Friday, June 15, 2007

இயற்பியல் - காதலிப்பது ஏன்?


பாடங்களில் எனக்கு மிகப் பிடித்தது எதுவென்று யாராவது கேட்டால், கண்ணை மூடிக் கொண்டு நான் சொல்லும் பதில் இயற்பியல் என்பதாகத் தான் இருக்கும்.

ஜல்லி அடிப்பதற்காக இல்லையென்றாலும், சில விஷயங்களைச் சொல்லி விடுவது, எனக்கும் ஒரு பதிவாக இருக்கும் என்பதால், இங்கே..!

தெளிவாக நினைவில் இல்லையென்றாலும், இயற்பியல் மீது எப்படி எனக்கு ஈர்ப்பு வந்தது என்று கூறி விடுவது சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எங்கள் ஊரிலிருந்து, பள்ளிக்கு 16 கி.மீ. இருக்கும். 7-வதில் இருந்து, +2 வரை அங்கே தான் படித்ததால், ஆறு வருட படிப்பு முழுதும், பேருந்து பயணத்தின் மீதாகவே நடந்து வந்தது.

'படி தாண்டா பத்தினி' போல், படி நிற்கா 'பத்திரனா'கவே நான் பயணம் செய்வேன். ஏறி உள்ளே பாதுகாப்பாக ஒரு இடம் கிடைத்தால் போதும்... உட்கார்ந்து விடுவேன் என்று தானே நினைத்தீர்கள். அது தான் இல்லை, மூன்றடியால் உலகளந்த பெருமான் போல், பேருந்தின் மேற்கூரையையும், அடித்தளத்தையும் இணைத்து நிற்கின்ற கருப்பு பிடித்த கம்பியைப் பிடித்தவாறே, நின்று கொள்ளுவேன்.

'அண்ணன் இந்த பஸ்ஸில மட்டுமில்ல, தமிழ்நாட்டுல எந்த பஸ்ஸுல போனாலும் கம்பியைப் பிடிக்காம தான் நிப்பாரு'னு எந்த வெட்டி பந்தாவும் இல்லாம, கம்பி மீது சாய்ந்து கண் மூடி கனவு கண்டு வருவது, சுகமானது.

அதுக்காக பஸ்ஸில் கூட்டமே இருக்காது என்று நினைத்து விடாதீர்கள். கூட்டம் அள்ளும். பள்ளி மாணவர்கள் கூட்டம், சந்தைக்குப் போகும் கூட்டம், அரிசி மூட்டை, காய்கறிக் கூடை என்று அது ஒரு தினுசாகத் தான் போகும்.

அப்படி ஒருநாள் போகையில், ஒரு ஈ பஸ்ஸுக்குள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. நமக்குத் தான் எப்பவுமே வெட்டி மைண்ட் ஆச்சே.

'ஆமா.. இந்த ஈ எதையுமே பிடிக்காம , நம்ம கூடவே பஸ்ஸில் வருதே.. அது எப்படி..? நாம மட்டும் கம்பியைப் பிடித்தவாறே வர வேண்டியிருக்கிறதே.எப்படி? ஈயால் எதையும் பிடிக்காமல், பறந்து கொண்டே பஸ்ஸோடே வர முடிகின்றது?

காற்று உள்ளே வீசிக் கொண்டிருக்கின்றதே...? பேசாமல் அந்த ஈயிடமே கேட்டு விடலாமா ' என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டு வருகையில், நான் சிந்தித்துக் கொண்டே வருவதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப் படாமல், 'தடாரெ'ன்று வெளியே பறந்து, காணாமல் போனது, அந்த ஈ.

'என்னடா, இந்தப் பையன் ஏதோ நம்மைப் பற்றி நினைத்துக் கொண்டே வருகிறானே! நாம ஹெல்ப் பண்ணுவோம்'னு கொஞ்சமாவது நினைத்துப் பார்த்திருக்க வேண்டாம். 'அட, டிக்கெட்டே எடுக்காம ஓசியிலேயே 10 கி.மீ. பயணம் செய்து வந்திருக்கோம். இவன் நம்மளையே முறைச்சுப் பார்த்திட்டு வர்றான். அதுக்காகவாவது என்ன,ஏது என்று கேட்டுப் பார்க்கலாம் ' என்று ஒரு குற்ற உணர்வு கூட இல்லாமல் பறந்து போனது.

பல ஆண்டுகள் கழித்து, இதே போன்று பலரும் சிந்தித்துப் பார்த்திருக்கிறார்கள் என்று படிக்கையில், கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. 'நாமும் அந்த ரேஞ்சில்' இருக்கிறோம் என்று.

10-வது படிக்கும் வரை, ஒன்றும் ஸ்பெஷலாக ஆசை எல்லாம் இல்லை. மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக, அனைத்துப் பாடங்களையும் படித்து வந்தேன்.

