Tuesday, January 02, 2007

நானும் கொஞ்ச புத்தகங்களும்...!

லையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். எல்லோரும் இனியதாக ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடி இருப்பீர்கள். பலர் வருடத்திற்கான பல உறுதிகள் எடுத்திருப்போம். அதிலும் பலர், ' நாக்கு மாறினாலும் வாக்கு மாற மாட்டோம்' என்ற இறுமாப்போடு ஒவ்வொரு வருடமும் ஒரே உறுதிமொழிகளையே திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டிருப்போம். சரி.. சரி.. இதெல்லாம் இருப்பது தான் என்று விட்டு விடுவோம்.

இந்தப் பதிவிலிருந்து நான் படித்த சில புத்தகங்கள் பற்றி என் சில நினைவுகளைப் பதிவிடலாம் என்று உள்ளேன்.

"ஆகா..! நீயும் இது போல கிளம்பி விட்டாயா..?" என்று யாரும் பதற்றமடைய வேண்டாம். இது ஒன்றும் மா.சிவக்குமார் ஐயா அவர்கள் எழுதும் பதிவுகள் போல் ஆழ்ந்து எழுதப்படும் புத்தக விமர்சனங்கள் அல்ல.(ஐயா.. சாமிகளா.. சத்தியமா ஏதும் உள்குத்து இல்லீங்க..)

அந்தந்த புத்தகங்களை நினைத்தவுடன் என் மனதில் ஊஞ்சலாடும் நினைவுகளைப் பதிவு செய்வதே இதன் நோக்கம்.

புத்தகங்களுக்கும் எனக்குமான உறவு முதலில் எங்கு துவங்கியது என்று முதலில் கொசுவர்த்தி சுற்றிப் பார்க்கிறேன்.

சிறானாய் மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்த பொழுதிலிருந்து இந்தக் கதை துவங்குகிறது. தினமும் பள்ளி முடிந்து வந்தவுடன் புள்ள பசியில வாடி வந்திருக்கும் என்பதை உணர்ந்து, பப்பு மம்மம், தச்சு மம்மம் எல்லாம் ஊட்டி விடுவார்கள் அம்மா. அப்போது தினமலர் - சிறுவர்மலரிலிருந்து படித்த கதைகள் சொல்லுவார்கள். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும், முந்தின வாரம் எந்த இடத்தில் கதையை முடித்தார்களோ, அதைச் சொன்னால் தான், இந்த வெள்ளியன்று வந்திருக்கும் அதன் தொடர்ச்சியை அம்மா சொல்வார்கள். இப்படி எழுதப் படிக்கத் தெரியாத காலத்தில் பழக்கமான முதல் புத்தகம் (பள்ளியின் ரைம்ஸ் புத்தகங்கள் தவிர்த்து) சிறுவர்மலர்.

சிறுவர்மலரில் என்னால் இன்றும் மறக்க முடியாத கதாபாத்திரம் 'பலமுக மன்னன் ஜோ'. பல வடிவங்களில் முகங்கள் மாற்றி பள்ளியின் ஆசிரியர்கள், வாலாட்டும் பிற மாணவர்கள் அனைவரையும் மிரட்டி விடுவான் ஜோ. சிலசமயம் ஆசிரியர்களிடம் மாட்டிக் கொண்டு உதையும் வாங்குவான். ரொம்ப நல்லா இருக்கும்.

இன்னும் பல கதாபாத்திரங்களும் அழகழகாய் வருவார்கள். அவர்களெல்லாரும் மறந்து போய் விட்டார்கள். படிக்கும் உங்களுக்கு யாருக்காவது ஞாபகம் வந்தால்/இருந்தால் சொல்லுங்களேன்.

மறக்கவே முடியாத தொடர்கதை 'உயிரைத் தேடி'. என்ன அருமையான கதையோட்டம்..! என்ன அழகான ஓவியங்கள். ஒரு சிறுவன், அவன் தான் கதை நாயகன். அவன் பூமிக் கிரகத்தில் அவனைத் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா என்று தேடி அலைவான். அப்போது பூமி எதனாலோ (மறதி!) அழியும் நிலையில் இருக்கும். தினமலர் அலுவலகத்திற்கு சென்று மீண்டும் இந்தக் கதையை வெளியிடுங்கள் என்று கேட்கலாம் என்று இருக்கிறேன்.

அடுத்தது காமிக்ஸ்.

