Saturday, June 09, 2007
இருக்கா... இல்லையா..?
மேலே உள்ள காமெடியை பார்த்து ரசித்தீர்களா..? நன்றாகச் சிரித்தீர்களா..? நன்று. சிரிப்பை நிறுத்துங்கள். நான் சொல்லப் போவது, கொஞ்சம் சீரியசான மேட்டர் தான்.
"பேய் இருக்கா இல்லையா" என்று வடிவேலு கேட்பாரே, அது போல் உங்களைக் கேட்கிறேன். உங்களுக்கு அனுபவம் ஏதாவது இருக்கிறதா..?
என் அனுபவத்தில் உணர்ந்த ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.
சிறு வயதில் எல்லோரையும் போல் தான் எனக்கும் பயம். இரவில் தனியாகப் போக பயம். கரண்ட் போய் விட்டால் , வீட்டிலேயே இருக்க மாட்டேன். உடனே தெருவிற்கு ஓடி வந்து விடுவேன். விளக்கு பற்ற வைப்போம் என்ற எண்ணமும் தோன்றாது. நள்ளிரவுக்கு மேல், பக்கத்தில் இருக்கின்ற வேறொரு அறைக்கு கூட போக மாட்டேன். ஆறாவதோ, ஐந்தாவதோ படிக்கும் போது 'உருவம்' படத்திற்கு அப்பாவோடு போய், படம் பார்த்த வரையில், வாட்டர் பாட்டில் கொண்டு சென்ற பிளாஸ்டிக் கூடையை முகத்தில் மறைத்து, அதன் இடுக்குகள் வழியே திரையைப் பார்த்தேன். இடைவேளையின் போதே, 'விட்டால் போதும்' என்று ஓடி வந்தேன். (இதற்காகத் தனியாகப் பாட்டு வாங்கியது தனி.)
இந்தி டியூஷன் செல்லும் போது, சாரின் கடைசிப் பையன், வெண்டைக்காயின் காம்புகளை முகம் முழுதும் ஒட்ட வைத்து, 'திடீர்' என்று முன்னால் வந்து நிற்க, 'உருவம்' மோகன் தான் நினைவுக்கு வந்தார். விழுந்தடித்து, மேலிருந்து கீழே ஓடி வந்தேன்.
'நாளைய மனிதன்' என்றொரு கதையை அப்பா சொல்கையில், ஓடோடி வந்து வீட்டுக்குள் புகுந்து கொண்டதுண்டு.
இதையெல்லாம் எல்லோர்க்கும் ஏற்படும் அனுபவங்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் முதன்முதலாய் கேள்விப்பட்டிராத அனுபவம் ஒன்று ஏற்படுகையில், ஆடிப் போய் விட்டது தான் இனி சொல்லப் போவது.
எட்டாவதோ, ஒன்பதாவதோ படிக்கையில், தனியறை கொடுத்து விட்டார்கள். இரும்பு கட்டில், பெட் என்று.
ஒருநாள் இரவு இரண்டு மணி வரை படித்து விட்டு, உறங்கச் செல்கிறேன். எப்போதும் எதிரில் இருக்கும் ஒரே ஒரு ஜன்னலைச் சாத்தி விட்டு தான் உறங்குவேன். நமக்கு வெளிச்சம் துளிகூட இருக்கக் கூடாது. தூக்கம் வராது. 'டக்'னு துளி சத்தம் கூட கேட்கக் கூடாது. உடனே தூக்கம் கலைஞ்சிடும்.
ஆனா அன்னிக்கு நல்ல நிலா வெளிச்சம். பெளர்ணமியானு ஞாபகம் இல்லை. அப்படியே இளம் நீல வெளிச்சம் ஜன்னல் வழியா வந்து கொண்டிருந்தது. லேசா காத்து வேற வீசிக் கொண்டிருந்தது.
