இந்த மழைக்குப் பின் வரப்போகும் குளிருக்கு இதமாக இந்த கணப்புக்கு அருகில் அமர்ந்து நாம் இருவரும் என்ன செய்வது? நூல் கண்டுகளைப் பிரித்துப் பிரித்து இரவில் ஒளிந்து கொள்ள ஒரே ஒரு குளிர்ப் போர்வையை நெய்வோமா? பாதி படித்து மடித்து வைத்த அந்த இரவின் புத்தகத்தை மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து படிப்போமா? இரவின் வானம் நிரம்பித் தளும்பும் அத்தனை நட்சத்திரங்களின் வெண்ணொளி பொழியும் அந்தக் கூரைக் கண்ணாடித் தடுப்பின் கீழ் அமர்ந்து ஆடைகளற்று நனைவோமா?
ரோஜாப் பூக்கள் மலர்ந்து நிரம்பியிருக்கும் இந்த அறைக்குள் உன் வாசம் மட்டும் காலைச் சுற்றும் நாய்க்குட்டி போல் சுற்றிக் கொண்டிருக்கின்றது. ரகசியமான ஒரு சொல் போல் அந்த மூச்சுக்காற்று என் காதோரம் ஒலிக்கும் அந்த கணங்கள் மட்டும் நிரம்பிய இந்த இரவில், நீ மூடி வைத்த மற்றுமொரு அறையைத் திறக்கிறாய். பழுத்துக் கனிந்த முன்னூறாண்டு பழைய மதுக்குப்பி போல் ஒரு இனிக்கும் முத்தம் ஒன்றை இடும் போது, நேற்றைப் போல் இந்த நிமிடமும் கனவென கரைந்து நிகழ்கின்றது.
வனம் இதன் நடுவில் குளிர்ந்திருக்கும் மரக்கூரையின் கீழ், நீல விளக்கொளி நடுங்கும் பின்னிரவில், காட்டுக்குருவிகள் சில்லிடும் ஓசை மட்டுமே எழும்பிக் கொண்டிருக்கும் ஈர நேரத்தில், இந்த கண்ணாடி ஜன்னலின் பின்னே பசுமை ஒரு பேரருவி போல் நிற்பதாய்க் காட்டிச் சரிந்து கொண்டிருக்க, மெழுகின் ஒளி மட்டும் இத்தனிமையின் சுவர்களில் வண்ணம் தீட்டிக் கொண்டிருக்க, தொலைந்து போவதன் தணுமையை எவ்வரிகளால் எழுதுவது?
சாரல் மழை மட்டும் மிஞ்சிப் பெய்து கொண்டிருக்க, அந்தி ஒளி மட்டும் அங்கே பூத்திருக்க, இரவு ஒரு நதி போல மென்மையாக வந்தணைக்கின்ற ஆகாயத்தின் பொன் கூடைக்குள் கோழிக்குஞ்சுகள் போல் அலகுகளால் கோதிக் கோதி, மென்மயிர்ப்பிசிறுகள் வர்ணக் குழைசல் காட்ட, பயறு விழிகளால் முட்டி முட்டி இள வெம்மை தீட்டிக் கொண்டு கூட்டிக் கொண்டு அலகிலா நெடுங்காலம் யுகங்கள் போல் நீண்டு சென்று கொண்டேயிருக்கின்றன.
எரிந்தெரிந்து அணைந்து விட்டு மடிப்பு மடிப்பாக சரிந்திருக்கும் மெழுகு விளக்குகள் மெளனித்திருக்கையில், பனி வந்து அப்பிக் கொண்ட கூரை மீது அமர்ந்து சேவல் கூவுகையில், கிழக்கின் வாசலுக்கு தினம் வரும் தேவன் வந்து கதவைத் தட்டுகையில், இலைகளில் இறுகிக் கட்டிய உறைபனி உருகிச் சொட்டுகையில், ஜன்னல் திரைகளில் மெல்லிய வெயில் ஊடுறுவிச் சிவக்கையில், ஓரிரவு கரைந்து வழிந்து சென்று விட்டதை உணர்ந்து எழுகிறோம்.
No comments:
Post a Comment