Thursday, November 02, 2006

இப்ப இன்னான்ற..?

"க்கா..யக்கா.."

பொன்னாத்தா தான். இவளுக்கு இப்பக்கி இன்னா கேடு வந்திச்சினு இப்புடி கத்திக்கினுகீறா..? சோசப்பு தொளிலுக்கு போச்சொல்லோ, தட்டிய நல்லா இறுக்கச் சாத்திக்கினு போவான். இன்னிக்கி மறந்து போய்க்கினான் போல. இல்லாங்காட்டி இவ இப்புடி கத்தறதெல்லாம் கேக்குமா..?

"இன்னாடி.. இப்புடி எளவு வுளுந்த கணக்கா கத்தற..?" கொண்டையை முடிந்து கொண்டே, சரசக்கா தட்டியை ஒதுக்கி விட்டு வெளியே வந்தாள்.

"எளவெல்லாம் ஒண்ணும் இல்ல. உன் வூட்டு முன்னாடி பாரு.." என்றாள் பொன்னாத்தா.

அப்போது தான், கண்களை நன்றாகக் கசக்கிக் கொண்டு சரசக்கா பார்த்தாள். வீட்டின் முன்னே ஒரு கிழவன் சுருண்டு விழுந்து கிடந்தான்.

பரட்டையாய் சூம்பிப் போன தலை. கண்கள் எல்லாம் குழி விழுந்து, கன்னங்கள் எல்லாம் ஒடுங்கி இருந்தன. கை, கால்கள் இருக்கும் இடங்களில் எல்லாம், சுருங்கிய தோல் போர்த்திய குச்சிகள் இருந்தான்.

சரசக்கா அதிர்ச்சியுறாததில் இருந்து, ஏற்கனவே இந்தக் கிழவனை அறிந்தவள் போல் இருந்தது.

"யாருக்கா, இந்த ஆளு..? ஓடிப் போன உன் வூட்டுக்காரனா..?" கேட்டாள் பொன்னாத்தா.

"அந்தாளு எதுக்குடி இங்க வரப் போறான்? போன தபா, ராயபுரத்துல நம்ம சேட்டாண்ட, குண்டா ஒண்ண அடகு வெக்கப் போச்சொல்ல, இந்தாளப் பாத்தன். முனீசுவர் கோயிலு முன்னாடி குந்திக்கினு, பிச்ச எடுத்துக்கினு இருந்தான்.."

"சரி.. இப்ப இன்னா பண்ணப் போற..? உன் வூட்டு முன்னாடி வுளுந்து கெடக்கான்.."

"ஒரு கை புடி..வூட்டு ஓரமா தூக்கிப் போட்டுருவோம்.. சை.. காலங்காத்தால முளிச்ச மொகமே சரியில்ல.. இன்னிக்கு வேல வெளங்கினாப்ல தான்.."

"யக்கா.. என்னயவா சொல்ற.. முளிச்ச மொவம் சரியில்லனு..?"

"அட.. நீ வேற..இந்தா நீ கையப் புடி.."

இருவரும் அந்தக் கிழவனைப் பிடித்து வீட்டின் வெளியே ஓரமாய்ப் போட்டார்கள்.

"க்கா.. உனக்கு விசயம் தெரியுமா..?" பொன்னாத்தா கத்திக் கொண்டே ஓடி வந்தாள்.

மீன் சுட்டுக் கொண்டிருந்த சரசக்கா, நிமிர்ந்து பார்த்தாள்.

"இன்னாடி..?"

"அடுத்த வாரம், நம்ம முனிசிபாலிடி இஸ்கூலுல வேட்டி, சேல தராங்களாம். பொங்கலுக்கு வருசா, வருசம் தருவாங்கல்ல, அது.."

"அதுக்கு ஏண்டி இந்த குதிகுதிக்கிற..? எப்பவும் தர்றது தான..? செரி.. உனக்கு எப்புடி இந்த மேட்டரு தெரியும்..?"

" நம்ம எம்மெல்லே மணியண்ணன் கூடவே சுத்திக்கினு இருப்பான்ல, பளனி அவன் நேத்து ராவா வூட்டாண்ட வந்துருந்தான். போச்சொல்ல காசு கேட்டேன். எல்லாம் பொங்கலுக்கு இலவச வேட்டி, சேல குடுக்கச் சொல்ல தர்றன்னுட்டான்..."

"பாவிங்க.. இதுலயுமா கடன் சொல்லிக்கினு போறாங்க.. தூ..ஏண்டி, இலவசமா சேல தர்றான்ட்டு, இவனுக்கு இலவசமா வுட்டிட்டியாக்கும்..?"