'சரி, ஒரு நாள் ஜன்னலைத் திறந்து வெச்சு தான் தூங்குவோம்' என்று ஜன்னலைத் திறந்து வைத்தவாறே படுத்தேன். எப்போதோ மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் படித்த 'மாரல் சயின்ஸில்' இந்த மாதிரி ' தூங்கும் போது , ஜன்னலைத் திறந்து வைத்து தான் தூங்க வேண்டும் என்று படித்திருந்தது, அன்றைக்குப் பார்த்து ஞாபகம் வந்து தொலைத்தது.
ஜன்னலைத் திறந்து வைத்தவாறே, நீல வெளிச்சத்தைப் பார்த்தவாறே படுத்தேன். 'மல்லாந்து படுக்கற்துல என்ன சுகம்' என்று எண்ணியவாறே, கண்களை மூடியது தான் தாமதம்.
என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
விரிந்தவாறே இருந்த கைகளையும், கால்களையும் யாரோ இறுக்கப் பிடித்துக் கொண்ட உணர்வு. அவற்றை துளிக் கூட அசைக்க முடியவில்லை. கண்களைத் திறக்கப் பார்க்கிறேன். ம்ஹூம்... கொஞ்சம் கூட நகர்த்த முடியவில்லை.
கண்களைத் திறக்க வேண்டும், கை, கால்களை அசைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அந்த நினைவு நன்றாக வேலை செய்கிறது. ஆனால், உடலை மட்டும் அசைக்க முடியவில்லை.
பயங்கரமான அதிர்ச்சி.
நிஜமாகவே ப்ரும்பாடு பட்டு, கை, கால்களை அசைத்தேன். 'தடார்' என்று எல்லாம் ஒழுங்காயிற்று. கை, கால்களை அசைக்க முடிந்தது. கண்களைத் திறந்து பார்த்தேன். அதே நீல வெளிச்சம் ஜன்னல் வழியாக விழுந்து கொண்டிருந்தது.
இதயம் எப்படித் துடித்தது என்று அப்போது எனக்குத் தான் தெரியும்.
விழுந்தடித்துக் கொண்டு ஓடி, அப்பாவிடம் சொல்லி, நெற்றி நிறைய திருநீறு பூசி, அங்கேயே படுத்துக் கொண்டேன். பிறகு வரவில்லை.
இது தான் 'பேய்' என்று எனக்குப் புரிந்து போனது.
அப்புறம் கொஞ்ச நாளைக்கு அது போல் எதுவும் நடக்கவில்லை. ஆனால், ஜன்னல் மட்டும் நான் இரவில் தூங்கும் போது திறக்கவேயில்லை.
10-வது படிக்கையில், மீண்டும் 'அது' வந்தது.
எங்கள் பள்ளியில், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும் , இறுதித் தேர்வு நேரங்களில் பள்ளியிலேயே இரவு தங்கி படிக்க அனுமதிப்பார்கள். வீட்டுச் சூழல் படிப்பைப் பாதித்து விடக்கூடாது என்பதற்காக.
அப்படி ஒரு நாளின் இரவு.
உட்காரும் பெஞ்சுகளை எல்லாம் இழுத்துப் போட்டு, ஒரு படுக்கை மாதிரி செய்து, அதன் மேல் பெட்ஷீட்டை விரித்துப் படுத்தேன். உஷாராக, எல்லா ஜன்னல்களையும் சாத்தி விட்டுத் தான். பிற மாணவர்கள் வெளியே படுத்துக் கொண்டார்கள். நான் ஏன் வெளியே படுத்துக் கொள்ளவில்லை என்று சரியாக நினைவில் இல்லை.
நினைத்துப் பாருங்கள்.
பெரிய வகுப்பறையில், நான் மட்டும் தனியாக. எல்லா ஜன்னல்களையும் அடைத்தாகி விட்டது. அறையின் விளக்குகள் எல்லாவற்றையும் அணைத்து விட்ட பிறகு, வகுப்பறையே முழு இருட்டில் மூழ்கியது.
