த பின் களைத்துச் சரிந்த தூரிகைப் பிசிறாய் இரு சுருள்முடிகள் செவிகளொட்டி.

சிறுகுளத்தின் எதிரெதிர்ப் புறங்களில் இருவரும். யார் இடம் விட்டு யார் விலகுதல் என்ற நொடிக்காலம் யுகமாய் விரிந்தது. தலைக்கு மேல் பச்சைக்குருவிகள் மிச்சத்துளிகளை நம் மேல் சிந்தின. தரைச்சேற்றில் சிறு புழுவொன்று தலை வளைத்து உடல் நெளித்துப் பழுப்புப் பாதையொன்றை உண்டாக்கியது. மேல்வானின் விளிம்பில் கூடுதிரும்பும் பறவைகள் இனிய ராகமெழுப்பி வானை நிறைத்தன.  பொன் முகில்கள் பூத்திருந்தன. பின்னின்ற வாகன ஒலி கனவைக் கலைக்க திசைகளில் விலகினோம்.

மற்றுமிரு நாளின் மதியப்பொழுது.

நகரின் மையப்பூங்காவில் கூட்டம் குறைவு. குளிர் ஊற்றிய வெயிலின் போதைக்கு பூக்களெல்லாம் சுருண்டு உறங்கின. இலைச்சுருள்களுக்கிடையில் மென் நூல் போல் ஒளிக்கற்றை உள் நுழைந்து தரை தீண்டியது. கற்சுவர்களுக்கு வெளியே எரிநீர் ஊட்டும் உயிரில் கரும்புகை உமிழும் பொன்னகரம். பேராலமரத்தினடி ஒரு களைப்புத்தாங்கிக் காலியில் அமர்ந்திருந்தேன். வானை எண்ணி, புவியை எண்ணி, நாளை எண்ணி. வெண் பருத்திக் கொத்து பூத்தாற்போல் ஒரு நாய்க்குட்டியைக் கையள்ளி நடந்து வந்தாய், ஒற்றைப் பாதையில். மென் ஆரஞ்சு மேலாடை. பூமார் மறையிடைவெளி மிகச் சிறிது காட்டிக் காய்ச்சல் தருவிக்கும் மையத்தில் மஞ்சள் பூவலங்காரம். சந்தனக்காற்று போன்ற மறையாடை. வெண் பால் போன்ற கால்நுனி வரை மறைக்கும் கீழாடை. நகம் மட்டும் காட்டும் காலணிகள். இளஞ்சிவப்புக் கன்னங்கள்.

பேடைச் சிறகுக்குவியும் வெண்மணிச் சொற்களைத் தேக்கி வைத்து களைப்புக்காலியிடத்து அம்முனையில் அமர்ந்தாய். கையில் புரண்ட நாய்க்குட்டி என்னைப் பார்த்து செல்லமாய்ச் சீறியது. சீறல் சிணுங்கலாக மெல்ல முகம் தடவினாய். தடவி நாய் மகிழ்வுகொள்ள கைநழுவி பச்சைகளில் விழுந்து எழுந்து உடல் நெளித்து, கண்டுகொண்ட சிறு பூச்சியொன்றைக் கவ்வும் முயற்சியில் களிக்கத் தொடங்கியது. தனித்தமர்ந்த உன்னைத் தாவியணைக்கும் கண்கள் கொண்டருந்தினேன்.

பகல் வந்த தேவதை. பருவம் குமிழ்க்கும் பூந்தளிர். மின்னல் பதித்த மீன்விழி. மிதந்து வந்த மோனலிஸ ஓவியம். மிருதுவாய்த் தலை கோதும் மிளிர்விரல்கள். பின்மதியச் சோம்பலுக்கு மருந்து புகட்ட வந்த மலர் மருத்துவச்சி. கூடணையும் குயில்நிழல். சீரணிந்த செந்தழல். செழுங்கனி சுமந்திளைத்த வழுவிடை கிளர்ந்த கிளிக்குஞ்சு. பொற்தேர் பவனி வரும் ரதித்துளி.

”என்ன சொன்னீர்கள்..?” என்று கேட்டாய்.

“என்ன..?” என்றேன் திடுக்கிட்டு. மனச் சொற்கள் மண் நிகழ்ந்து விட்டனவா என்ன?

“எனைப் பார்த்து ரதி என்றீர்..” என்றாய்.

“பொய் சொல்ல விரும்பவில்லை. அழகிய முகில் ஒளித்த நிலவென வந்த உங்களை ரதி என்று குறைத்தே சொன்னேன்..” என்றேன். தைரியத்தின் சாறு சோறாக அன்றி சிறு தூறலாக மேல் விழுந்ததன்று.

செய்தாயா இல்லையா என்றறியக்கூடாத வகையில் ஒரு புன்னகை செய்தாயா? இதழ்க்கோட்டி எனைக்கோட்டி ஆக்கினாய். செங்கழுத்து புல்புல் போல் ஒரு கூர்க்குரல் கொடுத்தாய். செடி மலர்த்தி தனைத் தளர்த்திய அப்பூங்குட்டி சிற்றலை எழுந்தெழுந்து அணைவது போல் தாவித்தாவி வந்தடைந்தது உன்னை. கையேந்தும் தாமரை போல் அள்ளிக்கொண்டாய் அதை. எழுந்து நடந்தாய்; எனைக் கடந்தாய். சற்று தூரம் சென்றதும் திரும்பிப்பார்ப்பாய் என்று எதிர்பார்த்த என்னை ஏமாற்றவில்லை நீ.

ரதிகள் மட்டுமே செய்யக்கூடிய ஒன்றைச் செய்தாய். இரு செவ்விதழ்கள் குவித்து சிறு இடைவெளி கொண்டு கண்களை மூடி காற்றில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டாய்; அவ்வீர முத்தத்தைச் சுமந்து வந்த பூங்காவின் அத்தென்றல் காற்று என்னை அடைவதற்குள் யுக யுகங்கள் கழிந்திருந்தன.

அம்மாலை அத்தனை இனிப்பானது; அவ்விரவு அத்தனை கனவுகளாலானது.

No comments: