நுரையொதுங்கும் வழியோரம் நாணல்கள் நனையும்;
நதிக்குளிரில் மணற்பொடிகள் நறுமுகிலாய்ப் புனையும்;
கரைபதுங்கும் சிறுநண்டு கால்பதித்து நடக்கும்;
கதிரழகின் கரமள்ளி யமுனாநீர் மினுக்கும்;
தரைகிழித்து மணலெழும்பும் தானியக்கூர் போலே
தண்ணீர்மே லாடைமேல் தாவும்மென் மீன்கள்;
குறையொழிக்கும் மழைசினைக்கும் மண்வாசம் அன்ன
மாசறுபொன் மங்கையராய் கோகுலத்தில் நாங்கள். (1)
ஆடல்வல் லாளொருத்தி; அணிந்த ஆடை
அவனிதொடாச் சுழன்றாட ஆகா என்போம்;
பாடல்நல் லாளொருத்தி; பாகாய் ஓட
பளிங்குத்தேன் எனக்கேட்டுச் செவியால் உண்போம்;
தேடல்தள் ளாளொருத்தி; தெளிந்து கற்றுத்
தீந்தமிழில் சொற்கண்டு தேங்கற் கண்டு;
மூடல்கொள் ளாளொருத்தி; திருவாய் ஓயா
முடியாத பேச்சுப்பெண் யானும் உண்டு. (2)
ஊடல்கொள் வோஞ்சில்நாள்; உம்மென் றூகூம்
என்றிருந்துப் பின்சேர்ந்து 'எல்லே' யென்று
கூடல்கொள் வோம்பல்நாள்; குதித்து நீந்திக்
குளமெனில் சேறுழப்ப, நதியோ நாணும்;
வாடல்தாங் கோமெம்முள் வருத்தம் மேவும்
வஞ்சியைத்தேற் றித்தளும்பும் கண்ணீர் மாதைச்
சாடல்செய் யோம்;கோபம் கொள்ளும் போது
சரண்புகுவோம் சரிசெய்வாள் தலைவி ராதை. (3)
(ராதைப் புகழ்)
பொற்கட்டித் தன்வண்ணம் பெறக்கேட்கும் அவளை;
பொழிலந்தி மஞ்சள்வான் புறங்காட்டும் எழிலை;
புற்கட்டில் பனிசேர்ந்த புத்துணர்வில் இளமை;
புதிதான விடிகாலைப் பார்வைகள் குளுமை;
விற்கட்டில் ஈரம்பை விடுத்தாற்போல் விழிகள்;
விளையாடும் குழலாடும் விழுமருவிக் கூந்தல்;
சொற்கட்டிச் சொலுந்திறனைச் சொந்தமென் போரிவள்
சொர்ணெழிலைச் சொலப்புகுமின் செந்தமிழும் சேந்தல். (4)
பூச்சொரிவாள்; புல்நடப்பாள்; புத்தாடை கட்டிடப்
புல்லரிப்பாள்; புலர்பொழுதில் பிள்ளைக்குப் பின்பால்
பீய்ச்சிடுவாள்; தோழியரெம் மோடிணைந்தா டிநதிப்
பாய்ந்திடுவாள்; நீந்திடுவாள்; நில்லாவிண் தேரொளிப்
பூச்சிடுவாள்; புன்னகையால் பண்ணிசைப்பாள்; புதுமலர்
பார்த்திட்டால் போதுமடி! பிள்ளையொன்றின் நினைவதை
மூச்சிடுவாள்; பேச்சிடுவாள்; பேதமையில் பித்தாக
மூழ்கிடுவாள்; மூர்ச்சிடுவாள்; மூளும் நினைவதை. (5)
(கண்ணன் புகழ்)
பைந்தார் அணிமார் பவழத் திருவணி
நைந்தார் துயர்த்தீர் யதுகுல - மைந்தா
ரிடையொரு மைநிறப் பெய்தார் மழைநீ
ருடைமின் னலுமவன் மேனி.
மயிலிற கின்கால் மகுடம தின்மேல்
எயில்வலு காண்மின் நுதலில் - பயில்சீர்
எழிலொளி தீண்டி எழுமது தண்கூர்
விழிகளை மீட்டும் முகம்.
முன்னொரு ராவில் மதியொளி மாந்திட
மண்ணுறு பாடியில் மங்கையர் - முன்னிரு
கைகொப்பி மாயவன் கண்ணிறை கண்ணனை
மெய்யொப்பிப் பாடினோம் கும்மி.
(கும்மிப்பாட்டு)
(தன்னன நாதினம் தன்னானே - தன்ன தன்னன நாதினம் தன்னானே...)
(எ.டு.: செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே..)
மங்கைய ரெல்லோரும் வாருங்கடி - அன்புத்
தங்கைய ரெல்லோரும் வாருங்கடி - வந்து
எங்கையில் உங்கையைச் சேருங்கடி - கும்மி
அடித்து அடித்துப் பாடுங்கடி (மங்கை..)
நந்த குமாரனின் ஒய்யாரத்தை - அந்த
நாகத்தைக் கொன்ற நாயகனை - அவன்
சிந்தை குளிர வாழ்த்துங்கடி - நல்ல
சீனி வார்த்தையில் வாழ்த்துங்கடி..! (மங்கை..)
முத்துக்களை அள்ளி சேர்த்தபின்னே - வெள்ளை
முல்லைப்பூ மாலையில் கோர்த்தபின்னே - அந்த
ரத்தின ராசனின் தோள்களிலே - ராச
லீலையின் போது சூட்டுங்கடி..! (மங்கை..)
மேகத்தைப் போலக் கருத்தவனே - வெள்ளி
மீன்களை அள்ளிப் பதித்தவனே - எங்கள்
மோகத்தைத் தொட்டுப் படித்தவனே - கொங்கை
மேலெல்லாம் முத்தங் கொடுத்தவனே..! (மங்கை...)
***
பொருள்::
சேந்தல் - சுருக்கம்
பைந்தார் - இனிய பூமாலை
எயில் - கோட்டை
நுதல் - நெற்றி
தண்மை - குளிர்மை
மாந்திட - குடித்திட
***
Picture Courtesy :: http://www.salagram.net/Newsletter-Shastra227.html,
http://www.lordkrishna.com/Lord_Krishna_1.jpg, http://www.salemhistory.net/images/art_river_scene.jpg
No comments:
Post a Comment