"ளனி..! எனக்கு வேட்டி ஒண்ணு குடுடா.." சரசக்கா கேட்டாள்.

"யக்கா..! உன் கார்டுக்கு, குடுக்குற வேட்டிய இப்ப தான் சோசப்பு வந்து வாங்கிக்கினு போனான்.." என்றான் பழனி.

"தெரியுண்டா...! இப்ப எனக்கு வேட்டி கெடைக்குமா, இல்லயா..?"

"என்னக்கா..? புதுசா எவனயாவது புடிச்சிக்கினியா..?" கண்ணடித்தான் பழனி.

"தூ..! செருப்பால அடி நாய..! என் வூட்டுக்காரன் என்ன வுட்டு ஓடிப் போனதுல இருந்து, நெருப்பு மாதிரி இருந்துக்கினு இருக்கேன். பேச்சப் பாரு!.." கத்தினாள் சரசக்கா.

பழனி பயந்து போனான்.

"யக்கா..! மன்னிச்சுக்கோ..! உன்னப் பத்தி தெரியாதா..! சும்மா வெள்ளாட்டுக்கு கேட்டேன். ஆனாலும், உன் கார்டுல வேட்டி ஒண்ணுக்கு மேல தர முடியாதேக்கா..!"

குறுக்கே புகுந்தாள் பொன்னாத்தா.

"யோவ்..! இன்னா பேச்ச வளத்துக்கினே போற. இப்ப என்ன? அக்கா கார்டுக்கு வேட்டி இல்ல. அவ்ளோ தான். என் கார்டுக்கு குடு.."

"உன் வூட்டுக்கு வர்ற எல்லா ஆம்பளக்கும் ஒண்ணு தரணுமா..?" நக்கலாக கேட்டான் பழனி.

"இந்தா..! இந்த எகத்தாளப் பேச்செல்லாம் ராத்திரி வரச் சொல்லொ, பேசிப் பாரு. அப்பாலக்கி இன்னா சேதினு சனம் அடுத்த நா பேப்பர பாத்து தெரிஞ்சிக்கும்.."

"கோச்சுக்காத பொன்னு. இந்தா இந்த வேட்டிய எடுத்துக்கோ.."

"ரத்திரி வருவயில்ல.. உன்ன அங்க வெச்சுக்கறன்.. நீ வாக்கா போலாம்.." சரசக்காவை இழுத்துக் கொண்டு நடந்தாள் பொன்னாத்தா.

"க்கா..! இப்ப இன்னாத்துக்கு பளனியாண்ட உனக்கு இன்னோரு வேட்டி வேணும்னு சண்ட போட்ட.." கேட்டாள் பொன்னாத்தா.

"அது ஒண்ணும் இல்லடி.! நம்ம வூட்டாண்ட கெளவன் கெடக்கான்ல. அவனுக்காத் தாண்டி.."

ஆச்சரியப் பட்டாள் பொன்னாத்தா.

"எதுக்கொசரம் அந்தக் கெளவனுக்கெல்லாம் துணியெடுத்துக் குடுக்கற..? உன் சொந்தமா..?"

"அய்ய..! அப்டியெல்லாம் ஒண்ணும் கெடியாது. ஒருத்தருக்கும் சொல்லாத ரகசியம் உனக்கு இப்ப சொல்றன். கேட்டுக்க.கைக் கொளந்தையோட என்ன வுட்டு ஓடிப் போன என் புருசன், வட நாட்டுக்கு போயி, ஒருத்திய கட்டிக்கினானாம். அப்பாலக்கி அவன் ரத்தம் எல்லாம் சுண்டிப் போனப்புறம், அவ அவனத் தொரத்தி வுட்டுட்டாளாம். அதுவும், அங்கன எங்கயோ காசிப் பக்கம் பிச்ச எடுத்துக்கினு கீறானாம். ராயபுரம் சேட்டு தான் ஒரு தபா சொன்னாரு. அது போலவே, இந்தக் கெளவனும் எங்கயோ அடிபட்டுக்கினு வந்திருக்கான். அட, இவனுக்கு எதுனா நல்லது நாம பண்ணினா, நம்ம புருசனுக்கும் ஏதாவது மவராசன் நல்லது பண்ணுவான்னு ஒரு ஆச தான்.."

"யக்கா..! எதுக்கு ஓடிப் போன புருசன் மேல போயி இம்பூட்டு அக்கற காட்டற..?"

"ஓடிப் போனாலும், அவன் எங்கனயாச்சு உசுரோட கீறான் அப்புடிங்கிற நம்பிக்க தாண்டி என்ன வாள வெக்குது. அவன் கட்டுன தாலி தான், இந்த மோசமான உலகத்துக்கிட்ட இருந்து என்ன காப்பாத்திக்கினு இருக்கு. இல்லாங்காட்டி, நானும் உன்ன மாதிரி... சரி வுடு. அது என்னாத்துக்கு, இப்ப..?"

