Thursday, November 23, 2017

நீலாம்பல் நெடுமலர்.26.

 ப்ரியவதனி! ப்ரேமஸ்வரூபிணி! வித்யரூபிணி! பத்மவாஹினி! நித்யமோஹினி! காமதேஹினி! நிருத்யநாடஹி!

தேவி, தளிர்மை நிறைந்து ததும்பும் இரு விழிகள் உனதல்லவா? கடலாழத்தில் மூழ்கிக் கிடக்கும் இரு சிப்பிகள்; அவை தம்முள் உருண்டு விளையாடும் கருமுத்துக்கள். மையெழுதாப் பொய்யெழுதா மெய்க்கருமை விளிம்புகள்; வெண் வானில் விளைந்த முழுக்கரு நிலவுக் குட்டிகள்; அவை, கற்களைக் கண்டு கற்கண்டாக்கின; அவை பெரும் தேங்கற்கண்டு தேன் கற்கண்டாக்கின; மதுவூட்டும், மகிழ்வூட்டும், சினம் காட்டும், சிலிர்ப்பாக்கும். தினம் காணும் எனினும் திகைப்பூட்டும். குளிரூட்டும், களிகூட்டும், அணியாகும், அளியாற்றும்.  அவ்வாற்றில் எனை முழுக்காட்டி முக்தி கொளச் செய்யாது, இம்முழுப்பிறவியும் கழிதல் உந்தி வந்த முந்தி செய்த முன்வினைப் பயனா?

மொழியெழும் தேன்குகை; சொல் விழிக்கும் சூரியமனை; ஒலி குழைந்தொழுகும் ஓர ஈரங்கள்; பசுங்கிளியலகுச் செம்மை; பைந்தமிழ் நுரைத்த கள்ளினிமை; தின்னத் தின்னத் தீரா திகட்டல்; திளைக்கத் திளைக்க முழுதாய்ப் புகட்டல்;  புன்னகைப் புறப்பாடு; புதுநகைப் புனலாட்டு; இளந்தளிர் ஈரிலைகள்; மணங்கொண்ட மாவிலைகள்;  மந்தார மண மயக்கம்; மதுவூறும் மலரிதழ்கள். தேவி, நீ வாய் திறந்து சொல்லும் சொற்களைக் காற்றில் எங்கோ யாரோ சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவாயா? கண்ணாடிப் பீங்கான் குடுவைக்குள் இட்டு நிரப்பி, இரவின் பின் பாரத்தில் நோக்க, பின்னொளிர் மின்மினிக்கள் போல் அவை தண்ணொளி கொண்டு சுழல்வதை, ஒளித்துளிகள் போல் அவை ஒசிவதைக் கண்டு கண்டு துயர் துடைத்துக் கொள்வதை, இப்போது தானே நீ அறிகிறாய்?

வண்டமர் மலர்க்குவை; வற்றாத அமிழ்துக்குலை; வளைந்தாடும் வனமுல்லைக் கொத்து; வெயிலறியா முகட்டுக் குன்றுகள்; குயிலறியாக் குரல் குழைவுகள்; தளும்பும்; தருக்கும்; தழையும்; தகையும்; நிறைந்தெழும்; நின்றமையும். தேவி, உன்னிலூறும் பெருங்கருணையும் பேரன்பும் இரு பொற்கோபுரங்களாய் எழுந்தனவா?

செழும் எழில் நிறைந்த திருப்பாதங்கள். முளைத்தெழுந்த ஈரைந்து விரல் கணுக்கள். கணு சூடிய பொன் மலர்களென மணிகள். அம்மணிகள் சப்திக்கக் காலடி மேல் காலடி வைத்து நீ வந்து நின்று என் குறைவுளம் நிறைவுளதாக்கத் திருவுளம் கொள மாட்டாயா? செம்மாந்த உள்ளங்கால்கள்; மண் காணா குளிர்மை உள்ளார்ந்தவை;பூத்த செந்தாமரை ஈரிதழ்கள்; அவை ஓரடி மண் வைத்து, வேறடி விண் வைத்து, ஈற்றடி மாபலி சிரம் வைத்த மோகனபாலனின் உளம் கொண்ட பொன்மகளின் செம்மை அல்லவா?

பார்வையைப் பற்றிக் கொள்க என்றளிக்கிறாய்; சொற்களைச் சேர்த்துக் கொண்டுய்க என்று தருகிறாய்; இழுத்தணைத்துச் சேர்த்து பசி தணிக என்றமுதூட்டுகிறாய்; தேவி, உன் மேலான செல்வங்களைக் கொண்டு வந்து இருளிலிருந்து எனைக் காத்த பின் உனக்கென்று கொடுக்க ஒன்றுளது என்னிடம்; உன் இரு தாள்களை முடி சூடி, அறிமொழியில் உனைச் சொல்லல்.

