இணையதளத்தில்
துளித்துளியாய்
ஆடை விலக்கி
பரிநிர்வாணம் அடைபவள்,
அன்று
உடைந்த மூக்குடன்
தோன்றினாள்.
‘ஜென்னி, என்ன ஆயிற்று
உன் மூக்கிற்கு?’
என்று
வந்த 7713 பேரும் கேட்டார்கள்.
‘உடற்பயிற்சிக்கூடத்தில் தவறி
விழுந்து விட்டேன்’
என்று
அனைவருக்கும் சொன்னாள்.
‘மூக்கைத் துணியால் மறைத்துக் கொள்.
என் கற்பனைக்கு
அது இடைஞ்சல்
செய்கிறது’ என்றான் ஒருவன்.
‘மூக்கு சரியாகும் வரை
பின்புற போஸ் மட்டும்
காட்டு’ என்றான் மற்றொருவன்.
‘கேமிராவைக்
உதட்டுக்கு மேல்
கொண்டு போய் விடாதே’ என்றான் இன்னொருவன்.
பார்வையாளர்கள் எண்ணிக்கை
சட்டென 5320 ஆனது.
‘ஜென்னி,
இப்போது தான்
நீ இன்னும் அழகாய் இருக்கிறாய்.
மேகங்களில் மிதந்து கொண்டிருந்த
பொன்புறா,
மரக்கிளைமேல் வந்தமர்ந்தது போல்.
கைக்கெட்டும் அளவான அழகில்.’
என்றான் 4517-ல் மிஞ்சிய ஒரு கவிஞன்.
அவனுக்கு மட்டும்
இரு முத்த எமோஜிகளும்
ஒற்றைத் துளி கண்ணீர் எமோஜியும்
அனுப்பினாள்.
யாரும்
‘டேக் கேர்’
சொல்லவில்லை.
No comments:
Post a Comment