10-வதில், 'ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்' என்று ஒரு ஆங்கிலப் பாடம் வந்தது. அப்படியே அள்ளிக் கொண்டது. எப்படி இந்த மனுஷன் இப்படி எல்லாம் திங்க் பண்ணி இருக்கார் என்று நினைத்துப் பார்ப்பதே இன்பமாக இருந்தது.

தோதாக, 10-வதிற்காகச் சென்ற கோச்சிங் வகுப்பில், வந்த எங்கள் இயற்பியல் ஆசிரியரும், அவர் போலவே இருக்கவே, ஒரு ஆசை வந்தது இயற்பியல் மீது.

ருமுறை ஈரோடு வேலா புத்தக நிலையம் சென்று ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று சென்றதில், கண்ணில் பட்ட முதல் புத்தகம் 'ஓரியண்ட் லாங்மென்' பதிப்பகத்தால், வெளியிடப்பட்டு இருந்த 'ஐன்ஸ்டீன்' புத்தகம். நல்ல மொழிபெயர்ப்பு. அவரது வாழ்க்கை வரலாறு. அவரது கண்டுபிடிப்புகள். உலக அமைதிக்காக அவர் நடத்திய போராட்டங்கள் என்று அவர் பற்றிய ஒரு முழுப் பரிமாணத்தின் சிறு ஒரு மாடல் அகப்பட்டது.

ஆனால் அது போன்ற புத்தகங்களின் விலையே 45ரூ.க்கு மேல் இருந்ததால், நான் கண் பதித்திருந்த ' கலிலியோ', 'பெஞ்சமின் பிராங்க்ளின்', ' நியூட்டன்', 'கெப்ளர்', போன்ற அந்த சீரியஸ் புத்தகங்களை வாங்க முடியாமல், ஏக்கத்துடன் அவற்றைப் பார்த்துக் கொண்டே, 'ஐன்ஸ்டீனை' மட்டும் எடுத்துக் கொண்டு வந்தேன்.

எனக்கும் அந்தப் புத்தகங்களும் ஒரு சோகத்துடனே என்னை 'போய் வா' என்று சொன்னது போல் நினைப்பு.


பிறகு ஒரு முழு வேகத்துடன் படிக்கத் தொடங்கிய 11, 12-ம் வகுப்புகளில், இயற்பியல் மட்டும் என்னை அப்படியே உறிந்து கொண்டது.

அதுவரை படித்திராத வலையில் இயற்பியல்.

காந்தம், கரண்டு என்று வழிவழியாகப் படித்து வந்தது போல் இன்றி, எடுத்த எடுப்பிலேயே, காந்தமும், கரண்டும் பாம்புகள் போல், பிணைந்து, பின்னிப் பெடலெடுக்கும், அந்த மாக்ஸ்வெல் பரிசோதனையின் படம் மற்றும் முதல் பக்கம் இன்னும் என் கண்களிலேயே நிற்கிறது.

அந்த முதல் பாடம் மட்டும் எத்தனை தடவை படித்திருப்பேன் என்று கணக்கேயில்லை. பரிட்சைக்காக இல்லை. ஃப்ரீ அவர் என்று வரும் போதெல்லாம், 'எல்லாரும் ஏதாவது எடுத்துப் படியுங்கள்' என்று அறிவுறுத்தப் படும் போதெல்லாம், நான் எடுப்பது இயற்பியலின் முதற்பாடமே!

படிப்பதின் இன்பம் அப்போது தான் புரிந்தது. அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், அந்தப் பாடம் படிப்பது மட்டுமே இன்பம் அளித்தது.

போதாக் குறைக்கு, 'சும்மா கிடந்த சிரங்கை சுரண்டி விட்டது' போல் வந்து சேர்ந்தது, கரிம வேதியியல் (Organic Chemistry). என்னய்யா பாடம் அது. ஒரே வட்ட, வட்டமா சுத்திக்கிட்டு.

கனவில் எல்லாம், அந்த இணைப்புகள் எல்லாம் தலையைச் சுற்றுவது போல் தோன்றும்.

பென்சீன் அமைப்பு பற்றி ரொம்ப யோசித்தும், ஒன்றும் ஒத்து வராமல், தூங்கப் போய் விட்டாராம் அறிவியல் அறிஞர். கனவில் ஒரு பாம்பு, அதன் வாலைப் பிடித்து விழுங்குவது போல் கனவு வந்ததாம். 'தடார்' என விழித்துக் கொண்ட நம்ம ஆள், பென்சீன் அமைப்பு வட்டம் போன்றது என்று சொல்லி பேர் தட்டிச் சென்றாராம்.

இப்படி ஒரு கதை சொல்லுவார்கள். நல்லாத் தான்யா கண்டுபிடிச்சார். பாம்பே தான். 'காலைச் சுத்தின பாம்பு கடிக்காம விடாது'ங்கற மாதிரி, இந்த கரிம வேதியியல், ஒவ்வொரு பரிட்சையின் போது தகராறு செய்யும்.

அதில் இருந்து நான் தப்பித்துக் கொள்ள 'உனைச் சிக்கெனப் பிடித்தேன் பராபரமே'ங்கற மாதிரி இயற்பியலை இறுக்கிப் பிடித்துக் கொள்ள, அது இன்னும் இறுக்கமாகிப் போனது; நெருக்கமாகிப் போனது.

முன்னாடி நடந்த கதை ஒன்று சொல்ல மறந்து விட்டேன். அதையும் சொல்லி விடுகிறேன்.

ங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு 'காமாட்சி அம்மன்' கோயில் உள்ளது. அங்கு ஒரு 'புத்தக பீரோ' இருந்தது. வழக்கமாக அங்கு என்ன இருக்கும் என்று நினைப்பீர்கள்?

திருமுறைகள், வாழ்த்துப் பா புத்தகங்கள், நன்கொடை இரசீதுப் புத்தகங்கள், கோயிலுக்கு வந்த பொன்னாடைகள், திடீர் வருகையாளர்களுக்குப் போர்த்த மஞ்சள் நிற பட்டாடைகள் என்று தானே?

அவையும் இருந்தன. அத்துடன் நல்ல புத்தகங்கள் பலவும் இருந்தன.

ஒருமுறை அங்கே சென்று குடைந்து கொண்டிருக்கையில் கையில் அகப்பட்டது, ஒரு புத்தகம்.

'அணுக்கள், மனிதன், விண்மீன்கள்'.

தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என்று அதை கேட்டு எடுத்து வீட்டுக்கு வந்து படிக்கத் தொடங்குகையில், 'எப்படி இருக்கிறாய் தம்பி' என்று உள்ளிருந்து எட்டிப் பார்த்துக் குதித்தது, இயற்பியல்.

(பணிக்குச் செல்ல வேண்டி இருந்ததால், இடைவேளை விட வேண்டியதாகப் போயிற்று.)

அந்த புத்தகத்தில் படித்த ஒரு கான்செப்ட், நன்றாக இன்னும் நினைவில் இருக்கிறது.

நாம் 3டி உலகத்தில் வாழ்கிறோம். நம்மால் அடுத்த பரிமாணத்தில் நினைக்கக் கூட முடியாது என்பதை அருமையாகச் சொல்லியிருக்கும் கான்செப்ட் அது.

நமக்கு 3டி உலகம் தெரியும். அதனால் நாம் நீளம், அகலம், உயரம் என்று வைத்துக் கொள்கிறோம். இப்போது 2டி மட்டுமே தெரிந்த மற்றுமொரு உலகம் (Parallel Universe..?) இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

அங்கே ஒருவன் ஒரு தவறு செய்து விடுகிறான் என்று வைத்துக் கொள்ளுவோம். அவனை சிறையில் அடைக்கிறார்கள். சிறை எப்படிப் பட்டது? வெறும் நீளம் மற்றும் அகலம் மட்டுமே உள்ள சிறை. உயரம் என்பதே கிடையாது. அதாவது சுவரே கிடையாது. கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நாம் அங்கு செல்கிறோம். நாம் தான் 3டி ஊர்க்காரர் ஆயிற்றே!

அங்கு சிறையில் அடைபட்டவனைப் பார்த்து சிரிக்கிறோம்.

'ஏண்டாப்பா..? இப்படி உட்கார்ந்துகிட்டு இருக்க? அப்படியே ஒரு ஜம்ப் அடிக்க வேண்டியது தானே' என்று நமது அறிவைக் காட்டுகிறோம். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

'இன்ன சொல்ற நீ..? ஜம்ப்னா இன்னா? என்னத் தான் ஜெயில்ல புடிச்சுப் போட்டாங்கல்ல..? அப்பாலிகா எப்படி ஜம்ப் அடிக்கறது? சும்மா உதார் வுடாத நைனா..?' என்கிறான்.

நாம் தலையில் அடித்துக் கொண்டு, அவனைப் பிடித்து நமது உலகத்தில் தூக்கிப் போடுகிறோம்.

'இன்னாபா..? மெய்யாலுமே நான் வெளிய வந்துட்டனா? இன்னா ஊரு இது? செம ஷோக்கா இருக்குபா..?' என்றவாறு நடையைக் கட்டுகிறான்.

அவனைப் பிடித்து அப்படியே அந்த 2டி உலகத்திலேயே வெளிக் கொண்டு வர முடியாது. ஏனெனில் அங்கே 3டி கிடையாது. எனவே நமது 3டி உலகத்திற்குத் தான் மாற்ற முடியும்.



இப்போது கதையைத் திருப்பிப் போடுவோம்.

4டி உலகத்தில் இருந்து ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். நம் ஊரில் ஒருவன் சிறையில் இருப்பதைப் பார்த்து என்ன செய்வார்? அவரும் சிரிப்பார்.

நமது 3டி அறிவை வைத்து, நாம் நீளம், அகலம், உயரம் உள்ள ஒரு சிறையில் வாடிக் கொண்டு இருக்கிறோம். அவர் என்ன செய்வார்? நம்மைப் பிடித்து அவரது உலகத்தில் தூக்கிப் போட்டுக் கொள்வார்.

