Thursday, March 14, 2013

கண்ணனைக் காணாதே...

மோக நிலவிதுவே - குளிர்
மோதிக் களித்திடும் இரவினிலே
சோகம் அறிந்திலையோ - கவி
சொன்ன நிலையும் இதுவன்றோ?
போகம் மறந்தினையோ - மது
பொங்கி வழிகின்ற வயதினிலே
தேகம் அழிகிறதே - கண்ணன்
தீண்டும் விரல்நுனி காணாதே!

உண்ணும் நினைப்பிலையே - உடை
உடுத்தும் எண்ணமும் வரவிலையே!
பண்ணை இசைத்திடும் பாங்கியரும்
பாவம் இவளென்று சொல்லினரே!
கன்னம் காயவிலையே - வானில்
காலை மாலை கண்டதிலையே
கண்ணன் உடனுறை காலமெலாம்
கண்கள் தூங்கிப் போனதிலையே!*

கூவி யுனையழைத்து இருள்
கூட்டிலே இருவர் தானமர்ந்து மலர்த்
தூவி மகிழ்ந்திட்டு உடல்
தூரிகை மேல்வரை எழிலுடன்
தாவி உனைக் கட்டி - மனம்
தாங்கொணா இன்பமே போதெலாம்
பாவி சுகித்திருப்பேன், அன்றேல்
பாலை நிலத்துப் பாலொளியாய்
ஆவி பிரிவதன்றோ - உடல்
ஆக்கினை பூமிக் கானதன்றோ!

***
*வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆரஅஞர் உற்றன கண். (1179)

Monday, March 04, 2013

ஹைதைக்கு வந்தேன்.

க்டோபர் ஏழாம் தேதி காலை. விரைந்த குளிர் ஏர்பஸ்ஸில் திரையை விலக்கி வெளியே பார்த்தேன். வெயில் ஏறிக் கொண்டிருந்தது. வானம் ஆரஞ்சு நிறத்திலிருந்து பகலை அடைய, தூரத்து வீடுகள் துலங்கின. எதிர் வாகனங்கள் வேகமாய்க் கடந்தன. “சம்ஷாபாத்...சம்ஷாபாத்...” என்று முன்னிருக்கையிலிருந்து கூவினர். ஹைதராபாத் எல்லையை அடைந்தேன்.

இன்னும் கொஞ்ச காலத்திற்கு பெங்களூருவில் வேலை இல்லை, ஹைதை செல் என்று அலுவலகம் சொல்லி விட்ட பிறகு வீட்டைக் காலி செய்து விட்டு, மனைவியை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு, அக் ஆறு சனிக்கிழமை இரவு மடிவாலாவில் ஏர்பஸ்ஸில் ஏறினேன்.

சம்ஷாபாத் என்பது ஹைதராபாத்தின் ஒரு நுழைவாயில். தெற்கிலிருந்து வருபவர்களுக்கான வாசல். இங்கே தான் நகரின் தற்போதைய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி பன்னாட்டு நிலையம். பரந்து கிடக்கும் பொட்டல் வெளியில் வெயில் தாண்டவம் ஆடும்.

அங்கிருந்து கிளம்பி சற்று தொலைவிலேயே பி.வி.நரசிம்மராவ் மேம்பாலம் துவங்குகின்றது. நாட்டின் நீளமான மேம்பாலங்களில் இதுவும் ஒன்று. கீழே ஓவ்வொரு பகுதியாக விழித்துக் கொண்டே வர அவற்றை ஒரு பாலப் பார்வை பார்க்கலாம். பாலம் மேதிப்பட்டினம் என்ற பகுதியில் முடிவடைகின்றது. அங்கே இறக்கி விட்டார்கள். நகரங்கள் சில கண்டதனால், குழுமிய ஆட்டோவாலாக்களிடமிருந்து விலகிக் காத்திருந்தேன். அலுவலகமே ஆரம்பச் செலவுகளைத் தந்து விடும் என்பதால், மேரு கேப்ஸை அழைத்து டாக்ஸி பிடித்தேன்.

ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான ஒரு சர்வதேசிய கூட்டரங்கம் நடந்து கொண்டிருந்த நாட்கள் என்பதால், வழி முழுதும் காக்கிகள். மாதாப்பூரில் ஓர் ஏரிக்கரை ஓரமாக ஹோட்டல் அறை புக் செய்யப்பட்டிருந்தது. அங்கும் சில அறைகளில் வெளிதேசத்தார். வாசலில் போலீஸ் பரவியிருந்தனர். அடையாள அட்டையைக் காண்பித்து அறைக்குச் சென்றேன்.

குளிரூட்டப்பட்ட அறை. இரண்டாள் மெத்தை. சுவர் தாங்கும் தொலைக்காட்சி. டாடாஸ்கை. குளியலறையில் கர்டைன். கண்ணாடிச் சுவர். ஜன்னல் திரைகளை விலக்கினால் மலையும் ஏரியும். அங்கே மெல்ல படகு ஒன்று அசைந்து கொண்டிருந்தது.

மாலையில் குளித்து விட்டு ஒரு நடை செல்லலாம் என்று வெலீயே வந்தேன். ஒரு கூரைக் கடையில் வறுத்த சோறு தின்று விட்டு மேடேரி முக்கிய சாலைக்கு வந்தேன். அது மாதாப்பூர் போக்குவரத்து சமிக்ஞைப் பகுதி. அங்கே தான் இப்பகுதிக்கான காவல் நிலையம் உள்ளது. பக்கத்திலேயே ஓர் அனுமார் கோயில். ஞாயிற்றுக்கிழமைகளில் நிறைய பேர் வருகிறார்கள். நான் ஒரு முறை சென்றிருந்த போது புது காருக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது. செருப்பு விடும் இடத்தில் சில பிச்சைக்காரர்கள்.

மாதாப்பூர் என்பது நகரின் தொழில்நுட்பப் பகுதி. இங்கே பல கணிணி நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றின் அலுவலகங்கள். மர்றும் தேசிய நவநாகரீகத் தொழில்நுட்ப நிறுவனமும், சில்பராமம் எனும் அரசின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையகமும் அமைந்துள்ளன.

2003-ல் கல்லூரி வழியாக சுற்றுலா வந்த போது இப்பகுதி ஒரு வெறும் மலை. சைபர் டவர்ஸ் என்ற ஒரேஒரு கட்டிடம் மட்டும் தன்னந்தனியாக நின்று கொண்டிருக்கும். மொட்டை வெயில் உக்கிரமாய்க் காய்ந்து கொண்டிருந்த ஒரு மதியத்தில் நுழைந்து சில நிறுவனங்களைப் பார்த்து விட்டு, கீழே உணவகத்தில் வாங்கிய உணவைக் கண்ணில் நீர் வழியத் தின்றோம்.

இப்போது டவர்ஸின் அருகிலேயே ஒரு மேம்பாலம் போகின்றது. கணிணியர்களை நம்பி இயங்கும் பேக்கரிகள், அவசர உணவகங்கள், ஹோட்டல்கள், ட்ராவல்ஸ்கள், நகைக் கடைகள், ஆஸ்பத்திரி, மொபைல் ரீசார்ஜ் செய்பவர்கள், பூக்கடைகள், செருப்பு தைப்பவர்கள், டி.வி. விற்பவர்கள், பானிபூரி கூடையர்கள், பூமியைக் கொத்திக் கொண்டு எழும் அசுர கட்டிடங்கள், மால்கள், கேக் ஷாப்கள், சூப்பர் மார்க்கெட்டுகள். இவற்றின் நடுவே சாலையோர அரசு வெட்டி நிறுத்தி வைத்த ஓர் அரசு மரத்தின் அருகே, களைப்பான மாட்டின் பின்னே கவர் போட்ட கையை விட்டுப் பார்க்கும் ஒரு மாட்டாஸ்பத்திரி. அதன் ஓரங்களில் எப்போதும் ஒழுகியோடும் நகரவாசிகளின் சிறுநீர்த் தாரைகள்.