கிராமத்துச் சூழலின் இரவுக்கே உரிய, சில்வண்டுகளின் ரீங்காரங்கள், எப்போதாவது கடக்கின்ற கரும்பு ஏற்றிய மாட்டு வண்டியின் சக்கரச் சத்தங்கள், தூரத்தில் தொடர்ந்து குலைத்துக் கொண்டேயிருந்த தெருநாயின் ஓலக் குரல், வெளி ஜன்னல்களின் இடுக்குகள் வழியே கசிகின்ற நிலவொளி...
ஏதோ கனவு கண்டு, முடிக்கும் போது, 'அது' பிடித்தது.
என்ன செய்வதென்றே தெரியவில்லை.
மீண்டும் போராட்டம்.
ஒரு நொடியில், சடாரென்று கயிறு அறுந்து, கண் திறந்தேன். மூச்சு பலமாக வாங்கியது. கண்களை மூடினாலோ, நெஞ்சு துடிக்கின்ற சத்தம், கண்களை திறந்தாலோ கருகும்மென்ற இருட்டு...
எந்த மூலையில் என்ன இருக்கின்றதென்றே தெரியவில்லை.
அடித்துப் பிடித்து ஓடி கதவைத் திறந்து வெளியே வந்து படுத்துக் கொண்டேன்.
ஏதோ இரவில் மட்டும் தான் 'அது' வரும் என்று நினைத்து விடாதீர்கள்.
ஒரு நாள் ,சனிக்கிழமை மதியம். 12:30க்கு மேல் இருக்கும். இன்னொரு நண்பனுடன் பஸ்பாஸ் எடுக்க ஐ.ஆர்.டி.டி. செல்வதாகத் திட்டம். அவன் வரும்வரையில், கொஞ்ச நேரம் கண் மூடலாமே என்று, கீழே படுத்தவாறு, சோபா மேல் காலைத் தூக்கிப் போட்டு, கண் மூடினேன்.
'அது' வந்து விட்டது.
பின், விடுபட்டவுடன் பார்த்தால், அவன் வந்திருந்தான். அவனோடு மதிய உணவு உண்கையில், இதைப் பற்றிக் கூறினேன். அப்போது, அவன் கூறினான். அவனுக்கும் இது போல் ஆவதுண்டு, இது உடலிலிருந்து வலி வெளியே போகின்றதென்று சொன்னான்.
வித்தியாசமாக இருந்த கருத்து.
பின்பொரு நாள், சுஜாதாவின் 'ஏன், எதற்கு, எப்படி' ஏதோவொரு பாகம் படிக்கையில், அவர் ஒன்று குறிப்பிட்டு இருந்தார்.
'பல பேருக்கு வருகின்ற இதற்கு பேர் 'அமுக்கான்'. இதற்கு காரணம், தூக்கத்தில் இருந்து விழிக்கும் போது , உடல் உறுப்புகளின் விழிப்பும், உள்ளத்தின் விழிப்பும் ஒரே நேரத்தில் நிகழ வேண்டும். அப்படித் தான் எப்போதும் நிகழும். அவ்வாறு இல்லாமல், இரண்டின் விழிப்புகளுக்கும் இடையில், மைக்ரோ செக்ண்ட் அளவில் இடைவெளி இருக்கும் போது, உணர்வு முதலில் விழித்துக் கொள்ளும். ஆனால் உடல் இன்னும் விழித்துக் கொள்ளாததால், நம்மால் உடலை அசைக்க முடியாமல் போய்விடுகின்றது' என்று கூறியிருந்தார்.
