Tuesday, December 27, 2016

நீலாம்பல் நெடுமலர்.9.


சில கவிதைகளையும்
தனித்த இரவில்
பெருமூச்சுகளையும்
கொடுத்தபின்
ஒரு
முத்தமாவது
தரலாம் நீ.

உன் மெளனம்
ஒரு பிடிவாதம்.
உன் தவிர்த்தல்
ஒரு நிழல்வெளி.
உன் பார்வை
ஒரு மறைபொருள்.
உன் மறைபொருட்கள்
கற்பனையின்
கல்லணைகள்.

நழுவி விழுந்து
தெறித்த
கண்ணாடிக் குடுவை
உன் சொற்கள்.
தொடாமல் கால்
படாமல்
நடக்கத் தெரியா
பிள்ளை நான்.

குருதி பூக்கும்
முட்செடிகளை
மெளனத்தால்
மூடி வைக்கிறாய்.
தொட்டுத்தொட்டு
சுவைக்கும்
செந்நா எனது.

நதிக்கரையில்
ஒற்றை மரமென
நின்றிருக்கும் வேளையில்,
அலையடிக்கும்
வெண்புறா போல்
சிலநேரம்
அமர்ந்தபின்
பறந்து விட்டாய்.
வானைக் கிளைகளாலும்
மண்ணை வேர்களாலும்
துழாவுகிறேன்.

நில்
பசிக்கிறேன்
சொல்
ரசிக்கிறேன்
கொல்
ருசிக்கிறேன்.

வழியில்
விழியால் சிரித்தாய்.
மரங்களெலாம் பூத்து
மண்ணெலாம் இனித்து
நீரெலாம் குளிர்ந்து
நீயின்றிப் பிறரிலை.

மலைச் சிகரங்கள்
கூழாங்கற்கள்.
எரிமலைத் தீ
எறும்புக் கடி.
இமயப் பனி
இலைநுனித்
துளி.
உன் பார்வை
பிரபஞ்ச விரிவு.

அலைகள்
கொந்தளிக்கும் ஆற்றில்
விழுந்த சிற்றிலை
போல்
நீந்திச் செல்கின்றன
உன் சொற்கள்.

வானவில் நிறங்களில்
இல்லா ஒரு
நிறம்
உன்
நீ.

இளங்காலைக் குளிர்த்தென்றல்
முதிர்காலைத் தெளிவொளி
முன்மதியப் பனிமழை
பின்மாலைக் கிளிக்கூட்டம்
அந்தியிரவு மலையிணைவு
நள்ளிரவு மெளனத் தூறல்
நாளும் இரவும்
நினைவின் பாரம்.

பொற்றேரில்
பயணிக்கும் இளவரசி
வெண்ணிலவில் வழியும்
அமுதை விரும்பினாள்.
மண்புழு நிமிண்டும்
மனமெனது.


Thursday, December 22, 2016

நீலாம்பல் நெடுமலர்.8.



மேற்கண்ட படத்திற்குத் தொடர்பாக 'படத்திற்கு வெண்பா படை' என்று கேட்கப்பட்டிருக்க, எழுதியவை கீழே.

ஒருநதியில் ஓடிடும் ஓடத்தில் நாமே
ஒருபுறம் ஓட்டை எனினும் - வருந்தா
தெனக்கென்ன வென்றிருப்பின் மூழ்கி மரித்தல்
அனைவர்க்கும் ஆமே அறி.

இருவர் உழைக்க ஒருவர் சிரிக்க
இருநிலை ஏனோ இயம்பின் - வருத்தம்
வருமே வருநிலை யாவர்க்கு மன்றோ
வருமுன் உணர்தல் நலம்

நீரள்ளி நீரள்ளி நீரிறைக்கும் வாளியில்
நீரறியா நீர்வழி உண்டாயின் - நீரது
நீங்காது நீந்துவோர் நின்றிட நீந்தாதோர்
நீங்குவர் நீத்தார் என.

 படகில் புகுநீர் மெதுவாய்க் கவிழ்க்கும்
உடனே கவனித்தல் நன்றாம் - கடமையோ
என்றிருப்பின் கண்டோரும் காணோரும் ஆவாரே
இன்றிருப்பர் நாளையோ இல்.

மேலே அமர்தல் சுகமே என்றாலும்
கீழே உழைப்பவர் நீரிலே - வாழேன்
எனவமைதல் என்றும் புகழ்.

வடத்திற்குத் தேர்போலே வாழ்வுக்கு நீரே
தடத்திற்குத் தார்போலே தாழ்வுக்குச் சோம்பல்
குடத்திற்குள் சிற்றலையாய்த் தந்தேன் உமது
படத்திற்கு வெண்பாப் படை.

Tuesday, December 20, 2016

நீலாம்பல் நெடுமலர்.7.

'வியத்தகு வெண்பா விருந்து' என்ற ஈற்றடிக்கு எழுதியது.

ருவிழி துள்ளும் துவளும் துடிக்கும்
கருவிழி சொல்லும் குழற்றும் பிதற்றும்
இருகரம் தீண்டும் தழுவும் தடவும்
இருபுறம் கேட்கும் கொடுக்கும் பிடிக்கும்
இருமார்கள் வேண்டும் திமுறும் குமுறும்
இருகூர்மை கொல்லும் குழையும் குவியும்
இருகால்கள் தாங்கும் தடுக்கும் தவழும்
இருந்தாழ்கள் வாங்கும் வருடும் வணங்கும்
இருப்பாளே என்றும் குறளடி தேனாய்
இறுக்கும் சிவந்த இதழ்.

கண்வழி அன்பென என்மீது சிந்தடி
முன்வழி பெண்ணென மெய்மீது சிந்தடி
சொல்வழி செல்வதைச் சொல்லுமுன் சிந்தடி
வில்விழி கொல்வதை நீராலே சிந்தடி
கைவழிக் காதலைக் கண்டதும் சிந்தடி
தையலின் மோகமே தைத்தபின் சிந்தடி
கள்ளுள மாரினைக் கவ்வுமுன் சிந்தடி
உள்ளுளப் பிள்ளையை உண்மையாய்ச் சிந்தடி
மெல்லுணர் வாழ்விலே மெய்யெனச் சிந்தடி
மெல்லிடை ஆள்வதை மெத்தைமேல் சிந்தடி
கள்ளியே கள்வனைக் காத்தபின் சிந்தடி
கள்வனோ சென்றபின் நீர்.

நெய்யகல் தீமுகம் நீலாம்பல் தேன்மலர்
பொய்யகல் தீஞ்சொல் புகழுடை பொன்தளிர்
மெய்யுணர் மெல்லுடல் மேற்றிசை மென்னொளி
கையனல் கொல்மணம் கள்ளிதழ் முள்தனம்
வேல்விழி கூர்முடி நீள்விரல் நெற்கதிர்
பால்நிறம் பன்னீர்த் துளிகுரல் வான்குளிர்
ஆலிடை நெய்த்தொடை அல்குலை ஆள்பவன்
கோலின் அளவடி நீ.

இயங்கிடும் போதுகளில் இன்மைக் கணத்தில்
முயங்கிடும் முன்மாலைப் பின்னால் - தயங்கா
மயக்குறு மங்கைநீ மன்னன் படிக்கும்
வியத்தகு வெண்பா விருந்து.


டியும் முடியும் ஒரே சொல் கொண்டு அமையும் குறள் வெண்பாக்கள்.

முயலாமை முந்திய வித்தை அறிவீர்
தயங்கினால் நீயே முயல்.

கிழித்துக் களம்படா நீங்கல் மறவர்
பழிப்பினும் வீரர்க் கிழி.

கண்ணேநீ என்றால் இமைப்பின் மறைவனோ
என்றாள் அவளுமென் கண்.

தொடவாநான் என்றாய் தொடுவது போதா
படவாநீ கூர்வில் தொடு.

மதுரமே உன்சொல் உதிருமே உண்ணா
அதரமே தேக்கும் மது.

Saturday, December 10, 2016

நீலாம்பல் நெடுமலர்.6.

ன்பமாய் வெண்பா எழுது என்ற ஈற்றடிக்கு:

எரிகனல் எம்ப எழுந்தழல் உண்ணும்
கரியுடல் எங்கிலும் கூற்று - வரும்வரை
அன்பரே, அன்றிலை இன்றிலை அன்றிலின்
இன்பமாய் வெண்பா எழுது.

ழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு:

கூரை புதுக்கிக் குளிர்மண் குவித்திட்டு
காரைத் தரையில் களிமண் பரப்பிட்டு
ஊரை அழைத்து உவப்பின் விருந்திட்டு
மாரை நிமிர்த்தி மலர்ந்த மனையினைச்
சாரை அரவென சீறிடும் - கோரப்பல்
பாழலை பாய்ந்திறங்கிப் பாழாக்கல் போலான
ஊழலை ஒப்பலாமோ சொல்.

