Sunday, December 16, 2007

நாளை துவங்கும் மார்கழி...!



மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பரமாத்மா கீதையில் கூறியுள்ளார். அத்தகைய பேரும், புகழும், பீடும் உடைய மார்கழி மாதம் நாளை முதல் துவங்குகின்றது.

உறைய வைக்கின்ற குளிர், விசுவிசுவென்று வீசிக் கொண்டிருக்கும் ஊதல் காற்று, பால் மழையென அமுதைப் பொழிந்து கொண்டிருக்கும் வெண்ணிலா, ஈரக்காற்றெங்கும் பனித்துகள்கள் மிதந்து வருகின்ற அதிகாலை, ஊரெங்கும் உறக்கத்தின் பிடிக்குள் இறுகிக் கிடக்க...

தூரக் கோயிலின் தூண்கள் எல்லாம், ஒளி விளக்குகளால் நிரம்பி இருக்கும். அது மட்டுமா, இளம் சிறுமிகள், சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரின் பக்திப் பாடலாலும் நிரம்பி இருக்கும் திருக்கோயிலின் மண்டபங்கள்...!

அந்த திருநாட்களால் அமையப் பெற்ற மார்கழி மாதம் நாளை பிறக்கின்றது.

சுடச்சுடப் பொங்கலும், புளியோதரையும் மணமணத்துக் கொண்டிருக்கையிலும், மனம் அதன் பக்கம் செல்லாமல் கார்மேகவண்ணன், மணிவண்ணன், குழல் நாயகனின் திருப்பாதங்களை எண்ணி, கண்களில் அவனது திருக்கோலங்கள் நிறைந்திருக்க, வாய் திறந்து அவன் மேல் கொண்ட காதலை , அன்பை, பாசத்தை, பக்தியை ஆண்டாள் மொழிந்த மொழிகளில் நாமும் பாடப் பாட.... ஆஹா.. அந்த இன்பம் என்ன..? ஆனந்தம் என்ன..?

வாருங்கள்.. நாமும் அந்த தெய்வீகக் காதலின் மாகடலின் அலைகளில் நீராடுவோம்.

பெரும் அலைகள் வந்து மோதுகையில், பெரும் பாறைகளின் விளிம்புகளில் எல்லாம் பட்டு, தெறிக்கின்ற நுரைகளின் மேல் பயணம் செய்யும் இலைகள் போல், அந்த ஆண்டாள் பாடிச் சென்ற உயர் காதலின் வரிகள் மேல் நாமும் பயணிப்போம்.

Wednesday, December 12, 2007

ரொம்ப நாள் கழிச்சு...!

ன்னிக்கு தலைவரோட பிறந்தநாள். தலைவருக்கு 58-வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்ப்பா.

அப்புறம் இன்னொரு விஷயமும் சொல்லி விடுகிறேன். இப்போது தருமமிகு சென்னையில் இருந்து மலைநாட்டிற்கு வந்திருக்கிறேன். இன்னும் கொஞ்ச ஆண்டுகளுக்கு திருவனந்தபுர வாசம் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இந்த இடப்பெயர்வு பணிகள் இருந்ததால், இந்தப் பக்கம் அவ்வளவாக வர முடியவில்லை. இனிமேல் அடிக்கடி பார்க்கலாம்.

யாருப்பா அங்க.. சிச்சுவேஷனுக்கு சம்பந்தமா சாங்க் போடுங்கப்பா...

சரி.. அப்புறமா பார்க்கலாங்க...!

மலையாளக் கரையோரம்.

வர்ர்ர்ர்ர்ர்ட்டா...?

Friday, November 16, 2007

பழி.




ரு கன்னத்தை
அறைந்தால்
மற்றதைக் காட்டு
என்ற எண்ணத்தை
மிதித்துத்
தேய்த்து விடுகின்றன
கால்கள்,
அடுத்தவர் தன்னை மிதிக்கையில்!
கால்கள்
அறிவதில்லை
கன்னங்களின்
பெருந்தன்மை...!

Tuesday, October 23, 2007

எனது சுய சரிதை.



சிடி சென்டரில் வாங்கிய மற்றுமொரு புத்தகம், 'எனது சுய சரிதை'. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு.

எங்கள் தந்தையும் அவரது நண்பர்களும் அக்காலத்திலேயே 'சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம்' என்ற பெயரில், மன்றம் அமைத்து பல பணிகள் செய்துள்ளனர். திருச்சியில் ஒரு முறை நடந்த இரசிகர் மன்ற மாநாட்டில் கலந்து கொண்டு சிவாஜி அவர்களுடன் அருகில் நின்று புகைப்படம் எடுத்த போது, அவர் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே..!

அவர் தொகுத்த அப்போது வெளியான பாடல் புத்தகங்கள், புகைப்படத் தொகுப்பு ஆகியவற்றை இன்னும் நான் பத்திரமாக வைத்துள்ளேன்.

நாங்களும் அவருக்கு சிறிதும் சலிக்காமல், ரஜினியின் ஒரு பிறந்த நாளுக்கு தெருவெங்கும் மிட்டாய் கொடுத்து தூள் பரப்பினோம். அது அந்தக் காலம்...!

இந்தக் காரணங்களாலும், இயல்பாகவே சிவாஜி அவர்களது நடிப்பால் கவர்ந்திழுக்கப் பட்டதாலும், இந்தப் புத்தகத்தை வாங்கினேன். இன்னும் நினைவு இருக்கின்றது 'தங்கைக்காக' என்ற படத்தைப் பார்த்து விட்டு கொஞ்ச நேரம் அழுது கொண்டு இருந்தது...!

இது வரை படித்த வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் போல் இல்லாமல், இது வேறு மாதிரியாக எழுதப் பட்டு இருக்கின்றது.

டி.எஸ்.நாராயணசாமி என்ற எழுத்தாளர் அவரைப் பேட்டி கண்டு அதன் தொகுப்பாக இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது.

சிவாஜி அவர்களே, இந்நூலைப் பற்றி தன் கருத்தாக கூறியிருப்பது :

"என்னுடைய வாழ்க்கை ஒரு பரந்த கடல் போல. என்னுடைய கலையுலக வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், நான் எத்தனையோ கலைஞர்களையும் பெரியோர்களையும் சந்தித்திருக்கிறேன். அவர்கள் அனைவரையும் வரிசைப்படுத்தி, இந்த 'சுயசரிதையில்' குறிப்பிடுவது கடினம். எனக்கு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவங்களையும், என்னைப் பாதித்து, வியக்க வைத்த சில மறக்க முடியாத கலைஞர்களையும், பெரியோர்களையும் மட்டுமே, நினைவில் கொண்டு குறிப்பிட்டுள்ளேன். இதில் விட்டுப் போனவர்கள் எல்லோரும் என் நினைவில் வராவிட்டாலும், என் இதயத்தில் எப்பொழுதும் குடி கொண்டிருப்பவர்கள் என்பதைக் கூறிக்கொள்கிறேன்."

புத்தகம் : எனது சுய சரிதை

புத்தக வகை : வாழ்வுக் கதை.

ஆசிரியர் : திரு.டி.எஸ்.நாராயணசாமி.

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

விலை : ரூ.70.

பதிப்பகம் : Sivaji Prabhu Charities Trust, Royapettah, Ch - 14.