Tuesday, November 07, 2017

நீலாம்பல் நெடுமலர்.25.


பொற்றனல். பைங்கிளிக்கூட்டம். வெண்முகில் சாரம். பூந்துகில் மடிப்பு. பண்மொழிப் பாவை.

தீச்சரம் தீய்க்கும் படுக்கைப் போர்வையின் பேச்சரவம் கேட்டிலையோ, நீ? மென்விரல் பிடித்திழுத்தணைத்திதழீரம் பரிமாறிக் கொள்ளும் இரவுப் போது இப்போது போதுமா? தேங்கும் நதி அணைக்கட்டில், ஏங்கும் உயிர் காக்கும் வந்தணைக்கட்டில்.

மெளனம் ஒரு விழி. மதுரம் மறு விழி. செந்தாமரைச் சேற்றிலூறி எழும் பொன் மாலையில், வெண்ணிலா வானிலேகும் முன்னிரவில், தென்றல் வழிகளில் குளிர்ப்பதியன் இடும் நேரங்களில், ராகமெழுப்பிக்குழலீனும் மோகக்கடலில் நீந்தும் சிறுமீன் நான்.

சிற்றவை நுழைந்த சிற்றெறும்பைப் போல் திகைத்து நின்றேன் உன் முகம் தெரியாமல் தென்படுகையில். செழுந்தீ எழுப்பி ஆகுதியாகும் குருதிக் குடுவையாய்க் குலுங்கல் இவ்வுடல் கொளும் அதிர்வு.

நேற்றைய நாள் ஒரு சொல்லில் முடிந்தது. நேற்றைய இரவு இன்னும் குளிர்மையாய் நீண்டு கொண்டே இருக்கின்றது.

பூப்பறிக்கும் குளிர் விரல்கள் கோதுதல் போல் இலை பரப்பி இதழ் பிரித்து மகரந்த மொட்டுகளை மெல்ல மலரள்ளும் பின் மணம் நிறைக்கும்.

இரு தாளொற்றி இரு கைப்பற்றி மற்றுமிரு விழிகள் கண்டு மாற்றுரு கொண்டு வாழ்நாளெல்லாம் வனைந்திருக்க.

Monday, October 30, 2017

நீலாம்பல் நெடுமலர்.24.



எந்த சிற்பி கண்ட கனவு நீ?

நறுமுகை கெழு மணம். அருவி எழு சாரல். மலைமுகட்டுத்தூறல். வானவில் வர்ணக்குழைவு. பூவனக்குன்று புறம். மாமலர்த்திறம். சாறு வழியும் செங்கனி. வெயில் திரை கழுவும் பசிய இலைக்கொத்து. கருமுகில் குளிர்மை. பனி சறுக்கும் மென்மை. பேரெழில் குவித்திடும் பொற்பேழை. நீலவெளி நிறையும் வெண்ணொளி.

போர்க்கென எழுகையில் வேல்விழி; பால்மொழி; கார்க்கற்றை பாய்ப்புனல். நேரங்கழியும் நேர்க்கோடு. அலைநில்லா அமுதக்கலம். வேரூறும் ஈரமண். கிளைதுழாவும் வளி. பீறிடும் ஊற்று. மலரென்று பிறந்த மதுக்குடம். தளிரென்று துளிர்த்த தங்கரசத்துளி. நிழல் மறைக்கும் நீலச்சுடர். பிணியென்றும் மருந்தென்றும் பிறிதெனப் பிரியவியலா சொல். மறுகரை தீண்டித்தீண்டி நிறையா குளிரலை.

தனிமைக்கிழி கூர்வாள். தமிழினிமை. தாளிரு தோள். தாழடையா தவிப்பு. தாமிரத் தண்ணொளி நிலா. முறுகலென சொல்லெடுத்து முந்திநின்று முத்தமிடும் முத்தமாரம். பேச்சொலி கேளா நொடி வாழா நொடி. பொன்முகம் காணா நாள் வீணாள். பேணுதலின்றிப் பொழுது விரையும் காலக்கடலில் கைப்பிடிக்கக் கிடைத்த வீணை. குழலோசை கேள் தவம்.