ஓரளவு படிக்க வந்தவுடன் என்னைக் கவர்ந்தது காமிக்ஸ் புத்தகங்கள். 'இரும்புக்கை மாயாவி','மந்திரவாதி மாண்ட்ரேக்' போன்ற நினைவில் நிற்கும் படக்கதைகளைத் தாங்கி வரும் ராணி காமிக்ஸ் தான் எனது அடுத்த நிலை புத்தகங்கள். வேறு பல காமிக்ஸ்களும் வந்து கொண்டு, நான் வாங்கிப் படித்திருந்தாலும் ராணி காமிக்ஸ் நினைவில் நிற்க காரணம்... அதில் வரும் சில அஜால், குஜால் ஓவியங்கள். தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம். படக்கதைகளில் வரும் நாயகிகளின் ஓவியங்கள் தான். இத்தோடு இதை விடுவோம்.

எங்கள் பக்கத்து வீட்டில் தான் எங்கள் பெரிய தாத்தா திரு. வரதராசன் அவர்கள் வாழ்ந்து வந்தார். அவருக்கு நான் என்றால் கொஞ்சம் பிரியம். காரணம் இல்லாமல..? இருக்கிறது. அவருக்கு பாக்கு போடும் வழக்கம் இருந்தது. அதிலும் ரோஜா பாக்கு, நிஜாம் பாக்கு என்றால் ரொம்பப் பிடிக்கும். அவர் வீட்டிலோ பாக்கு போடத் தடை. பின், ஒரு வயதானவர் எவ்வளவு தரம் பாக்குப் போட யார்தான் அனுமதிப்பர்? நான் அவ்வப்போது போய் பாக்கு வாங்கி வருவேன். ஊதியம், புத்தகங்கள்.

அத்தனையும் மாயாஜாலப் புத்தகங்கள். 'ஏழு மலை, ஏழு கடல் தாண்டிய மந்திரவாதியின் உயிர்', 'முனிவர் சாபத்தால் ஓர் இளவரசன் கோர முகம் பெறுவது' போன்ற ராஜா கதைகள் நிறைந்த புத்தகங்கள் அவரிடம் இருந்தன். உண்மையைச் சொல்வதென்றால் அந்தப் புத்தகங்களைப் பேய்த்தனமாகப் படித்தேன் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது யோசித்துப் பார்த்தால், நினைக்கின்ற எதையும் Visualise செய்து பார்க்கின்ற புத்தி, அத்தகைய விறுவிறுப்பான, பரபரப்பான மாயாஜாலக் கதைகள் படித்ததால் வந்திருக்குமோ என்று தோன்றுகிறது. நன்றி தாத்தா.

இந்தக் கால கட்டத்தில் படித்த ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. பேய்க்கதை.ஒரு கல்யாண வீட்டிற்கு ஒரு கிப்ட் கொண்டு செல்வான் ஒருவன். அது ஒரு சுடுகாட்டுப் படம். இவ்வளவு தான் ஞாபகம் வருகிறது. ;-)

அந்தத் தாத்தா மாரடைப்பால் காலமான போது, அம்மா சொல்லியழுதது, இன்னும் நினைவில் இருக்கிறது. ' கதை புக் படிக்கணும்னு தாத்தா பின்னாடியே சுத்தி, பாக்கு வாங்கித் தருவியே.. இனி யார்கிட்ட போய் புக் கேப்பே...'.

மேல் நிலைப் பள்ளி செல்ல ஆரம்பித்து, பதின்ம வயதிற்குள் ஏற்பட்ட புத்தக அறிமுகங்கள் கொஞ்சம். அத்தை வீட்டிற்குச் சென்று படிக்க ஆரம்பித்து, பழக்கமான தினமணி, தினமணி கதிர், பள்ளிக்குப் பேருந்தில் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் உள்ள டீக்கடையில் அறிமுகமான தினத்தந்தி, அம்மா அவ்வப்போது அலுவலகத்தில் இருந்து கொண்டு வருகின்ற தினமலர், நீண்ட தூரப் பேருந்துப் பயணங்களில் கூடவே துணையாய் வருகின்ற பூந்தளிர், அம்புலிமாமா என்று பல அற்புதமான புத்தகங்கள் அறிமுகம் கிடைத்தது இந்த வயதில் தான்.

