Thursday, May 23, 2019

இன்னும் எவ்வளவு தொலைவு? (A)



நிலவின் நுரை நிரம்பி வழியும் முன்னிரவு.  பசிய இலைகள் எல்லாம் இருளின் கரும் போதைக்குள் ஆழ்ந்து மெல்ல அசைந்து கொண்டிருந்த குளிரின் நேரம்.  பறவைக்கூடுகளில் நிறைந்த அமைதியின் கனம். வீதிகளில் சிதறியிருந்த தெருநாய்களின் சிறு முனகல்கள், பனியின் அழுத்தத்திற்குள் இறுகியிருந்தன. ஜன்னல்கள் அடைத்திருந்த வீடுகளின் வரிசைகளில் உறக்கங்களை உடுத்தி அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த வீட்டில் மஞ்சள் விளக்கொளியின் கீழே தனித்த அறைக்குள், நாமிருவர் செய்யப் போவது, செய்யக் கூடியது தான் என்ன?

கூர் நகங்களால் சுவற்றைக் கவ்வி மெல்ல நகரும் இந்த மரப்பல்லியின் சொரசொரப்பான முதுகின் மேல் தடவிக் கொடுத்தால் தான் என்ன? யாரும் தீண்டியிராத மின்விசிறியின் கரங்களை அழுத்திக் கொடுத்து, அதன் சுழலில் இறங்கினால் ஆகாதா என்ன? யாரிடமும் சொல்லி விடுமோ என மெல்லக் கீச்சிடும் முழுதாக மூட இயலாத கதவை, நிறுத்தக் கொடுத்திருக்கும் சிறு கல்லை மெல்ல நகர்த்தி, வெளியே பாயும் காற்றைக் கொஞ்சம், அனல் அடிக்கும் இச்சிறு அறைக்குள் வரவிட்டால் தான் என்ன? நிலவின் அமுதக் கிரணங்களை ஏந்தி, குறுகிய இடைவெளி வழியே சொட்டு சொட்டாய் இறக்கும் தென்னங் கீற்றுகளைச் சுழற்றி ஓடும் வாடைக் காற்றின் வாசனையை இங்கேயும் உள்ளே அனுமதிக்கலாமா?

கசங்காப் படுக்கையின் மேல் நவீன ஓவியம் போல் புரியா வரிகளை எழுதப் போகும் நம் அசைவுகள் தான் எத்தனை? திசைகளை சென்று அடையப் போகும் நம் ஆடைகளின் சுருண்ட மடிப்புகள், இப்போது அடைகாக்கும் அந்தரங்கங்களை இருளுக்கு காட்டப் போகும் நொடி தான் எது? ஒருவரும் தோண்டியிராத கிணற்றுக்குள் இருந்து, சூழ வளர்ந்திருக்கும் கருஞ்சருகுகளை விலக்கி, ஆழத்து நீரை இறைத்து இறைத்து தரையை நனைக்கப் போகும் காலம் தான் எத்தனை குறுகியது? பூமியெங்கும் ஊறியிருக்கும் ஈரத்தை ஈர்த்து வந்து, இழுத்து வந்து நுனிப்புள்ளியில் விண்ணைப் பார்த்து எழுப்பும் ஊற்றுப் புள்ளியை, எத்தனை நிமிடங்கள் தான் காத்து வைப்பது?

நீல மேகங்கள் குழுமிக் கொண்டிருக்கின்றன. அதற்குள் புதைந்து கொள்வதற்குள், அதன் மென்மைக்குள் தலை அமிழ்த்துக் கொள்ள, அதன் தீரா சுரப்புகளைச் சுவைத்துப் பெருமழை பெய்ய வைக்கும், வெம்மையின் நரம்போடும் இக்கைகளை, இச்சமயத்தில் எங்கு தான் வைத்துக் கொள்வது? அதன் விரல்கள், உள்ளங்கைகளுக்குள் வேர்த்து சொட்டும் வியர்வகளை நழுவ விடுகின்றன.

இந்த விழிகளை, இந்த நுனி நாசியை, இந்த செவ்விதழ்களை, இந்த பூமயிர் உலையும் பொன் கழுத்தை, இந்த அமுது நிறைத்து தளும்பும் நிறை மார்புக் குலைகளை, சரிவில் இறங்கும் கொப்பூழ்ப் பள்ளத்தை, உயிர் ஊறிச் சிலும்பும் பூமேடையை, செழும்தெழுந்துத் திமிறி நிற்கும் வலுத்தொடைகளை, தாங்கிப் பதிந்திருக்கும் பூம்பாதங்களை, மழைக்காலத்தில் பசுந்தோட்டங்களை வந்து வந்து மூடிக் குளிரில் நனைத்து, சிறுமழை பெய்து ஈரத்திலேயே வைத்திருக்கும் கருமுகில்களைப் போல், ஏன் இந்த வர்ண ஆடைகளுக்கும், மின்னும் நகைகளுக்குள்ளும் புதைத்து வௌத்திருக்கிறாய்?