நச்சரவத் தொடுகை. நாதத்திலகம். சுழல் இழுப்பு. ஸ்வர பேத தூரம். வாழ்ப்பேரேட்டில் பாராட்டு ஒரு மணி. பெருந்தச்சன் செதுக்கிய கற்சிற்பம். பெருமொழியன் உருக்கிய சொற்களி. கனவுகள் உலாவரும் கடுமிரவில் சிறகடித்துப் பறக்கும் இளந்தேவதை. பாதை வழுக்கும் பசியவழு.

மகரந்தம் குவிந்த மொட்டு. தும்பி சுவைக்கும் தேன்கடல். கனிச்சுவை ஊறும் காணா மேல்.

அரசூரும் அமுதப்பாதை. ஆலமரும் அவனிடம். செங்கனல் சிந்தும் பிரபஞ்சம். சக்தி பிம்பம். பெருங்கருணைப் பேராறு. நாணிலா வில். கானுலா கவித்திறம். பூரண ஒளிக்கிடங்கு. மோதித்திரியும் வண்டென வந்தமர வந்தசுவை. கூதல் பொழுதின் குளிர்ப்போர்வை. கூறா சொல் குவிந்திடும் இருளாழம். வெண் தந்தம் முன் சுமந்து வரும் பெண்வேழம்.

Friday, October 20, 2017

நீலாம்பல் நெடுமலர்.23.



சென்ற ஆண்டு முதல் கொஞ்ச கொஞ்சமாகக் கன்னட மொழியைக் கற்க முயன்று கொண்டிருக்கின்றேன். க்ளாஸிக் என்று அறியப்படும் காலத்தை வென்ற திரைப்பாடல்களைக் கேட்டுக் கேட்டுச் சில சொற்களை அறிந்து வைத்து, அவற்றைக் கொண்டு எழுதிய சில கவிதைகளை இங்கே இணைக்கிறேன்.

தமிழ் மொழிபெயர்ப்புகளும் கூடவே.


நின்ன சவி மாத்துகளு
ஒல்லே கவி மாத்துகளு
ஆ மாத்துகளு சங்கீதவாய்த்து
கேளிதே நனகே சந்தோஷவாய்த்து.

உன்னுடைய இனிய சொற்கள்
நல்ல கவிதைச் சொற்கள்
அந்தச் சொற்கள் சங்கீதம் போன்றன
கேட்கையில் எனக்கே மகிழ்ச்சி ஆகின்றது

நின்ன ஹெஸரு ஏனு ஹெண்ணே?
நன்ன ஹெஸரு நிமகே யாக்கே?
யாக்கேந்த்ரே நாளெ நின்னனு கரெதனு அந்தா
நீவு கரெதனே நன்னனு சந்தா அந்தா.

உன்னுடைய பெயர் என்ன பெண்ணே?
என்னுடைய பெயர் உங்களுக்கு எதற்கு?
ஏனென்றால் நாளை உன்னை கூப்பிடுவதற்கு என்பதற்காக.
நீங்கள் கூப்பிடுங்கள் என்னை அழகு என்று.

நின்ன முகவு பெலதிங்களு அந்தா
நின்ன மனவு சவிஜேனு அந்தா
நின்ன தேகவு கெம்பு பெங்கி அந்தா
நன்ன கனவு ஆ பெங்கினல்லி சேரலு அந்தா.

உன் முகம் ஒளிவிடும் நிலவு போன்றது
உன் மனம் இனிய தேன் போன்றது
உன் தேகம் சிவந்த நெருப்பு போன்றது
என் கனவு அந்த நெருப்பில் சேரவேண்டும் என்பது.

ஹஸிரில்லா பனவந்தா நானிருவனு
தங்காலி மலெயந்தா நீ பருவெனு
மனவு தனுவு தம்பதாய்த்து
நன்ன நெரலவு பிலி பன்னவாய்த்து

பச்சையில்லா வனம் போன்று நான் இருக்கிறேன்
குளிர்த்தென்றல் மழை போல நீ வருகின்றாய்
மனதும் உடலும் குளிர்வாயிற்று
என் நிழலும் வெண்மையான நிறமாயிற்று

மோடகளிந்தா மலெ பந்தனு
கண்ணுகளிந்தா ப்ரீத்தி பந்தனு
மலெபில்லுனல்லி ஏலு பன்னா இருத்ததே
மனகுஹயுனல்லி ஏலு ஸாவிர பன்னா இருத்ததே

மேகங்களிலிருந்து மழை வந்தது
கண்களிலிருந்து காதல் வந்தது
மழைவில்லில் ஏழு வர்ணங்கள் இருக்கின்றன
மனக்குகையில் ஏழாயிரம் வர்ணங்கள் இருக்கின்றன

நினகாகி நன் ஜீவனா
யாக்கே ஈ கோப பாவனா
கோபதல்லி ஹூவந்தா நின் மொகவு
சந்தோஷதல்லி சந்த்ரனந்தா பால செலவு

உனக்காக என் வாழ்வு
ஏன் இந்தக் கோப பாவனை
கோபத்தில் பூப்போல உன் முகம்
மகிழ்ச்சியில் நிலவைப் போல பேரழகு

Friday, October 13, 2017

நீலாம்பல் நெடுமலர்.22.