NIFT இருப்பதால் சில நூல், பேப்பர் கடைகள் உள்ளன. அழகான பையன்களும் அழகான பெண்களும் அங்கே வந்து ப்ராஜெக்டுக்கான இடுபொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். ஊசி, பாசி, கண்ணாடி, கலர் காகிதங்கள். வெள்ளிக்கிழமை மாலைகளில் சிறு மூட்டை சுமந்த இளமைகள் ட்ராவல்ஸ் வாசல்களில் காத்திருக்க, வேன்கள் வந்து அவர்களைக் கொத்திச் சென்று நகருக்கு வெளியே காத்திருக்கும் ஏர்பஸ்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

நிறைய ஹாஸ்டல்கள் இருக்கின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக. காலை வேளைகளில் அலையலையாக வந்து பேருந்து நிறுத்தத்தில் கம்பெனி வண்டிகளைப் பிடித்து கலைந்த பின், சாலை சாதாரணமாக, போக்குவரத்துக் காவலர் நிதானமாக நிழலில் ஒதுங்குகிறார்.

ஷேர் ஆட்டோ என்ற ஒரு கருத்து இன்னும் இங்கு வலுப்பெறவில்லை. ஏனெனில் சாதாரண ஆட்டோவே இங்கே ஷேர் ஆட்டோ அவதாரம் எடுக்கின்றது. பின்புறம் மூன்று முடிந்தால், எளியோரை வலியார் வாட்டினால் நான்கு பேர். முன்னே ஓட்டுநர் இருக்கையின் இருபுறமும் பறவைகள் போல் இறக்கைகளைப் பொருத்திக் கொண்டு, துவாரபாலகர்கள் போல் அங்கும் இருவரை அடைத்துக் கொண்டு ஆட்டோ மொத்தம் ஏழு பேரோடு ஓடுகின்றது.

வியாழக்கிழமைகளில் ஒரு சாய்பாபா வண்டி நான் அலுவலகம் செல்லும் வழியில் வந்து விடுகின்றது. தெலுங்கா, மராட்டியா, இந்தியா என்று தெரியாத மொழியில் பஜனைப் பாடல்கள் ஒலிபரப்பாகும். ஒரு பையன் தட்டேந்தி வருவான். கவனிக்காதது போல் தாண்டிச் சென்றால், ஸ்ரீசாய் பாலாஜி ஓட்டல் அருகே கிழிந்த ஆடையோடு பெண்ணும் அவள் மடியில் எப்போதும் தூங்கிக் கொண்டேயிருக்கும் ஒரு குழந்தையுமாக நம்மிடம் கையேந்துவார்கள்.

ஆதார் அட்டைக்காக எப்போதும் கூட்டம் நின்று கொண்டிருக்கின்றது. டவர்ஸ் அருகிலேயே ஒரு வெங்கடாஜலபதி கோயில். ஒருதடவை போன போது சுண்டல் கொடுத்தார்கள்.

ஒரு கேரள ஓட்டல் இருக்கின்றது. விலையெல்லாம் தென்னை உயரம். அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை.

சமீப குண்டுவெடிப்பிற்குப் பிறகு இணையக் கடைகளில் இன்னும் கொஞ்சம் கண்டிப்பு. புகைப்படம், அடையாள அட்டை கண்டிப்பாக வேண்டும். 10H பேருந்து நிறைய ஓடுகின்றது. கொண்டாப்பூரிலிருந்து செகந்திராபாத் செல்கின்றது. இருமுறை செகந்திராபாத்தில் இருக்கும் ஸ்கந்தகிரிக்குச் சென்றேன். குன்றிருக்கும் இடமெல்லாம் இருக்கும் குமரக் கோயில். சுற்றி வர பிற சாமிகளும் இருக்கின்றார்கள். காஞ்சி காம்கோடி பீடத்தின் நிர்வாகத்தில் இயங்கும் கோயில் இது. சென்ற போது செப்பனிட்டுக் கொண்டிருந்தார்கள். மயிலாப்பூரிலிருந்து ஒரு கோஷ்டி வந்து ராம நாமம் சொன்னார்கள். மலைக்கு அடிவாரத்தில் கிரி புத்தக நிலையம்.

(தொடரும்)

Wednesday, February 06, 2013

ஆகாயப் பொன்னே...

ரு மெலோடியான ராகபாட்டையில் தாலாட்டுப் பாடல் ஒன்றை முயற்சித்தேன். மெல்லப் பாடியதைக் கேட்டுத் தூங்கித் தன் ஆதரவைத் தெரிவித்தாள்.

ராகம் கீழே.

***

ஆகாயப் பொன்னே...
ஆனந்த ஊற்றே...
பூங்காற்று தீண்ட
நீ தூங்கு...