ஒவ்வொரு திரையாக விலக்கி விலக்கி, ஸ்வர்ண சொரூபம் காணும் அந்த முதல் நொடிக்கு, இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும், நான்?

Monday, April 29, 2019

விடிகாலை.




விடிகாலை
இன்னும் முழுதாய்த்
துயில் கலையவில்லை.
முதல் உறவுக்குப் பின்
களைத்த
கன்னி போல்
முந்தைய இரவின் மழையீரம்
எழ விரும்பா சோம்பல்
திரண்ட கருமை
இருள் பூசிய பார்வை
வெங்கதிர் விரல்
வந்து
தீண்டும் வரை
வா,
இம்மேகப் புடைப்புகளின்
கீழ்
சற்றே
நிற்கலாம்
விழியிதழ் விரல்நுனி
கோர்த்துக் கொண்டு.

American Beauty.

ந்த ஒற்றை ரோஜா இதழ்ப்பிசிறு எங்கிருந்து வந்து என் மேல் விழுந்தது? சரியும் ஒரு பட்டுத் திரையின் மெல்லிய வழிதல் போல், சொட்டுச் சொட்டாய்ச் சேர்ந்த நீர்த்தாரை ஒன்றின் வடிதல் போல், நமக்கிடையே நிரம்பியிருக்கும் குளிர்க்காற்றின் அடுக்குகளில் மெல்ல மெல்ல தவழ்ந்து படர்ந்து கடந்து வந்ததா உன் காதலை ஏந்தி?
இதன் அடர்சிவப்பு, உன்னுள்ளில் சேர்த்து வைத்திருக்கும் என் மீதான ப்ரேமையின் மெளனத்தைச் சொல்கிறதா? இதன் மேலே புகை போல் விரவியிருக்கும் குளிர்மணம், முன்னிரவில் நீ கொடுத்த முத்தமொன்றின் ஈரம் போல அத்தனை இனிக்கிறதே?
மலரிதழ் நுனியை என் நாவால் தடவிப் பார்த்தேன். உன் மென்சருமத்தின் பூமுடி போல் அத்தனை கூச்சம்; ஒரு மென் சூடு;
கொஞ்சமாய்க் கிள்ளி சுவைத்தேன். உன் சிறிய இளம் மார்புகளுக்கு இடையில் வைத்து அனுப்பினாயா, என்ன? அதே நடுக்கம், அதே வியர்வை வீச்சம்.
ஒரு இதழ் போதாது; இந்த இரவை நிரப்ப, உன்னிலிருந்து அனைத்து இதழ்களையும் விடுவி. ரோஜா செம்மழை என் மேல் பொழியட்டும். அதன் புதர்களுக்குள் என்னைப் புதைத்துக் கொண்டு, இந்த வாழ்வை நீந்திக் கழித்து விடுவேன்.


விண்முழு துளிர்பூச்சிகள்.

கொல்லும் தனிநிலவின்
வெண்ணிழல்
பனிநனைக் குளிரின்
கூர்நுனி கிரணங்கள்
விண்முழு துளிர்பூச்சிகள்
வீசுகாற்றில் மிதக்கும் ஓசைகள்
கருநிழல் உண்ணும்
வெம்மை உலர் சுவர்கள்
இருள்நிறை இல்லங்கள்
ஒற்றையொளி அறைச்சதுரம்
பஞ்சடைத்த படுக்கை
துஞ்சிடா இரு விழிகள்.

மொழித்துணை பிடித்து
விழித்துனை நினைத்து
விரல்வழி வழி சொல்நிரை
முரல்வர்ணச் சிதறல்கள்

மண்மேல் வெகுதூரம்
தீண்டியும் விலகியும்
பேசியும் மெளனித்தும்
வளர் உறவிது தளிர் மரமிது
களர் நிலமிதில் கான் பசியது

நினைவலை மிதக்கும் படகினில்
இருமனம் உலவிய கதைகள்
ஒளிவிழும் சாலையில்
ஒழுகிய மாலைப் பொழுதுகள்
ஒருவரி இருவரும்
ஒருமித்துளறிய வியப்புகள்
சொல்லிலா பரிமாற்றங்கள்
மெளனத்தின் பங்குதாரர்கள்

இன்றுனை இழந்ததன்
இறுகிய கணங்களில் இருப்பு
இனியொரு முறை காணுதல்
இயலுமா என்றொரு மலைப்பு

இன்னுமொரு இவ்விரவு
உறக்கம் விலகிய களைப்பு
இன்றோடு விலகிடுதல்
என்றோ என்னும் தவிப்பு

மலரணிச் சிறுகூந்தல்
பரவிய படுக்கையில்
உறங்கிடும்  எழில்பரலே,
உன் கனவினில்
உலைந்திடும் பொன் வண்டென நுழைந்தனன்;
மனமெனும் குடுவைக்குள் மறைத்திடுக;
தினமொரு சிறு சிறகளிப்பேன்; சூடிப் பறந்திடுக.