ன்னடம், கன்னடர் என்பதே வெறுப்பு என்றவருக்குப் பதில்:

வழியென்ன செய்யும் விடமுள் விளையின்
கழியென்ன செய்யும் களவோர் பிடிப்பின்
விழியென்ன செய்யும் விரலால் குடையின்
மொழியென்ன செய்யும் மொழிந்தார்ப் பிழைப்பின்.

கழியால் கலயத்தைத் தாக்கி உடைத்தால்
பழிப்பீரா பாலைப் பகர்.

தேன்நிறைக் கூட்டினைத் தேடியே போவோரும்
தேனீயைக் கண்டதும் தேங்கியே நிற்பரோ
ஊன்நிறை உண்டாட்டில் அல்லதை நீக்கியே
உள்ளதை உண்ணுவோர் நாம்.

தன்மொழி தின்போன் பிறமொழி தீண்டானா
என்மொழி மென்மொழி உன்மொழி - வன்மொழி
என்பானா எம்மொழி என்றாலும் எச்சுவை
என்றாலும் சொட்டிடும் கள்.

பிழைப்பிற்குக் கற்றதோ பின்வந்தோர் சொல்லை
உழைப்பிற்குக் கற்றல் கணிமென் மொழியை
களைப்பிற்கு உள்ளதோ அன்னை மொழியே
களிப்பிற்குக் கற்போம் பிற.

கற்கையில் தோன்றிடும் கன்னடம் கற்கண்டு
பொற்கரம் சூடிய பொன்வளை - பெற்றவள்
நந்தமிழ் பெற்றதனால் சிற்றன்னை ஆகிய
பந்தமோ பாகின் சுவை.

Wednesday, November 30, 2016

நீலாம்பல் நெடுமலர்.5.


செம்மண்ணைச் சேறாக்கி வண்டல்மண் சீராக்கி
தம்முடலில் தார்ப்பாய்ச்சித் தானுழைக்கும் - பெம்மானே,

உம்முடனே கூடவரும் உம்முயிரே போலான
வெம்புனலை ஊற்றெடுக்கும் வெள்ளெருது - அம்மானே,

ஏரோட்டி எத்தனையோ ஏற்றத்தில் நீராட்டி
வேரோட்ட வேர்வையில் வெந்தவும் - போராட்ட

வாழ்விதிலே கண்டதென்ன கொண்டதென்ன உண்டதென்ன
தாழ்நிலையில் நின்றதென்ன வென்றதென்ன சென்றதென்ன

குப்பைகள் கோனாகும் உப்புத்தாள் ஊராளும்
இப்பொழுதில் இட்டதெல்லாம் தொட்டதெல்லாம் காய

நிழலுண்டா நீரமரத் துன்பம்போய் இன்ப
விழவுண்டா வீணம்போய் வீரர்போல் உள்ளத்
தழலுண்டா தன்னையே தானறியா வாழும்
விழலான நெஞ்சுள் விழலாகா தாசொல்
உழவின்றி உய்யா துலகு.


ற்றிலே நீரிலை வானிலே காரிலை
சேற்றிலே பூவிலை ஈரமிலை - காற்றில்
கழலிணை வைத்து மழைதேவி வாராய்
உழவின்றி உய்யா துலகு.


ழமுறை நீக்கு; புதுமுறை நோக்கு;
கழனியைக் காத்துக் கதிரை முழுதெடு;
புண்ணாக்கு சேர்த்துப் புதுப்பால் மணநுகர்;
மண்ணாக்கும் பொன்னின் மதிப்பை உயர்த்து;

வெளிவாங்கல் குன்றிட உள்விளைச்சல் ஏற்று;
கழிச்சலை மீள்பயன்செய்;
வீணை சலிசெய்;
விழவன்று கூறு கதிரவனே நன்றி;
உழவின்றி உய்யா துலகு.


காஞ்சுபோச்சு எச்சயெல்லாம் தீஞ்சுபோச்சு பச்சயெல்லாம்
ஓஞ்சுபோயி மிச்சமுள்ள ஒத்தசொட்டும் - மூஞ்சுபோயி

வாடுதையா வந்தசெடி நோகுதையா வெச்சமனம்
மூடுபனி முந்துதையா - தேடும்
மழராசா வாரோணும் மத்தவனும் சொல்ற
உழவின்றி உய்யா துலகு.

பிழையாகச் செய்க; பிசிறின்றி நெய்க;
மழையாகப் பெய்க; மயங்கித் - தழைந்து
முழவொலி முற்ற முயங்கிப் புணரும்
உழவின்றி உய்யா துலகு.