பொன்னாத்தா மெளனமானாள்.

இருவரும் வேகமாக நடந்தனர்.

(தேன்கூடு - நவம்பர் 06 - போட்டிக்கான பதிவு.)

12 comments:

லக்கிலுக் said...

//"ஓடிப் போனாலும், அவன் எங்கனயாச்சு உசுரோட கீறான் அப்புடிங்கிற நம்பிக்க தாண்டி என்ன வாள வெக்குது. அவன் கட்டுன தாலி தான், இந்த மோசமான உலகத்துக்கிட்ட இருந்து என்ன காப்பாத்திக்கினு இருக்கு. இல்லாங்காட்டி, நானும் உன்ன மாதிரி... சரி வுடு. அது என்னாத்துக்கு, இப்ப..?"//

நெஞ்சை நக்கீட்டீங்களே :-)

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

வசந்த் said...

நன்றி நண்பர் லக்கிலுக்...!

அமுதன் said...

என்னங்க இலவசத்துக்கு இப்படியெல்லாம் கூட யோசிச்சு எழுதுறீங்க.... கலக்கல் சென்டிமென்ட் கதை..... போட்டிக்கான வாழ்த்துக்கள்......

வசந்த் said...

வருகைக்கு அன்பான நன்றிகள் அமுதன்.யோசித்துக் கொண்டே இருக்கும் போது, தானாக கதை வந்து விட்டது. அது என்னவோ, சென்னைவாசியாகி எட்டு ஆண்டுகள் ஆகப் போவதால், பழக்கமில்லாவிடினும், சென்னை செந்தமிழ் வந்து விடுகின்றது.

வல்லிசிம்ஹன் said...

நிறைய உள் வாங்கி எழுதி இருக்கிறிர்கள் வசந்த்.
நன்றாக இருந்தது.
வாழ்த்துக்கள்.

TAMIZI said...

சென்(ந்)தமிழும் நா பழக்கமோ!

நல்ல நடையில் செல்கிறது.

குறை கூற முடியாத பாவனைகள்.


வாழ்த்துகள்.

நெல்லை சிவா said...

சென்னைச் செந்தமிழ்-ல விளையாடி இருக்கீங்க. இப்பவே ஆரம்பிச்சிட்டீங்க. எப்படியும் ஒரு எட்டு பதிவு எழுதிட மாட்டீங்க. கற்பனைச் சுரங்கமய்யா, நீர். :)

வாழ்த்துக்கள், வசந்த்.

வசந்த் said...

வல்லிசிம்ஹன்:

கற்பனையில் வடிவத்திற்கு கொண்டு வருவது தாங்க. சொல்லப் போனா மெரினா தாண்டி, வட சென்னைப் பக்கம் நான் போனதே இல்லைங்க. வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

தமிழி:

நாப் பழக்கமெல்லாம் ஒண்ணுமில்லைங்க. சென்னைக் காற்றிலே அந்த மொழி கலந்து விட்டதால், எட்டு வருடங்களாக அதையே சுவாசித்து வருவதால், சென்னை செந்தமிழ் எளிதாக வருகிறது. மற்றபடி பேசினதெல்லாம் இல்லைங்க. வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழி.(என்ன இனிமையான் பெயர். அன்னைத் தமிழே பெண். அதுவும் தமிழி என்று ஆனது இனிமையிலும் இனிமை)

நெல்லை சிவா:
ரொம்ப எதிர்பாக்கறாங்களோ..? சமாளிப்போம்.
வாழ்த்துக்களுக்கு நன்றி சிவா.... நெல்லை சிவா.

அருட்பெருங்கோ said...

இலவசத்தில் ரெண்டாவது செண்டிமெண்ட் கதை :)

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

வசந்த் said...

நண்பர் அருட்பெருங்கோவுக்கு மிக்க நன்றிங்க..

செந்தழல் ரவி said...

நல்ல கதை..ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்...அன்னியோன்னியமாக ஒட்ட முடியாமல் ஏதோ ஒன்று தடுக்குது....

ஆங்..அங்கே அங்கே சாதாரணமான சொற்கோவைகள் சற்று அன்னியப்படுத்திவிடுகின்றன...

வெற்றிக்கு வாழ்த்துக்கள்...

வசந்த் said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ரவி..சாதாரணமான சொற்கோவைகள், நம்மை சூழலோடு ஒன்ற வைக்கும்னு நெனச்சேன். நீங்க வித்யாசமாச் சொல்றீங்க ரவி..