ஏகாந்த வேளை...
எல்லோரும் தூங்க...
பேசாது கண்ணே
நீ தூங்கு....

பூ...மடல்
நீ
கேட்கும் கர்ணமாய்...

தேன்....சுழல்
நீ
பேசும் சொற்களாய்..

முகில்கள் நீந்தும் வானம்
மாலை நேரம்
கொண்டு வந்து...

சுடரென ஒளிரும் மீன்கள்
ராவின் ராகம்
பாடும் போது... (ஆகாயப் பொன்னே)

பாலூறும்
நெஞ்சோடு
அணைத்திடும் போதும்

தோளோடு
மேல் சாய்த்து
தடவிடும் போதும்

விழிகளில்
மொழிகளில்
நீ ஒரு தோட்டமே...

அழுவதில்
சிரிப்பதில்
உன்னுடன் நானும்
சேர்ந்தேனே...

அழகே...அழகே...அழகே.... (ஆகாயப் பொன்னே)

எண்ணாத
முத்தங்கள்
உன் கன்னம் தாங்கும்

எழுதாத
பாடல்கள்
உன் முகம் காட்டும்

நாளிலும்
பொழுதிலும்
உன்னுடன் நானுமாய்

மண்ணிலே
விண்ணிலே
ஊர்வலம் போகும்
கதையெல்லாம்
சொல்வேன்
நாளை
இன்று...(ஆகாயப் பொன்னே)

***

Friday, February 01, 2013

பேரன்புடையவன்

பிரபஞ்சத்தின் மெளனம் இரவின் மேல் படர்கிறது. தெளிந்த இந்த வானம் எத்தனை எத்தனை அற்புதங்களை இந்த அற்ப மனிதன் மேல் மிதக்க விடுகிறது. தெய்வீகத்தைச் சென்றடைய கோடானு கோடி விண்மீன்கள் வழியாக ஒளி ஏணிகளைச் சரம் சரமாகத் தொங்க விட்ட அந்த எல்லையற்றவன் எங்கே?

மல்லிகைக் கொத்துகளை விதைத்துப் பூக்க வைக்கின்ற மதுநிலா அள்ளியள்ளிப் பருகினாலும் தீராத போதை ஊற்று அல்லவா?

மோகன மணத்தைப் பரப்புகின்ற இந்த இரவின் படுக்கை மேல் விரிந்திருக்கும் கனவுகள் தாம் எத்தனை?

ரோஜா இதழ்களைப் போன்ற வாசமும் நிறமும் செழித்த காற்றில் அவன் சொல்லியனுப்புகிற சொற்கள் தாம் எத்தனை இனியன!

பன்னீர் அருவியைப் பொழிய வைத்த பெருங்கருணையுடைவனின் ஒரு பார்வை, பாவங்களின் பெரும் மூட்டையைக் கொஞ்சம் இளைப்பாற்றி வைக்காதா?

துயரத்தின் கரும் நிழல் தீண்டி நீல விஷம் மேனியெங்கும் பேரார்வத்துடன் ஊடுறுவுகையில், அவனது நு னி விரல் ஸ்பரிசம் ஆனந்தப் பேரலையாக வந்து மூடாதா?

அந்த அளவற்ற அன்புடையவன் ஒரு பேரரசனைப் போல, பொன்னாலான சிம்மாசனத்திலா அமர்ந்திருப்பான்? கிடையாது.

கடையனுக்கும் கடையனாய், மிகப் பழைய உடைகளுடன், யுக யுகங்களாய்க் கிழிந்த மேல் ஆடையும், எத்தனை எத்தனையோ கவிஞ்சர்களின், பக்தர்களின், நம்பிக்கையாளர்களின் வேண்டுதல்களும் தொழுகைகளும் அழுகைகளும் கதறல்களும் நெய்த போர்வையுமாய் அவன் அங்கே நமக்காகக் காத்திருக்கிறான்.

இந்த அகிலத்தின் அதிபன் யாருடைய தூய மனம் கரைந்தழும் தொழுகைக்குச் செவி திறப்பான்?

இங்கே நிகழ்வதேல்லாமே அவனுடைய அளவிலா விளையாட்டு என்றால், நெஞ்சுருகி அவன் பாதத்தையேக் கடைசியாய்ச் சரணடைபவர்களின் துக்கங்க்களைத் தன தோள் மேல் ஏற்றிக் கொண்டு எங்கே செல்வான்?