இந்த விளக்கம் தான் 'அது'வா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
பின் கல்லூரியில் சேர்ந்து, பசங்களோடு இருக்கும் அறைகளிலும், தனியறை கொடுத்த பின்னும், வேலையில் சேர்ந்த பின்னும், இன்னமும் கூட 'அது' அடிக்கடி வந்து அட்டெண்டென்ஸ் போட்டு விட்டுச் செல்கின்றது.
சிலசமயம், முயற்சிக்காமல் அப்படியே விட்டால் என்ன என்று சும்மா கை, கால்களை அசைக்க முயற்சிக்காமல் இருப்பேன். பின் கொஞ்ச நேரம் (மைக்ரோ செகண்டு தானோ ? நமக்கு தான் ரிலேட்டிவிட்டி தியரிபடி கொஞ்ச நேரமாகத் தோன்றுகிறதோ..?) கழித்து, பயம் வந்து முயற்சித்து விட்டு விடுதலையாவேன்.
எனக்கு என்ன சந்தேகம் என்றால், இது எல்லோர்க்கும் ஏற்படுகின்ற விஷயம் என்றால், ஏன் இது நாள்வரை அதைப் பற்றி ஏதும் நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்? இதனை யாராவது ஆராய்ந்து இருக்கிறார்களா?
நாம் முயற்சியே செய்யாமல் விட்டால், அதுவாகவே நம்மை விட்டு போய் விடுமா..? இதைப் பற்றி மருத்துவ வரலாறு என்ன சொல்கின்றது?
நம் பெரியோர்கள் இதைப் பற்றி ஏன் நம்மிடம் சொல்வதில்லை? 'அவனவனே அனுபவித்துத் தெரிந்து கொள்ளட்டும்' என்று விட்டு விட்டார்களோ?
இன்னும் புரியாத (எனக்கு) மர்மமாகவே இது இருக்கின்றது.
ஒருவேளை உயிர் பிரியும் போது, இப்படித் தான் இருக்குமோ? அதற்கான டெமோ தானோ, இப்படி வருவதெல்லாம்? இதைப் பற்றி சொல்லி வைத்தால், மனிதன் பயத்திலேயே உயிரை விட்டு விடுவான் (அப்போதும் இதே முறையிலா..?) என்று தான் பெரியவர்கள் மறைத்தார்களோ..?
ஒண்ணுமே புரியலப்பா.
'அது' பேயாகத் தான் இருக்க வேண்டும் என்று தான் இன்னமும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அச்சோ..உங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் பேசணும்...'அது' எப்பவும் உங்ககூடவே இருக்கும் போல இருக்கே..ஹாஹாஹா...
இதை ஒரு முறை என் அண்ணன் சொல்லியிருக்கான்...அதுவும் வீட்டுக்கு வெளிய கட்டிலில் படுக்கும் போது 'அமுக்கான்' அமுக்கிடும்னு...நான் அவனை கலாட்டா செய்வேன்...
ஆனா இதே மாதிரி எனக்கும் இரண்டு வருடத்திற்கு முன்னால ஒரு முறை நடந்துச்சு..இரவில் திடீர்னு யாரோ என்ன தண்ணிக்கு உள்ள தள்ளி மேல எழுந்திரிக்க முடியாம அமுத்தற மாதிரி ஒரு உணர்வு..அப்புறம் என்னால மூச்சுவிட முடியாத ஒரு உணர்வு..ம்ம்..பயமாத்தான் இருந்துச்சு..:(
சுஜாதாவின் விளக்கம் சரியாகத்தான் இருக்குமோ?
அதனால் தான் நானும் சொல்கிறேன்.. ஏன், பெரியவர்கள் இதைப் பற்றி நம்மிடம் முன்பே சொல்லி எச்சரிக்கைப் படுத்துவதில்லை. இதனால் நம் பயம் தெளியும் அல்லவா..? 'இது எல்லோர்க்கும் ஏற்படுகின்ற ஒன்று தான். ஒன்றும் நோய் அல்ல..' என்று தைரியம் வரும் அல்லவா..?
Post a Comment