நம்ம ஊர்க்காவலர்கள், திகைத்துத் தான் போயாக வேண்டும். வேறு வழி?

ப்படிப் போகின்ற கருத்துக்கள் நன்றாக இருக்கும்.

என்ன சொல்லியிருப்பார்கள் எனில், அணுக்களும் சுழன்று கொண்டிருக்கின்றன. விண்மீன்களும் சுழன்று கொண்டு இருக்கின்றன். இந்த இரண்டுக்கும் நடுவில் மனிதன் உள்ளான்.

நல்ல கதை இல்லை..?

ப்படி எனக்குப் பிடித்த இயற்பியல் பற்றி இது போல் நானும் கொஞ்சம் பேசலாம் என்று நினைக்கிறேன்.

இயற்பியலில் சுவாரஸ்யமான நிகழ்வுகள்!

வித்தியாசமான கண்டுபிடிப்புகள்!

தியரடிகல் இயற்பியலில் சிந்தனைக்கு பணி கொடுக்கும் கருத்துக்கள்!

என்றெல்லாம் ஒரு பயணம் போகலாம் என்று நினைக்கிறேன். எப்போதாவது நன்றாக இல்லை என்று யாராவது சொல்லுமிடத்தில் நிறுத்தி விடுகிறேன்.

நான் ஒன்றும் இயற்பியலில் வஸ்தாது இல்லை. உங்களுக்குச் சொல்லும் சாக்கில் நானும் கொஞ்சம் அவற்றைப் படிக்கலாமே என்ற நப்பாசை தான்.



என்று தலைவர் சொன்னது போல், பேசலாம்.

'மிழ்து', 'அமிழ்து' என்று தொடர்ந்து சொல்லிப் பாருங்கள். 'தமிழ்', 'தமிழ்' என்று மாறும். அப்படி அமிழ்தைப் போல் இனியது தமிழ் என்று சொல்லுவார்கள். அமிழ்தை யாரும் கண்டதில்லை, உண்டதில்லை என்பதால், தமிழையே நாம் உண்கிறோம். அதன் வழி அமரநிலை பெறுவோம்.

அது போல்,

'இயல் - பு - இயல் = இயற்பியல்' என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். திருப்பிப் படித்தாலும் அதுவே தானே வருகின்றது? அது தான் இயற்பியலின் மகத்துவம். வேறு எதற்கும் அந்தப் பெருமையைத் தரவில்லை தமிழ்.

வாருங்கள்.

நம் இயல்பின் இயலை அவ்வப்போது உணர்ந்து மகிழ்வோம்.

கைபேசிக் காதல்.



தொட்டால்
சிணுங்கும்
உனைப் போலின்றி,
தொடச் சொல்லி
சிணுங்குகிறது
உன் கைபேசி...!

தனித்து விடுகையில்,
எடுத்துக் கொள்ளச்
சொல்லி
அழுகின்ற
குழந்தை போல்,

அடிக்கடி
அழுது,
உன்னை அழைக்கிறது.

அன்பாய் அள்ளிக் கொண்டு,
மென் கன்னங்களில்
நீ
உரசிப்
பேசத் தொடங்குகையில்,

பட்டன் பற்கள்
எல்லாம்,
மினுமினுக்கச்
சிரிக்கிறது.

யுகம் யுகமாய்ப்
பேசியும்
தீராத
வார்த்தைகள்
கொண்டு
நாம் பேசும் போது,

மின்நரம்பின்
ஊடாகக்
கடந்து
பாய்கின்றது,
நம் அன்பு!

முன்னொரு நாள்
நாம்
சேர்ந்திருக்கையில்,
கனைத்து
நமக்குள்ளிருந்த
வெட்கத்தை
வெளிக் கொணர்ந்தது.

பின்னொரு நாள்
நாம்
பிரிந்திருக்கையில்,
கதறி,
நமக்குள்ளிருந்த
காதலை
நமக்கே காட்டியது.

Thursday, June 14, 2007

நம்பு தம்பி, நம்மால் முடியும்...!

தினம் கடந்து செல்கின்ற நாட்களில், கடந்து போகின்ற பாதைகளில் பீடு நடை போட்ட நாட்கள் சில உண்டு. தட்டுத் தடுமாறி கீழே விழுந்து, மூச்சு வாங்கி எழுகின்ற நாட்கள் சில உண்டு.

ஏதைத் தேடி ஓடுகிறோம் என்று தெரியாமல் தேடி, திக்குத் தெரியாமல் விழிக்கையில், சுற்றிப் பார்க்கையில் எல்லாம் இருட்டாய்த் தெரிகையில் எங்காவது சிறு ஒளி தெரியாதா என்று தவிக்கின்ற தருணங்கள்...

யாராவது கைதூக்கி விடமாட்டார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்து, ஏமாந்து தலையைத் தொங்கப் போடுகின்ற கணங்கள்...

சின்ன மின்மினியின் ஒளி...

பொட்டு பொட்டாய் மினுமினுக்கின்ற நட்சத்திரங்கள்...

