Friday, September 22, 2006

இறுதி இரு படைப்புகளுக்கான விமர்சனங்கள்.

நண்பர் சோம்பேறிப் பையன் (இப்படி சொல்வதற்கே கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. அப்படி அசுர உழைப்பு..!) அவர்களுக்கு மிக்க நன்றி. தனது கடின பணி நேரங்களுக்கு இடையிலும், ஒவ்வொரு படைப்பையும் 'அணுகி, ஆராய்ந்து, அலசி' தனது விமர்சனங்களை கொடுத்துள்ளார்.

அவருக்கொரு சிறப்பு நன்றி. கடைசி (படைப்புகள் பதிவதற்கான காலம் முடிந்து விட்டதால்) இரு படைப்புகளுக்கான விமர்சனங்களை என்னை அளிக்கச் சொல்லியுள்ளார். அவர் சொல்லி, இரு நாட்கள் கழித்து, இப்போது தான் நான் பார்க்கின்றேன். அதற்குள் நிறைய மக்கள் வந்து பார்த்து விட்டு, என்னை வாயாற வாழ்த்தி விட்டு சென்றதை, விருந்தினர் எண்ணிக்கை காட்டி விட்டது. வெற்றிகரமாக இரு இலக்க எண்ணிக்கை கொண்டுவர உதவிய சோ.பையனுக்கு நன்றி.

இந்த விமர்சனங்களுக்கு நான் மதிப்பெண் கொடுக்கப் போவதில்லை. எனது படைப்புகளும் இம்மாத போட்டியில் கலந்து கொண்டிருப்பதால், மதிப்பெண் கொடுப்பது முறையல்ல எனக் கருதுகிறேன்.

அய்யா!, கொஞ்சம் கருணை காட்டுங்கய்யா!!”, (தேன் கூடு போட்டிச் சிறுகதை)

+:
மாமியாரை வழியனுப்ப வருகின்றவர், உழைத்துப் பிழைக்க வேண்டும் என்று நினைக்கின்ற மூதாட்டியை, பிச்சைக்காரர் என்று தவறுதலாய் நினைத்து, பின் உண்மையை உணர்கிறார். தவறுதலாக நினைக்கையில் வெறுப்பும், பின் உண்மை அறிகையில், முன்பு தவறுதலான நினைப்பிற்கான பரிகாரமாக பரிதாபம் கொள்கின்ற இயல்பான மனித மன நிலையை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

'கண்ணால் காண்பது பொய், தீர விசாரிப்பதே மெய்' என்பதை உணர்ந்து, நாயகன் ஒரு நிலையிலிருந்து, அடுத்த நிலைக்கு உயர்கிறான் என்று, போட்டித் தலைப்புக்கு கொண்டு வருகிறார், ஆசிரியர். நல்ல படைப்பு.

-(என்று நான் நினைப்பது):

'ஒரு தீர்மானத்தோடு இரயில் நிலையம் விட்டு புறப்பட்டேன்'

நாயகன் அப்படியென்ன தீர்மானத்திற்கு வந்தார் என்பதைக் கூறவில்லையே...! ஒரு வேளை பதிவு நுகர்வோர் கருத்துக்கே விட்டுவிட்டார் போலும். (எனக்குத் தான் புரியவில்லையோ.. ;-))

போட்டிக்கான கால அவகாசம் வெகு வேகமாக குறைந்து வருவதை உணர்ந்தோ, என்னவோ ஆங்காங்கே சிற்சில எழுத்துப் பிழைகள். அவை கதை குறிக்க வந்த கருத்தில் மாற்றம் ஏற்படுத்தாதலால், மன்னிக்கக் கூடியனவே.

'அ.கொ.க.கா' : கருணைக் கிழங்கு.


எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?

நம்ம ஊர்ப் பக்கத்தில் 'பேரைக் காப்பாற்றும் பிள்ளை' என்பார்கள். அப்பா பேரையோ, அப்பா வைத்த பேரையோ பிள்ளை காப்பாற்றினால், அப்படிச் சொல்வார்கள். 'யோசிப்பவர்' அப்படிப்பட்ட பிள்ளை போல. தானே வைத்துக் கொண்ட பேரானாலும், நம்மையும் அப்படி சொல்ல வைத்து உள்ளார்.எல்லாரும் கார், பைக், சைக்கிள், எருமை மாடு (தம்பட்டம்..?) என்றெல்லாம் லிப்ட் கேட்டுக் கொண்டிருக்க, கால இயந்திரத்திற்கே லிப்ட் கேட்டுள்ளார் நாயகன்.

கதைச்சுருக்கம் வேண்டாம். போய்ப் படித்துப் பாருங்கள். வித்தியாசமான சிந்தனை. லாஜிக்கலான திருப்பங்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின்(?) இறுதியிலும் லிப்ட் கேட்பது போல் முடித்திருப்பது ஒன்றே, நமக்கு இது 'லிப்ட்'க்கான கதை என்று நினைவுபடுத்துகிறது. அருமையான சிந்தனை.

'எ.மீ.கொ.லி.கி': படைத்தவரின் பெயரைக் காப்பாற்றிய அறிவியல் குழந்தை.

1 comment:

மா.கலை அரசன் said...

நட்புடன் நண்பர் வசந்த்,
கதையின் மைய கருவையே தங்களின் விமர்சனத்தில் மாற்றிவிட்டீர்கள். கதையின் மையமே பாட்டியும் பாட்டியின் வார்த்தைகளும் தான். முன்பு பிச்சை எடுத்த பாட்டி தற்போது புத்தகம் விற்கின்றாள். தனக்கு பணம் கொடுக்கும் கதை நாயகனிடம் தன்போன்ற நிலையில் இருப்பவர்களுக்கு எதாவது தொழில் செய்ய உதவி வாழ்க்கைப்பாதையின் அடுத்த நிலைக்கு உயர்த்துங்கள் என்பதே கரு. பார்க்க //என்னை மீண்டும் பார்த்துக்கொண்டே, “பார்த்தா நல்லவங்களா இருக்கீங்க. முடிஞ்சா என்னப்போல ரெண்டு பேருக்கு உழைச்சுப் பிழைக்க ஏதாவது வழி பண்ணி அவங்கள வாழ்க்கையில கைதூக்கி விடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்…” சொல்லிக்கொண்டே ஐந்து ரூபாய் நாணயத்தை என்கையில் திணித்துவிட்டு நகர்ந்தாள்.

ஒரு தீர்மானத்தோடு இரயில் நிலையம் விட்டு புறப்பட்டேன். அவளின் வார்த்தைகள் மட்டும், இரயில் தண்டவாளத்தில் விட்டுச்சென்ற அதிரவுகளாய் என் மனதில் தடதடத்துக் கொண்டே இருந்தது.//