பிறகு தொடங்கியது தான் நாவல் பைத்தியம். பெரும்பாலோனரைப் போல், இராஜேஷ்குமார் தான் எனக்கு நாவல் அறிமுகம் செய்தார். ரஜினி படம் பார்ப்பது போல் இருக்கும், அவரது நாவல்கள். வரிசையாய் கொலைகள். விவேக், ரூபலா, கோகுல் நாத். மறக்க முடியாத பெயர்கள், பாத்திரங்கள். அவரது நாவல்களில் ஆபாசம் இருக்காது. கெட்ட வார்த்தைகள் இருக்காது. எனவே வீட்டிலும் இராஜேஷ்குமார் நாவல்கள் படிப்பதற்கு எதிர்ப்பு இல்லை.

தூரப் பயணங்களில் அதுவரை எனக்கு கை கொடுத்து துணைக்கு வந்த பூந்தளிர், அம்புலிமாமா ஓரங்கட்டப்பட்டு, பாக்கெட் நாவல்கள் ஆக்ரமித்துக் கொண்டன. பிறகு வரிசையாக பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ( நரேன், வைஜெயந்தி, நியூட்டன்) ஆகியோரின் துப்பறியும் நாவல்கள், மாலைமதி, பாக்கெட் நாவல், ஆத்மா. இப்படி கொஞ்ச காலம் ஓடியது. கொஞ்ச காலம் என்றால் ரொம்பவே நிறைய காலம்.

இராஜேந்திரன் அவர்களின் ஒரு நாவல் கண்ணீரில் மிதக்க வைத்தது. கதை ஞாபகம் இல்லை. கடைசியில், விவாகரத்தான அம்மா, வேறு ஓர் ஆணுடன் தவறான கோலத்தில் இருப்பதை பார்த்து விடும் மகன், கொட்டும் மழையில் அதிர்ச்சியாகி, அழுது கொண்டே எங்கோ ஓடி விடுவான். அவன் வளர்த்து வந்த வாத்து , அவனைத் தேடி இரயில்வே ட்ராக்குகளிலும், ஆற்றோரப் பாலத்திலும் ஓடிக் கொண்டிருக்கும்.

பின் ஒருகாலம் மாருதி அவர்களின் ஓவியங்களுக்காகத் தேடித் தேடி சேகரித்த 'பெண்மணி' போன்ற நாவல்கள். குடும்ப நாவல்கள். என்னுடைய ஓவியப் பித்து பற்றியும், அதனால் அடித்த கூத்துகளைப் பற்றியும், ஒரு தனிப்பதிவு தான் இட வேண்டும். அதை பிறகு பார்க்கலாம்.

திடீரென்று ஒரு நாள் படித்த 'தேவன்' அவர்களின் 'துப்பறியும் சாம்பு' நாவல்கள் குறித்த எனது பார்வையையே தூக்கி உடைப்பில் போட்டு விட்டது. இரண்டே இரவுகளில் நடக்கும் கதை. அதை இரண்டு பாகங்களில் எழுதியிருப்பார். உண்மையாகவே விதிர்விதிர்த்து விட்டேன். 'இது தான்டா நாவல்' என்று உணர்ந்தேன். அதன் பிறகு படித்த எந்த துப்பறியும் நாவலும் தூசாய் எனக்குப் பட்டது. உண்மையைச் சொல்வதென்றால், நீர்த்து போனதாகவே எனக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டதால், பிறகு எந்த இராஜேஷ்குமார் நாவலையும் என்னால் முன்பு போல் படிக்கவே முடியாமல் போய் விட்டது. என்ன செய்ய, கால ஓட்டத்தில் மனித மனதின் மதிப்பீடுகள் மாறிக் கொண்டுதானே இருக்கின்றன.

ஆனால், உண்மையை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். எனது பதின்ம வயதில் கதைப் பசியைத் தணித்ததில், அத்தகைய துப்பறியும் நாவல்களுக்கு பெரும்பங்கு இருந்தது.

பாலகுமாரன் எனக்கு எப்போது அறிமுகமானார் என்பது சரியாக நினைவில்லை. நான் படித்த முதல் நாவலாக 'இரும்புக் குதிரைகள்' தான் நினைவில் உள்ளது. அசோகமித்திரன் அவர்கள் தொகுத்திருந்த 'புதிய தமிழ்ச் சிறுகதைகள்' என்ற புத்தகம் பள்ளியில் பரிசாய்க் கிடைத்தது. அதில் தான் பல சிறுகதை எழுத்தாளர்கள் அறிமுகமாயினர். நாஞ்சில் நாடன், புதுமைப்பித்தன், சுஜாதா ( நகரம்), சுந்தர ராமசாமி, வல்லிக்கண்ணன் போன்ற பெரியவர்கள் அறிமுகமாயினர். எனது புத்தக பயணமும் இராஜபாட்டையில் நடை போடத் துவங்கியது.

பிறகு படித்த பேராசிரியர் அமரர் கல்கி அவர்களின் 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்', 'பார்த்திபன் கனவு','அலை ஓசை','தியாக பூமி' போன்ற புத்தகங்கள் என்னை வேறோர் உலகத்திற்கே அழைத்துச் சென்றே விட்டன. இவற்றைப் பற்றியெல்லாம் வலை நண்பர்களுக்கே மிக நன்றாகத் தெரியுமாதலால், நான் ஏதும் சொல்லப் போவதில்லை.

ஆங்கில நாவல் பக்கம் நீ சென்றதில்லையா என்று கேட்பவர்களுக்கு எனது பதில் இல்லை என்பதே. பள்ளியின் பெரும்பகுதி தமிழ்வழிக் கல்வி பயின்றதால், ஏதோ ஒரு மனத்தடை என்னை, அந்தப் பக்கம் செல்லாமல் தடுத்து வருகிறது. இது நல்லதா, கெட்டதா என்று தெரியாதலால், நானும் அதைப் பற்றி பெரிதாய் கவலை கொள்ளவில்லை.

அவ்வப்போது மகாகவி, அவர் தாசன் , பகவத் கீதை புத்தகங்கள் படிப்பேன். மன சஞ்சலம் மிக்க நேரங்களில் இவர்கள் தான் என் துணை. ஒருமுறை கன்னிமராவில் படித்த பிரேம்சந்தின் நாவல் (தீபாவளி தொடர்பானது), பாலசுப்ரமணியம் அவர்களின் 'சந்திரவதனா', மயிலாப்பூர் கடைகளில் வாங்கிய பாக்கெட் சைஸ் 'மகாபாரதம்', 'இராமாயணம்', இராமகிருஷ்ண மடத்தின் பல புத்தகங்கள் போன்றவை என்றும் நினைவில் நிற்பவை.

பள்ளி இறுதி நாட்களில் படிக்கத் தொடங்கி, இன்றும் வாங்கிக் கொண்டிருக்கின்ற 'ஆனந்த விகடன்', 'குமுதம்', இப்போது புதிதாய் வாங்கத் தொடங்கியிருக்கும் 'ஜூ.வி','ரிப்போர்ட்டர்', ' நாணயம் விகடன்' என்று பலதரப்பட்ட விஷயங்களைத் தொட்டுத் தொடரும், படரும் தமிழ் பத்திரிக்கை, புத்தக பேருலகில் நான் படித்த, படிக்கின்ற சிலவற்றைப் பற்றி இனி வரும் பதிவுகளில் கூறுகிறேன்.

அவை ஏதாவது ஒரு வகையில் என்னைப் பாதித்தவை. என்றும் மறையாத நினைவுகளை ஏற்படுத்தியவை. நினைக்க, நினைக்க இனிப்பானவை. என் வாழ்வில் ஏதாவது ஒரு புள்ளியில் எனக்கு முக்கியமாகத் தோன்றியவை.

நான் கொஞ்சியவை.
என்னைக் கொஞ்சியவை.

உங்களுக்கும் பிடிக்கும்.
உங்களையும் பிடிக்கும்.

5 comments:

aliangchen said...

hey, I just got a free $5000.00 Gift Card. you can redeem yours at Abercrombie & Fitch All you have to do to get yours is Click Here to get a $5000 free gift card for your backtoschool wardrobe

அருண்மொழி said...

நீங்கள் சொன்ன அந்த ராஜேந்திரகுமாரின் நாவல் தான் நான் படித்த முதலாவது ராஜெந்திரகுமாரைன் நாவல். அதன் பெயர் "வரமாட்டியா மம்மி" என்னை இன்றளவும் பாதித்த நாவல்களில் முக்கியமானது அது

Bharateeyamodernprince said...

கிட்டத்தட்ட உங்களுக்குண்டான அனுபவம்தான் என்னுடையதும். நான் இதுபற்றியோரு விரிவான blog இடுவதாய் இருந்தேன். நீங்கள் முந்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

வசந்த் said...

அருண்.. சரியாகச் சொன்னீர்கள். அது தான் நாவலின் பெயர்...

வசந்த் said...

ப்ரின்ஸ்.. அதனாலென்ன.. பரவாயில்லை.. நீங்களும் எழுதுங்களேன்..