எங்கோ ஒரு திசையில் தெரிகின்ற சின்ன விளக்கொளி..

இவற்றைக் காண்கையில், மனம் கடலில் தத்தளிக்கையில் இறுக்கிப் பிடித்துக் கொள்கின்ற மரக் கட்டை போல் பிடித்துக் கொள்கின்றது.

அந்த நாட்களில் நான் பிடித்துக் கொண்ட மரக்கலங்கள் இதோ, உங்கள் பார்வைக்கு...!

1.தோல்வி நிலையென நினைத்தால்...!



ந்த நாளிலும் மறக்கவே முடியாத பாடல். அடக்குமுறைக்கு ஆட்பட்ட தொழிலாளர் மீண்டும் போராட்ட உணர்வு பெறச் செய்யும் நிலை பற்றிய பாடல் என்றாலும், சோர்ந்திருக்கும் நிலைகளில், இதை கேட்கையில் 'எழுந்திருடா... தோல்வியைத் தூரப் போட்டு வீறு கொண்டெழு.." என்று ஒரு குரல் எனக்குள்ளே கேட்கத் தொடங்கும்.

பி.பி.சீனிவாஸின் குரலில் அற்புதமான போராட்ட வரிகள்.

வாழ்நாள் முழுதும் ஏதோ ஒன்றிற்காகப் போராட்டாம் செய்து கொண்டே இருக்க வேண்டி இருக்கின்றது. சமயங்களில் தன்னை எதிர்த்தே ஒருவன் போராட வேண்டி இருக்கின்றது. அந்த நேரங்களில் உள்ளே ஒலிக்க வேண்டிய முன்னேற்றப் பாடல்.

2.வ்வொரு பூக்களுமே சொல்கிறதே.



ந்தப் பாடலில் அந்த இசைக் குழுவினரைப் பயன்படுத்தியது, சேரனின் மசாலாக் கண் என்று யாரேனும் நினைத்திருந்தால், தயவு செய்து அதை மாற்றிக் கொள்ளுங்கள்.

படத்தின் சேரன் போல் அனுபவப்பட்டவர்களுக்கு இப்பாடல் எத்தகைய நெஞ்சுரத்தைக் கொடுத்தது என்று எனக்குத் தெரியும். ஊக்கம் பெற்ற பல நண்பர்களையும் தெரியும்.

சினிமா என்பது வெறும் இரண்டரை மணிநேரம் கழித்து மறந்து விடுகின்ற வடிவம் என்று இருந்த எனக்கு , இதயத்தோடு கலந்து எழுச்சியூட்டிய பாடல் என்பது என் நிழல் நேரங்களில் உடன் இருந்த நண்பர்களுக்குத் தெரியும்.

தேசிய விருது தராமல் இருந்தால், விருதிற்கான மதிப்பை இழந்திருக்க வேண்டியது, அவ்விருது. கொடுத்து தங்களுக்குச் சிறப்பு செய்து கொண்டார்கள்.

3.வெற்றி நிச்சயம்.



லைவருக்காக இல்லாவிட்டாலும் இந்தப் பாடல் எனக்கு மிகப் பிடித்தப் பாடல். வேறு யார் நடித்திருந்தாலும் இந்தளவிற்குச் சிறப்பாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே.

பள்ளி நாட்களில், மனதில் உத்வேகத்தைக் கொடுத்த பாடல்களில் இதுவும் ஒன்று.

3.ன்னால் முடியும் தம்பி.


Get Your Own Music Player at Music Plugin

இப்பாடலைப் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன?

4.வெற்றிக் கொடி கட்டு.



ல்லூரிக் காலத்தில் ஏற்பட்ட சில திடீர் நடுக்கங்களில் தடுமாறி விழுந்து விடாமல் காப்பாற்றிய சில சக்திகளில் இப்பாடலும் ஒன்று.

தலைவரது இது போன்ற 'ஒரு பாட்டு முடிவில் ரிச்' பாடல்களைப் பலர் கேலி செய்திருந்தாலும், தேவை இருக்கின்றவர்களுக்கு இது போன்ற பாடல்கள் பூஸ்ட் என்பது, அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.

திவிற்குத் தலைப்புக் கொடுத்து உதவிய எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களுக்கு என்றும் நன்றிகள்.

இந்தியா எழுச்சியுறாத காலத்திலும், 'எண்ணங்கள்' என்றொரு அற்புதமான புத்தகம் தந்ததன் மூல, தமிழ் இளைஞர்களின் கனவுக்கு கால்கோள் இட்ட ஐயா எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

Sunday, June 10, 2007

கொஞ்ச நேரம் இருக்கட்டுமா, அப்பா?




கொஞ்ச நேரம் இருக்கட்டுமா, அப்பா?

