Sunday, December 16, 2007
நாளை துவங்கும் மார்கழி...!
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பரமாத்மா கீதையில் கூறியுள்ளார். அத்தகைய பேரும், புகழும், பீடும் உடைய மார்கழி மாதம் நாளை முதல் துவங்குகின்றது.
உறைய வைக்கின்ற குளிர், விசுவிசுவென்று வீசிக் கொண்டிருக்கும் ஊதல் காற்று, பால் மழையென அமுதைப் பொழிந்து கொண்டிருக்கும் வெண்ணிலா, ஈரக்காற்றெங்கும் பனித்துகள்கள் மிதந்து வருகின்ற அதிகாலை, ஊரெங்கும் உறக்கத்தின் பிடிக்குள் இறுகிக் கிடக்க...
தூரக் கோயிலின் தூண்கள் எல்லாம், ஒளி விளக்குகளால் நிரம்பி இருக்கும். அது மட்டுமா, இளம் சிறுமிகள், சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரின் பக்திப் பாடலாலும் நிரம்பி இருக்கும் திருக்கோயிலின் மண்டபங்கள்...!
அந்த திருநாட்களால் அமையப் பெற்ற மார்கழி மாதம் நாளை பிறக்கின்றது.
சுடச்சுடப் பொங்கலும், புளியோதரையும் மணமணத்துக் கொண்டிருக்கையிலும், மனம் அதன் பக்கம் செல்லாமல் கார்மேகவண்ணன், மணிவண்ணன், குழல் நாயகனின் திருப்பாதங்களை எண்ணி, கண்களில் அவனது திருக்கோலங்கள் நிறைந்திருக்க, வாய் திறந்து அவன் மேல் கொண்ட காதலை , அன்பை, பாசத்தை, பக்தியை ஆண்டாள் மொழிந்த மொழிகளில் நாமும் பாடப் பாட.... ஆஹா.. அந்த இன்பம் என்ன..? ஆனந்தம் என்ன..?
வாருங்கள்.. நாமும் அந்த தெய்வீகக் காதலின் மாகடலின் அலைகளில் நீராடுவோம்.
பெரும் அலைகள் வந்து மோதுகையில், பெரும் பாறைகளின் விளிம்புகளில் எல்லாம் பட்டு, தெறிக்கின்ற நுரைகளின் மேல் பயணம் செய்யும் இலைகள் போல், அந்த ஆண்டாள் பாடிச் சென்ற உயர் காதலின் வரிகள் மேல் நாமும் பயணிப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment