Monday, November 06, 2006

பரவசம்.. இலவசம்...!

"ணியண்ணே... சேலம் பைபாஸ் தாண்டி, சங்ககிரி போற ரூட்டுல, நெறைய கிராக்கி நிப்பாங்கண்ணே.. இன்னிக்கு ஒண்ணு பாக்கலாம்ணே.." குமாரு மணியின் மனதில் ஆசையை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தான்.

ஆத்தூரிலிருந்து லாரி பாய்ந்து வந்து கொண்டிருந்தது.

ணி கோயமுத்தூரில் டெக்ஸ்டைல் மில்களுக்கு சரக்கு மற்றிச் செல்லும் ட்ரான்ஸ்போர்ட் ஆபிஸில் டிரைவராக வேலை செய்து கொண்டிருக்கிறான். குமாரு அவன் லாரியின் கிளீனர். மணிக்கு இன்னும் இரண்டு வாரத்தில் திருமணம் நடக்க இருந்தது.. சொந்த அக்கா பெண் பவானியைத் தான் மணன்ப்பதாக திட்டம்.அதற்குள் அவசர சரக்கு மாற்றுவதற்காக சூரத் வரை செல்ல வேண்டியதாகி விட்டது. கூட குமாரும்.

கோவையிலிருந்து துணிகளை எடுத்துக் கொண்டு, சூரத் சென்று மாற்றி விட்டு, பாவு நூல்களையும், பஞ்சு மூட்டைகளையும் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.

"ண்ணே.. சொல்றேனு தப்பா நெனச்சுக்காதீங்க.. இன்னும் கொஞ்ச நாள்ல உங்களுக்கு கல்யாணம் ஆகப் போகுது. அங்க போய் ஒண்ணும் தெரியாம முழிக்கறதுக்கு, ஒரு சின்ன ரிகர்சல் மாதிரி இருக்கட்டுமே..இவ்வளவு நாள் நல்லவனாவே இருந்துட்டோம். இன்னிக்கு ஒரு தடவை போய்ப் பார்ப்போம்ணே.." கெஞ்சல் குரலில் தூபம் போட்டுக் கொண்டிருந்தான் குமாரு.

மணிக்கு லேசாக ஆசை கிளரத் தொடங்கியது. மூன்று நாட்களாய் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கும் கொஞ்சம் இளைப்பாறுதல் தேவைப்பட்டது.

"டேய்.. நோய் எல்லாம் வந்திடாதே..?"

குஷியான குமாரு " அதெல்லாம் அவங்களே தெளிவா பாத்துக்குவாங்க.. நீங்க சேலம் பைபாஸ் தாண்டினப்புறம் நான் சொல்ற எடத்துல நிறுத்துங்க. நான் உள்ள போய் பேசிட்டு வந்ததுக்கப்புறம் நீங்க போய்ட்டு வாங்க.." என்றான்.

லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. சேலம் - கோவை நெடுஞ்சாலை அந்த பின்னிரவு இரண்டு மணிக்கு வெறிச்சோடி இருந்தது. அவ்வப்போது தென்படுகின்ற தொலைதூரப் பேருந்துகளும், லாரிகளும் கடந்து சென்று கொண்டிருந்தன. புளிய மரங்கள் விசுவிசுவென்று அடித்துக் கொண்டிருந்த கற்றில் ஆடிக் கொண்டிருந்தன.

மணி பொறுமை இழந்தவனாய் லாரியில் காத்துக் கொண்டிருந்தான். குமாரு ஓரமாய் இறங்கிப் போயிருந்தான். பழைய பீடி ஒன்றைப் புகைத்துக் கொண்டு சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று 'க்ரீச்'சென்று சத்தம். லாரி ஒன்று ப்ரேக் அடித்தது போல். 'வள்..வள்' என்று நாய் ஒன்று குலைக்கும் சத்தம். மணி தடாரென்று கதவைத் திறந்து இறங்கினான். 'சடார்'என்று அவனை ஒரு லாரி எதிர்ப்புறத்தில் இருந்து கடந்து சென்றது. அதன் வலது முன் லைட்டில், சிவப்பு நிற ரத்தக் கறை.

மணி கிட்டத்தட்ட ஓடி நாயின் குரல் வந்த இடத்தை அடைந்தான்.

ஒரு ஆண் நாய் குடல் சரிந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. 'ஊ..ஊ' என்று ஊளையிட்டது. அதன் பக்கத்தில் ஒரு பெண் நாய் சுற்றிச் சுற்றி வந்தது. சில சமயம் அதுவும் ஊளையிடும். சில சமயம் அது, ஆண் நாயின் அருகில் போய் முகர்ந்து பார்க்கும். ரோட்டில் படுத்துப் புரளும். திடீரென்று இவனைப் பார்த்த்க் குரைக்கும். உடனே ஆண் நாயைக் கடிக்கும்.

இன்னும் சிறிது நேரத்தில் ஆண் நாய் இறந்து விடும் என்று என்று தெளிவாகத் தெரிந்து விட்டது போல் ஒரு நீளமான ஊளையிட்டது பெண் நாய்.

யாரோ சாட்டை எடுத்து அடித்தது போல் இருந்தது மணிக்கு. பெண் நாயின் ஊளை அவன் முதுகுத் தண்டின் வழியே பாய்ந்து, மூளையை சில்லிடச் செய்த்தது. அவனால் தாங்க முடியவில்லை. ஓடி வந்து லாரியில் ஏறிக் கொண்டான்.

என்ன காரியம் செய்ய இருந்தேன்? கேவலம் ஒரு நாய் கூட துணையின் மேல் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறது. ஆண் நாய் இறக்கப் போகிறது என்பதை உணர்ந்தவுடன் , பெண் நாய் எவ்வளவு துயரப்பட்டிருந்தால், இப்படி அழும்?

மணிக்கு திடீரென்று, சூரத் கிளம்பும் முன் பவானியுடன் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

"புள்ள.. இங்க வா.."

"என்னுங்க மாமா..?"

"இதப் பாரு புள்ள. இதுவரைக்கும் மாமா வீடுனு வந்திட்டு இருந்த.சரி. இப்பொ நாளைக்கு வந்து வாழப் போற வீடு. அதனால கல்யாணம் ஆனதுக்கப்புறம் தான் நீ வரணும்.."

"எப்படியும் நான் வரத் தான போறேன். அதுக்கு இங்கயே இருந்தா என்ன தப்பு?"

"இருந்தாலும் ஊரு ஒண்ணுனா ஒம்போது பேசும்ல? எதுக்கு ஊர் வாய்க்கு நாமளே அவல் போடணும்..?"

"ஊர்னா யாரு மாமா? நீயும், நானும், நம்ம மக்களும் தான் எனக்கு ஊரு. அவங்க ஒண்ணும் தப்பா நெனைக்க மாட்டாங்க. என்னால உன்னைப் பிரிஞ்சு இருக்க முடியல மாமா.."

"அட.. இதுக்கு ஏன் அழுவுற.. உனக்கு இதை சொல்ல தான் கூப்பிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு நான் சூரத் வரைக்கும் போக வேண்டியிருக்கு. வர ஒரு வாரத்துக்கு மேல ஆகும்."

"சரி மாமா. பார்த்து போய்ட்டு வாங்க. இருந்தாலும் கல்யாணத்தை இவ்ளோ கிட்டக்க வெச்சிக்கிட்டு ஊருக்குப் போறது நல்லாஇல்ல மாமா.."

"ஒரு கேள்வி கேக்கறேன். லாரியில் போகும் போது, எங்கயாவது விபத்தாகி நான் இல்லைனா நீ என்ன பண்ணுவ.. ஏய்.. புள்ள.. நில்லு.. ஓடாத.. அழாத..."

ச்சே..! எம் மேல எவ்ளோ பாசம் வெச்சிருந்தா, அதுக்கப்புறம் ரெண்டு நாளா என்னைப் பாக்க கூட வராம அழுதுட்டு இருந்திருப்பா..? அக்கா கூட கேட்டாளே.'என்னடா சொல்லி புள்ளயை மிரட்டினேனு'.

உடம்பில அடிபட்டா தான் விபத்தா? இந்த மாதிரி ஒரு கீழ்த்தரமான காரியத்தில இறங்கி, வாழ் நாள் முழுக்க இவளுக்குத் துரோகம் பண்ணிட்டமேனு உறுத்தல் இருக்குமே. அது எவ்வளவு பெரிய விபத்து.
இவ்ளோ நாள் பொறுமையா இருந்தோம். இன்னும் கொஞ்ச நாள் பொறுக்க முடியாதா?

நல்ல வேளை. இது மட்டும் கெட்டுப் போகாம, திரும்பிட்டோம். இந்த குமாரு பயலை வேற காணோம். வந்தவுடனே கிளம்பணும். பவானி எனக்காகக் காத்திருப்பா.

"ண்ணே.. உள்ள போய்ட்டு வாங்க. லாரியை நான் பார்த்துக்கறேன்."

மணி அமைதியாக குமாரைப் பார்த்தான்.

"குமாரு..! உன்னை ஒரு கேள்வி கேக்கறேன்?"

"கேள்வி கேக்கற நேரமாண்ணே இது. ரொம்ப நேரம் நின்னா, போலிஸ் பேட்ரல் வந்திரும்ணே.. சரி.. கேளுங்க"

"கல்யாணத்துக்கு அப்புறம் அனுபவம் வேணும்னு இங்க எல்லாம் போகச் சொல்றியே. இதே மாதிரி, உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறவளும் அனுபவம் வேணும்னு கரும்புக் காட்டுக்குள்ளயோ, பம்பு செட்டுக்குள்ளயோ போனானா ஏத்துக்குவியா.. சொல்லு..?"

செருப்பால் அடிபட்டது போல் நிமிர்ந்தான் குமாரு. அவன் கண்களில் இருந்து கண்ணீர் வரப் பார்த்தது.

"என்னை மன்னிச்சிருங்கண்ணே.. இனிமேல இந்த மாதிரி எல்லாம் போக மாட்டேண்ணே.." அழுதான்.

"சரி.. கதவைச் சாத்து.போகலாம். விடியறதுக்குள்ள கோயமுத்தூர் போயாகணும். கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு.." என்றபடி லாரியைக் கிளப்பினான் மணி.

போகும் போது, இறந்து கிடந்த ஆண் நாயையும், அதனருகில் படுத்திருந்த பெண் நாயையும் பர்த்தான் மணி. லேசாக கண்ணீர் வந்தது. அதன் அருகில் இருந்த போர்டைப் பார்த்தான். எழுதியிருந்ததை வாய் விட்டுப் படித்தவாறு லாரியை ஓட்ட ஆரம்பித்தான்.

விலைமாதருடன் கொள்ளும் பரவசம்!
விலையில்லாமல் எய்ட்ஸ் இலவசம்!!

(தேன்கூடு - நவம்பர் 06 - போட்டிக்கான பதிவு.)

10 comments:

ராம்குமார் அமுதன் said...

செம கதை..... கொன்னுட்டீங்க போங்க...... கண்டிப்பா பரிசு இருக்கு.......

//உடம்பில அடிபட்டா தான் விபத்தா?

எத்தனை எத்தனை அர்த்தங்கள் இந்த வரியில.....

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

இரா. வசந்த குமார். said...

மிக்க நன்றி அமுதன்.. உங்கள் வாழ்த்துக்கள் இப்பொழுதே பரிசு கிடைத்த மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன.

BadNewsIndia said...

நல்லா இருந்தது வசந்த்.
நல்ல தத்துவம் வேற சொல்லிட்டீங்க.
சூப்பர். லாரி டிரவர்ஸ் படிச்சா நல்லா இருக்கும்.

இரா. வசந்த குமார். said...

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி... BadNewsIndia..

இரா. வசந்த குமார். said...

ரொம்ப நன்றிங்க திருமால்..

murali said...

வசந்தா,
என் மனம் உன் வசம்தான்.
கலக்கியிருக்கியேப்பா.வெற்றி பெற வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளிதரன்.

இரா. வசந்த குமார். said...

அன்பு முரளிக்கு, மிக்க நன்றிங்க. உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க..

இரா. வசந்த குமார். said...

அன்பு முரளிக்கு, மிக்க நன்றிங்க. உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க..

நெல்லை சிவா said...

எனது படைப்பு சற்றே பெருங்கதையாய்ப் போய்விட்டதால், இப்பொழுதுதான் படிக்க நேர்ந்தது. முடிவு எளிதில் ஊகிக்க முடிந்த போதும் கூட, கதையின் நடை கடைசி வரி வரை படிக்கத்தூண்டியது. வாழ்த்துக்கள்.

இரா. வசந்த குமார். said...

நண்பர் நெல்லை சிவா-க்கு, எப்பவுமே நல்ல முடிவு ஊகிக்கக் கூடியதாக தானே இருக்கும்... நன்றி நண்பரே..