உருக்கும் வெயில்,

அரசுக் கோப்புகள் போல்
மெதுவாய் நகர்கின்ற
வாகனங்களால் நெருக்குறும்
நகரச் சாலை,

அருகு இல்லத்தின்
அடையாளம் தெரியாத
அட்டைப் பெட்டி வீடுகள்,

தாத்தா,பாட்டி
இல்லாத
தனித்த நேரங்கள்,

குடைமிளகாய்
காயப்போட்ட
மாடிகளில்,
வலைக்குடை
விரித்த
புறாக்குண்டு மாளிகைகள்,

அலை நனைக்கின்ற
கரை சென்றும்
அனல் கரைக்கின்ற
மாலை நேரங்கள்,

யாவும் இல்லாத
இடம் கண்டேன்.

மஞ்சள் வெயில்
மலர்கின்ற காலம்,

மயக்கும்
தென்றல் தொடுகின்ற காடு.

கிளை கிளையாய்,
அலை அலையாய்,
பரப்பி நிற்கின்ற
நெடு மரங்கள்
நிறைந்த காடு.

சலசலவென நீரோடை
பாய்ந்து,

ஜலஜலவென தலையாட்டும்
பூக்கள் நிறைந்த
இந்தக் காடு.

போதுமப்பா எனக்கு,

ஓவியமாய் இருந்த போதிலும்
ஒரு பொழுது
இருந்து விட்டு
வருகிறேன்,
இன்றைக்கெல்லாம்...!

Saturday, June 09, 2007

இருக்கா... இல்லையா..?



மேலே உள்ள காமெடியை பார்த்து ரசித்தீர்களா..? நன்றாகச் சிரித்தீர்களா..? நன்று. சிரிப்பை நிறுத்துங்கள். நான் சொல்லப் போவது, கொஞ்சம் சீரியசான மேட்டர் தான்.

"பேய் இருக்கா இல்லையா" என்று வடிவேலு கேட்பாரே, அது போல் உங்களைக் கேட்கிறேன். உங்களுக்கு அனுபவம் ஏதாவது இருக்கிறதா..?

என் அனுபவத்தில் உணர்ந்த ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.

சிறு வயதில் எல்லோரையும் போல் தான் எனக்கும் பயம். இரவில் தனியாகப் போக பயம். கரண்ட் போய் விட்டால் , வீட்டிலேயே இருக்க மாட்டேன். உடனே தெருவிற்கு ஓடி வந்து விடுவேன். விளக்கு பற்ற வைப்போம் என்ற எண்ணமும் தோன்றாது. நள்ளிரவுக்கு மேல், பக்கத்தில் இருக்கின்ற வேறொரு அறைக்கு கூட போக மாட்டேன். ஆறாவதோ, ஐந்தாவதோ படிக்கும் போது 'உருவம்' படத்திற்கு அப்பாவோடு போய், படம் பார்த்த வரையில், வாட்டர் பாட்டில் கொண்டு சென்ற பிளாஸ்டிக் கூடையை முகத்தில் மறைத்து, அதன் இடுக்குகள் வழியே திரையைப் பார்த்தேன். இடைவேளையின் போதே, 'விட்டால் போதும்' என்று ஓடி வந்தேன். (இதற்காகத் தனியாகப் பாட்டு வாங்கியது தனி.)

இந்தி டியூஷன் செல்லும் போது, சாரின் கடைசிப் பையன், வெண்டைக்காயின் காம்புகளை முகம் முழுதும் ஒட்ட வைத்து, 'திடீர்' என்று முன்னால் வந்து நிற்க, 'உருவம்' மோகன் தான் நினைவுக்கு வந்தார். விழுந்தடித்து, மேலிருந்து கீழே ஓடி வந்தேன்.

'நாளைய மனிதன்' என்றொரு கதையை அப்பா சொல்கையில், ஓடோடி வந்து வீட்டுக்குள் புகுந்து கொண்டதுண்டு.

இதையெல்லாம் எல்லோர்க்கும் ஏற்படும் அனுபவங்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் முதன்முதலாய் கேள்விப்பட்டிராத அனுபவம் ஒன்று ஏற்படுகையில், ஆடிப் போய் விட்டது தான் இனி சொல்லப் போவது.

ட்டாவதோ, ஒன்பதாவதோ படிக்கையில், தனியறை கொடுத்து விட்டார்கள். இரும்பு கட்டில், பெட் என்று.

ஒருநாள் இரவு இரண்டு மணி வரை படித்து விட்டு, உறங்கச் செல்கிறேன். எப்போதும் எதிரில் இருக்கும் ஒரே ஒரு ஜன்னலைச் சாத்தி விட்டு தான் உறங்குவேன். நமக்கு வெளிச்சம் துளிகூட இருக்கக் கூடாது. தூக்கம் வராது. 'டக்'னு துளி சத்தம் கூட கேட்கக் கூடாது. உடனே தூக்கம் கலைஞ்சிடும்.

ஆனா அன்னிக்கு நல்ல நிலா வெளிச்சம். பெளர்ணமியானு ஞாபகம் இல்லை. அப்படியே இளம் நீல வெளிச்சம் ஜன்னல் வழியா வந்து கொண்டிருந்தது. லேசா காத்து வேற வீசிக் கொண்டிருந்தது.

'சரி, ஒரு நாள் ஜன்னலைத் திறந்து வெச்சு தான் தூங்குவோம்' என்று ஜன்னலைத் திறந்து வைத்தவாறே படுத்தேன். எப்போதோ மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் படித்த 'மாரல் சயின்ஸில்' இந்த மாதிரி ' தூங்கும் போது , ஜன்னலைத் திறந்து வைத்து தான் தூங்க வேண்டும் என்று படித்திருந்தது, அன்றைக்குப் பார்த்து ஞாபகம் வந்து தொலைத்தது.

ஜன்னலைத் திறந்து வைத்தவாறே, நீல வெளிச்சத்தைப் பார்த்தவாறே படுத்தேன். 'மல்லாந்து படுக்கற்துல என்ன சுகம்' என்று எண்ணியவாறே, கண்களை மூடியது தான் தாமதம்.

என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

விரிந்தவாறே இருந்த கைகளையும், கால்களையும் யாரோ இறுக்கப் பிடித்துக் கொண்ட உணர்வு. அவற்றை துளிக் கூட அசைக்க முடியவில்லை. கண்களைத் திறக்கப் பார்க்கிறேன். ம்ஹூம்... கொஞ்சம் கூட நகர்த்த முடியவில்லை.

கண்களைத் திறக்க வேண்டும், கை, கால்களை அசைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அந்த நினைவு நன்றாக வேலை செய்கிறது. ஆனால், உடலை மட்டும் அசைக்க முடியவில்லை.

பயங்கரமான அதிர்ச்சி.

நிஜமாகவே ப்ரும்பாடு பட்டு, கை, கால்களை அசைத்தேன். 'தடார்' என்று எல்லாம் ஒழுங்காயிற்று. கை, கால்களை அசைக்க முடிந்தது. கண்களைத் திறந்து பார்த்தேன். அதே நீல வெளிச்சம் ஜன்னல் வழியாக விழுந்து கொண்டிருந்தது.

இதயம் எப்படித் துடித்தது என்று அப்போது எனக்குத் தான் தெரியும்.

விழுந்தடித்துக் கொண்டு ஓடி, அப்பாவிடம் சொல்லி, நெற்றி நிறைய திருநீறு பூசி, அங்கேயே படுத்துக் கொண்டேன். பிறகு வரவில்லை.

இது தான் 'பேய்' என்று எனக்குப் புரிந்து போனது.

அப்புறம் கொஞ்ச நாளைக்கு அது போல் எதுவும் நடக்கவில்லை. ஆனால், ஜன்னல் மட்டும் நான் இரவில் தூங்கும் போது திறக்கவேயில்லை.

10-வது படிக்கையில், மீண்டும் 'அது' வந்தது.

ங்கள் பள்ளியில், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும் , இறுதித் தேர்வு நேரங்களில் பள்ளியிலேயே இரவு தங்கி படிக்க அனுமதிப்பார்கள். வீட்டுச் சூழல் படிப்பைப் பாதித்து விடக்கூடாது என்பதற்காக.

அப்படி ஒரு நாளின் இரவு.

உட்காரும் பெஞ்சுகளை எல்லாம் இழுத்துப் போட்டு, ஒரு படுக்கை மாதிரி செய்து, அதன் மேல் பெட்ஷீட்டை விரித்துப் படுத்தேன். உஷாராக, எல்லா ஜன்னல்களையும் சாத்தி விட்டுத் தான். பிற மாணவர்கள் வெளியே படுத்துக் கொண்டார்கள். நான் ஏன் வெளியே படுத்துக் கொள்ளவில்லை என்று சரியாக நினைவில் இல்லை.

நினைத்துப் பாருங்கள்.

பெரிய வகுப்பறையில், நான் மட்டும் தனியாக. எல்லா ஜன்னல்களையும் அடைத்தாகி விட்டது. அறையின் விளக்குகள் எல்லாவற்றையும் அணைத்து விட்ட பிறகு, வகுப்பறையே முழு இருட்டில் மூழ்கியது.

கிராமத்துச் சூழலின் இரவுக்கே உரிய, சில்வண்டுகளின் ரீங்காரங்கள், எப்போதாவது கடக்கின்ற கரும்பு ஏற்றிய மாட்டு வண்டியின் சக்கரச் சத்தங்கள், தூரத்தில் தொடர்ந்து குலைத்துக் கொண்டேயிருந்த தெருநாயின் ஓலக் குரல், வெளி ஜன்னல்களின் இடுக்குகள் வழியே கசிகின்ற நிலவொளி...

ஏதோ கனவு கண்டு, முடிக்கும் போது, 'அது' பிடித்தது.

என்ன செய்வதென்றே தெரியவில்லை.

மீண்டும் போராட்டம்.

ஒரு நொடியில், சடாரென்று கயிறு அறுந்து, கண் திறந்தேன். மூச்சு பலமாக வாங்கியது. கண்களை மூடினாலோ, நெஞ்சு துடிக்கின்ற சத்தம், கண்களை திறந்தாலோ கருகும்மென்ற இருட்டு...