சொன்னாலும் கேட்பதில்லை...

தித்திக்கும் சொல் ஒன்றை நீ விழிகளால் சொல்லிச் சென்ற பின், தூரத்து நிலவும் செம்மை பூண்டது. இன்றில் அன்றில் பறவைகள் இரண்டும் அலகுகளால் அலகுகளைக் கோதிக் கொண்டு திசைகளில் மிதக்கின்றன. பொற்சிறகுகள் விரித்த கன்னி தேவதைகள் மெல்லிய விரல்களால் என் கன்னம் வருடிப் போகின்றன. மழை வரப்போகிறதென கட்டியம் சொல்லி இரு பூமயில்கள் அகவுகின்றன. மேற்குத்திசை வானில் மேகங்கள் குழுமி மண்ணை நனைக்க யோசிக்கின்றன. சாலையோர மரங்களில் சின்னஞ்சிறு மஞ்சள் மலர்கள் தலையாட்டிச் சிரிக்கின்றன.

காற்றின் வெம்மை பனிக்குளிர் ஆகின்றது. தென்றல் இத்தனை நாள் எங்கிருந்தது? எங்கோ ஒளிந்திருந்த குயில் இப்போது எப்படி குரல் வழி எட்டிப் பார்க்கின்றது? இதோ, இந்த மாநகரப் பேருந்தின் காற்று ஒலிப்பான், காதல் ஒலிப்பானானது எம்மாயம்? பல்வர்ணச் சாலை விளக்குகள் மாறிமாறி ஒளிர்தல் ஒளிச்சிரிப்பாகத் தெரிவது எனக்கு மட்டும் தானா?

கூட்டத்தில் தொலைந்து போன இதயத்தைக் கைப்பற்றி மனம்பற்றி இதழ்பற்றி விழிபற்றி மீண்டும் என்னுடன் ஒட்டி வைத்துச் சென்றது ஒரு பசுங்கிளி. காலடியை மொத்தி மொத்தி முத்தமிட்டு ஓடிப் போனது ஒரு வெண்முயல்குட்டி. மூக்குகளால் முட்டிகளை உரசி நகரச் சொன்னது செம்மை அணிந்த பன்றிக்குட்டி. ராட்டினப் பெட்டியில் ரகசியமாய் விட்டு வந்த ஒரு பார்வை காற்றில் மிதந்து மிதந்து மெல்லச் சுழன்று, உன் தோடுடைய செவிகளைத் தொட்டு உள் நுழைந்ததா?

ஆயிரம் பேர் வந்தமர்ந்துண்டு செல்லும் காற்றில் நம்மைத்தேடிய நம் விழிகள், கண்டுகொண்டதும் மென் மின் அதிர்வு தீண்டினாற்போல் மெல்ல விலகுகின்றன. காற்றில் பார்வைப் பாதையின் தடத்தில் இசைக்கார்வைகள் இணைந்து இசைந்து இசைக்கின்றன நூறு வயலின்கள். கண்ணாடி ஜன்னல்களைத் தாண்டி வந்து நம் மேல் மட்டும் வீசுகின்றது குளிர்க்காற்று. பூக்களைச் சுமந்து வந்த புறாவொன்று தலை மேல் கொட்டிவிட்டு மணம் பரப்புதல் போல், ஓர் பார்வை வீணை நரம்பை அதிரச் செய்து இன்னிசை எழுப்புகின்றது.

ஒரு பொன்னொளிர்த் தருணத்தில் மீண்டு மீண்டுமொரு சொல் சொல்லச் சொல்லவில்லையா, உன் இரவுகளின் கனவுகளில் நதிக்கரை அமர்ந்து கதை சொல்லும் அக்கண்ணிலாக்கிழவி? சொல் தின்று பார்வை உடுத்தி கனவுகளை சுவாசித்து வாழும் ஒரு ஜீவனின் கைகளைப் பிடித்து மென்முத்தம் பதித்து ஒளிநிறைந்த உலகுக்கு அழைத்துச் செல்லச் சொல்லவேயில்லையா அக்கிழவித் தோள் மேல் அமர்ந்து தலையாட்டும் மலர்க்கொத்து ஒன்று?