பகலெல்லாம் ஒளியாய் ஜொலிப்பது அவனுடைய வார்த்தைகள் தானே ! இரவில் குளிராய் வந்திறங்குவது அவனுடைய மெளனம் தானே!

கரையில் திரண்டிருக்கும் வெண்சங்க்கின் மடிப்புகளில் பெரும் சமுத்திரத்தின் பேரொலியை ஒளித்து வைத்தவன் எவனோ, அலை நுரைகளில் உப்பு மலைகளைக் கரைத்து வைத்தவன் எவனோ , பாலை மணலிலும் காற்றுத் தூரிகைகளால் மர்மங்களால் ஆன பாதைகளைப் பதித்து வைப்பவன் எவனோ, எவன் இறுதியில் ஒரே ஒரு மிஞ்சிய காப்பானோ அவன் இடை நுனியில் முடிச்சிட்டிருக்கும் நூலாடையின் ஒற்றைப பிசிறு கிடைத்தாலே போதும்.

அன்புள்ள மரணத்திற்கு

ன்புள்ள மரணத்திற்கு,

நீ இருப்பது உண்மையா? உன்னைக் கண்டடைவதில் நான் உவப்புறுவேன்.

பாய்ந்து கொண்டேயிருக்கும் குளிர்ந்த நீருக்குள் ஒரு நிர்வாண மீன் நீந்திக் கொண்டேயிருப்பது போல் நான் வாழ்வில் நனைந்து கொண்டிருக்கிறேன். முட்கள் நிரம்பிய ஒரு தூண்டில் கண் முன் தோன்றித் தோன்றி மறைகிறது. கவ்விக் கொள்ளப் பாய்வதற்குள் வெள்ளம் தள்ளிச் சென்று விடுகின்றது. மீண்டும் நடுக்கம்..!! எத்தனை தொலைவுக்கு நீர் என்னை இழுத்துச் சென்று விட்டாலும் தூண்டில் மட்டும் துரத்துவதை நிறுத்துவதில்லை. வசீகரமான அத் தூண்டிலின் கூர்முனையை ஒரு மர்மமான கணத்தில் என் சிறு வாய் திறந்து மேல் அண்ணத்தில் குத்தும் போது ஒரு கணத்தில் மரிப்பதில்லை. அது துளைத்துத் துளைத்து மூளையை முட்டிச் செருகி அள்ளும் போது சூடான செந்நிறத் திரவம், புயல் காற்றுக்கு வெண் முகில்கள் போல் விலகிப் பரவும்.

உனக்கு மட்டும் தான் எத்தனை ப்ரியம் மனிதர்கள் மீது? ஒரு தேவதூதனைப் போல மனிதர்களின் அத்தனை துயர்களையும் உன் கருணையால் உன் ஒரு பார்வையால் காணாமல் போக்கி விடுகின்றாய். ஒரு மஞ்சள் வெயில் படிவது போல் உன் சாயல் படிகையில் முகங்கள் தான் எத்தனை திருப்தி கொள்கின்றன! ஒரு பேரருவியை மென்மையான தீண்டலால் பகல் ஆவியாக்கி விடுவது போல் அத்தனை உணர்வுகளையும் நீ சமனப்படுத்தி விடுகிறாய்.

நீ எப்படி இருப்பாய்? உன் வயது என்ன? உன் நிறம் என்ன? நீ என்ன ஆடைகளை அணிவாய்?

குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டிக் கதை சொல்லித் தூங்க வைக்கும் தளர்ந்த ஒரு மூத்த தாத்தா போல் வந்து எங்களை உன் பொன்னுலகத்திற்கு அழைத்துச் செல்வாயா? பனி இறங்கிக் கொண்டிருக்கும் பின்னிரவில் தெரு விளக்குகளை ஏற்றி வைப்பதற்காக வரும் அந்த சுருட்டு பிடிப்பவனைப் போல் கோட் அணிந்து வருவாயா? சந்தையில் வாத்துக்களை விற்று விட்டுச் சிணுங்கும் சில்லறைகள் காதில் அறைய மெல்ல எட்டு வைத்துப் போகும் ஒரு கிழவியைப் போல் முணுமுணுத்துக் கொண்டு போவாயா?