எந்த மூலையில் என்ன இருக்கின்றதென்றே தெரியவில்லை.

அடித்துப் பிடித்து ஓடி கதவைத் திறந்து வெளியே வந்து படுத்துக் கொண்டேன்.

தோ இரவில் மட்டும் தான் 'அது' வரும் என்று நினைத்து விடாதீர்கள்.

ஒரு நாள் ,சனிக்கிழமை மதியம். 12:30க்கு மேல் இருக்கும். இன்னொரு நண்பனுடன் பஸ்பாஸ் எடுக்க ஐ.ஆர்.டி.டி. செல்வதாகத் திட்டம். அவன் வரும்வரையில், கொஞ்ச நேரம் கண் மூடலாமே என்று, கீழே படுத்தவாறு, சோபா மேல் காலைத் தூக்கிப் போட்டு, கண் மூடினேன்.

'அது' வந்து விட்டது.

பின், விடுபட்டவுடன் பார்த்தால், அவன் வந்திருந்தான். அவனோடு மதிய உணவு உண்கையில், இதைப் பற்றிக் கூறினேன். அப்போது, அவன் கூறினான். அவனுக்கும் இது போல் ஆவதுண்டு, இது உடலிலிருந்து வலி வெளியே போகின்றதென்று சொன்னான்.

வித்தியாசமாக இருந்த கருத்து.

பின்பொரு நாள், சுஜாதாவின் 'ஏன், எதற்கு, எப்படி' ஏதோவொரு பாகம் படிக்கையில், அவர் ஒன்று குறிப்பிட்டு இருந்தார்.

'பல பேருக்கு வருகின்ற இதற்கு பேர் 'அமுக்கான்'. இதற்கு காரணம், தூக்கத்தில் இருந்து விழிக்கும் போது , உடல் உறுப்புகளின் விழிப்பும், உள்ளத்தின் விழிப்பும் ஒரே நேரத்தில் நிகழ வேண்டும். அப்படித் தான் எப்போதும் நிகழும். அவ்வாறு இல்லாமல், இரண்டின் விழிப்புகளுக்கும் இடையில், மைக்ரோ செக்ண்ட் அளவில் இடைவெளி இருக்கும் போது, உணர்வு முதலில் விழித்துக் கொள்ளும். ஆனால் உடல் இன்னும் விழித்துக் கொள்ளாததால், நம்மால் உடலை அசைக்க முடியாமல் போய்விடுகின்றது' என்று கூறியிருந்தார்.

இந்த விளக்கம் தான் 'அது'வா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

பின் கல்லூரியில் சேர்ந்து, பசங்களோடு இருக்கும் அறைகளிலும், தனியறை கொடுத்த பின்னும், வேலையில் சேர்ந்த பின்னும், இன்னமும் கூட 'அது' அடிக்கடி வந்து அட்டெண்டென்ஸ் போட்டு விட்டுச் செல்கின்றது.

சிலசமயம், முயற்சிக்காமல் அப்படியே விட்டால் என்ன என்று சும்மா கை, கால்களை அசைக்க முயற்சிக்காமல் இருப்பேன். பின் கொஞ்ச நேரம் (மைக்ரோ செகண்டு தானோ ? நமக்கு தான் ரிலேட்டிவிட்டி தியரிபடி கொஞ்ச நேரமாகத் தோன்றுகிறதோ..?) கழித்து, பயம் வந்து முயற்சித்து விட்டு விடுதலையாவேன்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால், இது எல்லோர்க்கும் ஏற்படுகின்ற விஷயம் என்றால், ஏன் இது நாள்வரை அதைப் பற்றி ஏதும் நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்? இதனை யாராவது ஆராய்ந்து இருக்கிறார்களா?

நாம் முயற்சியே செய்யாமல் விட்டால், அதுவாகவே நம்மை விட்டு போய் விடுமா..? இதைப் பற்றி மருத்துவ வரலாறு என்ன சொல்கின்றது?

நம் பெரியோர்கள் இதைப் பற்றி ஏன் நம்மிடம் சொல்வதில்லை? 'அவனவனே அனுபவித்துத் தெரிந்து கொள்ளட்டும்' என்று விட்டு விட்டார்களோ?

இன்னும் புரியாத (எனக்கு) மர்மமாகவே இது இருக்கின்றது.

ஒருவேளை உயிர் பிரியும் போது, இப்படித் தான் இருக்குமோ? அதற்கான டெமோ தானோ, இப்படி வருவதெல்லாம்? இதைப் பற்றி சொல்லி வைத்தால், மனிதன் பயத்திலேயே உயிரை விட்டு விடுவான் (அப்போதும் இதே முறையிலா..?) என்று தான் பெரியவர்கள் மறைத்தார்களோ..?

ஒண்ணுமே புரியலப்பா.

'அது' பேயாகத் தான் இருக்க வேண்டும் என்று தான் இன்னமும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.