உன் வயது என்ன?

நாங்கள் காலம் என்பதைக் கண்டுபிடிக்கும் முன்பாக எங்கே ஒளிந்திருந்தாய்? பால் வெளி பண்டலத்தில் நாங்கள் காணவே இயலாத ஏதோ ஒரு கிரகத்தில், ஒற்றை லாந்தர் விளக்கை ஏந்திக் கொண்டு தலையில் தொப்பியுடன் பனிக் குவியலில் கால்கள் புதையப் புருவங்கள் மேல் கை வைத்து தொலைவைப் பார்த்துத் தொலைந்து போன பேரனைப் தேடி நடக்கும் ஒரு கிழவனைப் போல் நீ நடந்து கொண்டிருக்கும் காட்சி சமீப காலங்களில் என் கனவுகளில் வந்து கொண்டிருக்கின்றது. உன் பழுப்பேறிய தாடியிலும் மீசையிலும் பனித் துகள்கள் படர்ந்து கிடக்கின்றன. உன் சட்டைப் பைக்குள் கணக்குச் சீட்டுகள், எங்களுக்கு என்றுமே புரியாத கணக்கீடுகளுடன்!

உன் உள்ளங்கையில் தான் எத்தனை ரேகைகள்! தானாகப் போகும் பாதையில் ஓடுகின்ற நதிகளைப் போல், அவற்றில் எத்தனை ரத்த நதிகள்! நாங்கள் இறைஞ்சிக் கொண்டே இருக்கிறோம். சில சமயங்களில், உன் வரவிற்காகத் தங்க ஜாடியில் நூற்றாண்டுகள் பழைய புளித்த ஒயினைப் பாதுகாக்க விழித்திருக்கும் கஞ்சனைப் போல் கூர்மையான கவனத்துடன் காத்திருப்போம். சில சமயங்களில், பள்ளிப் பாடம் செய்யாத மாணவன் ஆசிரியரின் வரவின்மையை விரும்புவது போல் உன் வாராமையை வேண்டுவோம்.

ஆனால், என்று நீ எங்கள் பிரார்த்தனைக்குப் பதில் சொல்லியிருக்கிறாய்? குடை இல்லாமல் பாலையைக் கடக்கும் போது மழையைப் போல் வருகிறாய். தாகத்தில் தவிப்பவனுக்கு அது இனிமை. காலையில் ஜன்னலைத் திறக்கும் போது, கூரையின் மேல் இரவெல்லாம் குளிர்ந்திருந்த பழுப்பு நிறச் சருகு கீழே விழுவது போல் சுழன்று சுழன்று வருகிறாய். நகரத்தின் ஆலைச் சங்கொலி கேட்க ஆரம்பிக்கும் போது, குயிலின் துயர்க் குரல் கரைந்து விடுவது போல் உன் வரவின் காலடிச் சத்தம் செவியில் விழத் துவங்குகையில், வாழ்வை எங்கோ தொலைவில் விட்டு விட்டு கடைசி ரயிலுக்காகக் காத்திருக்கும் கடிகாரத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டு தூரத்தில் வானோடு இணைகின்ற தண்டவாளத்தின் அதிர்வை எதிர்நோக்கும் குருட்டுப் பிச்சைக்காரனாய் நாங்கள் ஆகி விடுகின்றோம்.

உன் வீடு எதனால் ஆனது? கூரைகளில் என்றும் தீராத கண்ணீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருக்குமா? புகை போக்கி வழியாக எத்தனை குரல்களை நீ அனுப்புவாய்? பூட் அணிந்து நீ நடமாடும் சமையலறையில் ஒரே ஒரு மெழுகுவர்த்தியின் நடுங்கும் சுடர் உன் முகத்தின் கொடூரத்தையோ அன்பையோ உன் நிழலில் எதிரொளிக்கையில், மூச்சுக் காற்றற்ற முகங்களின் கண்கள் இறுக்க மூடிக் கொள்கின்றனவா?

***

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐரிஷ் கவிஞர் டபிள்யூ.ஆர்.வில்லியம் ப்ரை என்பவருடைய தலைப்பு அறியப்படாத கவிதையின் கிடைத்த பகுதி.